(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, February 28, 2015

அழகுக்கு ஆசைப்பட்டு , உயிருக்கு போராடும் கொடுமை ... தாய்மார்களே உங்களுக்குத்தான்.

சென்னை தனியார் ஆஸ்பத்திரியின் தவறான ஆபரேஷனால் உயிருக்கு போராடும் இளம்பெண்
அவள் மீண்டு வருவாளா...? என்ற பரிதவிப்பில் கணவர்!
அம்மா, இனி உன்னால் நடக்க முடியாதா... சாப்பாடு ஊட்ட மாட்டியா...? என்று அழும் குழந்தைகள்!

சக்கர நாற்காலியில் அமர்ந்து டியூப் வழியே செலுத்தப்படும் உணவை உட்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் அமுதா.
குதிரை போல் துள்ளி குதித்து நடமாடிய அமுதா திடீரென்று நடைபிணம் போல் ஆகிவிட்டதை நினைத்து மொத்த குடும்பமும் கண்ணீரில் மிதக்கிறது.
கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் அமுதா (35). இவர் விக்னேஸ்வரன் (14), விஜய நாராயணன் (10) என்ற இரண்டு குழந்தைகளின் தாய்.
மண்ணினால் செய்யப்படும் விதவிதமான வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். திடீரென்று அமுதா இந்த நிலைக்கு ஆளானது ஒரு தவறான ஆபரேசனால்.
நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க விவரித்தார் அமுதாவின் கணவர் கவுரி சங்கர்.
நான் கொல்கத்தா, உ.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சென்று மண் சிற்பங்களை வாங்கி வருவேன். இந்த சிற்பங்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது. கடை வியாபாரத்தை அமுதா கவனித்து கொண்டார்.

விலை உயர்ந்த மண் சிற்ப அலங்கார பொருட்களை வாங்குவதற்காக எங்கள் கடைக்கு ஏராளமான திரை நட்சத்திரங்களும் வருவார்கள். அப்போது பிரபல நடிகை ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ‘ஒபிசிடி’ (வயது பருமன்) ஆபரேசன் செய்து கொண்டால் உடல் ஸ்லிம் ஆகி அழகு கூடும் என்று கேள்விப்பட்டிருக்கிறார்.
அன்று முதல் ஒபிசிடி ஆபரேசன் செய்து கொள்ள அமுதாவுக்கும் ஆசை வந்தது. அந்த ஆபரேசன் செய்யும் அளவுக்கு என் மனைவி உடல் பருமன் இல்லை. எனவே நான் வேண்டாம் என்று தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை.
ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களும் ஒபிசிடி ஆபரேசன் சாதாரணமானதுதான். இதை செய்து கொண்டால் உடல் மெலிந்து ஐஸ்வர்யாராய் மாதிரி ஆகிவிடலாம். வாழ் நாள் முழுக்க சர்க்கரை வியாதியும் வராது என்று ஆசை காட்டி இருக்கிறார்கள்.
டாக்டர்களின் ஆலோசனையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட அமுதா தனியாகவே சென்று அட்மிட் ஆகிவிட்டார். பிறகு என்னை கட்டாயப்படுத்தி ஆபரேசனுக்கு சம்மதம் கேட்டார்.
பின்விளைவுகள் ஏதாவது வந்துவிடும். வேண்டாம் என்று நான் பலமுறை எடுத்து கூறியும் அவள் கேட்க வழியில்லை. வேறு வழியில்லாமல் ஆபரேசனுக்கு சம்மதித்தேன்.
ரூ.3 லட்சம் செலவு செய்து ஆபரேசன் செய்தோம். வீடு திரும்பிய பத்து பதினைந்து நாளில் மீண்டும் வயிறு வலி ஏற்பட்டதால் அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம்.
ஆபரேசன் செய்த இடத்தில் ஓட்டைகள் சரியாகவில்லை. அதன் வழியே சீழ் கொட்டுகிறது. அதை அகற்றினால் சரியாகிவிடும் என்று 2–வது முறையாக ஆபரேசன் செய்து சீழை எடுத்தனர்.
இனி பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையில் வீடு திரும்பினோம். அதன் பிறகு மீண்டும் வயிறு வலி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். வயிற்றில் வேறு கோளாறு இருக்கிறது. ‘ஓபன் சர்ஜரி’ செய்துதான் ஆக வேண்டும் என்றனர். அதையும் செய்தனர்.
அதன் பிறகுதான் நிலைமை மிகவும் மோசம் ஆனது. மூச்சுவிட முடியவில்லை. உடல் வீங்கியது. மீண்டும் அதே ஆஸ்பத்திரிக்கு சென்றபோது எங்களால் முடியாது. வேறு பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று கையை விரித்துவிட்டனர்.
உடனே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு டாக்டர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வயிற்றுக்குள் ‘ஸ்பாஞ்ச் பேட்’ ஒன்றை வைத்து தைத்து விட்டிருக்கிறார்கள்.
உடனே ஆபரேசன் செய்தாக வேண்டும் என்று டாக்டர்கள் ஆபரேசன் செய்து அதை அகற்றினார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததால் உயிரை காப்பாற்றினார்கள்.
ரூ.20 லட்சத்துக்கு மேல் செலவு செய்து உயிரை காப்பாற்றி வைத்திருக்கிறோம். இப்போதைக்கு எழுந்து நடமாட முடியாது. இன்னும் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வாய் வழியே உணவு சாப்பிட முடியாது. வயிற்றில் துவாரம் போட்டு டியூப் போட்டு இருக்கிறார்கள். அதன் வழியே திரவ உணவை செலுத்தி வருகிறோம்.
நான் தவறான முடிவெடுத்து விட்டேன் என்று இப்போது என் மனைவி கண்ணீர் வடிக்கிறாள். மீண்டும் அவள் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என்ற அவரின் வேதனை குரலோடு ஆவேசமும் தெரிந்தது.
ஆஸ்பத்திரி செய்த தவறுக்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அகில இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் புகார் மனுக்களை அனுப்பி உள்ளார்.
எனக்கு என் மனைவி உயிர் காப்பாற்றப்பட வேண்டும். வேறு எந்த பெண்ணுக்கும் இது போன்ற நிலைமை ஏற்பட கூடாது என்றார்.
பணத்தின் மீது மட்டும் குறியாக இருக்கும் சில டாக்டர்கள் மக்களின் உயிர் மீது இவ்வளவு கொடூரமான கரிசனம் கட்டியிருப்பது  இருப்பது ஜீரணிக்க முடியாதது.

-Maalaimalar and pasam social services. .

இது தொடர்கதையாக நடந்து வருகிறது ...  தாய்மார்கள் தான் இதற்க்கு பலிகடா ஆகிறார்கள் .. கணவன்மார்கள் என்ன தான் சொன்னாலும் கேட்பதில்லை ..
இதைபார்த்தாவது விளங்கிகொள்ளட்டும் ..

Friday, February 13, 2015

பள்ளிகளில் ஹிந்துத்துவாவின் அடிப்படைவாத பரப்புரை!

பள்ளிகளில் இந்துமத அடிப்படைவாத பரப்புரை!
தேர்வுக் காலம் தொடங்கிவிட்டால் போதும், மாணவர்கள் பல்வேறு தரப்பு நெருக்கடிகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.

பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள் என்று நீளும் இப்பட்டியலில் செய்தி - காட்சி ஊடகங்கள், அருகிலுள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மதவாதிகள் என்று பலரது பிடியில் சிக்குண்டு பள்ளிக் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாக்கப்படுகிறார்கள். இது யாருக்கும் பிரச்சினையாகவே படுவதில்லை.
அபத்தச் சீரியல்களையும் சினிமாக்களை மட்டுமே வழங்கும் தொலைக்காட்சி சேனல்களும் ஆபாசப் பத்தரிக்கைகளும் இப்படி தேர்வுப்பணி செய்ய வேண்டிய அவசியமென்ன? பிற சமயங்களில் இவர்கள் கல்விக்காக ஏதேனும் சிறு துரும்பை அசைத்ததுண்டா?

இவர்கள் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ தொடங்கி ‘சாதிப்பது எப்படி?’ என்றெல்லாம் மாணவர்களுக்குப் பாடம் நடத்த வந்து விடுகிறார்கள். இவர்கள் மாணவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. மாணவர்களை சர்க்கஸ் விலங்குகளை விட கேவலமாக நடத்த அரசும் கல்வித்துறையும் வழிகாட்டுகிறது. “காலை 8 மணிலிருந்து மாலை 6 மணி முடிய பள்ளிகளிலேயே இருக்கவேண்டும்: மதிய உணவுக்காக 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு பிற நேரங்கள் அனைத்தும் படிப்பதிலேயே செலவிடவேண்டும்” என்கிற பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை இதைத்தானே உணர்த்துகிறது. இதில் மதவாதக் கும்பல்களும் தனது பங்கிற்கு வந்துவிடுகிறது.

இந்து ஒருங்கிணைப்பு மேம்பாட்டு இயக்கம், இந்து இளைஞர்கள் ஆன்மிக சேவா சங்கம் என்ற பெயரில் ஓர் துண்டறிக்கையை அச்சிட்டு அனைத்துப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கும் விநியோகம் செய்கின்றனர். தேர்விற்காக அறிவுரைகள், பிரார்த்தனை என்கிற போர்வையில் அப்பட்டமான மதவெறி பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ச. உமாசங்கரின் கிருஸ்தவ மதப் பரப்புரை கண்டிக்கப்படும்போது இந்துத்துவாதிகளை பள்ளிகளில் மதப் பரப்புரை செய்ய அனுமதித்தது ஏன்?

பொதுவெளியில் இவர்கள் மதத்தைப் பரப்புரை செய்துவிட்டுப் போகட்டும். அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூசை, ஆயுத பூசை உள்ளிட்ட மத வழிபாடு நடத்தப்படக்கூடாது என்ற அரசாணை இருந்தும் அதை செயல்படுத்த வேண்டிய அரசு எந்திரம் ஜெ.ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலை பெற தினமும் யாகம் நடத்தும் அவலத்தை கண்டும் காணாதது போல் இருந்து வருகிறோம். தேர்வு நேரத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள இந்துக் கோயில்களில் நடக்கும் பிரார்த்தனை, வழிபாடு, யாகம் போன்றவற்றில் கட்டாயமாக பங்கேற்க வைக்கபடுகின்றனர். ஏதேனும் ஒரு சில தனியார் பள்ளிகள் கூட இதை சர்வ சமய பிரார்த்தனையாக நடத்துவது உண்டு. ஆனால் அரசுப்பள்ளிகளில் முழுவதும் இந்து வழிபாடே நடக்கிறது.

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் தேர்வுக்காக சில வரிகள் மனப்பாடம் செய்வதற்கு பெரும்பாடுபடுகின்றனர். இந்நிலையில் இந்தத் துண்டுப் பிரசுரத்திலுள்ள மந்திரங்களையும் பிரார்த்தனை வேண்டுதல்களையும் மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக நான்கு ஐந்து மதிப்பெண் வினாவிற்கான விடைகளைப் படித்து விடலாம். வேறு எந்த மதத்தினரும் பள்ளிகளில் எளிதில் மதப் பரப்புரை செய்துவிட முடியுமா என்று கேட்டால் முடியாதுதான். ஆனால் இந்துமதப் பரப்புரை மட்டும் எவ்விதம் சாத்தியமாகிறது? இதைத் தடுக்கவேண்டிய கல்வித்துறையே மாணவர்களைக் கொண்டு பள்ளிகளிலும் இந்துக் கோயிகளிலும் யாகம் நடத்துவதை வேடிக்கைப் பார்க்குமளவிற்கு இங்கு அரசு காவிமயமாகியுள்ளது.


பெரியார் பிறந்த மண்ணில் இந்துத்துவம் வளர வாய்ப்பில்லை என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இதுகுறித்து இனிமேலாவது யோசிக்கவேண்டும். இன்று இந்துத்துவம் பல்வேறு தளங்களில் தனது நச்சுக் கிளைகளை விரிக்கத் தொடங்கியுள்ளது.
பல்வேறு குக்கிராமங்களில்கூட அர்த்த சாம நண்பர்கள் சங்கம், ஆன்மிக நண்பர்கள் சங்கம் என்று ஏதேதோ பெயர்களில் சாதி இந்து மக்களைத் திரட்டி அதன் மூலம் மதவாதம் பரப்பப்பட்டு வருகிறது. இவர்களுடைய அணிதிரட்டல் மோசடியில் அடித்தட்டு இளைஞர்கள் சிக்கி வருகின்றனர். மலைவாழ், தலித், மீனவ சமுதாய இளைஞர்கள் இவ்வாறாக அணிதிரட்டப்படுகின்றனர்.
பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி இங்கு பிழைப்பு நடத்துபவர்கள் இந்து மதவதத்திற்கு சாமரம் வீசுபவர்களாக மாறிவிட்டதுதான் வேதனை. அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவனி’ -ல் தொடங்கிய வீழ்ச்சி இன்று அவ்வியக்கத்தை பாதாளத்தில் தள்ளிவிட்டது. இன்று இவர்கள் பேசும் பகுத்தறிவு மிகவும் போலியானது. மேலும் இவர்கள் சாதி – மதவாதத்திற்கு இரையாகியுள்ளனர்.

இம்மாதிரியான மதவெறி பரப்புரைகளைத் தடுக்க அரசும் கல்வித்துறையும் எதுவும் செய்யப் போவதில்லை. இன்றும் கூட அரசு பொதுத் தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கென இந்துக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் யாகங்களும் நடத்தப்படுகின்றன. இதனை ஒரு சில அமைப்புகள் தவிர யாரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில்தான் இந்நாடு உண்மையில் மதச்சார்பற்றதுதானா என்கிற வினா எழுகிறது. யாகங்கள் நடத்த விழைபவர்கள் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய மட்டும் விரும்புவதில்லை.

வேத, மனு சாத்திரத்தைக் காரணம் காட்டி யாரையெல்லாம் படிக்கக் கூடாது என விரட்டியடித்தார்களோ இன்று அவர்களை மந்திரம் சொல்லிப் படிக்க வலியுறுத்தி இந்துக்கள் என்கிற குடையின் கீழ் அணி திரட்டப் படுகின்றனர். இது சமத்துவத்திற்கானது அல்ல; வெறும் வாக்கு அரசியலுக்கானது எனபதை அனைவரும் உணரவேண்டும்.
தமிழக அரசும் கல்வித்துறையும் யாகம் வளர்த்து வேதமந்திரங்கள் ஓதிவரும் நிலையில் இம்மாதிரியான மதவெறிப் பரப்புரைத் துண்டுப் பிரசுரங்களை சுற்றுக்கு விடுவதைத் தடுக்க முற்போக்கு, இடது சாரி ஜனநாயக சக்திகளும் அவர்களது மாணவர் – இளைஞர் அமைப்புகளும் போராட வேண்டும். இவர்களுடன் இணைந்து மதவாத சக்திகளின் விஷப் பரப்புரையை முறியடிக்கவேண்டும்.

நன்றி : மு . சிவகுருநாதன் & இந்நேரம்.காம்
Related Posts Plugin for WordPress, Blogger...