(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, October 23, 2009

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!

<2002ஆம் ஆண்டு குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் இராம பக்தர்களாக வந்த சங் பரிவார் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை 'முஸ்லிம் தீவிரவாத'மாகத் திசை திருப்பி, 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காவுகொண்ட மோடியும் அவனது கொலைவெறிக் கூட்டமும் இன்றுவரை வெகு சுதந்திரமாக பவனி வரும் நாடு, நம் நாடு.




கடந்த 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நான்டட் நகரத்தில் சங்பரிவார் அமைப்பு உறுப்பினர் ஒருவரது வீட்டில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்த நிகழ்வின்போது அங்கு முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் ஒட்டுத் தாடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார குழுக்களின் பயங்கரவாத முகம் அம்பலப்பட்டாலும் பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் மட்டும் ஒட்டு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டு செயல்படுவதாகக் காட்டுக் கூச்சல் போடும் பேச்சுரிமைச் சுதந்திரம் மிளிரும் நாடு, நம் நாடு.



கடந்த 2007 ஜனவரி மாதம் 24ஆம் நாளிரவில் தென்காசி RSS அலுவலகத்திலும் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப் பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாக்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலையக் குண்டு வெடிப்பில் ஒரு வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்டப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. என்றாலும், செய்வதையும் செய்துவிட்டு, "இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளே காரணம்; அவர்களைக் கைது செய்ய வெண்டும்" என்று அறிக்கைகளை அள்ளி விடுவதற்கும் அவற்றைப் படித்துப் பார்க்காமலே பதிப்பதற்கும் பரபரப்புப் பத்திரிகைகள் நிறைந்த கருத்துச் சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும் நாடு, நம் நாடு.



கேரளத்திலிருந்து வெளியாகும் "தேஜஸ்" என்ற தினசரியில், "நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே" என்று பிரபல தலித் சிந்தனைவாதியும் "தலித் வாய்ஸ்" பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T இராஜசேகர் உரக்க உண்மையைப் போட்டுடைத்த போதிலும் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற இன்னபிற புண்ணாக்கு வாதங்களெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் கடமைகளாக நிறைவேற்றப் படுவதுபோல் உலகமுழுதும் உருவாக்கப்பட்டு வரும் மாயையை ஒழித்துக் கட்டுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலொன்றாக, இந்திய முஸ்லிம் அறிஞர்களும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவினரும் இணைந்து 'பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்' Movement Against Terrorism (MAT) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கின்றனர்.



"முஸ்லிம்களுக்குக் கல்வியூட்டும் கடமையோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதை ஊடகங்களுக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் உரியவகையில் புரிய வைப்பதைக் கடமையாகக் கையிலெடுத்துள்ளோம்" என்று கூறுகிறார் ப.எ.இ.யின் ஒருங்கிணைப்பாளரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவின் செயற்குழு உறுப்பினருமான காலித் ரஷீத் ஃப்ராங்கி மஹல்லீ.



"அண்மையில் நடைபெற்ற ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பியவரையும் அதைப்போன்ற பெயர் தாங்கிகளையும் எதிர்த்துப் போராடி முறியடிப்போம்" என்றும் அவர் சூளுரைத்தார்.



மேலும், கடந்த ஃபிப்ரவரி 2ஆம் நாள் லக்நவ்வில் இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் குழுமிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டு, இப்போது செயலுக்கு வருவதாகவும் IANS க்கு அளித்த தொலைபேசிப் பேட்டியின்போது ஆயிஷ்பக் ஈத்காவின் துணை இமாமான மஹல்லீ கூறினார்.



"நாட்டில் நிகழ்த்தப் படும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் சுமத்தி வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகும்" என்று கூறிய மஹல்லீ, நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த 'பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்' பற்றி, ஒவ்வொரு பள்ளியின் வெள்ளிமேடைகளிலும் அறிமுகப் படுத்தி, எங்கள் சமுதாயத்தவரைத் தவறான வழிகாட்டுதலின் பக்கம் செல்ல விடாது தடுத்து, வெற்றியின் இலக்கை நிச்சயம் அடைவோம்" என்று உறுதியோடு கூறும் மஹல்லீயின் அவாவும் இலட்சியமும்தான் கோடானு கோடி இந்திய முஸ்லிம்களின் அவாவும் இலட்சியமுமாகும்.



நாட்டின் அமைதியே நமது அவா!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...