(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 24, 2014

பரோலில் வந்துள்ள சகோ. அப்துல் காதர் அவர்களுக்கு நிக்காஹ்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....

நாகூரை சேர்ந்த அப்துல் காதர் என்ற சகோதரர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக விசாரணை கைதியாக  சிறையில் இருந்து வருகிறார்...

இந்நிலையில் தற்போது பத்து நாள் பரோலில் வந்துள்ளதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ் இறைவன் அருளால் நேற்று நிக்காஹ் என்னும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது...

பாரகல்லாஹ்.. 

இந்த சகோதரரின் நிரந்தர விடுதலைக்காகவும் இன்னும் விசாரணை கைதியாக தங்கள் வாழ்நாளை சிறையில் களித்து கொண்டிருக்கும் சகோதரர்கள் அனைவரின் விடுதலைக்காகவும் இன்ஷால்லாஹ்  பிரார்த்திப்போம்.  


Thursday, November 20, 2014

தமிழகத்தில் ஜனவரி முதல் நேரடி சிலிண்டர் மானியம் – அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜனவரி முதல் சமையல் சிலிண்டர்களுக்கான நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1 முதல் சமையல் சிலிண்டர்களுக்கான நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோருக்கே வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுளள இந்த திட்டம் தமிழகத்தில் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் எரிவாயு சிலிண்டர் வாங்கும்போது, முழு தொகையையும் செலுத்த வேண்டும். பதிலுக்கு அவர்களுக்கான மானியத் தொகையை அரசு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும். 


இந்த மானியத்தைப் பெற வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரத்தை எரிவாயு முகவர்களிடம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : ஒன் இந்தியா.

Sunday, November 9, 2014

நாகூரை சேர்ந்த சகோதரி ஷஃபீரா அனீக்கா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

விமான நுட்பப் பொறியியல் என்று வழங்கப் படும் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரீங் படிப்பில் அண்ணா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார் ஷஃபீரா அனீக்கா என்ற மாணவி. தமிழகத்தின் நாகூரைச் சேர்ந்த அவருக்கு வாழ்த்துகள் கூறி ஒரு சிறு நேர்காணல் செய்தோம்.
ஷஃபீரா அனீக்கா, தமிழக முஸ்லிம் உலகின் கண்ணதாசன் என்று கருதப்படும் மறைந்த கவிஞர் நாகூர் சலீம்தம் பேத்தியாவார் என்பது சிறப்புக் குறிப்பு.


சிங்கையிலிருந்து கணிப்பேசி வழியாக தனது சிறிய தகப்பனார் ஜாஃபர் சாதிக் முன்னிலையில் அவர் கூறிய கருத்துக்களின் தொகுப்பு:

வாழ்த்துகள் சகோதரி ஷஃபீரா!  இந்தப் படிப்பு (ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரீங்) பற்றி சொல்லுங்களேன்

"ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் என்பது புவி எல்லைக்குட்பட்ட பறக்கும் இயந்திரங்கள் குறித்த, அவற்றின் கட்டுமானங்கள் குறித்த படிப்பாகும். பறக்கும் இயந்திரங்களின் வடிவமைப்பு, வேகம் என்பனவற்றில் மேலும் மேலும் முன்னேற்றம் காணத்தக்க வகையில் இக்கல்வி அளிக்கப்படுகிறது. இதில், ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியரிங் என்பது புவி எல்லைக்கு அப்பால் செல்லும் செயற்கைக்கோள்கள், ராக்கெட்கள் பற்றிய அறிவைத் தரும் வேறு ஒரு பிரிவாகும்.

இன்றைக்கு தொழிற்நுட்பம் வளர்ந்துவரும் வேகத்தில், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் முன்னேற்றம் வழிகோலப்படுகிறது. மானுடத்திற்கு இதில் பெரும் தேவையுண்டு!".

உங்களின் இச்சாதனையில் என்ன சிறப்பம்சம்?

"சிறப்பம்சம் என்று கேட்டால், இயந்திரப் பொறியியலின் கீழ் வருகிற 'ஆண்கள் மட்டுமே படிக்கத்தக்கப் படிப்பு' என்று பொதுவாகக் கருதப்படுகிற இந்தப் படிப்பில் நானும் - ஒரு முஸ்லிம் பெண்ணாக - படித்துச் சாதித்திருப்பதுதான். ஏராளமானோர் 'ஆண்கள் மட்டுமே படிக்கத்தக்கப் படிப்பில் நீ ஏன் சேர்ந்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அவ்வளவு ஏன், எங்கள் வகுப்பில் கூட நாங்கள் நால்வர் மட்டுமே பெண்கள். அதிலும் நான் மட்டுமே முஸ்லிம் பெண் - ஹிஜாப் என்னும் இஸ்லாமிய ஆடை அணிந்து படித்துவந்தேன்"

உங்கள் பெற்றோர், உறவினர்கள் எந்த அளவுக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக இருந்தார்கள்?

"மிகப்பெரும் ஊக்கம் அளித்தார்கள். அதிலும் என் தகப்பனார் அவர்கள் இந்தப் படிப்பை எனக்கு அறிமுகப்படுத்தி இதில் எனக்கிருக்கும் ஆர்வத்தைக் கண்டு தொடர்ந்து படிக்க ஊக்கமளித்தார்கள். என் தாயாரும் தகப்பனாரும் அளித்த உறுதுணை மிகவும் போற்றத்தக்கது. அதுபோன்று, என் குடும்பத்தார்கள், உறவினர்கள், குறிப்பாக என் சின்னாப்பா ஜாஃபர்சாதிக் அவர்கள் அளித்த ஊக்கமும் அளப்பரியது."

மகிழ்ச்சி; உங்கள் ஆசிரியர்களின் பங்களிப்பைப் பற்றியும் சொல்லுங்களேன்

"அருமையான ஆசிரியர்கள்; வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமே போதிக்காமல், பலப்பல செய்முறை விளக்கங்களையும், சம்பந்தப்பட்ட படிப்புக்கான தேடல்களையும் அளித்தார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்"

நல்லது, இந்தப் படிப்புக்கான எதிர்காலம், வாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்!

"மிகப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. விமானங்களின் வேகத்தைக் கூட்டுவது, உதாரணமாக, இலண்டனிலிருந்து அமெரிக்க நகரங்களுக்கு விமானத்தில் செல்ல 10 மணி நேரங்கள் பிடிக்கிறது என்றால் அதை 4 மணியாகக் குறைக்கும் அளவுக்கு விமானங்களின் வேகத்தைக் கூட்டுவது பற்றியெல்லாம் ஆராயலாம். மேலும் போர்விமானங்கள் இன்றைக்குத் தேசப் பாதுகாப்பின் தவிர்க்க இயலாத அம்சங்களாகிவிட்டன. அவற்றிலும் ஆராய்ச்சி செய்வதன் மூலமாக தேசப் பங்களிப்பும் செய்யலாம்."

உங்களுடைய அடுத்தக் கட்ட படிப்புகள் பற்றி

"மேல்நிலைப் படிப்பைத் தொடர்வதுடன், அரபு மொழியில் புலமை பெறவும் திட்டமிட்டுள்ளேன். அதன்மூலம் குர்ஆனில் வேற்றுக் கிரக வாசிகள் குறித்து கூறப்படுபவற்றிலும் ஆராய்ச்சி செய்யப் போகிறேன். அதுபற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையும் எழுதி வருகிறேன்"

மகிழ்ச்சி, நீங்கள் எழுதும் அந்தக் கட்டுரையை அனுப்பி வைக்க இயலுமா?

"நிச்சயமாக, எழுதி முடித்ததும் அனுப்பிவைக்கிறேன்"

நல்லது சகோதரி, முஸ்லிம் பெண்கள் கல்வியில் பெரிதும் பின்தங்கி இருப்பது பற்றி உங்கள் கருத்தென்ன? முஸ்லிம் சகோதரிகளுக்கு ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

"ஆம், எந்தச் சூழ்நிலையிலும் கல்வியைக் கைவிட்டு விடக் கூடாது;  பொதுவாக, முஸ்லிம் பெண்கள் படித்து என்ன ஆகப் போகிறது என்ற மனப்பான்மை நிலவுகிறது. மேலும் சவூதி போன்ற அரபுநாடுகளின் கலாச்சாரத்தை இஸ்லாமிய கலாச்சாரமாகப் பார்க்கும் நிலையும் இருக்கிறது. இவை தவறானவை.
சில முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் பெண்கள்  வாகனம் ஓட்டவும் அனுமதி இருப்பதில்லை. ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் நபித்தோழியர் பெண்கள் வாளேந்தி போர்புரிந்துமிருக்கிறார்கள். ஆகவே, அரபுநாடுகளின் கலாச்சாரத்தை இஸ்லாமிய கலாச்சாரமாகப் பார்க்கக்கூடாது; முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறக்க வேண்டும். தங்கள் அடையாளத்தை விட்டுவிடக் கூடாது. கல்விதான் சிறந்த அடையாளம்"

"அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி, வாழ்த்துகள். நீங்கள் மென்மேலும் வாழ்வில் உயரங்களை அடைய பிரார்த்தனைகள்!"

நேர்காணல் : இ.ஹ

நன்றி : இந்நேரம்.காம்.

ரேஷன் கார்டுகளில் ஒரு ஆண்டிற்கு மீண்டும் உள்தாள்

ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்க, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டில், மீண்டும், உள்தாள் ஒட்டி, அடுத்த ஆண்டு வரை நீட்டிக்க, தமிழக அரசு, முடிவு செய்து உள்ளது.

தமிழகத்தில், அரிசி கார்டு, சர்க்கரை கார்டு, காவலர் கார்டு என, மொத்தம், 1.98 கோடி, ரேஷன் கார்டுகள் உள்ளன.ரேஷன் கடைகளில், குறைந்த விலையில், உணவு பொருட்களை வாங்கவும், மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் பெறவும், ரேஷன் கார்டு, முக்கிய ஆவணமாக திகழ்கிறது.தமிழகத்தில், உணவு வழங்கல் துறை சார்பில், கடந்த, 2005ல், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. அவற்றின் செல்லத்தக்க காலம், 2009ல் நிறைவடைந்தது.அதன்பின், ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டப்பட்டு, அவற்றின் செல்லத்தக்க காலம், ஆண்டுதோறும், நீட்டிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, வரும் டிசம்பர் வரை, ரேஷன் கார்டு, செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.'போலி ரேஷன் கார்டுகளால், அரசு செலவு அதிகரிப்பதை தடுக்க, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்' என, தமிழக அரசு, 2012ல் அறிவித்தது.ஆனால், அறிவிப்பு வெளியானதோடு சரி, அதற்கான பணிகளில், அரசு, அக்கறை காட்டாததால், இதுவரை, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை.

மத்திய அரசு, தமிழகத்தில், விழி, விரல் ரேகை; புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, ஆதார் அடையாள அட்டை வழங்கி வருகிறது. மத்திய அரசிடம் இருந்து, மேற்கண்ட விவரங்களை பெற்று, 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்க, தமிழக அரசு, முடிவு செய்தது.இதையடுத்து, 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு'; ரேஷன் கடையில், 'ஸ்மார்ட்' கருவி; சர்வர் மையம் உள்ளிட்ட, ரேஷன் கடையின் ஒருங்கிணைந்த அனைத்து பணிகளையும், தனியார் நிறுவனம் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.இந்த பணிகளை செய்யும், தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, தமிழக அரசு, கடந்த, செப்., 16ம் தேதி, ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டது.இதையடுத்து, அதே மாதம், 18ம் தேதி, 'டெண்டர்' அறிவிப்பு வெளியாகி, அக்., 20ம் தேதி, 'டெண்டர்' நடத்த முடிவு செய்யப்பட்டது.

'டெண்டர்' தேதியை நீட்டிக்க, தனியார் நிறுவனங்கள், அரசுக்கு, கோரிக்கை விடுத்ததை அடுத்து, இம்மாதம், 12ம் தேதி வரை, 'டெண்டர்' தேதி நீட்டிக்கப்பட்டது.ஆனால், டிசம்பர் முடிவடைய, இன்னும், ஒரு மாதம் மட்டுமே எஞ்சி இருப்பதால், 'டெண்டர்' பணிகளை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால், ஜனவரி முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது, புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டி, ஓராண்டிற்கு நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

'டூப்ளிகேட் கார்டு'

தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டு வழங்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், பெரும்பாலான கார்டுகள், கிழிந்து, கந்தல், கோலமாக உள்ளன.எனவே, அவற்றில், உள்தாள் ஒட்ட வசதி இல்லை என்றால், சென்னையில், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம்; மாவட்டங்களில், வட்ட வழங்கல் அலுவலகங்களில், கிழிந்த கார்டை கொடுத்து விட்டு, அதற்கு பதில், 'டூப்ளிகேட் கார்டு' பெற்று கொள்ளலாம்.
தாமதத்திற்கு காரணம் என்ன?


உணவு மற்றும் கூட்டுறவு துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின், ஆதார் அட்டை விவரங்கள் அடிப்படையில், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட இருக்கிறது.'டெண்டர்' விவரங்களை, தமிழக அரசின் தலைமை செயலர் தலைமையிலான மூத்த அதிகாரிகள் குழு தான், இறுதி செய்யும்.இந்த பணிகள், ஒரு மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லாததால், அடுத்த ஆண்டிற்கும், ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டப்பட்டு, செல்லத்தக்க காலம், அடுத்த டிசம்பர் வரை, நீட்டிக்கப்பட இருக்கிறது.அடுத்த ஆண்டு, ஏப்ரல் அல்லது ஜூலையில், பழைய கார்டுகள், திரும்ப பெற்று கொண்டு, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Wednesday, October 15, 2014

நாம் சாப்பிடும் உணவு .. விஷமாகி போன பயங்கரம்...!!

சாக்கடைகளிலும் ஆறுகளிலும் பிளாஸ்டிக் பைகள் மிதந்து கொண்டிருப்பதும் அவ்வப்போது நீர்ப் போக்கை அடைத்து நாற்றமெடுப்பதும்தான் பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்தும் பிரச்சினை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளைத் தெரியாமல் முழுங்கும் மீன்கள், பறவைகள், மற்ற உயிரினங்களின் நிலைமை என்னவாகிறது தெரியுமா? பிளாஸ்டிக் மாசைப் பற்றி பேசுவதற்கு முன் நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் ஏற்படுத்தும் பிரச்சினையைப் பற்றி பார்ப்போம்.
மீனின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் துண்டுகள்


சலவைத்தூள், ஐஸ் குச்சிகள், பிளாஸ்டிக் பைகள், சருமப் பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றில் பத்து மைக்ரான் அளவே இருக்கும் சிறிய பாலியெத்திலீன், பாலி புரொபிலீன் மணிகள் இருக்கின்றன. உங்கள் முகத்தில் இருந்து துணிகள்வரை எல்லாவற்றையும் சுத்தம் செய்வதாக சத்தியம் செய்யும், அந்த வண்ணப் பிளாஸ்டிக் மணிகள் உண்மையில் என்ன செய்கின்றன?

இந்த மக்காத துகள்களை அவ்வளவு எளிதாகச் சுத்திகரித்துவிட முடியாது. இந்த நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் கழிவுநீரில் இருக்கும் மோட்டார் எண்ணெய், பூச்சிக்கொல்லிகளைக்கூட உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டவை. அப்படியென்றால், கடைசியாக அவை எங்கே போகின்றன? 

நம் சாப்பிடும் உணவுடன் தொடர்புடைய உணவு சங்கிலிக்குத்தான்.
இந்த மாசுபாடு ஏற்படுத்தும் ஆபத்து பற்றி இப்போதுதான் விஞ்ஞானிகளும் சூழலியலாளர்களும் எச்சரிக்கை அடைந்திருக்கின்றனர்.
ஏற்கெனவே, இந்த நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் உலகின் பெருங்கடல்களிலும் உள்ளூர் நீராதாரங்களிலும் அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல்தான் அது எடுக்கப்போகும் பூதாகர ஆபத்துகள் தெரியவரும்.

நாகூர் மைதீன் கடைல புரோட்டா வாங்கி சாப்பிட்டுவிட்டு பார்சல் பேப்பர் பாலிதீன் பைல கட்டி ரோட்ல ம் வீசுவதற்கும் , நாம் வேறு என்றோ வாங்கி சாப்பிடும் உணவிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத நிதர்சன உண்மை.. 

சில நேரங்களில் நாம் உணவு என்று பிளாஸ்டிக் பொருள்களை தான் சாப்பிடுகிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...?

நன்றி : தமிழ் இந்து.

Thursday, September 25, 2014

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

நாகப்பட்டினம்,
செப்டம்பர் 23, 2014.

குழுவில் பங்குபெற்றோர் :                          

பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
வழக்குரைஞர் தை.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி
மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி,
முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை,
அபு ஃபைசல், பத்திரிகையாளர், சென்னை.

கடந்த ஆகஸ்ட் 30 அன்று நாகூர் பட்டினச்சேரி சீராளம்மன் கோவில் பூச்சொறிதல் திருவிழா ஊர்வலத்தில் நடந்த சம்பவங்கள் மற்றும் அதை ஒட்டி உருவாகியுள்ள பதட்ட நிலை ஆகியவை தொடர்பான உண்மைகளை அறிய உருவாக்கப்பட்ட இக்குழு நேற்று பகல் முழுவதும் நாகூரில் பலரையும் சந்தித்தது.

அன்றைய வன்முறையில் தாக்கப்பட்ட இளைஞர்கள் ரஞ்சித், பிரபு, காட்டுப்பள்ளி எனப்படும் ஹிலுறு ஜாமிஆ மஸ்ஜித் ஜமா அத் தலைவர் எம்.எம்.தாஹிர்,, செயலர் முகம்மது தாஜுதீன், நாகூர் ஆரிய நாட்டுத் தெரு பஞ்சாயத்தார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே நிஜாமுதீன், தற்போது கைதாகியுள்ள முஸ்லிம் இளைஞர்களின் பெற்றோர்கள் ஜகபர் அலி மற்றும் சாதிக், விடுதலைச் சிறுத்தை அமைப்பின் முன்னாள் நகரச் செயலர் முருகன், த.மு.மு.க மாவட்டத் தலைவர் ஜபருல்லா முதலானோரைச் சந்தித்தது. காவல்துறைக் கண்காணிப்பாளர் தற்போது விடுப்பில் உள்ளதால் இந்தப் பிரச்சினையை விசாரித்து வரும் நாகை க்ரைம் பிராஞ்ச் துணைக் கண்காணிப்பாளர் ரெங்கராஜன் அவர்களிடமும் விரிவாகப் பேசியது.

சம்பவம்

இந்த ஆண்டு வி.எச்.பிஅமைப்பைச் சேர்ந்த நாகூர் முத்துகிருஷ்ணனின் முயற்சியால் முஸ்லிம் மக்கள் குறிப்பிட்ட அளவில் வசிப்பதும் காட்டுப் பள்ளி வாசலுக்கு அருகில் அமைந்துள்ள பண்டகசாலைத் தெருவில் முதன் முறையாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு  சென்ற ஆகஸ்ட் 29 அன்று சிலை ஊர்வலமும் நடத்தப் பட்டுள்ளது. அடுத்த நாள் மீனவ மக்களின் பூச்சொறிதல் ஊர்வலம் முஸ்லிம் மக்கள் வசிக்கிற மியான் தெரு வழியாக நடந்துள்ளது. பட்டினச்சேரி சீராளம்மன் ஆலயத்திற்கு இவ்வழியே பூச்சொறிதல் ஊர்வலம் வருவது வழக்கம் என்றாலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மியான் தெருவிற்கு இணையாக உள்ள  பண்டகசாலைத் தெரு வழியான சாலை சீர் செய்யப்பட்டிருந்ததால் அவ்வழியே ஊர்வலம் நடந்து வந்துள்ளது. இந்த ஆண்டு பண்டக சாலைத் தெருவில் சாக்கடை வேலை நடந்து கொண்டிருந்ததால் அவர்கள் வேறு வழியில் செல்ல முடிவெடுத்தபோது அண்ணா தி,மு.க வின் கவுன்சிலர் சின்னப் பிள்ளை என்பவர் மியான் தெருவழியாகச் செல்லுமாறு திருப்பியுள்ளார்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக வேறு வழியில் சென்று கொண்டிருந்த ஊர்வலம் இந்த ஆண்டு தம் தெரு வழியே பள்ளிவாசலை ஒட்டி வந்ததையும், வழக்கமாக வருவது போலல்லாமல் இம்முறை தாரை தப்பட்டைகளுடன் பெருந்திரளாக வந்ததையும் கண்டு முஸ்லிம்கள் பதட்டம் அடைந்துள்ளனர். என்றைக்கும் இல்லாமல் இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதும் அவர்களின் இந்தப் பதட்டத்திற்கு ஒரு காரணம். மாலை நேரத் தொழுகைக்காக பாங்கு ஒலிக்கத் தொடங்குகையில் தாரை தப்பட்டைச் சத்தம் கூடாது எனக் கூறியுள்ளனர். வாக்குவாதம் நடைபெற்று இறுதியில் சற்று நேரம் தாரை தப்பட்டைகள் நிறுத்தப்பட்டு பின் ஊர்வலம் தொடர்ந்துள்ளது. ஊர்வலமே இவ்வழியாகச் செல்லக் கூடாது என முஸ்லிம்கள் தடுக்கவுமில்லை. பாங்கு ஒலிக்கும்போது நாங்கள் தாரை தப்பட்டையை ஒலிப்போம் என மீனவர் தரப்பில்
பிடிவாதம் பிடிக்கவும் இல்லை. காவல்துறை சரியாகச் செயல்பட்டிருந்தால் இன்றைய பிரச்சினையே ஏற்பட்டிருக்காது.

தொடர்ந்து பதட்டத்துடன் பள்ளிவாசல் அருகில் திரளாக முஸ்லிம் இளைஞர்கள் கூடி இருந்துள்ளனர். இப்படி முன் அறிவிப்பு இன்றியும் அனுமதி இன்றியும் பிரச்சினைக்குக் காரணமான ஊர்வலம் குறித்து பள்ளிவாசலில் அமர்ந்து செயலர் தாஜுதீன்,

கொறடா சாதிக், நூர் சாதிக், மசூத் அலி முதலானோர் காவல் துறைக்குப் புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்துள்ளனர்.
அச்சமயம் “அர்த்த ஜாம இளைஞர்கள் கழகம்” என்கிற அமைப்பைச் சேர்ந்த ரஞ்சித் எனும் இளைஞர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். இந்த அமைப்பு இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய ஒன்று எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற முஸ்லிம் இளைஞர்கள் ரஞ்சித்தை நிறுத்தியுள்ளனர். அது கைகலப்பாக மாறும் நேரத்தில் ரஞ்சித்தின் நண்பனும் அதே அமைப்பச் சேர்ந்தவரும், முதல் நாள் விநாயகர் ஊர்வலத்திற்குக் காரணமாக இருந்தவருமான பிரபு எனும் இளைஞர் வந்துள்ளார். கைகலப்பில் ரஞ்சித் மற்றும் பிரபு இருவரும் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த பள்ளி வாசலில் அமர்ந்து புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்த கொறடா சாதிக் உள்ளிட்டோர் ஓடி வந்து தாக்கியவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தாக்கப்பட்ட ரஞ்சித், பிரபு இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் (குற்ற எண் 346 / 2014, நாகூர் காவல் நிலையம்) புதுத் தெருவைச் சேர்ந்த நூர் சாதிக், மியான் தெருவைச் சேர்ந்த கொறடா சாதிக் எனப்படும் ஜாபர் சாதிக், ஆஷிக், அம்ஜத் அலி, அஷ்ரப்  மற்றும் சிலர் ஆகியோர் மீது இ.த.ச 147, 148, 323, 324, 307, 294 பி, 506 (1), பி.பி.டி 3,4 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை பஷீர் அகமது, மசூத் அலி, அஜ்மல், நூர் சாதிக் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொறடா சாதிக், ஆஷிக், அம்ஜத் அலி ஆகியோர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.

எமது பார்வைகள்
  1. பதட்டம் மிக்க சூழலில் இப்படி  முன்னூறுக்கும் மேற்பட்டோர்  தாரை தப்பட்டைகளுடன் பங்கு பெற்ற பூச்சொறிதல் ஊர்வலம் ஒன்று முஸ்லிம்கள் செறிவாக உள்ள ஒரு பகுதியில் நடைபெற்ற போது  காவல்துறை எந்த முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளாததும், உரிய பாதுகாப்பு அளிக்காததும் வியப்பையும் கவலையையும் அளிக்கிறது. தங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும் எனத் தெரியாது எனக் காவல்துறையின் சார்பாக எங்களிடம் அளிக்கப்பட்ட பதில் ஏமாற்றமளிக்கிறது.
  2. முஸ்லிம் இளைஞர்களால் ரஞ்சித், பிரபு ஆகியோர் தாக்கப்பட்டது உண்மை என்ற போதிலும், தாக்குதலில் ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. சாதாரண கைகலப்புதான் நடந்திருக்கிறது. ஆனால் கொலை முயற்சி உட்பட இத்தனை கடுமையான பிரிவுகளின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது காவல் துறை உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா எனும் கேள்வியை எழுப்புகிறது. மதக் கலவரம் தொடர்பான பெரிய பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய இப்படியான கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது எனும் காவல் துறையின் பதிலை எங்களால் ஏற்க இயலவில்லை. நீதி வழங்கு நெறியின் மிக அடிப்படையான அம்சம், “ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு குற்றமற்றவர் கூட தண்டிக்கப்படக் கூடாது” என்கிற நெறி இங்கு கேலிக் கூத்தாக்கப் படுகிறது.
  3. இப்போது கைது செய்யப்பட்டுள்ள அம்ஜத் அலி, பஷீர் அகமது, அஜ்மல் ஆகியோரது பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. பஷீர் அகமது சம்பவத்தின் போது அவர் வேலை செய்யும் செருப்புக் கடையில் இருந்துள்ளார். இதை அவர் வேலை செய்த ராயல் செருப்புக் கடை முதலாளி ஹாஜா பக்ருதீனிடம் விசாரித்து உறுதிப் படுத்திக் கொண்டோம். அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொறடா சாதிக்கும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு முழுவதும் வைத்திருந்து பின் வீட்டுக்கு அனுப்பப்பட்ட எஸ்.டி.பி ஐ தலைவர் தாஜுதீனும், மசூத் அலியும் சம்பவ நேரத்தில் பள்ளி வாசலில் அமர்ந்து புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்துள்ளனர். நாகூர் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன், எஸ்.பி.சி.அய்.டிக்கள் ஜார்ஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இதைப் பார்த்துள்ளனர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறுகின்றனர். செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் தாக்கப்பட்ட ரஞ்சித், பிரபு ஆகியோரே இதைக் கூறியுள்ளனர், எங்களிடமும் அவர்கள் இதைக் கூறினர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தங்களை அடிக்கவில்லை எனவும் தாங்கள் அவர்களை அடையாளம் காட்ட முடியும் எனவும் கூறினர். அமைதிக் கூட்டத்தில் காவல் துறை சார்பாக, “நீங்கள் உண்மையான குற்றவாளிகளைக் கொண்டு வந்தால் இப்போது கைது செய்யப்பட்டவர்களை குற்றப் பத்திரிக்கை எழுதும் போது நீக்கி விடுகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தவரும் சம்பவ இடத்தில் இல்லாதவருமான நூர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நாங்கள் கேட்டபோது காவல்துறை தரப்பில் திருப்தியான பதில் எதுவும் சொல்லப்படவில்லை. அடித்தவர்களைத்தான் கைது செய்கிறோம் என அவர்களால் சொல்ல இயலவில்லை.
  4. நாகூரில் எல்லோராலும் மதிக்கப்படுபவரும் தலித்கள், மீனவர்கள் உட்பட எல்லோராலும் ஏற்கப்படக் கூடியவருமான முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் இரு தரப்புடனும் பேசி சமாதானத்தை ஏற்படுத்திக்  கொண்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று நிஜாமுதீன் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில், ஏராளமான போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்ததோடு தனியாக அவர் மனைவி இருந்ததையும் பொருட் படுத்தாது காம்பவுன்ட் சுவரில் ஏறிக் குதித்து கதவுகளைத் தட்டி, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து அச்சம் ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர் அடுத்த நாள் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டபோது அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை. கொறடா சாதிக் என்பவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்தபோதும் சமீப காலங்களில் எந்த வழக்கும் அவர் மீது இல்லை. தவிரவும் இந்தச் சம்பவத்தின்போது அவர் பள்ளியில் அமர்ந்து புகார் எழுதிக் கொண்டிருந்துள்ளார். தாக்குதலைத் தடுத்துள்ளார். அவர் மீது பொய்க் குற்றம் சாட்டித் தேடுவது காவல்துறை சொல்வதுபோல வன்முறைகளைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்று அல்ல. மாறாக இத்தகைய நடவடிக்கைகள்தான் தீவிரவாதிகளை உருவாக்கும் முயற்சிகளாக உள்ளன என்பதைக் காவல்துறை உணர வேண்டும்.
எமது கோரிக்கைகள்:
  1. தற்போது கைது செய்யப்பட்டுளவர்கள் மர்றும் தேடப்படுபவர்களில் பலரும் குற்றமற்றவர்கள் எனக் காவல்துறையே ஏற்றுக்கொள்வதால் இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும், தேடுதல்களும் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்ட ரஞ்சித்தும் பிரபுவும் கூறுவது போல உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சரியான பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்.
  2. இந்தப் பிரச்சினைக்கு முழுவதும் காரணமாக இருப்பது நாகூர் காவல் நிலையம் சம்பவத்தன்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததுதான். இது குறித்து உரிய துறை விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நாகூர் காவல் நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் உளவுத் துறையினர் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் நாகை மாவட்டத்தில், சச்சார் ஆணையப் பரிந்துரையின்படி காவல் மற்றும் உளவுத் துறைகளில் உரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இடம்பெறச் செய்ய வேண்டும்.
  3. தலித்கள், மீனவர்கள் முதலான மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி ஒரு பெறும் மதக் கலவரத்தை உண்டு பண்ணி மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் லாபம் சம்பாதிக்க இந்துத்துவ சக்திகள் இப்பகுதியில் முயல்கின்றன. அரசும் காவல்துறையும் இந்தப் பிரச்சினையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “அர்த்த ஜாம இளைஞர்கள் சங்கம்” “ஆன்மீக இளைஞர்கள் சங்கம்” முதலான பெயர்களில் இங்கு தலித் மற்றும் மீனவ இளைஞர்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பும் முயற்சி மேற்கொள்ளப்படுவதை அரசு கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
  4. இந்துத்துவ சக்திகளின் பிளவுபடுத்தும் நோக்கத்திற்கு மீனவப் பஞ்சாயத்தினர் ஒத்துழைக்காததை இக்குழு பாராட்டுகிறது. இரு இளைஞர்களைத் தாக்கிய குற்றவளிகள் கைது செய்யப்பட வேண்டும் .என்றுதான் நாங்கள் சொல்கிறோம் என்றாலும் இந்து முன்னணியினர் இன்று (செப் 22) நடத்துகிற ஆர்பாட்டத்தில்  நாங்கள் கலந்து கொள்ளவில்லை என அவர்கள் எங்களிடம் கூறினர். நாகூர் வாழ் முஸ்லிம்கள் இந்துத்துவ அமைப்புகளின் பிளவு முயற்சிகளைக் கணக்கில் கொண்டு பிற சமூகங்களுடனான தமது ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்பு : அ.மார்க்ஸ், தை.கந்தசாமி, 27/7, ஏ.எஸ்.என். காம்ப்ளெக்ஸ், திருத்துறைப்பூண்டி- 614 713.  செல்: +91 94441 20582, +91 9486912869

Wednesday, September 17, 2014

நாகூர் கிரசென்ட் பள்ளி முதல்வருக்கு நல்லாசிரியர் விருது.

தமிழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை சேத்துபட்டில் உள்ள எம்.சி.சி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

இதில் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கொளரவிக்கப்பட்டது. 

இதில் நாகூர் கிரசென்ட் மெட்ரிக் பெண்கள் பள்ளி முதல்வர் ராபியா சிராஜுதின் அவர்களுக்கும்  நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Monday, September 1, 2014

இரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.

ஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா தெருவில் திடீர் என ஊர்வலமாக சிலர் வந்து பதட்டத்தை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.

இதற்க்கு அந்த மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஏற்கனவே வருத்தம் தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் இல்லையென்றால் இது மேலும் பிரச்சனையை உருவாகும் என்று அனைவரும் விரும்பினார்கள்.

அதன்படி இன்று பட்டினச்சேரியில் இருதரப்பிற்கும் சுமூக பேச்சுவார்த்தை நடந்தது...

இந்த சுமூக பேச்சு வார்த்தையை முன்னெடுத்து சென்ற அதில் ஈடுபட்ட நம் சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரியட்டும்...

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இதுவே சரியான வழிமுறை.

இந்த சுமூக பேச்சு வார்த்தைமூலமாக இருதரப்பிற்கும் ஓர் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது ... இது ஓர் ஆரோகியமான நிலைப்பாடு.

வருங்காலத்தில் எந்த ஒரு விஷயத்திற்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பலாம். இன்ஷால்லாஹ்.
 ஜசாகல்லாஹ் புகைப்படம் :  mohamed hafil
https://www.facebook.com/mohamed.hafil.75?fref=photoSunday, August 31, 2014

நாகூரில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்..!!

இந்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள்  பல வகையான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.. அதற்க்கு ஏற்றாற்போல் பல விதமான பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் அதை தொடர்ந்து நடத்தப்படும் ஊர்வலமும் நாடுமுழுவதும் இதுவரை பதட்டத்தை ஏற்படுத்தி வருவது தான் வரலாறு..

கலவரத்தை ஏற்படுத்த தான் இவர்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்களோ என்று என்னும் அளவிற்கு நடக்கும் சம்பவங்கள் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடபட்டது.. வருட வருடம்  நாகபட்டினத்திலிருந்து  நாகூர் வெட்டாற்று பாலத்திற்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு விநாயகர் சிலை கரைக்கபடுவது வழக்கம் அதே  போல் நாகூர் மீனவ கிராமத்திலிருந்து  கல்பண்டாக சாலை வழியாக வெட்டாற்று பாலத்திற்கு எடுத்து செல்வார்கள்.


ஆனால் இந்த வருடம் வேண்டும் என்றே மியா தெரு வழியாக விநாயகர் ஊர்வலத்தை எடுத்து செல்ல திட்டமிட்டு அதன் படி நேற்று மக்ரிப் நேரத்தில் தெருவை கடக்க முற்றபட்டபோது .., அங்கே இருந்த நம் சகோதரர்கள்,
 நீங்கள் எப்போதும் இந்த வழியாக செல்லமாட்டீர்களே ? ஏன் இப்படி வருகிறீர்கள்  உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார் ? எப்போதும் செல்வது போல் செல்ல வேண்டியது தானே என்று தடுக்க...

நீங்க போலீஸ்ட கேளுங்கள் .. இது மோடி ஆட்சி அப்டியாக்கும் , இப்படியாக்கும் என்று சீன் போட... பிரச்சனை ஆரம்பமாகியது...

இருப்பினும் கலவரத்தை விரும்பாத அனைவரும் சேர்ந்து சமரசமாக பேசி களைந்து சென்றுள்ளனர்.

இவ்வளவு வருடமாக இல்லாமல் இப்போது திடீர் என பிரச்சனையை ஏற்படுத்தும் எண்ணத்துடன் இவர்கள் மியா தெரு வழியாக வருகிறார்கள் இதை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் ..

இதுவே ஒவ்வொரு வருடமும் வழக்கமாகி முத்துபேட்டையை எப்படி வருடம் வருடம் பதட்டபடுத்துகிறார்களோ அதுபோல் நாகூரையும்  ஆக்கிவிடுவார்கள் என நினைத்து காவலதுறைக்கு  முறைப்படி புகார் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் வேளையில்...

எதை எதிர்பார்த்தார்களோ அது நடக்கவில்லை என்றவுடன் சிலர் வேண்டுமென்றே மியாதெருவில் வந்து மீண்டும் பிரச்சனை செய்ய அது கைகலப்பாக மாறிபோனது.. பிறகு காவல்துறை தலையிட்டு அமைதியான தற்போது சூழல் நிகழ்கிறது...

தமிழகத்தை பொறுத்தவரை பல ஊர்களில் இஸ்லாமியர்களும் , இந்துக்களும் ஒன்றாகவே வாழ்கிறார்கள். அண்ணன் தம்பிகளாக பழகுகிறார்கள் , நம்பிக்கை வேறு வேறாக இருந்தாலும் நாம் சமூகவாழ்வில் ஒன்றிணைந்தே வாழ்கிறோம்.

முத்துபேட்டையில் வருட வருட ஏற்படுத்தும் இது போன்ற மோதல்களை நாகூரிலும் கட்டவிழ்த்து விட நினைகிறார்கள்.  ஒரு போதும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை நாம் அனுமதிக்ககூடாது.

நம் ஊர் சகோதரர்கள் இதில் உணர்ச்சிவசபடாமல், சிந்தனை ரீதியாக செயல்பட்டு  இது போன்று கலவரத்தை ஏற்படுத்தும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் இன்ஷால்லாஹ்.


Related Posts Plugin for WordPress, Blogger...