(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, August 12, 2012

ஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா ?

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக..


1) ஸலாத்துல் லைல் + வித்ரு
2) கியாமுல்லைல் + வித்ரு
3) தஹஜ்ஜத்து + வித்ரு
4) தராவீஹ் + வித்ரு

இவ்வாறு நான்குப் பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே தொழுகையை தான் என்பது நம்மில் பலருக்கு இன்னும் தெளிவாகவில்லை.. மேற்கண்ட எல்லா தொழுகையிலும் வித்ரு சேர்ந்து வருவதே இது ஒரே தொழுகை தான் என்பதை விளக்கிவிடும்.

நபி(ஸல்) அவர்களின் தொழுகைகள் பற்றிய ஹதீஸ்ககளை ஆய்வு செய்யும் எவரும் இவைகள் வெவ்வேறு தொழுகைகள் அல்ல. மாறாக ஒரே தொழுகைக்கு சூட்டப்பட்டுள்ள வெவ்வேறு பெயர்கள்தான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக் கொள்வார்கள்.

தூங்கியெழுந்து தொழுதால் தஹஜ்ஜுத் என்கிறோம். ரமழானில் தொழுதால் தராவீஹ் என்கிறோம்.ஆனால் இது இந்தத் தொழுகை! இது இந்தத் தொழுகை!! என்று நபி(ஸல்) பெயர் சூட்டி இரவில் எந்தத் தொழுகையையும் தொழவில்லை அவர்களின் வழமையான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும் ஒரே விதமாக இருந்தன. அதை மக்களுக்கு விளக்க வந்தவர்கள் தான் ஒரே தொழுகையை பல பெயர்களால் அறிமுகப்படுத்தி விட்டனர்.

இரவில் தொழுவதால் ஸலாத்துல் லைல்இரவுத் தொழுகை என்றும்இரவில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டப்பட்டதால் கியாமுல் லைல்என்றும்,குர்ஆனில் தஹஜ்ஜத்என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் தஹஜ்ஜத்என்றும் அந்த தொழுகை ஒற்றைப்படையில் முடிவதால் வித்ருஎன்றும் அந்த தொழுகைக்கு பெயர்வந்தது.

தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக் கொள்ளும் விதத்திலோ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்த ஒரு தொழுகையும் தொழப்படவில்லை.மற்ற வார்த்தைகளாவது ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.

இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழமுடியாமல் போகும் என அஞ்சுபவர் அதன் ஆரம்பப் பகுதியில் ஒற்றைப்படையாகத் தொழட்டும். யார் இரவின் கடைசிப் பகுதியில் தொழ ஆர்வங்கொள்கிறாரோ அவர் அதன் கடைசிப் பகுதியிலேயே ஒற்றைப்படையாகத் தொழட்டும் ஏனெனில் இரவின் கடைசிப் பகுதியின் தொழுதல் சாட்சி கூறப்படும் அதுவே சிறந்ததுஎன நபியவர்கள் கூறினார்கள் 
ஆதாரம் : முஸ்லிம் 1802.

தொழுகை ஒன்றுதான் அந்த தொழுகையின் தன்மையையும் நேரத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டவர்கள் பல பெயர்களை அந்த தொழுகைக்கு சூட்டி விட்டனர்.

நபி(ஸல்)அவர்கள் இந்த தொழுகைகளை பெயர் குறிப்பிட்டு தொழுததில்லை என்று கூறுகிறீர்களேஆனால் வித்ரு என்று ஏராளமான ஹதீஸ்களில் பெயர் வருகிறதே..என்று சந்தேகம் வரலாம்.

வித்ருஎன்ற வார்த்தையை மொழிப் பெயர்க்காமல் விட்டுவிடுவதால் தான் இந்த சந்தேகம் வருகிறது.உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்என்பது ஹதீஸ். ஹதீஸ் வாசகங்கள் எல்லாவற்றையும் மொழி பெயர்க்கும் நாம் வித்ருஎன்பதை அப்படியே விட்டுவிடுகிறோம். அதனால் அது தனி தொழுகைப் போன்று தெரிகிறது. வித்ரை மொழிப் பெயர்க்கும் போது இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.

வித்ருஎன்ற வார்த்தைக்கு ஒற்றைஅல்லது ஒற்றைப்படைஎன்று பொருள்.உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையிலாக்குங்கள் என்று மொழி பெயர்க்கும் போது தெளிவான விளக்கம் கிடைத்து விடுகிறது.

எந்த ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகைத் தனி தராவிஹ் தொழுகைத் தனி, ஸலாத்துல் லைல் தனி என்று கூறுகிறார்களோ அதே ஹதீஸ் நூல்களில் அந்தந்த தலைப்பிற்கு கீழ் ஒரே ஹதீஸ் வார்த்தை மாறாமல் “வித்ரு- ஒற்றைப்படை” இடம் பெற்றிருப்பதை ஊன்றி கவனிக்க வேண்டும்.

வெறும் தலைப்புகளை மட்டும் பார்த்து சட்டங்களை வகுத்துவிடக் கூடாது. அந்தந்த தலைப்பிற்கு கீழுள்ள ஹதீஸ்களின் வார்த்தைகளைப் பார்த்து அதிலிருந்துதான் சட்டங்களை வகுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்பவர்களுக்கு இது தனி தனி தொழுகை என்ற குழப்பம் ஏற்படவே செய்யாது.

எல்லாம் வேறு வேறு தொழுகை என்றால் எல்லா தொழுகை முடிவிலும் கடைசி தொழுகையாக “ஒற்றைப்படை - வித்ரு” தொழுகை எப்படி வரும்.?

நபி(ஸல்) இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுவார்கள் மரணத்தை நெருங்கிய காலத்தில் அவர்களின் வித்ரு தொழுகை ஸஹர் நேரம் வரை சென்றது என ஆய்ஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் திர்மிதி 419)

மேற்கண்ட ஹதீஸ் மூலமாக.. இரவு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் தொழுதிருக்கிறார்கள். இதன் மூலம் ஒரே தொழுகை தான் வேறு வேறு நேரங்களில் தொழுதிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.


11 ரக்அத்கள் :

ரமளானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் ஆய்ஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் நபியவர்கள் பதினோரு ரக்அத்களை விட அதிகப்படுத்தியதில்லை. முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்டுவிடாதே.. (அதாவது அந்த தொழுகை அவ்வளவு அழகாக இருக்கும்) பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்டுவிடாதேபின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். 
                                                                    
(ஆய்ஷா(ரலி) புகாரி ஹதீஸ் எண் 1147, திர்மிதி 403 அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)

ரமளான் ரமளான் அல்லாத நாட்கள் என்று நபி(ஸல்) எந்த வித்தியாசமும் செய்யாமல் இரவுத் தொழுகையை 11 ரக்அத்களாகவே நீடித்துள்ளார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் வலுவான சான்றாக உள்ளது.

நபியவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 994)

இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத் முடிவிலும் ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் ஒரு ரக்அத் (வித்ரு) தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத், நஸயி)

நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸில் இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) அவர்கள் ஒரே தொழுகையை தான் தொழுதுள்ளார்கள் என்பதும். நபி(ஸல்) இஷாவிலிருந்து சுப்ஹ் வரை 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள். தஹஜ்ஜத்தும்; அதுதான், தராவீஹூம் அதுதான், இரவுத் தொழுகையும் அதுதான், வித்ருத் தொழுகையும் அதுதான் என்பது எந்த சந்தேகதிற்கு இடமின்றி தெளிவாகிறது.


தராவிஹ் தனி தஹஜ்ஜத் தனி முரண்பட்ட நிலைப்பாடு :

தராவிஹ் 20 ரகாயத் தொழுகிறார்கள் ..ஏன் ? என்று கேட்டால் உமர் (ரலி) தொழுதிருகிரார்கள் என்று அவர்கள் மேல் பழியை போடுகிறார்கள். ஆனால் அது கூட சரியா என்றால் அதுவும் தவறு .. சரி அது இருக்கட்டும் ..

மேலும் சொல்கிறார்கள் .. நபி (ஸல்) அவர்கள் தராவிஹ் முன் இரவில் தொழுதிருகிரார்கள் அதனால் நாம் தொழுகிறோம்.. பின் இரவில்  தஹஜ்ஜத் கியாமுல்லைல் 8 ரகாயத் தொழுதிருகிறார்கள் அதனால் நாம் தொழுகிறோம் என்கிறார்கள்.

இதற்க்கு இவர்கள் எந்த சான்றையும் காண்பிப்பது இல்லை.. மேலும் இவர்களின் செயலை கவனித்தாலே தெரிந்துவிடும் இவர்கள் செய்வது தவறு என்று...

அதாவது முன் இரவில் தராவிஹ் 20 ஜமாத்தாக தொழுகிறார்கள்..
நள்ளிரவில்  தஹஜ்ஜத் தனியாக 8 ஜமாத்தாக தொழுகிறார்கள்
ஆக 28 ஜமாத்தாக தொழுகிறார்கள்...

இவை வேறு வேறு தொழுகை என்றால் ... இந்த இரண்டு தொழுகைக்கும் அல்லாஹ்வின் தூதர் தனி தனி ஜாமஅத்தாக தொழுக அனுமதித்திருகிறார்களா ? தொழுதிருகிறார்களா? காண்பிக்க முடியுமா ?

உங்கள் செயல்களே காண்பிக்கிறது இது ஒரே தொழுகைதான் என்று..


அதிகம் தொழுதால் நன்மை தானே - குற்றமா என்று கேட்கிறார்கள்

நல்ல எண்ணத்தில் தான் இப்படி கேட்கிறார்கள் .. ஆனால் நாம் இதே அளவுகோளை மற்ற சுன்னத்தான விசயங்களுக்கு வைக்கமாட்டோம்.

உதாரணமாக மக்ரிப் பின் சுன்னத் இரண்டு தொழுவது நபிவழி .. நான் சொல்கிறேன் நாளையில் இருந்து மக்ரிப் பின் சுன்னத் ஆறு ரகாயத் தொழப்போகிறேன் ...இது முறையா ? 

பிறகு அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறோம் நாம் ..!! சிந்திக்க வேண்டும் சகோதரர்களே ..

உலகத்திற்கு வழிகாட்டியான நபி(ஸல்) அவர்களின் அழகிய செயல்களே நமக்கு சிறந்த முன்மாதிரியாகும் ..
உலகத்திற்கு அருட்கொடை அல்லவா அவர்கள் !! 
நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களை விட சிறந்த செயலை செய்ய முடியாது.. 

ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையே சிறந்தது .. அவர்களை விட நாம் அல்லாஹ்வை அதிகம் நேசிக்கிறோமா என்ன ...

இல்லை நாங்கள் எங்களின் விருப்படித்தான் ,வழக்கப்படி தான் தொழுவோம் என்று நீங்கள் கூறமுற்பட்டால்... எங்களிடம் பதிலில்லை..

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.                               (அல்குர்ஆன் 5:3)

அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். 
                                                          அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) 
                                                          ஆதாரம்: புகாரி 2697

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்   

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...