(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, January 30, 2011

கொமரு காரியத்திற்காக வந்து இருக்கிறாரு உங்களால் ஏன்ற உதவி செய்யுங்கள்...!!!!!

  
தலைப்பை படித்ததுமே சிலருக்கு புரிந்து இருக்கும் இதன் அர்த்தம்..  பலர் சந்தேகத்துடன்  படிக்க துவங்கி  இருப்பீர்கள்.   அது வேற ஒன்னுமில்ல.. 
வார வாரம் வெள்ளிகிழமை பள்ளிவாசல்ல ஹஜரத் ஜும்மா உரையை முடித்துவிட்டோ  அல்லது ஜும்மா தொழுகை முடிந்ததுமே மைக்ல சொல்லுவரே ..

" இவர் திருச்சிக்கு பக்கத்துல உள்ள ஒரு கிராமத்துல இருந்து வந்துருக்காரு ரொம்ப வறுமைல உள்ள குடும்பம் இவருக்கு கல்யாண வயசுல ரெண்டு கொமரு இருக்காங்க ,நம்மட்ட உதவி கேட்டு வந்து இருக்காரு உங்களால் ஏன்ற உதவியை செய்யுங்கள்"  என்பர் கட்டாயம் நாம் எல்லோரும் கேட்டு இருப்போம்.

அது மட்டுமில்ல உதவி கேட்டு வந்தவர் பள்ளிவாசல் வாயிலில் ஒரு கைல அவங்க ஊரு ஜமாஅத் கடிதத்தை வைத்துகொண்டு  இன்னொரு கை தாங்களாக துண்டை விரித்துகொண்டு கல்யாண பிச்சை எடுப்பாரே..

உடனே நாம என்ன செய்வோம் ஏதோ பெரிய நல்ல காரியம் பண்றோம் என்ற நினைப்பில் ஒரு பத்து ருபாய் நோட்ட அப்டி ஸ்டைல போட்டுட்டு போவோம். ஆனால் ஒரு பாவத்தை ஊக்குவிக்கத்தான் இந்த பத்து ரூபாய் பயன்படுகிறது என்பதை நாம் யோசிப்பதில்லை..இதில் மறைமுகமாக நாம சொல்லவருவது என்ன
பொண்ண பெத்தவன் பிச்ச எடுத்தாவது  கல்யாணம் பண்ணனும்

என்ன கொடும தெரியுமா ? இது சொல்வதற்கு லேசான விஷயமாக இருக்கலாம். ஆனால் இது ரொம்ப தப்புங்க.. ரணகொடுமங்க இது..

இது என்னமோ,யாரோ ஒரு வெளிஊர்காரங்க மட்டும்தான்னு நினைக்காதிங்க தமிழகத்தில் பல ஊர்களில் இது தான் எதார்த்த நிலைமை. நம்ம ஊரும் இதுக்கு விதிவிலக்கு அல்ல.

திருச்சி , மேல்விஷாரம் , சிதம்பரம் என்று நம்ம ஊருக்கு உதவி கேட்டு எப்படி வருகிறார்களோ அதுபோல தான் நாகூர் ,நாகபட்டினத்திலிருந்து வேலூர்,லால்பேட்டை என்று அங்கு சென்று உதவி கேட்கிறார்கள்.

நம்ம பாஷையில் சொல்லனும்ன உதவி கேட்கல பிச்ச எடுக்கிறாங்க என்று தான் சொல்லணும். வேற எப்படி சொல்றது நம்ம ஊர்ல அப்டி துண்ட தூக்கிட்டு நிக்க முடியுமா ? கேவலப்பட்டு போகணும்ல.. வெளியூர் என்றால் யாருக்கு தெரியும் யாரோ என்று நினச்சு காசு போடுவாங்க இல்லையா ? கவ்ருவம் பார்பவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் கடனாவது வாங்குவார்கள்.

மவளுக்கு கல்யாணம் முடிக்கணும் ,
தங்கச்சிக்கு கல்யாணம் முடிக்கணும்,
அக்காக்கு கல்யாணம் முடிக்கணும் என்று எத்துன பேர் தங்களின் வாழ்கையை வெளிநாட்டில் வீனடிகிறார்கள் தெரியுமா ?

இதெல்லாம் எதற்கு  வரதட்சனை கைக்கூலி டவ்ரி இதுக்கு தான்.

கல்யாணம் வயசு வந்தும் கல்யாணம் முடிக்க முடியாம கண்டவனையும் இழுத்துகிட்டு ஓடும் செய்திகள் அடிக்கடி வருகிறதே இதுக்கெல்லாம் யார் காரணம் எல்லாம் வரதட்சனையை கண்டுகொள்ளாத நம் சமூகம் தான்.

யாரு இந்த பழக்கத்த ஆரம்பிச்சது என்று வரலாற்றை முன்னோக்கி பார்த்தால்,..மாற்று மதத்திலிருந்து ஒட்டிகொண்ட ஒரு கேடுகெட்ட பழக்கம் என்பது தெரிகிறது ஆனால் தற்போது நிலைமை என்ன வென்றால் சதவீதத்தை வைத்து பார்த்தால் மாற்று மதத்தைவிட நம்மாளுதான் அதிகம் வரதட்சனை வாங்குறான்.அப்டியே உல்டாவா போச்சு..               

இதுக்கு மிகமுக்கிய காரணம் என்ன தெரியுமா ?
இதை மார்க்கரீதியாக அங்கிகரிப்பது தான். நம்ம பள்ளிவாச ஹஜரத் இருகாஹள்ள, அவங்க ஒரு துவாவ செஞ்சி கைக்கூலிய அதிகாரபூர்வமா மார்க்கரீதியாக ,வாங்கிகுடுப்பாஹா .. அதுக்கு ஒரு function(கைக்கூலி கக்கிலி )  வேற வேப்பாஹா, பொண்ண பெத்தவன் எந்த ஊர்ல பிச்ச எடுத்தானோ, யாருட்ட எத அடகுவச்சு கடனுக்கு காசு வாங்குநானோ நமக்கென்ன..அதுக்கு ஊர் சாட்சி வேறு.. எல்லாம் இதுக்கு ஆமீன் வேற சொல்லுவாங்க என்னத்த சொல்றது.


ஏதாவது ஏன்? இப்டி என்று கேட்டா.. இதுல என்னங்க இருக்கு மாப்பிள துபாய்ல வேல செய்ரான்ல அப்டி தான் என்று வாங்குறத பெருமையா சொல்றது.

சேரி பொண்ணு வீட்ல ஏங்க வரதட்சனை குடுகுரிங்கனு கேட்டா    ஆமாங்க வரதட்சனை இல்லாம யாருங்க மாப்ள கொடுக்குறா என்று பதில் வரும்..இவங்க மேல நாம பரிதாபப்பட்டா... இவங்களுக்கு ஒருபையன் இருந்தான்னு வைங்க இவங்க அதுக்குமேல வாங்குவாங்க மகளுக்கு நாம குடுக்க எவ்ளோ கச்டபட்டோம் என்று யோசிக்க மாட்டாங்க..

இன்னும் சில பெரிய எடத்து பொண்ணு வீடுன்னு வைங்க அள்ளி கொடுப்பாங்க வீடு ,பைக்குனு ஏங்க இப்டினும் அவங்கல்ட கேட்டா என்ட இருக்கு ஏன் மவளுக்கு கொடுக்குறேன் என்று சொல்லுவாங்க.. அவர்களின் வாதம் நியாயமாக இருக்கலாம் ஆனால் இது இல்லதவங்களையும் மறைமுகமாக பாதிக்கிறது என்பதை உணர்வதில்லை.அவங்க ஊட்ல கொடுதாஹலே நீங்களும் தாங்க என்று நிர்பந்திப்பதற்கு இது காரணமாக அமைகிறது.

ஆக சமதாயம் இதிலிருந்து மீலாதவரை இதுபோன்று கல்யாண பிச்சைகாரர்கள் வலம்வந்து கொடுத்தான் இருப்பார்கள்.யாருக்கு தெரியும் நம்மில் யார்யார் வீட்டில் நமது அக்காவிற்கோ ,தங்கைக்கோ கல்யாணத்திற்கு நம்ம வாப்பா யாருட்ட கை ஏந்தினாரோ !!! அல்லாஹ்வே அறிந்தவன்.

இன்றை தௌஹீத் கொள்கையின் வளர்ச்சியில் வரதட்சனை வாங்குவது குறைந்து வந்தாலும்,சுன்னத்தை பேணும் ஜமாஅத்தார்களின் காதில் விலமறுப்பது ஏனோ என்று புரியவில்லை..
  
இளம்தலைமுறை சிந்திக்க வேண்டும்,மார்க்கத்தை பார்த்து மணமகளை தேர்ந்தெடுங்கள் வசதியை ,பணத்தை பார்த்து வேண்டாம்..

''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நாளை உங்களுக்கும் இதே நிலைமை வரலாம் .. நீங்களும் உங்கள் சுய மரியாதையை இழந்து உங்கள் மகளின் திருமணத்திற்கு கையேந்தும் நிலை ஏற்படலாம் அல்லாஹ் காப்பாற்றவேண்டும்.

நாம் மற்றவர்களை திருத்தும் முன் முதலில் நாம் நம்மை திருத்தி கொள்ளவேண்டும். நன்மையான விஷயங்களை யார் சொன்னாலும் கேட்டு நடக்கலாம் ஆனால் தவறான விஷயங்களை பெற்ற தாய் தந்தை சொன்னாலும்  சரி எதிர்க்கலாம் ,மறுக்கலாம். ஆனால் அது ஏன் தவறு என்று அவர்களுக்கு புரியவைக்க வேண்டும் ,பழங்காலத்தில் இருந்து ஊறிவிட்ட அவர்களின் மனநிலையை உடனே மாற்றிவிடமுடியாது.
வரதட்சனையை எதிர்பார்த்து திருமணம் முடிப்பவன் ஒரு ஆண் மகனாக இருக்கமுடியாது.அது தன்னை தானே விற்பதற்கு சமம்.

முன்னெல்லாம் இந்த கல்யாண பிச்சை எடுப்பவர்கள் பள்ளிவாசலுக்கு தான் வருவார்கள் இப்போதெல்லாம் ஓவ்வொரு வீட்டுக்கும் வரஆரபித்து விட்டார்கள்.கொமாரு காரியம் என்று அழுது நம் மனசை கரைப்பார்கள் (இதை சிலர் தொழிலாக செய்கிறார்கள் கையில் ஒரு பத்திரிகையை வைத்துக்கொண்டு) இதன் எதிரொலி தான் என்னவோ நம் ஊரில் ஏழைகளுக்கு நிக்காஹ் செய்து கொடுக்க போவதாக ஒரு அறிவிப்பு.

 குழந்தையை கிள்ளிவிட்டு விட்டு தொட்டி ஆட்டுவது எப்படி சரியாகாதோ அதுபோல் தான் ஏழுலெப்பையில் நிக்காஹ் நிகழ்ச்சிகளின் ஏற்பாடு...

ஒரு புறம் வரதட்சனையை ஊக்குவித்துவிட்டு மறுபுறம் ஏழை எளிய மணமகளுக்கு திருமணம் செய்து வைப்போம் எனபது வேடிக்கையாக இருக்கிறது ( வரதட்சனை வாங்கி திருமண செய்யகூடாது என்று சுன்னத்தை கடைபிடிக்கும் ஜமாஅத் சொல்லி இருந்தால் இந்த கொமருகள் எப்போதே கரை சேர்ந்து இருப்பார்களே) இருப்பினும் நல்லது நடந்தா சரி அதாவது குழந்தையை கிள்ளிவிட்டு விட்டு சும்மா இருப்பதை விட தொட்டியை ஆட்டிவிடுவது சிறந்தது என்ற அடிப்படையில் இதை சரி காணலாம்.
ஆனாலும் சில சந்தேகங்கள்....

1 . உங்கட்ட கல்யாணம் முடிச்சு வைங்கன்னு வந்தா மாப்ள வீட்டுக்கு வரதட்சனையை கொடுத்து முடிச்சு வைப்பீர்களா ? அல்லது இதுக்கு மட்டும் வரதட்சனை கிடையாதா ?

2. நபி (ஸல்) வழிமுறையை பேணி என்று போட்டுள்ளீர்கள் அதனால் மணமகள் கேட்கும் ,முன்வைக்கும் மஹர் தொகையை பெற்று கொடுப்பீர்களா ?

நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)”

உங்களிடம் நாகூர் வாசியான நாங்கள் எதிர்பார்ப்பது :

இதை நீங்கள் நல்லநோக்கத்தில் செய்கிறீர்கள் ஆதலால் இந்த நிக்காஹ் நிகழ்ச்சிகளை நல்ல மாற்றங்களுக்கு பயன்படுத்தலாம். நம் ஊருக்கு நல்ல முன் உதாரணமாக இருக்கும்.

இந்த நிக்காஹ் நிகழ்ச்சிகளின் பொது..
      1.இனி யாரும் வரதட்சனை வாங்கி திருமணம் முடிக்க கூடாது என்று உங்களின்    சுன்னத்ஜமாஅத்  சார்பாக அறிவிக்க வேண்டும்

2.        மாப்பிள்ளை என்ன உத்தியோகம் செய்தாலும் அதற்கு ஏற்ப பெண்வீட்டாரின் விருப்பத்திற்கு மஹரை மாப்பிள்ளை வீட்டார் தரவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

3.        வலீமா விருந்து மாப்பிள்ளை வீட்டை சார்ந்தது என்று அறிவிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென நபி(ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது. அனஸ்பின் மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம்

4.        நபி (ஸல் ) அவர்களின் வழிமுறையை பேணி முடிந்தவரை எளிமையாக திருமணத்தை முடிக்க வேண்டும். நாலாம் நீர் ,பத்தாம் நீர் என்று நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

5.        பள்ளிவாசலில் கொமருக்கு உதவி கேட்டு வருபர்களின் விபரங்களை சேகரித்து,சரிபார்த்து உண்மை என்றால் அவர்களுக்கு வரதட்சனை இல்லாமல் ஊரிலே திருமண ஏற்பாடு செய்ய முயற்சி செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யவேண்டும்.

6.        இந்த கட்டளைக்கு சுன்னத் ஜமாஅத் உள்ள அனைவரும் உட்படவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

இதெல்லாம் நடக்குற காரியமா ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது..
இதை அறிவிப்பதில் என்ன கேடு இருக்கிறது என்பதே இங்கே கேள்வி ?

இது நடக்குதா ? இல்லையா ? என்பது இருக்கட்டும் முதலில் இதை பள்ளி வாசலில் சுன்னத் ஜமாஅத் சார்பாக உங்களால் அறிவிப்பாவது செய்ய முடியுமா...???????????????????

 

நாகூரில் தமிழ்சங்க முப்பெரும் விழா

இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் - பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?.


பதில்: DR.ZAKIR NAIK

1. முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும்:
முஸ்லிம்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.

மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் - இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.

'அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.' என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் - அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.

2. இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:
'நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.' என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் - ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ - அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.

ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, 'நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் 'நான் ஒரு ஸுன்னி' என்பதாகவோ அல்லது 'நான் ஒரு ஷியா' என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, 'ஷாஃபிஈ' என்றும், 'ஹனஃபிஈ' என்றும் 'ஹம்பலி' என்றும் 'மாலிக்கி' என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'நான் ஒரு தேவ்பந்திஈ' என்றும் 'நான் ஒரு பெரல்விஈ' என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.

3. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:
மேற்கண்டவாறு தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள் - அதாவது அவர்கள் 'ஷாஃபியா' அல்லது 'ஹனஃபியா' அல்லது 'ஹம்பலியா' அல்லது 'மாலிக்கியா?' என்று கேட்டுப் பாருங்கள். இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்புள்ள அல்லாஹ்வின் தூதர்களைப் போன்று ஒரு உண்மையான முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களது பதிலாக இருக்கும்.

அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 54வது வசனம் நபி ஈஸா (அலை) அவர்கள் ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 67வது வசனம் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் ஓர் யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல. அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட ஓர் முஸ்லிம்  என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

4. உங்களை நீ;ங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:
எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் - இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் ஓர் ஷாஃபிஈ என்றோ அல்லது தாங்கள் ஓர் ஹனஃபி என்றோ சொல்லக் கூடாது.
அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

'எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றார்?)

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் - நான் ஒரு முஸ்லிம் - என்று சொல்லுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தபால் மூலமாக இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவ்வாறு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் 64 வது வசனத்தின் கடைசி வரிகளாக அமைந்திருக்கும் 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்கிற வசனத்தை குறிப்பிட்டு தபால்களை அனுப்பி வைப்பார்கள்.

5. இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.
மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்பட இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும். இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ - வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் - எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் 'நீ யார்?' என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு 'நான் ஒரு முஸ்லிம்' என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.

1. ஒரு சிலர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ' எனது சமுதாயம் 73 பிரிவினராக பிரிவர்' (மேற்படி செய்தி அபூதாவூத் என்னும் ஹதீஸ்(செய்தி) புத்தகத்தின் 4579வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது) என்கிற செய்தியை தங்களது பிரிவினை வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி வாதிடுவர்.

மேற்படி செய்தியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - இஸ்லாமிய சமுதாயம் 73 பிரிவாக பிரியும் என்று முன்னறிவிப்பு செய்தார்களேத் தவிர, அவர்கள் அறிவித்த நோக்கம் இஸ்லாமிய சமுதாயம் தங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிய வேண்டும் என்பதற்காக அல்ல. அருள்மறை குர்ஆன் இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என்று இஸ்லாமியர்களுக்கு கட்டளை இடுகின்றது. அருள்மறை குர்ஆன் கட்டளையின்படி - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி யார் இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ - அவர்கள்தான் உண்மையான இஸ்லாமிய வழியில் நடப்பவர்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் - என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அதில் ஓரேயொரு கூட்டத்தைத் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் நரகத்துக்குச் செல்வார்கள். மேற்படி அறிவிப்பை கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்கள் கேட்டனர் சொர்க்கத்துக்கு செல்லும் அந்த கூட்டம் எது?. என்று. அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: அந்த கூட்டம் நானும் எனது அன்புத் தோழர்களும் உள்ளடங்கிய கூட்டம் என்று. ( மேற்படி செய்தி திர்மிதி என்ற செய்திப் புத்தகத்தின் 171வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. )

'அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள். அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள்' என்று அருள்மறை குர்ஆன் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. ஒரு உண்மையான முஸ்லிம் அருள்மறை குர்ஆனையும ; - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும்தான் பின்பற்ற வேண்டும். அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமில்லாத பட்சத்தில் எந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் ஒரு உண்மையான முஸ்லிம் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு மார்க்க அறிஞரின் கருத்து - அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் முரண்படுமாயின் அந்த கருத்துக்கு ஒரு உண்மையான முஸ்லிம் மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்படி மார்க்க அறிஞர் எவ்வளவு கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் சரியே.

இஸ்லாமியர்கள் அனைவரும் அருள்மறை குர்ஆனை - கற்றறிந்து - அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை சரிவர பின்பற்றுவோம் எனில் இறை நாட்டத்தில் நமக்கிடையே இருக்கும் இந்த பிரிவினை என்ற வேறுபாடு நம்மிடமிருந்து மறையும். நமக்குள்ளே பிரிவினையற்ற சிறந்த ஒற்றுமையும் உருவாகும்.

Monday, January 24, 2011

உயிருக்கு போராடும் 2 வயது சிறுமிக்கு உதவிடுங்கள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கீழக்கரை வடக்குத் தெருவை சேர்நத ஏழை ஒருவரின் மகளான மைஷா என்ற சிறுமி பிறந்ததிலிருந்து நோயால் அவதியுற்று வருகிறாள். அவளை 19 நாள் குழந்தையாக இருந்தப் பொழுது மருத்துவரிடம் காட்டியதில், அவளுக்கு ஈரலில் பிரச்னை இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவித்தப்பட்டது.

 அவளுக்கு ஒரு ஆப்ரேஷனும் நடைபெற்றது. ஆனால் அது பலன் அளிக்கவில்லை. மருந்து மாத்திரைகளுடன் காலம் கடந்தும் இச்சிறுமி பள்ளிக்கு போகும் முன் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை (LIVER TRANSPANTATION) செய்தே ஆக வேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டார்கள். மிக அரிதாக நடைபெறும் இந்த ஈரல் மாற்று அறுவை சிகிச்கைக்கு சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்களின் அறிக்கை தெரிவிக்கிறது. இதனால்  இவளது ஏழ்மையான குடும்பம் மிகுந்த கவலையில் இருக்கிறது. எனவே, இவளின் மருத்துவ உதவிக்கு உதவிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்.TRANSPLANT OF LIVER

Bismillah,
Assalamu Alaikum,

Baby Mysha 2yrs old girl, her DOB is 12th Jan 2009, She was diagnosed to have biliary atresia in her neonatal period and under went kasai procedure when she was 19 days old. The surgery has failed to clear her Jaundice and Doctors adviced to her family, The transplant of Liver should be planned before the school going age.
The cost of Surgery will be the sum of Indian Rs 20,00,000/-(Twenty Lakhs) and more. Medicine cost will come after the surgery 10,000/-per month. Her father is working in U.A,E as a labour, his monthly earning is  10,000/- only. Pls donate cheque Mysha, or cash
Contact :
20/213, NORTH STREET,
KILAKARAI, Ramanathapuram-623517
9994522819
9444214893
9551514185
Email.: sikkankr@gmail.com

Jazakkallah

Monday, January 17, 2011

யாருக்காக இதெல்லாம் செய்கிறீர்கள்??

 
“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!
இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104

Thursday, January 13, 2011

நான் இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்.... ??

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின். 

சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......

முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை. 

இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....

இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.

அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).

பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................


"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது. 

இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை, 

  • என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும். 
  • அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும். 
  • எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும். 

என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.

இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.

என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,

"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது" 

இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.

ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.

"ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்"

அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.

மனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும் இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.

நாட்கள் சென்றன....

இந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு தான், கடைகள் அடைக்கப்பட்டன. தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.

முஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து விட்டேன்.

பள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில் இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில் என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

எனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும் செய்தேன். அவர்களை அப்படியே பின்பற்றினேன்.

எனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.         

"இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய். என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன். உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மனிதர்களிடத்தில் அல்ல"

இதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.

என்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், சாக்சையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.

"Anta Muslim? Limada tusalli? ‘adam wa’dha al yedduka al yameen ala shimal.” (நீங்கள் முஸ்லிமா? நீங்கள் எதற்காக தொழுகின்றீர்கள்? தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க வேண்டும்)

ஆம், அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.

பிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன் நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து "come on" என்று சைகை செய்து என்னை உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் இந்த சிறுவர்களின் அண்ணனாம்.

என்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு புரியவில்லை, என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.

"உங்கள் தாய், தந்தையர் எங்கே?"

நான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து கொண்டேன்.

அப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.

"அமெரிக்கி?" (அமெரிக்கரா?)

"இல்லை, நான் பிரிட்டிஷ்"

"காபி அருந்துகின்றீர்களா?"

இல்லை, நான் ஏற்கனவே அருந்தி விட்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.
                   
"Tawadha" (உளு செய்யலாம் வாருங்கள்)

உளு (Wudu is the Islamic act of washing parts of the body using water) செய்ய சொல்லிக்கொடுத்தார்.

"வாருங்கள் தொழப்போகலாம்"...

மாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.

"கையை உயர்த்துங்கள்" என்று சொல்லியபடியே என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார். "பிறகு இப்படி வையுங்கள்" என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார். பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.

நாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில் நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், "நான் செய்வதை போல செய்யுங்கள்" என்று இரு கைகளையும் உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.

பள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை விட சரியான முறையில் தொழுதேன்.

பள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான் மறுபடியும் கேட்டேன், 

"உங்கள் அம்மா எங்கே?"

அவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை காட்டி கீழே பூமியை காட்டினார்.       

"Baba wa mama fiy mout, yarhamhummullah. Sister make" (மரணம் எங்கள் பெற்றோரை தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி தான் உணவு தயாரித்தார்"

அப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான் ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.

"உங்களுக்கு இஸ்லாம் பிடித்திருக்கின்றதா?" அவர் கேட்டார்.

"ஆம்"

"பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை"

"எனக்கு டைம் தேவை"

அவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.

"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்"

நான் அவருக்கு நன்றி கூறினேன்.

அந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினேன்.

இதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர் பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர். உம்ரா (The Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.

எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான் படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடுத்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்...

"நீங்கள் முஸ்லிமாகவில்லையா?"

என்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா?, அல்லாஹ்விடம் நிபந்தனைகள் விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா (Shahada is the testimony of faith indicating belief in one God, Allah, who has no partners and belief that the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and messenger) சொல்லுங்கள்"

"நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது?, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா?"

"இங்கே பாருங்கள். இறைவன் யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா?. இவ்வளவு ஏன்...நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே!!! நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின் சகோதரர் முஸ்லிமாகவில்லையே"

எனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.

"நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்"

"நீங்கள் அதற்கு முன்னே இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா?"

அவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.

உடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.

என்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.

இஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம். 

இறைவன், நம்பிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக விலகிவிடும்.

அதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு அதிகமாக அருளை கொடுப்பானென்று"


சுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது...நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான் உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில் உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்...

Jerome Boulter,
LTAP Language Teacher,
English Language Centre,
Faculty of Academic Services,
Taibah University,
PO Box 344
Medina 42353,
Kingdom Saudi Arabia
cel. +966 54 3328708
jerboulter@gmail.com

இதனை எழுதும்போது டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் ஒரு உரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது, நீங்களும் பார்த்திருக்கலாம்.

அந்த உரையின் கேள்வி பதில் நேரத்தில் ஒரு சகோதரி,

"குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்?" என்று கேட்க,

அதற்கு டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கூறி விட்டு அந்த சகோதரியை பார்த்து கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வியை,

"சகோதரி, நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன். இஸ்லாத்தை ஏற்கவிடாமல் உங்களை தாமதப்படுத்துவது எது?" என்று கேட்க, அதன் பிறகு நடந்தது உணர்வுப்பூர்வமான நிகழ்வு. அதனை நீங்களே கீழே பார்க்கலாம்.

 


இறைவன் ஒருவருக்கு நேர்வழி காட்ட நினைத்து விட்டால் யார் தடுப்பது?

இறைவா, இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு மனபலத்தை தந்தருள்வாயாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


Please Note:
சகோதரர் ஜெறோம் பௌல்டர் குறித்த இந்த மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. பதிவிற்கு தேவைப்பட்ட தகவல்கள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிற்கு வந்த விதம் குறித்த அவரது கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது இணையதள முகவரியை பயன்படுத்தவும்.    


My Sincere thanks to:
1. Brother Jerome Boulter..
2. Islam Religion Website.
Reference: 
1. Why I became Muslim - http://www.jboulter.com/index_files/Page987.htm

ஜசக்கல்லாஹ் : ஆஷிக் அஹ்மத் அ.
http://ethirkkural.blogspot.com/2010/10/blog-post_18.html
Related Posts Plugin for WordPress, Blogger...