(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, October 9, 2009

என்னை எரித்தால்... உன்னை அழிப்பேன்...

சகோதரி . சுமையா மேஹன்

தமிழில் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்



கட்டுரை ஆசிரியை பற்றி சில குறிப்புகள்: சகோதரி. சுமையா மேஹன் அவர்கள், இஸ்லாத்தினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட அமெரிக்க பெண் எழுத்தாளர். தற்போது இவர் வசிப்பது குவைத் நாட்டில். அமீரகத்திலிருந்து வெளிவரும் ஆங்கில தினசரி நாளேடான கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் LIVING ISLAM என்ற பகுதியில் இவருடைய ஆங்கில கட்டுரையானது தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டு இருக்கிறது. 8.2.2008 அன்று அவர் அந்த பத்திரிகையில், STUB OUT THOSE CIGARETTES, PLEASE..! என்ற தலைப்பில் எழுதி இருந்த கட்டுரையானது இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, இஸ்லாம் - அமெரிக்க பெண் எழுத்தாளரின் பார்வையில்.. என்ற இவரின் கட்டுரையானது, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இது தான் இஸ்லாம் இணையத்தில் இடம் பெற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போல் பல பயன் உள்ள கட்டுரைகளை சகோதரி மேன்மேலும் நம் சமுதாய மக்களுக்கு தர வேண்டி ஏக இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக..ஆமீன்..

நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு தற்போது பலருக்கு பல உள் மற்றும் புறநோய்களை எளிதாக தந்துக்கொண்டு இருக்கும் புகை பிடிக்கும் பழக்கத்தினை பற்றி ஆசிரியை கூறிய கருத்துக்களை நாம் இங்கு காண்போம்.

விசுவாசங்கொண்டோரே..! உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி, (உங்களுடைய) பொருள்களைத் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள், அன்றியும் (இதற்காக) உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், உங்களிடம் மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான். திருக்குர்ஆன் 4:29


 

புகை மற்றும் போதை பழக்கமானது நம்மை நாமே கொலை செய்து கொள்வதற்கு சமமாகும் என்பதினை தான் மிகவும் அழகாக மேற்கண்ட இறைவசனமானது குறிப்பிடுகிறது என்பதினை நாம் அறியலாம். செல்வங்களை தவறான முறையில் செலவு செய்து வீண் விரயமாக்கும் அனைத்து மனிதர்களுக்கும் அச்சமூட்டக்கூடிய அளவிலும் அந்த இறைவசனம் உள்ளது.

அபாயகரமானது என்றும், புகை பிடிப்பவர்களையும், புகை பிடிப்பவர்களின் பக்கத்தில் இருப்பவர்களையும் நோய்க்கு ஆளாக்க கூடியது இப்பழக்கம் தான் என்றால் மிகையாகாது. சிகரெட்டிலிருந்து வெளிவரும் ஒரு வகை நஞ்சானது இருவரையும் எளிதாக தாக்கக்கூடியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று கூறுவது என்னவென்றால், புகை பிடிப்பவர்களை விட பக்கத்தில் இருப்பவர்கள் தான் அந்த கொடிய நஞ்சு கிருமி நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள்.

புகை பிடிப்பதால், வாய்புற்றுநோய் இதய நோய் மனஅழுத்தம் மன வேதனை மன கஷ்டம் சிறுநீரக கோளாறுகள் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்ற இன்னும் பல தொடர்புடைய நோய்கள் வர அதுவே காரணமாகி விடுகின்றன. இந்த நூற்றாண்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர்பான நோய்களால் இறக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பானது தன்னுடைய ஆய்வில் வெளியிட்டு உள்ளது.

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எவ்வாறு இருக்க வேண்டும், எந்த வகையில் பொருள்களை செலவு செய்ய வேண்டும், யாரை நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனிதகுலம் அனைத்திற்கும் அறிவுரை வழங்கக்கூடியதாகவும் அவர்களை நேர்வழியின்பால் வழி நடத்திச்செல்லக்கூடியதாகவும் திருக்குர்ஆன் உள்ளது.

அவனே வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன் உங்களுடைய இரகசியத்தையும், உங்களுடைய பரகசியத்தையும் நன்கறிவான், இன்னும் (நன்மையோ, தீமையோ செய்து) நீங்கள் சம்பாதிப்பவைகளையும் அவன் நன்கறிவான். திருக்குர்ஆன் 6:3

அல்லாஹுதஆலா மனிதனின் அனைத்து தவறுகளையும் மற்றும் அறியாமைக்காலத்து பாவங்களையும் மன்னித்து அருள் செய்பவன். ஆனால் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்தால் இறைவன் மன்னிக்க மாட்டான். அந்த வரிசையில் புகை பிடித்தலையும், மற்றும் குடிப்பழக்கத்தினையும் கூறலாம்.

புகைக்க, மதுக்குடிக்க செலவிடும் பணத்தினை கொண்டு நல்ல உணவுபொருட்களையும், நல்ல ஊட்டச்சத்தான பழங்களையும் வாங்கி உண்ணலாம். புகை பிடிப்பதால் மனிதனுக்கு என்ன பயன்.? அல்லாஹுதஆலா மனிதனுக்கு கொடுத்த அவனுடைய பணத்தினையும்;, பொன்னான நேரங்களையும் காலங்களையும் இதனால் வீணாக்கிறான். ஒரு சிகரெட்டினை ஊதி தள்ள ஒரு மனிதனுக்கு குறைந்தது ஐந்தோ அல்லது பத்து நிமிடமோ எடுத்துக் கொள்வான். அந்த நேரத்தினை ஏதேனும் பயனுள்ள காரியத்திற்கு எடுத்துக்கொண்டால் அவனுடைய நேரமும் மற்றும் காலமும் பயனுள்ளதாக அமையும்.

சிகரெட் மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் பல ஆதிக்க சக்தி கொண்ட நிறுவனங்கள் பல நாடுகளில் உள்ள பல மில்லியன் மக்களை பல்வேறு சூழ்நிலைகளால் கொலை செய்கிறார்கள். மற்றும் பல கோடிகளை விளம்பரங்களுக்காகவும் மற்றும் பிரசுரங்களுக்காகவும் வீண் விரயம் செய்கிறார்கள். அத்துடன் குடிப்பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று பெருமையாக சிகரெட் அட்டையிலும், மற்றும் மதுபானப்பாட்டிலிலும் போட்டு இருப்பார்கள். போட்டு என்ன பயன்..? முதலில் போதை தரும் எந்த வஸ்துவாக இருந்தாலும் அதனை அந்தந்த அரசாங்கங்கள் உற்பத்தி செய்யவே கூடாது. இதனை அவர்கள் கண்டிப்பாக செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.

ஒரு பொருள் சந்தைக்கு வந்தால் தான் மக்கள் வாங்குவார்கள். சந்தைக்கே வரவில்லை என்றால் எங்கு போய் வாங்குவார்கள். போதை பொருள்களுக்காக செலவு செய்யும் இத்தகைய பணங்களை புற்று நோய் புனரமைப்பு இயக்கத்திற்கும், பல தொண்டு நிறுவனங்களும், குழந்தைகள் நல காப்பங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்தால் அதன் மூலமாக பலர் பயன் பெறுவார்கள்.

ஆதமுடைய மக்களே..! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால் உங்களுடைய அலங்காரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள், மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயமும் செய்யாதீர்கள், ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான். திருக்குர்ஆன் 7:31

புகை பிடிப்பதால் பல சாலை விபத்துகள் பலகோணங்களில் ஏற்படுகின்றன. வாகனசெலுத்துபவர்கள் ஸ்டைலாக ஒரு கையில் சிகரெட்.. ஒரு கையில் ஸ்டெரிங் என்ற தோரணையில் வாகனத்தினை ஓட்டுவார்கள். ஆனால் ஒரு நொடியில் மரணம் என்பதினை அவர்கள் எங்கே அறிய போகிறார்கள். சாலை விபத்துகளால் நாட்டில் பல பேர்கள் இறந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதினை ஊடகங்களை படிப்பவர்கள் அறிவார்கள். அத்துடன், மறதியின் காரணமாக புகைபிடிப்பவர்கள் சிகரேட் புகையினை அணைக்காமல் விட்டு விடுவதால் இரவு நேரங்களில் இல்லங்களில் தீ விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பினை உண்டாக்கி விடுகிறது இந்த புகைப்பழக்கம்.

புகைப்பிடிப்பதால் சுற்றுப்புற சூழல் மாசுஅடைகிறது. மாசுக்கள் அதிகமாக படிவதால் தூய்மையான காற்றானது அசுத்தமாக மாறி விடுகிறது. ஒரு வெள்ளைத்துணியினை எடுத்து சிகரெட் புகையினை அதில் ஊதிப்பாருங்கள்.. மஞ்சளாகக் கறை ஒன்று படிந்து போய் இருக்கும். அதைப்போல் புகைப்பிடிப்பவர்கள், புகைப் பிடிப்பதால் இதயத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக கறை படிந்து வரும்.

புகைப்பிடிப்பவர்கள், அவர் ஏழையாக இருந்தாலும் ஜகாத் வாங்குவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கிறது. ஏனெனில் ஜகாத் என்பது புனிதமான ஒன்றாகவும், ஜகாத் பணத்தினை கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுங்கள் என்றும் இஸ்லாம் கூறுகிறது. புகைப்பிடிப்பவனிடமோ அல்லது குடிப்பழக்கம் உள்ளவனிடமோ ஜகாத் பணத்தினை கொடுத்தால் அவன் அதனை குடிக்கவும் மற்றும் புகைக்கவும் பயன் படுத்தி அந்த புனிதத்தினை கெடுத்து விடுவான்.

புகைப்பிடிக்கும் பழக்கமானது 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பானிஷ் என்ற நாட்டிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. அங்கு தோன்றிய இந்த கலாச்சார சீரழிவானது கொஞ்சம் கொஞ்சமாக பல நாட்டு மக்களை பிடித்து ஆட்டுகிறது. 100 வருடங்களுக்கு முன்பு வரை தான் இந்த புகைப்பழக்கமானது இஸ்லாமிய நாடுகளை முற்றுகையிட்டது எனலாம்.

தற்போது வளைகுடா நாடுகளில் அதிகமான இடங்களில், சிஸா (Shisha – Hubbly bubbly - உக்கா) அதாவது கண்ணாடி குடுவைகளில் வைத்து புகை இழுக்கும் பழக்கமானது அரேபியஆண்களிடமும் அரேபியப்பெண்களிடமும் ஒரு கெட்ட பழக்கமாக ஆகி விட்டது. அந்த சிஸாவினை ஒரு தடவை இழுத்தால் 10 சிகரெட்டினை பிடித்தால் என்ன மாதிரியான உடல் உபாதைகள் வருமோ அதனை விட அதிகமான பாதிப்புகள் அதில் உள்ளன. இதனால் வாய்ப்புற்று நோய்கள் வருவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இதனை பற்றித்தெரிந்தும் போதை அதிகம் வேண்டும் என்பதற்காக இரவு வேளைகளில் அதிகமாக இங்குள்ளவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

வளைகுடா அரசாங்கங்கள் சமீபத்தில், பேருந்து நிலையம், வணிக வளாகம், உணவு விடுதிகள், மருத்துவமனை மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகை பிடிப்பதினை தடை செய்து உள்ளது. மற்றும் 18 வயதிற்கு குறைந்தவர்கள் கடைகளில் சிகரெட் வாங்கினால் அதனை அவர்களுக்கு விற்கக்கூடாது என்றும் அப்படி மீறி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்துச்செய்யப்படும் என்றும் கடுமையான சட்டங்களையும் பிறப்பித்துள்ளது.

துரதிஷ்ட்டவசமாக புகை மற்றும் போதை பொருட்கள் உட்கொள்ளும் பழக்கமானது இஸ்லாமியர்களாக இருக்கக்கூடிய நம்முடைய சமுதாயத்தினரை ஆட்க்கொண்டு விட்டது. அல்லாஹ் நாடினால் இனி வரும் நாள்களில் நாம் இத்தகைய சூழ்நிலைக்கு அடிமைப்படாமலும், நம்முடைய சந்ததியினரும் அடிமைப்படாமலும் இறைவன் நம்மை பாதுகாத்து அருள வேண்டும்.

STUB OUT THOSE CIGARETTES, PLEASE..!

By SUMAYYAH MEEHAN

Do not kill yourself. Allah is Merciful unto you
(4:29)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...