(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, October 21, 2009

தேசப் பிரிவினைக்கு யார் காரணம்?

தேசப் பிரிவினைக்கு யார் காரணம்? -கனியூர் இஸ்மாயில் நாஜி

இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்….

கி-பி 8-ம்நூற்றாண்டு முதல் கிபி 18-ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் -முஸ்லிம்களும் இந்துக்களையும்,முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர்.அதற்கு இரு வழியினைக் கடைப் பிடித்தனர்.
1)இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்துக் கூறல்.
2)பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும்.பொறாமையையும்,குரோதத்தையும் ஏற்படுத்துதல்.
பிரிட்டிஷ் சதி



ஒரிஸாவின் முன்னாள் ஆளுனரும் முன்னால் ராஜ்யசபை உறுப்பினருமான பி.என்.பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படி திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும்பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:
“பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும்.எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளார் ‘வுட்’எழுதியுள்ள கடிதத்தில்,
”ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம்.இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்”எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கவர்னர் ஜெனரல் டfபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,

“மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பொருத்த சாதகமாக உள்ளன.இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர் பார்க்கிறேன்”என எழுதிய்யுள்ளார்.

கர்ஸன் பிரபுக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் பின் கண்டவாறு எழுதியுள்ளார்:
“படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.எனவே.இனத்துக்கு இனம் பிளவை அதிகப்படுத்துகிற வகையில் பாடப் புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்”
(இஸ்லாமும்,இந்தியக்கலாச்சாரமும்.byP.N.பாண்டே.நீரோட்டம் பதிப்பகம்,சென்னை)

இதன் அடிப்படையில் இந்திய சரித்திரப் பாடப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திருத்தி எழுதப்பட்டன.மத்திய காலத்தில் முஸ்லிம் மன்னர்களில் ஆட்சியில் இந்து மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர் என்பது போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டன.


பொருளாதாரத் தாக்குதல்

இரண்டாவதாக,பொருளாதார ரீதியில் இருவரிடையே விரோதத்தை எற்படுத்த முனைந்தனர்.வங்காளத்தில் நிரந்தரக் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஊழியர்க்ளாக இருந்த இந்துக்களிடம் தரப்பட்டன.டாக்டர்.டபிள்யூ.டபிள்யூ.ஹாண்டர் பின்வருமாறு எழுதுகிறார்:
நிரந்தரக் குடியேற்றத்தின் இலட்சியமே இந்து அதிகாரிகளை நிலச்சுவாந்தார்களாக் மாற்றுவதே.அன்றுவரை முக்கிய பதவிகளில் இல்லாமல் இருந்த வரி வசூலிப்பவர்களை இக்குடியேற்றம் உயர்த்திவிட்டது.முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியிருந்த செல்வங்களையெல்லாம் இந்த இந்து ஏவலாளார்கள் சேகரித்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.”
(Quote in the meaning of pakistan by F.K.Khan Duarrani).

நிதி நிர்வாக விசயங்களில் முஸ்லிம்கள் புற்க்கணிக்கப்பட்டனர்.இராணுவத்தில் முஸ்லிம்கள் சேராமல் தடை செய்யப்பட்டனர்.
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த “டோர்பீன்”என்ற பத்திரிக்கை 1867ம் ஆண்டு ஜூலை 14ந்தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவலநிலையை வெளிப்படுத்தும்.
“பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன.ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாளரையும் ஒரே விதமாகப் பாவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.அவ்வாறிருக்க முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்குத் தங்களின் கெஜட்டுகளிலிருந்து முஸ்லிம்களைப் பகிரங்கமாக நீக்கிவிட்டிருந்தது.சமீபத்தில் சுந்தர் பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாயின.இதைப்பற்றிக் கமிஷனர்,அரசாங்கக் கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரபடமாட்டாதென அறிவித்திருந்தனர்.முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கணித்தே வைக்கப்பட்டிருந்தது.இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்கு முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.”

மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்டச் சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும்,முஸ்லிம்களைவிடத் தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்னும் மனோபாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.


சிப்பாய்க் கலகத்திற்குப் பின்

இந்நிலையில்,1857ம் வருடத்தில் பசுமாட்டின் கொழுப்பினால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் காரணம் காட்டி இந்து சிப்பாய்களால் சிப்பாய்க் கலகம் துவக்கப்பட்டது.அதில் முஸ்லிம்களும் பூரணமாகக் கலந்து கொண்டனர்.அக்கலகம் சில மாதங்களிலேயே ஒடுக்கப்பட்டு விட்டது.இந்துக்களில் சிலர் தங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து ஆயுதந்தாங்கிப் போரிட்ட முஸ்லிம்களுக்குத் துரோகிகளாக மாறி அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்தனர்.இதனால் அரசாங்கத்தின் கோபமெல்லாம் முஸ்லிம்கள் மீது விழுந்தது.

சிப்பாய்க் கலகத்திற்குப் பின் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற கொடுமைகளை நேரில் கண்டசர்.ஸையித் அஹ்மதுகான்.1887ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்த பம்பாய் பாரிஸ்டர் ஜனாப் பத்ருத்தீன் தையிப்ஜீக்கு எழுதிய கடிதத்தில்,

“சிப்பாய் கலகத்தின் போது என்ன நடந்தது?இந்துக்கள் அதை ஆரம்பித்தனர்.முஸ்லிம்கள் அதிக தைரியத்துடன் அதில் ஈடுப்பட்டனர்.இறுதியில் இந்துக்கள்,கங்கையில் முழுகித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டு முன் போல் நல்ல பிள்ளைகளாகி விட்டனர்.ஆனால்,ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நசித்து நாசமடைந்தன.”என குறிப்பிட்டுள்ளார். (பாகிஸ்தான் விளக்கம்.by எப்.கே.துர்ரானி)

சொல்லவொணா துன்பங்களை அனுபவித்த முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் பல நிகழ்ச்சிகள் நடந்தன.


இந்து தீவிரவாதிகளின் போக்கு

1867ல் காசியிலுள்ள இந்துத்தலைவர்கள் உருது மொழிக்கெதிராக கிளர்ச்சியில் ஏடுபட்டனர்.1875ல்’ இந்தியா இந்துக்களுக்கே’என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்ய சமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும்.கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே.

1890ல் “முஸ்லிம்கள் அந்நியர்கள்”என்க் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர்.முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர்.

1882ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி ‘ஆனந்த மடம்’எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார்.அதில்தான் வந்தே மாதரம் என்ற கீதம் வருகிறது.அதில் இந்தியாவை ‘காளி’என்ற கடவுளுக்கு ஒப்பிட்டு அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்கிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது.

இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒரு வகையான பய உணர்ச்சியை ஏற்படுத்தின.அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியாது.

காங்கிரஸும் முஸ்லிம்லீக்கும்

இந்நிலையில்,1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது.அதன் முன்னோடி தலைவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே,அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆங்கிலேயர் தூவிய வேற்றுமை விஷ வித்துகளுக்கு பலியான இந்துமதத் தலைவர்கள் சுதந்திர போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர்.முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர்.விளைவு?1906ம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்.சர்.ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.

முஸ்லீம் லீக் ஏன் தோன்றியது?என்பதன் காரணத்தை R.P.Dutt இப்படி குறிப்பிடுகிறார்.
“தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படியில் நடத்த விரும்பினர்.இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழுப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர்.எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்துவிடாமல் இருக்க முயற்சித்தனர்.அதன் விளைவே 1906ல் முஸ்லிம்லீக் தோன்றியது”.
(Quoted in R.A.Deasai’s social background of Indian Nationalism)
Most members of the congress made a serious error refusing to admit the existence and validity of muslim nationalism.

முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும் நிலைபாட்டையும் மறுத்ததின் மூலம் பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமான தவறினைச் செய்தனர்.
(A short History of India and Pakistan by t.Walter Wall Bank)(U.S.A. )1965.

முஸ்லிம்லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும் லீக்கிலும் இருந்தனர்.மவ்லானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.


பிரிவினைப் பிரச்சாரம் யார் துவக்கியது?

இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம்.

இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைப்பெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும்.
இந்நாட்டைவிட்டும் வெளியேறிவிடுங்கள்;அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாகப்போடப்பட்டது.

“முஸ்லிம்களுக்கும்.இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின்மூளையில்தான் முதன் முதலில் உதித்தது”என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்கச் செயலாளராக இருந்தவரும் காந்திஜியின் நெருங்கிய சகாவுமான பண்டிட்சுந்தர்லால்.’ரேடியன்ஸ்’ வார இதழில் (13-6-87)ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இன்று R.S.S. போற்றிப் புகழும் V.D.சாவர்க்கார்.இந்துக்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாகR.N.அகர்வால் தனது The National Movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

குர்தகி மட சங்கராச்சாரியார், இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது.முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே.அவர்கள் விருந்தாளியைப்போலவே நடந்து கொள்ள வேண்டுமென்று முஸ்லிம்களை எச்சரித்தார்.

அகில இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்த ஹர்தயால், A Joint Hindu-Muslim state is Sheer Nonsense“ இந்து-முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது முழு முட்டாள்தனம்”என உரத்துச் சொன்னார்.

1923ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் இந்துமகாசபைபுதுப்பிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல், இந்துக்களுக்குப் போர் பயிற்சிதரல்.அதன் முக்கிய குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை என்பதே.இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின இஸ்லாத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்றன.1924ல் லாஹூரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா)என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது.அதில் இஸ்லாமியர்கள் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டது.

முஸ்லிம்களின் நிலை

இவ்விதம் இந்துமதத் தலைவகளில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917லிருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்தது?

இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னாசாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்.1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார்.அதுவரை அவர் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார்.’The Ambassadur Hindu-Muslim Unity’என்று சரோஜினி நாயுடுவால் பாராட்டப்பட்டவர்.1993ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட பொழுது ‘An Impossible Dream’நடைப்பெற இயலா கனவு’என்றார் ஜின்னா

1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக் 1940ம் ஆண்டுவரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை.1945,1946ல்தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.


ஜின்னா ஏன் கேட்டார் தனி நாடு?

தனி நாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்?1937க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை எற்ற காங்கிரஸ்தான் காரணம் என்கிறார் சர்.சிம்மன்லால் சிடால்வாட்.லிபர்ல் பார்டியின் தலைவரும் 1930ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை “மாநட்டில் கலந்து கொண்டவருமான சிடால்வாட்,தனது Recollection and Reflection என்ற நூலில் ,Congress Parentage of Partition” என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்:

“பாகிஸ்தான் இயக்கத்திற்கு மூலதரம் காங்கிரஸ்தான்.அது 1935-ம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துகொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்படுத்தியது.முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை”என்கிறார்.

வட்டமேசை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மைப் பிரதிநிதிகளையும் சேர்த்து கொள்வதென ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில், லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆனாலே தவிர மந்திரிப் பதவி இல்லை என காங்கிரஸ் கூறிவிட்டது.இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர்.இதனைப் பற்றி டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிடும் பொழுது:”காங்கிரஸ் அனுசரித்த போக்கு விதிக்கு நேர்மாறானது.நாட்டின் இதர கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறை கையாளப்பட்டது.ஒரு ஏகாதிபத்திய,யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவ செய்யப்படும் இம் முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம்.ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்”எனக் கண்டித்துக் கூறுகிறார்.
(quoted in A Short History of India and Pakistan)

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது.உருது புறக்கணிக்கப்பட்டது.முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன.தங்கள் நபியைப் பற்றியோ கலிபாக்களைப் பற்றியோ மற்றும் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.தங்களின் கலச்சாரம் ஒரே அடியாக அழிந்து விடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர்.(Sir Regined Coupland.The Indiyan Problem)

இவ்வாறு காங்கிரஸ் நடந்து கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயாட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இழைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940ல் ஆதரித்தார்.எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.
நேருவின் பேட்டியால் நிலை மாறியது

ஒன்றுபட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946ம் ஆண்டு மே மாதம் 16ந்தேதி வெளியிடப்பட்ட கேபினட் தூதுக்குழுவின் முடிவினை ஜூன் மாதம் 6ந்தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின்படி ஏற்றுக்கொண்டது.1940ல் அக்கட்சி இயற்றிய தனி நாடு கோரிக்கையைகைவிட தயாரானது.ஆனால் ஜூலை 10ந்தேதி நேரு அவர்கள் கேபினட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு உரிமை உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசாமாக்கியது.”அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும் காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை.தனி நாடுதான் தீர்வு”என முடிவாக ஜின்னா கூறிவிட்டார்.

“நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றி விட்டது”என மவ்லானா அபுல்கலாம் ஆஜாத் தனது India Wins Freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம்லீக்கும் முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ் நிலையில் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.


R.S.S.ஐ நோக்கி ஒரு கேள்வி?

இன்று இந்தியாவைத் தூண்டிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S.அன்று என்ன செய்தது? இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே;பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினாரே; பிரிக்கவே கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய்படேல் சமாதனாப் படுத்திச் சம்மதிக்க வைத்தாரே; இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S. என்ன செய்தது?(கோட்சே என்ற RSS காரன்தான் காந்தியை கொலை செய்தான்) இன்று பாரதமாதாவைத் துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா? மாநாடுகள் நடத்திக் கண்டனத் தீர்மானம் போட்டார்களா?இல்லையே!ஏன்?

முஸ்லிம்லீக்கை ஜின்னாசாஹிபை காயிதேமில்லத்தை முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை, ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினைவாதிகள் எனச் சொல்லுவது இல்லையே?ஏன்?

இந்தியா பிளவுபட்டாலும் பரவாயில்லை முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக்கொண்டனர்:விரும்பினர் R.S.S.காரர்கள்.ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை.இந்நாட்டிலே பிறந்து இந்நாட்டிலே வளர்ந்து இந்நாட்டின் வளர்சிக்கும் வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படி போவார்கள்?அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித குரோத உணர்வே R.S.S.க்காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.
சற்று சிந்தியுங்கள்!


மேற்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித்தொகுப்புகளிலிருந்து நாம் என்ன புரிகிறோம்?

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் நடக்கவில்லை.
இந்து-முஸ்லிம் கருத்து வேற்றுமையும்-குரோதமும் பிரிட்டிஷரால் திட்டமிடடு ஏற்படுத்தப்பட்டவை.
முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ,திட்டமிடவோ இல்லை.


இந்து தீவிரவாதிகளும் அடிக்கடித்தன்நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.

எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுமில்லை.

மேற்கொண்டு உண்மை நிலையை அறிய விரும்புவோர்.

H.M.Sreevai எழுதிய partition of India:Legend and Reality, என்ற நூலையும்,

The dialogue Between Hindus and Muslims என்ற நூலையும் படித்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...