(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, February 28, 2013

நாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு ??

தர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம்.

அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கிறீர்களா..முன் எப்போதும் இல்லாத அளவிற்கு யானை மிகவும் அடம்பிடிப்பதாக சொல்கிறார்கள்.


பாகன் சொல்படி கேற்பதில்லை மிகவும் அசௌகரியமாக இருப்பதாக தெரிகிறது இதனால் யானை பாகன் யானையை அடித்து துன்புறுத்துவதாக குற்றசாட்டும் எழுந்துள்ளது.

மேலும் நாகூர் கிரசென்ட் பெண்கள் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் தர்கா தோட்டத்தில் யானைக்காக ஒய்வு எடுக்க கொட்டாய்  அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தினந்தோறும் யானையை அழைத்து சென்று வருவதற்குள் பாகன் படாதுபாடு படுகிறார் என்கிறார்கள்.

இதனால் பயத்தின் காரணமாக யானையை தூரமாக நின்றே வேடிக்கை பார்க்க விரும்புகிறார்கள் மக்கள்.சிலர் இந்த கொட்டாய் அமைத்தது யானைக்கு பிடிக்கவில்லை போலும் அது தான் யானை இப்படி நடந்து கொள்கிறது என்று வியாக்கியானம் வேறு கொடுக்கிறார்கள் சிரிக்காமல்..
  
எது எப்படியோ யானைக்கு வயசு ஆயிடுச்சு என்பது தெளிவாக தெரிகிறது ... 
அதற்கு விருந்து தான் கொடுக்கல .. 
அதற்க்கு விடுதலையாவது கொடுங்க பா .. 

தன் இனத்தோடு சுற்றிதிரிந்து  சந்தோசமாக இருக்கட்டும் வயசான காலத்துல... 

நீங்க என்ன சொல்றிங்க ?

புகைப்படம் : Yosuf Ameen

மாடர்ன் சிட்டி மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு..!!


சமீபமாக "பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு"  என்ற பெயரில்  மாடர்ன் சிட்டி மனை விற்பனையாளர்களுக்கு எதிராக குற்றம்சாட்டி நோட்டிஸ் விநியோகிக்க பட்டது அதை நாமும் வெளியிட்டு இருந்தோம் அதே போல் தற்போது அதற்க்கு மறுப்பு தெரிவித்து மாடர்ன் சிட்டி விற்பனையாளர்களும்  ஆதரங்களோடு நோட்டிஸ் வெளியிட்டுள்ளனர். அதையும்  உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். 


Monday, February 25, 2013

மாடர்ன் சிட்டி என்ற பெயரில் மோசடியா ?

நாகூரில் "பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு" என்ற பெயரில் கீழ்காணும் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.Tuesday, February 12, 2013

காரைக்கால் வினோதினி மரணம் ..!! கொடுமையிலும் கொடுமை

ஒரு மனித வெறியனால் முகத்தில் ஆசிட் வீசப்பட்டு இவ்வளவு நாள் கொடுமைகளை அனுபவித்து வந்த காரைக்கால் சகோதரி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர் ...!! ஆனால் 

இந்த கொடுமையை செய்த அந்த மிருகத்திற்கு என்ன தண்டனை தெரியுமா ? ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டு வார வாரம் சிக்கன் பிரியாணியும்,முட்டையும் கொடுப்பது தான் தண்டனையாம்..??????
இதே நிகழ்வு நம் உடன் பிறந்த சகோதரிக்கு நிகழ்ந்தால் .. நம்முடைய நிலை என்ன ? .. மனிததன்மையே இல்லாமல் இதை செய்தவனுக்கு ஆதரவாக மனித உரிமையை பற்றி பேசி அதிக பட்ச தண்டனையை மறுப்பீர்களா..? 


நடு ரோட்டில் மக்கள் முன்னிலையில் முகத்தில் அவன் மீது ஆசிட் ஊற்றி  தூக்கில் தொங்கவிட்டு இவனுக்கும் ,இவனை போன்று சிந்திக்கும் மனித மிருகங்களுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பீர்களா..?"ஆசிட் வீச்சில் உயிர் இழந்த வினோதியின் தந்தை ஜெயபால் தனியார் மருத்துவமனையில் கதறி அழுதார். மகளின் இழப்பை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:- 

என் மகள் உயிருடன் திரும்ப வருவாள் என்றுதான் நம்பி இருந்தோம். இப்படி எங்களை அனாதையாக்கி சென்று விட்டாளே. அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகதான் டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் இன்று காலையில் திடீரென இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

அவள் கண் பார்வை இழந்து உயிரோடு இருந்தாள்கூட பரவாயில்லை. அவளை நாங்கள் பார்த்து கொண்டே இருந்திருப்போம். இப்படி எங்களை தனியாக விட்டு அவள் சென்று விட்டாளே... 

சிகிச்சையின்போது அவள் வேதனைப்படுவதை நாங்கள் பார்த்து அழுதோம். அப்போது அவள் என்னிடம், நான்பட்ட கஷ்டத்தை அவனும் (சுரேஷ்) அனுபவிக்கணும் அப்பா... என்று கூறினாள்
இந்திய சட்டம் பாதிக்கப்பட்டவன் நிலையில் இருந்து தண்டனை வழங்குகிறதா ? 

பிறகு எப்படி வினோதினியின் கஷ்டங்களுக்கு நியாயம் கிடைக்கும்  ?

பெற்றோர்களின் மனக்குமுறல் அமைதியுறும் ?


உங்கள் கருத்தை பதியுங்கள்...

Sunday, February 10, 2013

நாகூருக்கு வரும் பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு

நாகை நகராட்சியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வரும் 14ம்தேதி முதல் நாகூர் வழியாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என நாகை கலெக்டர் முனுசாமி தெரிவித்துள்ளார். நாகை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குழாய்கள் பதிக்கும் பணி தேசிய நெடுஞ்சாலையில் நாகூர் வெட்டாற்று பாலத்திலிருந்து, ஐ.டி.ஐ. பிள்ளையார் கோவில்வரை நடைபெறுகிறது. இப்பணிகள் வரும் 14ம்தேதி முதல் மார்ச் மாதம் 13ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. எனவே நாகூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும், மயிலாடுதுறை, சிதம்பரம், காரைக்கால், பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், நாகூர் வழியாக வராமல் வாஞ்சூரிலிருந்து இ.சி.ஆர். பைபாஸ் வழியாக திருப்பி விடப்படுகிறது. 

   நாகூர் தர்காவிற்கு வரும் யாத்ரீகர்களின் வாகனங்கள் நாகூர் சி.பி.சி.எல். சாலை, ரயிலடி சாலை தெருப்பள்ளி சாலை வழியாக நாகூர் தர்காவிற்கு செல்லவேண்டும். தர்காவிலிருந்து, செய்யதுப்பள்ளி தெரு, தெற்கு தெரு, பங்களாதோட்டம் வழியாக தெற்கு பால்பண்ணைச்சேரி ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையை சென்றடையும் வகையில் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே வரும் 14ம்தேதி முதல் வரும் மார்ச் மாதம் 13ம்தேதி வரை பொதுமக்களின் வசதிக்காக நாகை புதிய பஸ்நிலையத்திலிருந்து நாகூர் வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு நகர பேருந்துகள் இயக்கப்படும் என நாகை கலெக்டர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Friday, February 1, 2013

ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?


ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் பணி நாகூரில் கடந்த சில நாட்களாக வார்டு வாரியாக பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. பலருக்கு இது பற்றி பல சந்தேகங்கள் இருப்பதால் அது பற்றி விரிவாக பாப்போம்.

ஆதார் கார்ட் நாட்டின் பல பாகங்களிலும் விநியோகம் செய்யப்படுகின்ற இந்நேரத்தில் ஆதார் அட்டை பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். 

ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.


ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது 12 எண்களைக் இலக்கங்களைக்கொண்ட ஒரு எண். இதை யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிடி ஆஃப் இந்தியா தனது எல்லா குடிமக்களுக்கும் வழங்குகிறது. இந்த எண்ணில் புகைப்படம் உள்ளிட்ட ஒருவரைப் பற்றின மிக முக்கிய தகவல்கள் ஒரு சென்ட்ரல் டேட்டா பேஸில் பதிய வைக்கப்பட்டிருக்கும். ஆதார் ஒப்புநோக்க எளிதானது மேலும் தனிதன்மையுடையது என்பதால் கள்ள எண்களையும் தவறான தகவல்களையும் தவிர்க்க ஏற்றது. ஜாதி மதபேதங்கள் இல்லாமல் அனைவருக்கும் ஒன்றானது.

1. இது ஒரு 12 இலக்க எண்,  அட்டை மட்டுமல்ல அனைவருக்கும் ஆனது. அதாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிரத்யேக ஆதார் யு.ஐ.டி எண் கொடுக்கப்படும்.
2. அது இங்கு வசிப்பவர்களுக்கு ஒரு அடையாளம் தருகிறது. 
3.குடியுரிமை பற்றினது அல்ல. இந்தியர்களுக்கு மட்டுமானதும் அல்ல.
4. ஆதார் கார்ட் பெற்றுக் கொள்வது விருப்பத்தின் பேரிலானதுகட்டாயம் அல்ல.
5. நம் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளலாம். அதாவது அடையாள அட்டை ஏதும் இல்லாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம்.
6. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிபட்ட ஆதார் அடையாள எண் வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு எண்ணுக்கு மேல் கிடைக்காது.
7. யு.ஐ.டி ஒரு தனி நபர் பற்றின அரசாங்க மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் அளிக்கும். மேலும் விபரங்கள் ஏதும் யு.ஐ.டி கொடுக்காது.
8.ஆதார் யு.ஐ.டி எண் விபரங்கள் ரேஷன் அட்டைபாஸ்போர்ட் போன்றவற்றுக்கு பயன்படும்..ஆனால் அவற்றுக்கு மாற்றாகாது.

எதற்காக ஆதார் பெற வேண்டும்?
1. கிராமப்புரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மிகப் பயன் தரத்தக்கது
2. தெளிவான அடையாளம் தரும் ஒரு நபருக்கு
3. வங்கிகளில் ஏழைகளும் எளிதில் கணக்கு வைத்துக் கொள்ள ஏது செய்யும்
4. அரசாங்க மற்றும் தனி நபர் நிறுவனங்களின் சேவைகளை ஏழைகளும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்
5. பிரயாணிகளுக்கு அடையாளப் பிரச்சினைகளில் இருந்து விடுதலை
6. அரசாங்கத்தின் நலம் தரும் திட்டங்கள் மக்களுக்குப் பயன் தரவும் போய்ச் சேரவும் எளிதாக இருக்கும்

யாரெல்லாம் ஆதார் பெற்றுக்கொள்ளலாம்?
இந்தியாவில் வசிக்கும் மற்றும் யு.ஐ. டி.ஏ.ஐ யின் வெரிஃபிகேஷனை திருப்தி செய்யும் எவரும் ஆதார் பெறலாம்.

எப்படி பெறுவது?
உள்ளூர் ஊடகங்களில் ஆதார் பற்றின பிரச்சாரங்கள் செய்வார்கள். ஊடகங்களில் தெரிவிக்கப்படும் (ஆதாரங்களை)  எடுத்துப் போக வேண்டியிருக்கும்.

என்னென்ன ஆதாரங்கள் தேவைப்படும்?
பதிவு செய்யும் நேரம் தேவைப்படும்ஆவணங்கள்
1. (ஆதார் விண்ணப்பப் படிவம்) Aadhaar application form
2. வசிப்பிடம் பற்றின தகவல்
3. அடையாள அட்டை புகைப்படத்துடன்
ஒவ்வொரு ஊருக்கும் இவை மாறுபடலாம்.

தேவைப்படும் தகவல்கள்
1. பெயர்
2. பிறந்த தேதி
3. பால்
4. முகவரி
5. பெற்றோர் மற்றும் காப்பாளர் பற்றின தகவல்
6. தொடர்பு கொள்ள தொலைபேசி மற்றும் ஈ மெய்ல் முகவரி
மேலும்
1. புகைப்படம்
2. 10 விரல் அடையாளங்கள்
3. விழிப்படல அடையாளம்
எங்கு பதியலாம்?
விண்ணப்படிவம் எங்கு கிடைக்கும்?
பதிவு செய்து கொள்ளும் முகாம்களில் படிவங்கள் கிடைக்கும் 

மாதிரி விண்ணப்பம் :


ஆதார் ஹெல்ப் லைன் தொலை பேசி எண்: டோல் ஃப்ரீ எண் : 1800-180-1947
ஆதார் படிவத்தில் அச்சு மற்றும் எழுத்துப் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
பதிவு செய்து கொள்ளும் போதே தவறுகளைநேரில் பார்த்து சரி செய்து கொள்ள வசதி உண்டு. அப்படியும் பிழைகள் நேர்ந்தால்.. 48 மணி நேரத்துக்குள் தேவையான ஆவணங்களை எடுத்து சென்று சரி செய்து கொள்ளலாம்.

ஆதார் கார்ட் விண்ணப்பித்து எத்தனை நாளில் கிடைக்கும்?
பல சோதனைகளைத் தாண்டி வர வேண்டியிருப்பதால் 60 லிருந்து 90 நாட்கள் ஆகலாம்.

விண்ணப்பம் மறுக்கப்படுமா?
மறுக்கப்படலாம்
1. தவறுகள் நேர்ந்தால்
2. மேலும் உங்களைப் பற்றின உடற்கூறு ரீதி ஆதாரம் மற்றும் ஒருவரின் ஆதாரமும் ஒன்று போல் இருந்ததால்.
சரி பார்க்கப்பட்ட பின் ஆதார் கார்ட் வழங்கப்படும்.

இதுகுறித்துஇ மேலும் விவரங்களை அறிய 044-28582798, 0431-241245, 0452-2526398, 0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனதமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விஸ்வரூப விவகாரம் - முதல்வர் பேசியதின் முழு விபரம்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

விஸ்வரூபம் படம் தொடர்பாக ஊடகங்களில் நிலவிவரும் பல்வேறு கருத்துக்களுக்கு விடையளிக்குமாறு இருந்தது முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு. ஆங்கிலத்தில் அமைந்த அந்த உரையின் தமிழாக்கம் பின்வருகின்றது. 
"விஸ்வரூபம் படத்தை கண்ட முஸ்லிம் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இது தொடர்பான மனுவை தலைமை செயலரிடம் கொடுத்தார்கள். கூட்டமைப்பு சார்பாகவும், கூட்டமைப்பில் இல்லாத சில அமைப்புகள் சார்பாகவும், படம் வெளிவந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உளவுத்துறையின் அறிக்கையும் இதையே பிரதிபலித்தது. இந்நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டியது என் கடமையாகின்றது. 

படம் வெளிவர வேண்டும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று வாதாடப்படுகின்றது. ஆனால் உண்மை நிலையை அறிந்துக்கொண்டால் இதுப்போன்ற கருத்துக்களுக்கு இடம் இருக்காது. 

தமிழகத்தில் மட்டும் சுமார் 524 தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியாகவிருந்தது. தமிழகத்தில் உள்ள மொத்த போலீசாரின் எண்ணிக்கை (காலியிடங்களை தவிர்த்து) 91,807 ஆகும். இதில் பல்வேறு பணிகளுக்கும் போக மீதமுள்ள போலீசாரின் எண்ணிக்கை 9,226 மட்டுமே. மூன்று ஷிப்ட்களில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு 56,440 போலீசார் தேவைப்படுவர். இது சாத்தியப்படாத சூழ்நிலையாகும். 

அதுமட்டுமல்லாமல், அரசாங்கத்தின் கடமை என்பது, மாநிலத்தில் அசம்பாவிதம் ஏற்பட்ட பிறகு தடுப்பது அல்ல. சூழ்நிலைகளின் தன்மைகளை புரிந்துக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும். 

தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை தடை செய்வதற்கு மாநில அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. தமிழ்நாடு சினிமா சட்டம் 1955-ல், 7-ஆம் பிரிவில் இதற்கான அனுமதி உண்டு. டேம் 999 படம் இந்த சட்டபிரிவை பயன்படுத்தியே தடை செய்யப்பட்டது. விஸ்வரூபம் விவகாரத்தில் இந்த பிரிவை கூட தமிழக அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். பிரச்சனையின் வீரியத்தை குறைக்க, சற்றே ஆறப்போட 144 தடையுத்தரவு மட்டுமே கொண்டுவரப்பட்டது.        

கமல் மீது எனக்கு எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. இந்த விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட ஆதாயம் இருப்பதாக பல்வேறு ஊடகங்களும் கருத்து தெரிவித்திருக்கின்றன. அதில் அவர்கள் குறிப்பிடுவது, ஜெயா டிவியில் விஸ்வரூபம் திரைப்படத்தை குறைந்த விலைக்கு கேட்டதாகவும், கமல் கொடுக்க மறுத்ததால் தமிழக அரசு இப்படியாக செயல்படுவதாகவும் விமர்சிக்கப்படுகின்றது. ஜெயா டிவி அதிமுகவை ஆதரிக்கின்றது. இதை தவிர்த்து எனக்கோ, என் கட்சிக்கோ ஜெயா தொலைக்காட்சியுடன் தொடர்பில்லை. இப்படியான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தொடர்பாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், இன்னொரு விமர்சனத்தையும் கூறுகின்றார்கள். வெள்ளை வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வர வேண்டும் என்று கமல் கூறியதற்காக நான் இப்படி செயல்படுகின்றேன் என்கின்றார்கள். தன்னுடைய அரசியல் ரீதியான கருத்தை கூற கமலுக்கு உரிமை உண்டு. இதில் எனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? முப்பது வருடங்களாக அரசியலில் இருக்கின்றேன். கமல் கூறியதால் மட்டும் ஒருவர் பிரதமராக வந்துவிட முடியாது என்பதை நான் அறியமாட்டேனா? அப்படி தனி மனித விரோதம் தான் காரணம் என்றால் கருணாநிதியின் குடும்பத்தினர் எடுக்கும் படங்களுக்கு நான் பல தடங்கல்களை கொடுத்திருக்க வேண்டுமே? அவர்களுடைய படங்கள் வெளியாகிக்கொண்டு தானே இருக்கின்றன? 

1980-களில், கமலை பற்றி எம்.ஜி.ஆரிடம் கடிதம் வழியாக நான் புகார் செய்ததாக கருணாநிதி அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். 1980-களில் நாம் அதிமுக-வின் எம்.பியாவும், கொள்கைப்பரப்பு செயலாளராகவும் இருந்தேன். தினமும் எம்.ஜி.ஆரை சந்திப்பேன். தினமும் சந்திக்கும் போது கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது? 

தன்னுடைய சொத்துக்களை விற்று படம் எடுத்ததாக கமல் கூறுகின்றார். அவர் அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கின்றார். விவரம் அறியாதவரல்ல அவர். இப்படியான ரிஸ்க்கை எடுப்பதால் வரக்கூடிய பிரச்சனைகள் குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். இதற்கு இந்த அரசாங்கம் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. 

நடந்துள்ள பிரச்சனைகளுக்கு கமலே பொறுப்பு. படம் வெளியாவதற்கு பல நாட்களுக்கு முன்பே, படத்தை தங்களுக்கு திரையிட்டுகாட்ட வேண்டும் என்று கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்த போது, அரசின் உதவியுடன் கமலின் இல்லத்தில் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதே படம் திரையிடப்பட்டிருந்தால் இந்த பிரச்சனை முன்னமே முடிந்திருக்கும். ஆனால் கமலோ, படத்தின் தேதி தள்ளிபோவதாக கூறி கூட்டமைப்பினர் படம் பார்ப்பதை தள்ளிவைத்து விட்டார். படம் வெளியாகும் நேரம் இந்த படத்தை கூட்டமைப்பினர் பார்த்ததால் பிரச்சனை வெகுவாக வளர்ந்து விட்டது. 

படம் வெளியான பின்பும் கூட அரசை அணுகி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு கமல் சம்மத்தித்து இருந்தால் இந்த விவகாரம் விரைவாக முடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கமலோ, படத்தில் மாற்றங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்திற்கு சென்றதால் விவகாரம் உச்சத்திற்கு சென்றுவிட்டது. 

இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒவ்வொரு அமைப்பிலும் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தில் மட்டுமே 7.5 லட்சம் உறுப்பினர்கள் உண்டு. இப்படியான சமுதாய குரலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. 

தமிழக அரசு மட்டுமே தடை செய்தது போல விமர்சனங்கள் வருவது தவறு. சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமீரகம், கத்தார் போன்ற நாடுகளிலும், கர்நாடகம் புதுச்சேரி ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டது கவனிக்கப்பட வேண்டியது. அங்கெல்லாம் என்னுடைய அரசா நடக்கின்றது?

சில இஸ்லாமிய அமைப்புகள் நேற்று கமலை சந்தித்ததாகவும், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டதாகவும் எனக்கு செய்திகள் வருகின்றன. இஸ்லாமிய தலைவர்களும், கமலும் கலந்து பேசி சமரசத்திற்கு முன்வர வேண்டும். இதற்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்யும். இஸ்லாமிய தலைவர்களின் ஒப்புதலுக்கு பிறகு படம் வெளியாகும்."

இவ்வாறு முதல்வரின் பேட்டி அமைந்திருந்தது. 

இது தொடர்பாக இயக்குனர் அமீர் சமரச முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தெரிகின்றது. இன்று மாலை இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களுடன் அமீர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று செய்திகள் வருகின்றன. 

சிறு கூட்டம் என்றும், கலாச்சார தீவிரவாதிகள் என்றும் கூறிய கமல் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது மகிழ்ச்சி. தன்னுடைய கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று முகப்பக்கத்தில் கருத்துகளை காண முடிந்தது. அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இதுப்போன்ற படங்களை எடுத்து எதிர்காலத்தில் எங்களை மேலும் காயப்படுத்த வேண்டாம் என்பதை மட்டும் அவரும் அவர் சார்ந்த திரைப்பட துறையினரும் உணர்ந்தால் போதும். 

இந்த விஸ்வரூப விவகாரம் எந்த முடிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றதோ அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பிரச்சனைகள் அடிப்படையிலாவது அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற என்னுடைய/பலருடைய நீண்ட நாளைய விருப்பம் இன்று நிறைவேறி உள்ளதற்கு இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன். பிஜே அவர்கள் இஸ்லாமிய கூட்டமைப்பின் முடிவுகளுக்கு கட்டுபடுவோம் என்று அறிவித்தது மிகுந்த மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுப்போன்ற நம்பிக்கை மற்றும் ஒற்றுமை எதிர்காலத்தில் நிலைத்திருக்க இறைவனிடம் அதிகம் அதிகம் பிரார்த்திக்கின்றேன். 

விஸ்வரூபம் இந்த பார்வையை ஏற்படுத்தியது தான் அது செய்த பெரிய சாதனை.
எல்லாம் வல்ல இறைவன் கமல் போன்றவர்களுக்கு முஸ்லிம்களின் உள்ளத்தை புரிந்துக்கொள்ளும் தன்மையை கொடுக்கட்டும். இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

குறிப்பு: 

வார்த்தைக்கு வார்த்தையான மொழிப்பெயர்ப்பு அல்ல. தவறான வார்த்தை பயன்பாடுகள் மற்றும் விடுபட்டவைகள் குறித்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் திருத்திக்கொள்கின்றேன்..

ஜசாகல்லாஹ் : ஆஷிக் அஹமத் அ
Related Posts Plugin for WordPress, Blogger...