(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, October 19, 2009

ஹிஜாப் - சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்

ஹிஜாப் - சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்

தமிழ் மொழியாக்கம்: அபூஸாலிஹா



சகோதரியே,

நீங்கள் ஹிஜாப் அணியத் தொடங்கியது முதல் பல்வேறு தரப்பிலிருந்து பலவகைப்பட்ட இடர்களையோ இன்னல்களையோ தொல்லைகளையோ சந்தித்து வந்திருக்கலாம். அவற்றை நளினமாக எதிர்கொள்வதுடன் சூழலையும் உங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள சாதுரியமான அணுகுமுறை அவசியம். அவற்றில் சிலவற்றைப் பட்டியல் இட்டுள்ளோம். இதுவரை உங்கள் பாதையை எளிதாக்கித் தந்த இறைவன் இது போன்ற அணுகுமுறைகள் மூலம் உங்களுக்கு வெற்றியைத் தருவான் இன்ஷா அல்லாஹ்.



நீங்கள் புதிதாக ஹிஜாப் அணியத் தொடங்கியதைக் கண்ட உங்கள் நண்பர்களின் கேலி விமர்சனங்களைக் கண்டு தன்னம்பிக்கையை இழப்பது போல் தோன்றுகிறதா?



1. ஹிஜாப் அணிதல் என்பது இறைவனின் புறத்திலிருந்து இஸ்லாமிய பெண்ணிற்கு இடப்பட்ட கட்டளை என்பதை நினைவு கூருங்கள். எந்த கட்டளைகளையும் விட இறையாணையைப் பின்பற்றுவது முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரத்தில் ஹிஜாப் அணியத் தொடங்குவதன் மூலம் சந்திக்கும் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு அமைதியுடன் இருங்கள். உண்மையான இறைநேசர்களுக்குச் சோதனை என்பது எப்போதும் உண்டு என்பதையும்



எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம் (அல்குர்ஆன் 29:69) என்ற இறைவாக்கையும் மறந்துவிடாதீர்கள்.



2. மாற்று மதத்தவர்கள் மத்தியில் பிறரின் பார்வைக்கு நீங்கள் வித்தியாசமாகத் தெரிவதனால் வரும் விமர்சனங்களை அலட்சியம் செய்யுங்கள். ஹிஜாப் அணியத் துவங்கியதனால் குவியும் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டீர்கள் எனில் உங்களைச் சுற்றி எவர் எது பேசினாலும் அது உங்களின் புதிய தோற்றம் பற்றியே பேசுவதாக எண்ணத் தொடங்கிவிடுவீர்கள். மனதளவில் குறை ஏற்பட்டு உடல் ரீதியாகவும் அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.



3. புதிய பரிமாணத்துடன் இவ்வுலகின் கண்களுக்கு நீங்கள் தோற்றமளித்தாலும் இறைவனின் கட்டளையை செயல்படுத்துவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளுங்கள். இறைவனைத் திருப்திப்படுத்துகின்ற ஒரு புனிதமான செயலைச் செய்கிறோம் என்ற உள்ளுணர்வோடு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் மேலிட பிறர் மத்தியில் நடப்பதை உணர்வீர்கள்.



4. தரமிழந்து விமர்சிப்பவர்களைக் கண்டு புன்முறுவல் பூத்தவண்ணம் நகர்ந்துவிடுங்கள். தடுமாற்றமில்லாத உங்களின் அமைதியே வார்த்தைகளால் உங்களைத் தாக்குபவர்களுக்கு பதிலடியாக அமையும். உங்களுக்கு ஊக்கமளிக்காத சூழல்களைச் சமாளிப்பதற்கு ஏற்ற சக்தியை வழங்க இறைவனிடம் உதவி கோருங்கள்.



ஹிஜாப் அணிந்து நீங்கள் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ வருவதை அதன் நிர்வாகம் தடை செய்து விட்டால் என்ன செய்வது?



நீங்கள் வசிக்கும் பகுதியில் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டால், உங்களைப் போன்ற சிக்கலைச் சந்தித்த பிற சகோதரிகளையும் ஒன்று சேர்த்து பள்ளி/கல்லூரி நிர்வாகம் விதித்துள்ள தடைகளை நீக்குவது பற்றிய சிந்தனை அழுத்தத்தை பொது மக்களிடம் குறிப்பாக உங்கள் பள்ளி/கல்லூரி மாணவிகளிடத்தில் ஏற்படுத்துங்கள்.



ஹிஜாப் உடையணிந்தவர்கள் மீதான அநீதியான பள்ளி/கல்லூரியின் இத்தடையை நீக்கக் கோரி உள்நாட்டு அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில், சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதன் மூலமும் ஆளும் அரசாங்கத்தின் மீது அழுத்தம் ஏற்பட முயற்சி செய்யுங்கள்.



1. கூடுமானவரையில் முயற்சித்து உலக ஊடகங்களுக்கு உங்கள் முயற்சிகளைத் தெரியப்படுத்துங்கள்.



2. உங்களின் கருத்துக்களை ஆதரிக்கும் நபர்களை ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள். மனித உரிமைகளுக்காகக் கொடுக்கப்படும் உங்கள் குரல் வெகு எளிதில் வெளி உலகிற்குச் சென்றடைய இது உதவும்.



3. சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் போராடும் இப்போராட்டத்தில் ஏற்படும் இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் தாங்கும் சக்தியையும், இதற்கான வெற்றியையும் வேண்டி இறைவனிடத்தில் பிரார்த்தியுங்கள்



நீங்கள் வசிக்கும் நாட்டில் சட்ட ரீதியாக விதிக்கப்பட்டுள்ள ஹிஜாப் தடைகளுக்கு எதிராகப் போராடத் துணிந்து விட்டீர்கள் எனில் அடுத்து என்ன செய்வது?



1. உங்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற உரிய நபர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு ஆயத்தமாகுங்கள்



2. உங்களைச் சுற்றியுள்ள குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வாருங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை ஒரு தனிமனிதனுக்கானது இல்லை; மாறாக பொதுவானது என்பதை அனைத்து சமுதாயத்தினரும் அறிந்து கொள்ள வழி வகை செய்யுங்கள். தனிமனித சுதந்திரத்தையும், மனித நேயத்தையும் விரும்பக்கூடிய சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் உங்களுடன் துணைக்கு வருவார்கள்.



3. உங்கள் பகுதி ஜமாஅத்தார்களின் உதவியை நாடுங்கள்



4. அமைதியை விரும்பும் மக்களோடு உதவிக்கரம் சேருங்கள். இஸ்லாத்தை சுதந்திரமாக பின்பற்ற விரும்புவர்கள் படும் இன்னல்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்



5. உங்கள் போராட்டத்தை ஊடகங்கள் வாயிலாகவே வெளியுலகிற்கு அறிவிப்பதை வாடிக்கையாக்குங்கள்



6. இறுதியாக, சத்தியத்தையும் நீதியையும் நிலை நாட்டிடும் உங்களின் இத்தூய அறப்போராட்டத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து உங்களைக் காத்திட இறைவனை மட்டுமே நம்புங்கள். சத்தியத்தின் பக்கம் இருப்பவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை என்பதை மனதில் திரும்பத் திரும்ப கூறிக் கொள்ளுங்கள்.



நீங்கள் பணிபுரியும் இடத்தில் ஹிஜாப் அணிவதை உங்களின் மேலதிகாரி தடை செய்தால் என்ன செய்வது?



1. அல்லாஹ்விற்குக் கீழ்படியாத எவருக்கும் கீழ்படியத் தேவையில்லை என்ற நபிமொழிக்கேற்ப இறைவனின் ஆணைக்கு எதிராக உத்தரவிடும் உங்கள் மேலதிகாரிக்கு நீங்கள் கீழ்பணியத் தேவையில்லை.



2. ஒரு பெண் தான் விரும்பி ஏற்றுள்ள இஸ்லாமியக் கோட்பாடுகள் மற்றும் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் உங்கள் பணியிடங்களில் ஹிஜாப் அணிவதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது. சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் மனித உரிமை சட்டங்கள் ஆகிவற்றின் அடிப்படையில் இது போன்ற உரிமைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உங்கள் மேலதிகாரி நீங்கள் ஹிஜாப் அணிவதை விட்டும் உங்களைத் தடுக்கிறார் என்றால் மேற்கண்ட சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அவர் ஒரு குற்றவாளி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.



3. எனவே ஒரு முஸ்லிம் பெண்மணியாக, இஸ்லாமிய ஒழுங்குகளை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டாம். உங்களால் தனித்து இது போன்ற சூழலை எதிர்கொள்ள முடியாத பட்சத்தில், நீங்கள் வசிக்கும் பகுதியில் இஸ்லாமிய வக்ஃப் அமைப்பை அணுகி அவர்களிடமிருந்து கடிதம் பெற்று அதனை உங்கள் மேலதிகாரிக்கு சட்டப்பூர்வமாக ஓர் எச்சரிக்கை விடுப்பதன் மூலம் அவரின் தவறை உணர்த்தச் செய்யலாம்.



உங்கள் பெற்றோரே நீங்கள் ஹிஜாப் அணிவதற்குத் தடையாக இருக்கும் சூழலில் என்ன செய்வது?



1. ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர் உங்களிடம் எவ்வளவுதான் கடுமையாக நடந்து கொண்டாலும், அழகிய இஸ்லாமிய அடிப்படையின்படி, நீங்கள் திரும்ப அவர்களிடம் கோபமாகவும் கடினமாகவும் நடந்து கொள்ள உங்களுக்கு அனுமதியில்லை. மாறாக, அன்பாகவும் அமைதியாகவும் அவர்களிடம் பேசுங்கள்.



2. உங்கள் மனதைப் புண்படுத்தும்படியான வார்த்தைகளை உங்கள் பெற்றோர் பேசியிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.



இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் "ஸலாம்" (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (அல்-குர்ஆன் 25:63)



3. மறுமை நாளில் இறைவனை சந்திப்பவர்களாக இருக்கிறோம் என்பதை மறந்துவிடாமல், உங்கள் நோக்கத்தை சத்திய சிந்தனைகளைக் கொண்டு வலுப்படுத்துங்கள்.



4. இறைவனை தியானிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மனச் சுமைகளைக் குறைப்பதுடன், சந்தோஷத்தையும் கூடவே அமைதியையும் இது தர வல்லது.



5. இறைத்தூதர் நபி(ஸல்) சந்தித்த போராட்டங்களையும் தியாகங்களையும் தொடர்ந்து நினைவு கூருங்கள். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடைபெறும் போராடங்களை விவரிக்கும் இறைமறையின் சூரா யூஸூப் அத்தியாயத்தை அடிக்கடி ஓதி நினைவு கூர்வது நன்மை பயக்கும்.



6. உங்கள் பெற்றோருடன் மிக மென்மையாகப் பேசி அவர்களின் தவறான எண்ண ஓட்டத்தை மாற்ற முயலுங்கள். அதற்கு அவர்கள் செவி சாய்க்காமல் போகும் பட்சத்தில் வல்ல ரஹ்மானிடம் முறையிட்டு அவர்களின் மனதை மாற்றிட வேண்டுங்கள்.



7. ஹிஜாப் அணிந்த நிலையில் கூடுமான வரையில் உங்கள் நடத்தை மற்றும் செயல்பாடுகளில் கண்ணியத்தைப் பேணி நடக்க முயற்சியுங்கள். ஹிஜாப் அணிந்தவர்களை அணியாதவர்கள் முதலில் பார்க்கும் பார்வை அவர்களின் கண்ணியமான நடத்தையையும் தோற்றத்தையுமே! அது போன்ற ஒன்று உங்கள் பெற்றோரிடம் மனமாற்றத்தைக் கொண்டுவரலாம். அவ்வாறு நடவாத சூழலிலும் துவண்டு விடாதீர்கள். வருத்தப்படாதீர்கள்.



8. மேற்கத்திய கலாச்சாரத்தைத் தவிர்த்து, உலகமெங்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் எதிர்நோக்கும் ஒரு முக்கிய விஷயம் கீழ்ப்படிதல் என்பதே! இறைவனுக்கு மாறு செய்தல் எனும் ஒரு விஷயத்தில் பெற்றோருக்குக் கீழ்படிவதைத் தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களிலும் அவர்களுடன் கீழ்ப்படிந்து நடக்க முயற்சி செய்யுங்கள்.



9. கூடுமானவரையில் உங்கள் பெற்றோருடன் நெருக்கமாக இருக்க முயலுங்கள். குறிப்பாக உங்கள் தாயுடன் பரஸ்பர உறவுகளை நெருக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நினைவில் வையுங்கள். உலகில் பணத்தால் சாதிக்க முடியாத விஷயங்களை அன்பினால் வெகு சுலபமாக சாதித்து விடலாம்.



10. இறுதியாக, ஹிஜாப் அணிவதை அவர்கள் மனதார ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அவர்களை சமயோசிதமாக அணுகுங்கள். அதை அழகிய முறையில் ஒரு மார்க்க சொற்பொழிவைக் கேட்கச் செய்வதன் மூலமாகவோ, அல்லது ஹிஜாபின் மாண்புகளை எளிமையாக விவரிக்கும் ஒரு புத்தகத்தைக் கொண்டோ சாதிக்க இயலும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...