!

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு இடையில் கொலை செய்யப்பட்ட மும்பைத் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் கார்கரே கொல்லப்பட்டது ஏகே 47 ரக துப்பாக்கியின் மூலம் அல்ல என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கைத்துப்பாக்கியிலுள்ள 9MM ரக தோட்டாக்களே மருத்துவப் பரிசோதனையின்போது கார்கரேயின் உடலில் காணப்பட்டன எனப் பத்திரிக்கைகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவப் பரிசோதனையின்போது கார்கரேயின் உடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் ஏகே 47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 7.52MM ரகத் தோட்டாக்கள் அல்ல எனவும் கைத்துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 9MM ரகத் துப்பாக்கித் தோட்டாக்களே அவர் உடலில் காணப்பட்டன எனவும் தகவல்கள் கசியத் துவங்கியுள்ளன. தற்பொழுது காவல்துறை கஸ்டடியில் உள்ள அஜ்மல் கஸப் மற்றும் மும்பைத் தாக்குதலின்போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இஸ்மாயிலின் கைவசமிருந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டுகள் துளைத்தே கார்க்கரே கொல்லப்பட்டார் என்ற காவல்துறையின் வாதத்தைத் தற்பொழுது வெளியாகும் தகவல்கள் கேள்விக்குறியாக்கி உள்ளன.
கார்கரே கொல்லப்பட்டதைக் கண்ணால் கண்ட ஒரே சாட்சியான கான்ஸ்டபிள் ஜாதவின் வாக்குமூலப்படி, மறைவான இடத்திலிருந்து திடீரென வெளியான இஸ்மாயிலின் கைகளில் இருந்து வெளியான ஏ.கே.47 துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தே கார்கரே கொல்லப்பட்டார். இஸ்மாயில், கலாஷ்நிகோவ் 47 ரகத் துப்பாக்கி உபயோகித்துத் தாறுமாறாகச் சுட்டதாக ஜாதவ் கூறியுள்ளார். ஆனால், கலாஷ்நிகோவ் துப்பாக்கிகளில் 7.52MM தோட்டாக்களே உபயோகிக்க முடியும். கொல்லப்பட்ட கார்கரேயின் உடலிலிருந்து கலாஷ்நிகோவில் உபயோகிக்கும் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. கஸபின் கைகளில் கைத்துப்பாக்கி இருந்ததாக இதுவரை வெளியான தகவல்களில் கூறப்படவும் இல்லை. அதுமட்டுமல்ல, கஸப் கைத்துப்பாக்கி உபயோகித்ததாக ஜாதவின் வாக்குமூலத்திலும் இல்லை. ATS அதிகாரி ஸலஸ்கர் சுட்ட குண்டு கஸபின் கைகளில் பாய்ந்து, அந்நேரத்தில் அவன் வலிதாங்காமல் அலறியதாக மட்டுமே ஜாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தீவிரவாதத் தாக்குதலைச் சமயோசிதமாகப் பயன்படுத்திக் கொண்டு வேறு ஏதேனும் குழுக்கள் கார்கரேயைக் கொலை செய்திருக்கலாம் என்ற சாத்தியமான சந்தேகத்திற்கு இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் வலுக் கூட்டியுள்ளன. கஸபும் இஸ்மாயிலும் சி.எஸ்.டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பி ஓடிய பின்னரும் சி.எஸ்.டிக்குச் சமீபமுள்ள மெட்ரோ மற்றும் அதன் சுற்றுபுறங்களில் மேலும் பல துப்பாக்கிச் சூடு சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றத் தொடக்கத்தில் இதனைக் குறித்துப் பலமுறை செய்தி கூறிய ஊடகங்கள், பின்னர் தாஜிலும் மற்ற தாக்குதல்களிலும் கவனத்தை மாற்றியபின் அவற்றைக் குறித்து எந்தச் செய்தியும் வெளியிடவில்லை. அதே சமயம், "பொது மக்களின் முன்னிலையில் தெளிவுபடுத்தப் படவேண்டிய பிரேத பரிசோதனை அறிக்கை உட்பட மற்ற ஆதாரங்களை ஊடகங்களுக்குக் கொடுக்க வேண்டாம்" என காவல்துறை சம்பந்தப் பட்டவர்களிடம் கடுமையாகக் கட்டளை பிறப்பித்துள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இது, கார்கரே கொல்லப்பட்ட விதம் குறித்து மேலும் சந்தேகத்தை அதிகப் படுத்தியுள்ளது.
கார்கரேயின் உடலில் துப்பாக்கித் தோட்டா துளைத்த இடத்தைக் குறித்துத் தற்போதுவரை முன்னுக்குப் பின் முரணான அபிப்பிராயங்களே நிலவுகின்றன. "கார்கரே நெஞ்சில் குண்டுகள் துளைத்து இறந்தார்" என ஆரம்பத்தில் வெளியான செய்திகள், அவர் அணிந்த புல்லட் புரூப் காட்சிகள் வெளியாகி பிரச்சனைகளை ஏற்படுத்தியப் பின்னர், "நெஞ்சில் அல்ல; கழுத்திலேயே அவர் குண்டு துளைத்து இறந்தார்" என்று பின்னர் செய்திகள் வெளியாகின. அவர் எங்கு சுடப்பட்டு இறந்தார் என்ற செய்தியைக்கூட இதுவரை உறுதியாகக் கூறாமல் மறைத்து வைத்திருப்பது, கார்கரே கொலையைப் பற்றி மென்மேலும் சந்தேகங்களையே அதிகப் படுத்துகிறது.
***
நவம்பர் 26 அன்று நடந்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் துவக்கத்திலேயே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்ட வேளையில் அதற்கு நாயிக் அருண் ஜாதவ் என்ற ஒருவர் மட்டுமே சாட்சியாக இருந்தார். காவல்துறையின் விளக்கப்படி, கார்கரே யாத்திரை செய்திருந்த குவாலிஸ் வண்டியில் கார்கரேயுடன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் ஸலாஸ்கர், கூடுதல் நியமன கமிஷனர் அஷோக் காந்தெ, கான்ஸ்டபிள் நாயிக் அருண் ஜாதவ், மேலும் இரு கான்ஸ்டபிள்கள் ஆகிய ஐவர் உடனிருந்தனர். இதில் ஜாதவ் மட்டும் சிறு காயங்களுடன் தப்பிக்கிறார். கார்கரேயும் மற்றவர்களும் கொல்லப்பட்டது எப்படி என்பதை ஜாதவின் விவரிப்பிலிருந்து மக்கள் அறிந்துக் கொள்கின்றனர். காவல்துறை கூறும், கொலையாளிகள் நடத்திய ரேண்டம் 'ஃபயரிங்கில் ஜாதவின் வலது தோளில் மட்டுமே குண்டு காயம் ஏற்படுகின்றது. அதாவது, துப்பாக்கிச் சூட்டில் உயர் அதிகாரிகள் அனைவரும் கொல்லப்பட்ட வேளையில் கீழ்மட்டநிலையிலுள்ள கான்ஸ்டபிள் மட்டும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்.
ஜாதவின் வாக்குமூலப்படி, காமா மருத்துவமனைக்கு அருகில் ஒரு மரத்தின் பின்புறம் மறைந்திருந்த தீவிரவாதிகள் கார்கரே பிரயாணித்த குவாலிஸ் வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். சி.எஸ்.டிக்குச் சற்று முன்பாக ஹஜ் ஹௌஸ் முன்பக்கத்தில் வந்து சேரும் கார்கரே, குண்டுதுளைக்காத ஆடையும் தலைக்கவசமும் அணிகிறார். இங்கு வைத்து ஸலாஸ்கரும் காந்தேயும் அவருடன் இணைகின்றனர். 'கார்கரேயின் கடைசி அதிரடி' என்ற தலைப்பில் ஐபிஎன் இணையதளம் வெளியிட்ட அவரது படத்தின்கீழ் "LAST OPERATION: Karkare gears up before entering the Taj Palace hotel" என்று தகவல் தந்தது. ஆனால், தாக்குதல் தீவிரமாக நடைபெற்ற தாஜ் ஓட்டலுக்கோ ஓபராய் ஓட்டலுக்கோ கார்கரே செல்லவில்லை. மும்பைக் காவல்துறையின் மற்றொரு அதிகாரியான தினேஷ் அகர்வால் கூறுவதை கேளுங்கள்: "தீவிரவாதத் தாக்குதல் நடந்த உடனேயே ATS குழுவை அலர்ட் செய்வதற்காக நான் கார்கரேவை அழைத்தேன். 'அகர்வால், நான் இப்பொழுது சம்பவ இடத்தில்தான் இருக்கிறேன்' என்று கார்கரேயிடமிருந்து உடனடியாக எனக்கு பதில் கிடைத்தது" கார்கரே சி.எஸ்.டியில் நிற்கும் வேளையிலேயே அகர்வால் கார்கரேயை அழைத்திருக்க வேண்டும்.
சி.எஸ்.டியில் நடந்த துப்பாக்கிச் சூடுக் காட்சிகளிலிருந்து தீவிரவாதிகளின் ஆயுதபலத்தைக் குறித்து கார்கரே புரிந்திருக்கக் கூடும். என்றாலும் கார்கரே காந்தேவையும் ஸலாஸ்கரையும் அழைத்துக் கொண்டு காமா மருத்துவமனைக்குப் புறப்படுகின்றார். அவர் சென்று சேர்ந்ததோ, காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஆளரவமற்ற பகுதியில்! அதன் மிக அருகிலேயே மும்பை காவல்துறை கமிஷனர் அலுவலக வளாகத்தினுள் சி.எஸ்.டி தலைமையகம் அமைந்துள்ளது . ஏற்கெனவே சி.எஸ்.டியில் தீவிரவாதிகளுடன் போராட்டம் நடத்திய மூன்று உயர் அதிகாரிகள், வேறு ஆயுதங்களோ காவல்படையின் உதவியோ இன்றி ஒரே ஒரு வண்டியில் தீவிரவாதிகளைத் தேடிச் செல்வது என்பது அசாதாரணச் சம்பவமாகும்.
கார்கரேக்குத் தவறான தகவல் வழங்கி, அவரைக் காமா மருத்துவமனைக்குத் திசைதிருப்பி விட்டது யார்? அல்லது கார்கரே வேறு ஏதாவது இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டாரா?. 50க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களில் பங்குபெற்றவர்; அதில் பெரும்பாலானவையும் போலி என்கவுண்டர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நாயிக் அருண் ஜாதவை நம்பலாமா?(விவாதம் கிளப்பிய சதபோலா என்கவுண்டர் (1997), நவீன்ஷெட்டியைச் சுட்டுக்கொன்ற 2003ல் பாந்த்ரா குர்லா பில்டிங் என்கவுண்டர் போன்றவற்றிலும் இதே ஜாதவ் பங்கு பெற்றிருந்தார். இத்தகைய பல என்கவுண்டர்களிலும் ஜாதவ் மும்பை நிகழ்வைப்போலவே சொல்லி வைத்தாற்போல் அபாயகரமில்லாத அற்ப காயங்களுடன் தப்பியிருந்தார்.)
சந்தேகங்கள் தொடர்கின்றன ...
இன்ஷா அல்லாஹ் தொடரும் ...
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன