இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! (பகுதி- 2)
இந்திய அரசியலின் ஆய்வை, அதனைக் குறித்த ஆய்வு செய்யும் எண்ணைத்தை உருவாக்கியுள்ள பாஜகவின் உருவாக்கத்திலிருந்தே துவங்கலாம். 1915இல் துவக்கப் பட்ட ஹிந்து மகாசபையின் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் ஜனசங்கம், 1981ஆம் ஆண்டு பாஜக எனும் பெயரில் அரசியல் கட்சியாக அறிமுகம் செய்யப்பட்டது. அந்நாட்களில், நாட்டு மக்கள் முன் பாஜகவினால் வைக்கப்பட்ட தலையாய முழக்கம், "ஊழலற்ற, அதிகார வெறியற்ற, திறமையான ஆட்சி" என்பதாக இருந்தது. அதுவரை காங்கிரஸ் என்ற ஒற்றைக் கட்சியின் அதிகார வெறியிலும் ஊழலிலும் சிக்கித் தவித்த இந்திய மக்கள், தங்களைக் கைதூக்கிவிட ஒரு வலிமையான மாற்றுக் கட்சி வாராதா? என்ற ஏக்கத்திலிருந்தனர். அத்தோடு, அதிகாரத்தைப் பிடிக்க இந்திய மக்களை இந்துக்கள்-இந்துக்கள் அல்லாதோர் என்ற வகையில் பிரித்தெடுக்க, "இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது" என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் கோஷமும் மெல்ல மெல்ல பாஜகவிடமிருந்து பக்குவமாக வெளிப்பட ஆரம்பித்தது. இதற்கு தேசியத்தையும் தேசப்பற்றையும் தங்களின் சொந்த உடமைகளாகக் காட்டிக் கொள்ள பாஜக தவறவில்லை.
உண்மையில் இந்தக் கோஷம் ஆர்.எஸ்.எஸ் ஹிந்துதுவ கோஷம் என்பது எவரும் அறியாததல்ல. இந்தக் கோஷத்துக்கு உரமிடும் வகையில், சுதந்திரத்தின்போது முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தானும் இந்துக்களுக்காக இந்தியாவும் பிரிக்கப்பட்டன என்பதையும் பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம்களே காரணம் என்ற சிந்தனையையும் சிதைத்து எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்களின் துணையுடன் மக்கள் மனதில் பாஜக சரியாகவே திணித்து வந்தது.
பாஜகவின் இக்கோஷத்தை நம்பிய பாமர மக்கள், பாகிஸ்தான் பிரிவினையின் ஆணிவேர் குறித்தும் நாட்டைத் துண்டாடுவதற்கு அப்போது நடந்த உண்மையான சதி நிகழ்வுகளைக் குறித்தும் ஆராயத் தலைப்படவில்லை. இந்திய விடுதலைப் போராட்ட காலகட்டத்தில், நாட்டை ஆள்வோருக்குப் பின்னணியில் இருந்து செயல்படுவதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ், அக்காலகட்டத்திலேயே சரியான பாதையில்இந்து-முஸ்லிம் எனும் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுடன் பயணித்துக் கொண்டிருந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்து-முஸ்லிம் என்ற பிரிவினையைச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆங்கிலேயர்களுடன் இணைந்து விதைத்தது. அதற்கு உதவியாக காங்கிரஸின் உள்கட்டமைப்பில் நன்றாக ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ், கிட்டத்தட்ட அதன் உயர் மட்டத் தலைவர்கள் அனைவரின் சிந்தனையிலும் காவி எண்ணத்தை விதைப்பதில் வெற்றி பெற்றிருந்தது.
ஒரு காலகட்டம் வரை இந்திய நாட்டின் விடுதலையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு காங்கிரஸோடு இணைந்து போராடி வந்த ஜின்னா, காங்கிரஸில் ஏற்பட்ட ஹிந்துத்துவ மாற்றத்தை உணர்ந்து காங்கிரசிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கின்கீழ் விடுதலைப் போரைத் தொடர வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார். 1906ஆம் ஆண்டு சர்.ஆகாகானால் தோற்றுவிக்கப் பட்ட முஸ்லிம் லீக் என்ற அமைப்புக்குள் முப்பதாண்டுகள் கழித்து, 1936ஆம் ஆண்டில் ஜின்னா நுழைந்தார். நுழைந்தார் எனச் சொல்வதைவிட, காங்கிரஸில் இருந்த தீவிர ஹிந்துத்துவத் தலைவர்களின் வேற்றுமைப் பேச்சுக்கள் ஜின்னாவைக் காங்கிரஸிலிருந்து பிரித்து முஸ்லிம் லீக்கினுள் தள்ளி விட்டன எனக் குறிப்பது பொருத்தமாக இருக்கும். நேரு போன்ற உயர்மட்டத் தலைவர்கள் பலர் திலகர் போன்ற ஹிந்துத்துவவாதிகளின் சிந்தனையோடு ஒத்துப் போய் விட்டது ஜின்னாவின் முஸ்லிம் லீக் நுழைவுக்குக் காரணியானது.
மேற்கொண்டு போவதற்கு முன்னர், வேளை வாய்க்கும்போது சுத்தம் செய்யப்பட வேண்டிய வரலாற்று அழுக்குகளைச் சற்றே இனம் கண்டு இங்கு ஆவணப் படுத்த வேண்டியது கட்டாயமாகும்.
"முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின் மூளையில்தான் முதன் முதலில் உதித்தது" என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றிய பண்டிட் சுந்தர்லால் ’ரேடியன்ஸ்’ வார 13.6.87 இதழில் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
"இந்தியாவின் ஆட்சி என்பது இந்துக்களுக்கே; இங்கு முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை" என்று சாவர்கர் 1917ஆம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாக R.N.அகர்வால் தனது The National Movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
"இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே. அவர்கள் விருந்தாளியைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்" என்று குர்தகி மட சங்கராச்சாரியார் முஸ்லிம்களை எச்சரித்தார்.
"இந்து-முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது முழு முட்டாள்தனம் - A Joint Hindu Muslim state is Sheer Nonsense" என்று அகில இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்த ஹர்தயால் கூறினார்.
1923இல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டு, "இந்தியா இந்துக்களுக்கே! வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை" என்று வெளிப்படையாகப் பிரகடனப் படுத்தப் பட்டது.
இத்துணைப் பிரிவினைவாத முழக்கங்கள் இந்துத் தலைவர்களால் முழங்கப் பட்ட பின்னரும் 1940 வரைக்கும் முஸ்லிம் லீக், தனிநாடு பற்றி வலியுறுத்தவில்லை. "முஸ்லிம்களுக்கு என்று தனிநாடு என்பது நிறைவேற முடியாத வெறுங் கனவு - An Impossible Dream" என்று 1939இல் ஜின்னா எதிர்ப்புக் குரல் கொடுத்திருந்தார்.
காலம் மாறியது; காங்கிரஸுக்கு ஆட்சிப் பொறுப்பு கிடைத்த உடனேயே இந்திய முஸ்லிம்களை அது வெளிப்படையான எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கியது.
"நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையின் அடிநாதம் காங்கிரஸ்தான். 1937இல் காங்கிரஸுக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைக்கப் பெற்றதும் அதன் செயல்பாடுகள் முஸ்லிம்களுக்கிடையில் ஐயங்களை உருவாக்கின.. முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற காங்கிரஸ் மறுத்தது" என்று Congress Parentage of Partition எனும் தலைப்பின்கீழ் தமது நூலான Recollection and Reflectionஇல் எழுதுகிறார் விடுதலைக் கட்சி(Liberal Party)யின் தலைவர் சர். சிம்மன்லால் சிடால்வாட்.
"ஆட்சிக்கு வரும் மாநில அமைச்சரவையில் சிறுபான்மைப் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட 1930ஆம் ஆண்டின் வட்டமேஜை மாநாட்டில் பங்காற்றியவர் சர். சிடால்வால். வட்டமேஜை மாநாட்டுத் தீர்மானத்தைப் பதவிக்கு வந்ததும் காங்கிரஸ் காற்றில் பறக்க விட்டது. "முஸ்லிம் லீக் கட்சிக்கு முழுக்குப் போட்டு விட்டு, காங்கிரஸில் இணைந்தால் மட்டுமே அமைச்சர் பதவி" என்று புதிய ஒரு கொள்கையைக் காங்கிரஸ் அறிவித்தது.
"காங்கிரஸின் அறிவிப்பு, அதன் அடிப்படை விதிகளுக்கே மாற்றமானது. இந்திய நாட்டின் எல்லாக் கட்சிகளையும் அழித்தொழித்து விட்டு, காங்கிரஸை இந்தியாவின் ஒரே அரசியல் கட்சியாக நிறுவும் முயற்சியின் முன்னோட்டமாக இந்த முறை கையாளப்பட்டது. ஒரு ஏகாதிபத்திய, யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவ செய்யப்படும் இம்முயற்சியை ஒருக்கால் ஹிந்துக்கள் வரவேற்கக் கூடும். ஆனால் சுதந்திர மக்கள் என்ற முறையில் இம்முயற்சி, முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்" என A Short History of India and Pakistan எனும் நூலில் டாக்டர் அம்பேத்கர் வன்மையாகக் கண்டித்தார்.
"ஒன்றிணைந்த இந்தியாவில் சுயாட்சி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கலாம்" என்பதாக ஒரு முடிவை, கேபினட் தூதுக்குழு 1946 மே மாதம் 16ஆம் தேதி வெளியிட்டது. சுயாட்சியில் முஸ்லிம்களுக்கும் பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 1940ஆம் ஆண்டு முன்வைத்த தனிநாடு கோரிக்கையை ஜின்னாவின் ஆலோசனையின்படி கைவிடுவதற்கு முஸ்லிம் லீக் முன் வந்தது. எனவே, கேபினட் தூதுக்குழுவின் முடிவை 1946 ஜூன் 6ஆம் தேதியன்று ஒரு தீர்மானத்தின் மூலம் முஸ்லிம் லீக் ஏற்றுக் கொண்டு நிம்மதி அடைந்தது.
ஆனால், நிம்மதி நீடிக்கவில்லை.
ஒருமாதத்துக்குள் - அதாவது 1946 ஜூலை 10இல் - பத்திரிகையாளருக்குப் பேட்டியளித்த ஜவஹர்லால் நேரு, "கேபினட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு அதிகாரம் உண்டு" என்று மிரட்டும் தொனியில் தெரிவித்தார்.
அது குறித்து, "நேருவின் பேட்டி, நாட்டில் வரலாற்றையே மாற்றி விட்டது" என காங்கிரஸ் தலைவர் மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் தனது India Wins Freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இடைக்கால ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதே இந்தளவுக்கு இரட்டை நாக்கோடு பேசும் காங்கிரஸ், விடுதலை பெறும் இந்தியாவில் முஸ்லிம் லீக்கோடு - முஸ்லிம்களோடு நீதி-நியாயத்தோடு நடந்து கொள்ளும் என்று நம்ப முடியாது என்ற முடிவான நிலைக்கு முஸ்லிம் சமுதாயம் தள்ளப் பட்டது. "அடிக்கடி தன் நிலையை மாற்றி மாற்றிப் பேசும் காங்கிரஸை இனியும் நம்பத் தயாராக இல்லை; தனி நாடுதான் தீர்வு" என விடுதலைக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர்தான் முடிவாக ஜின்னா அறிவித்தார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப்படுத்த இயலாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் தலைவர்களான நேரு, வல்லபாய் பட்டேல் போன்றோரின் துணையுடன் பாகிஸ்தான் பிரிவினைக்கு நன்றாக விதை தூவி வளர்த்து, மவுண்ட் பேட்டனின் துணையுடன் விடுதலையின் போது பாகிஸ்தானைப் பிரித்து ஜின்னாவிடம் கொடுத்து இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்து விட்டனர்.
பிரிவினைச் சதிக்கு ஆளாகாமல் முஸ்லிம்கள் தப்பி இருந்தால் என்ன நடந்திருக்கும்? அண்மையில் பிஜேபியிலிருந்து வெளியே தள்ளப் பட்ட ஜஸ்வந் சிங் தனது 'Jinnah: India-Partition-Independence' என்ற நூலில் கூறுகிறார்:
"இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் விழிகளை உற்றுப் பாருங்கள். மனதில் வலிகளைச் சுமந்து வாழ்வது அவர்களது விழிகளில் தெரியும். அவர்களது சொந்த மண் எது? அவர்களை நாம் அந்நியர்களைப் போலத்தானே நடத்தி வருகிறோம்? தேசப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் கொடுத்த விலை மிகமிகக் கூடுதல்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தேசம் பிரிவு படாமல் ஒன்று பட்டிருந்திருந்தால் அவர்கள் இங்கு அசைக்க முடியாத வலிமையுடன் இருந்திருப்பார்கள் ... Look into the eyes of the Muslims who live in India and if you truly see the pain with which they live, to which land do they belong? We treat them as aliens…without doubt Muslims have paid the price of Partition. They could have been significantly stronger in a united India… "
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.
satyamarkam.com
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Friday, October 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன