(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, August 9, 2014

நான் இஸ்லாத்தை தழுவ வேண்டும் .. ஆனால்...?

சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்……
முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை.
இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக. இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.
அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).

பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்……………………….
“எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது.
இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை,
என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும்.
அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும்.
எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும்.

என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.
இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.
என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,
“எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது”
இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.
ஆம்… நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.
“ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்”
அவ்வளவுதான்…அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.
மனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும் இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.
நாட்கள் சென்றன….
இந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு தான், கடைகள் அடைக்கப்பட்டன. தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.
முஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து விட்டேன்.
பள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில் இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில் என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.
எனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும் செய்தேன். அவர்களை அப்படியே பின்பற்றினேன்.
எனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.
“இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய். என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன். உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மனிதர்களிடத்தில் அல்ல”
இதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.
என்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், சாக்சையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.
“Anta Muslim? Limada tusalli? ‘adam wa’dha al yedduka al yameen ala shimal.” (நீங்கள் முஸ்லிமா? நீங்கள் எதற்காக தொழுகின்றீர்கள்? தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க வேண்டும்)
ஆம், அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.
பிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.
அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன் நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து “come on” என்று சைகை செய்து என்னை உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் இந்த சிறுவர்களின் அண்ணனாம்.
என்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு புரியவில்லை, என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.
“உங்கள் தாய், தந்தையர் எங்கே?”
நான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து கொண்டேன்.
அப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.
“அமெரிக்கி?” (அமெரிக்கரா?)
“இல்லை, நான் பிரிட்டிஷ்”
“காபி அருந்துகின்றீர்களா?”
இல்லை, நான் ஏற்கனவே அருந்தி விட்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.
“Tawadha” (உளு செய்யலாம் வாருங்கள்)
உளு (Wudu is the Islamic act of washing parts of the body using water) செய்ய சொல்லிக்கொடுத்தார்.
“வாருங்கள் தொழப்போகலாம்”…
மாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.
“கையை உயர்த்துங்கள்” என்று சொல்லியபடியே என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார். “பிறகு இப்படி வையுங்கள்” என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார். பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.
நாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில் நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், “நான் செய்வதை போல செய்யுங்கள்” என்று இரு கைகளையும் உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.
பள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை விட சரியான முறையில் தொழுதேன்.
பள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான் மறுபடியும் கேட்டேன்,
“உங்கள் அம்மா எங்கே?”
அவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை காட்டி கீழே பூமியை காட்டினார்.
“Baba wa mama fiy mout, yarhamhummullah. Sister make” (மரணம் எங்கள் பெற்றோரை தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி தான் உணவு தயாரித்தார்”
அப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான் ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.
“உங்களுக்கு இஸ்லாம் பிடித்திருக்கின்றதா?” அவர் கேட்டார்.
“ஆம்”
“பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை”
“எனக்கு டைம் தேவை”
அவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.
“உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்”
நான் அவருக்கு நன்றி கூறினேன்.
அந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினேன்.
இதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர் பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர். உம்ரா (The Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.
எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான் படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடுத்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்…
“நீங்கள் முஸ்லிமாகவில்லையா?”
என்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.
“உங்களுக்கு என்ன பைத்தியமா?, அல்லாஹ்விடம் நிபந்தனைகள் விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா (Shahada is the testimony of faith indicating belief in one God, Allah, who has no partners and belief that the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and messenger) சொல்லுங்கள்”
“நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது?, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா?”
“இங்கே பாருங்கள். இறைவன் யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா?. இவ்வளவு ஏன்…நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே!!! நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின் சகோதரர் முஸ்லிமாகவில்லையே”
எனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.
“நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்”
“நீங்கள் அதற்கு முன்னே இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா?”
அவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.
உடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.
என்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.
இஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம்.
இறைவன், நம்பிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக விலகிவிடும்.
அதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு அதிகமாக அருளை கொடுப்பானென்று”
சுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது…நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான் உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில் உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
சகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்…
Jerome Boulter,
LTAP Language Teacher,
English Language Centre,
Faculty of Academic Services,
Taibah University,
PO Box 344
Medina 42353,
Kingdom Saudi Arabia
cel. +966 54 3328708
jerboulter@gmail.com

இதனை எழுதும்போது டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் ஒரு உரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது, நீங்களும் பார்த்திருக்கலாம்.
அந்த உரையின் கேள்வி பதில் நேரத்தில் ஒரு சகோதரி,
“குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்?” என்று கேட்க,
அதற்கு டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கூறி விட்டு அந்த சகோதரியை பார்த்து கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வியை,
“சகோதரி, நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன். இஸ்லாத்தை ஏற்கவிடாமல் உங்களை தாமதப்படுத்துவது எது?” என்று கேட்க, அதன் பிறகு நடந்தது உணர்வுப்பூர்வமான நிகழ்வு. அதனை நீங்களே கீழே பார்க்கலாம்.
இறைவன் ஒருவருக்கு நேர்வழி காட்ட நினைத்து விட்டால் யார் தடுப்பது?
இறைவா, இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு மனபலத்தை தந்தருள்வாயாக…ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
Please Note:
சகோதரர் ஜெறோம் பௌல்டர் குறித்த இந்த மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. பதிவிற்கு தேவைப்பட்ட தகவல்கள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிற்கு வந்த விதம் குறித்த அவரது கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது இணையதள முகவரியை பயன்படுத்தவும்.
Reference:
1. Why I became Muslim – http://www.jboulter.com/index_files/Page987.htm

ஆஷிக் அஹ்மத் அ. – எதிர்க்குரல்

Saturday, March 29, 2014

இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று திமுக விற்கு ஓட்டுபோடுவது - பேரா. காதர் மொய்தீன்..!


அஸ்ஸலாமு அழைக்கும் ...

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேரா. காதர் மொய்தீன் அவர்கள் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களுக்கு   ஹஜ்ஜு செய்வது எப்படி கடமையோ அது போல்  திமுகவிற்கு ஓட்டளிப்பதும் கடமை என்று கூறியுள்ளது. பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக பாவித்து நீங்கள் திமுக கூட்டணிக்கு ஓட்டுபோட வேண்டும் என்று கூறியுள்ளார் இந்த அறிவுஜீவி.

ஏன் இப்படி கூறினார் என்றால் ... மற்ற கட்சிக்கு ஒட்டுபோட்டால் மோடிக்கு ஆதரவாக போய் மோடி ஆட்சிக்கு வந்துவிடுவான் அதனால் காலத்தின் கட்டாயம் என்று விளக்கமாறு விளக்கம் கொடுகிறார்கள் சகாக்கள்.

சகோதர்கள்... அல்லாஹ்விற்கு பயந்து பேச வேண்டும்.

நாளை நடப்பதை அறியகூடியவன் அல்லாஹ். யாருக்கு ஆட்சியை வழங்க வேண்டும் என்று நாடியிருகிறானோ அவனுக்கு வழங்குவான்.

ஆனால் நமது பாதுகாவலன் அல்லாஹ் ஒருவனே .. 

நாம் சில தற்காப்பு முயற்சிகளை எடுக்கிறோம் . ஆனால் அதில் எந்த அளவுக்கு நமக்கு நன்மைஇருகிறது என்பது தெரியாது.

அதிமுக பிஜேபி கூட்டனி சாத்தியங்கள் மிகவும் அதிகம் உண்மை தான். இருப்பினும் திமுகவும் பிஜெபியுடன் கூட்டணி வைக்காத கட்சி அல்ல. 
தேர்தல் முடிவுகள் தான் அதை நிர்ணயிக்கும்.

அதற்காக இந்த அளவிற்கு பேச வேண்டுமா ... இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் கைவைக்கும் செயல் அல்லவா ..!!

அரசியல் நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது என்பதை நம் சமூகமக்கள் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். 



Tuesday, March 26, 2013

அந்தப் பழைய காலுறை... என்னோடு வரவேண்டும்..!!


அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார்.  தன் மகனை அருகழைத்தார்.
மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான் உங்களனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?"

"என்னவென்று சொல்லுங்கள் தந்தையே!" என்றான் மகன். 

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை"


ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான்.

அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார்.  அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர்.  உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது. அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம் சென்று  தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து "இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும்" என்று கூறினான்,

"முடியாது; முடியவே முடியாது" மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர்.  "இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்" என்று சொல்லிப் பார்த்தான் மகன்.  ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை. "இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை; எனவே, வாய்ப்பில்லை!" என்றார் உறுதியாக.

மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். "நான் சொன்னது, சொன்னது தான்.  வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள்". அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் "ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!"

இக் களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். "தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன்" என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான்மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"என் மகனே! அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை;  நாளை இந்த நிலை உனக்கும் வரலாம்.  இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை  நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும்  உதவும். ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!"

அந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.

'(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.' என்கிறது (திருக்குர்ஆன் 7:8)

'அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும் என்கிற கருத்தை உணர்த்தும் திருக்குறள் உண்டு:


(ஆங்கில மடல் ஒன்றின் தமிழாக்கம்: சகோதரர் இப்னு ஹம்துன்)

Friday, January 11, 2013

குடும்பத்தை சீரழிக்கும் T.V சீரியல்கள்..

உடையும் குடும்ப உறவுகள்:




இன்றைக்கு பெரும்பாலான தொடர்களில் கள்ள உறவுகள், இருதாரம், மாமியார் மருமகள் குழப்பம், பங்காளிச்சண்டை, நாத்தனார், அண்ணி பழிவாங்கும் நடவடிக்கை போன்றவை மிகைப்படுத்தி காட்டப்படுகிறது. இதைப் பார்க்கும் குடும்பங்களில் சந்தேக விதை விழுந்து உறவுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட காரணமாகிறது.



தொலைக்காட்சியே கதி

காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இதைப் பார்க்கும் பெண்கள் குடும்பத்தார்க்கு உணவளிப்பதைக் கூட மறந்துவிடுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களை உபசரிப்பதில்லை, கணவன்களை கவனிக்காமல் வீண் வாக்குவாதம் செய்வது, குழந்தைகளை தேர்வு சமயத்தில் படிக்க விடாமல் தொடர்களைப் பார்ப்பது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த தொடர்கள் பெண்களின் பண்பை பாதிப்படைய வைத்து மனநலத்தை சீர்குலைத்து விடும் சாதனமாக திகழ்கிறது என்பதே நிஜம்.

டிவி தொடர்களில் வருவதை தன் நிழ வாழ்க்கையில் நடக்கிறது என்றும், நான் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பெண்கள் பலர் மனநோய்க்கு ஆளாகின்றனர். அதேபோல் எங்கே தொடர்களில் நடப்பது போன்று நம் வாழ்க்கையிலும் நடந்து விடுமோ? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.




அழியும் கூட்டு குடும்பம்

இன்றைய தொடர்களில் சவால் விடுவது, வில்லத்தனத்தால் வக்ர சிந்தனைகள், அழுகை, போன்ற காட்சிகளால் 99 சதவிகிதம் பெண்களிடையே பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடர்கள் பெரும்பாலும் இருதாரத்தை ஆதரிக்கிறது. தவிர கள்ள உறவுகளுக்கு கடை விரிக்கும் இதுபோன்ற தொடர்களை பின்பற்றுவதால்தான் நிஜ வாழ்க்கையில் சண்டைகளும் இதனால் விவாகரத்து தற்கொலை முயற்சி மற்றும் கொலை முயற்சியிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள்.



அதிகரிக்கும் டிஆர்பி ரேட்டிங்

பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு, அரவணைப்பு, அர்ப்பணிப்பு போன்ற உயர்ந்த குணங்களை பெண்கள் தொலைக்காட்சி தொடர்களால் இழந்து வருகின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இன்றைய தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கவும், வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படுகின்றன என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



மனதை அலைபாய வைக்கும் நடனம்

இன்றைய தொலைக்காட்சி அலைவரிசையில் ரியாலிட்டி ஷோ என்பது பிரபலமாக இருக்கிறது. அரை குறை ஆடை அணிந்த பெண்கள் ஆண்களை கட்டிப் பிடித்து, நடனம் ஆடுவதை, அரைகுறை ஆடை அணிந்த நடுவர்கள் மார்க் போடுகின்றனர். இதனால் தாய்மார்கள் தங்கள் பச்சிளம் பெண் குழந்தைகளின் ஆடை விஷயத்தில் தாராளம் காட்டி இந்த கலாச்சால சீரழிவிற்கு வழிவகுக்கிறார்கள்.



சேனல்களுக்கு சென்சார் வருமா?

இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்களுக்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஓரு தனியார் தொலைக்காட்சியில் நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்க்கவேண்டிய விஷயத்தை ஊரறியப் பேசி கடைசிக கவுன்சலிங் என்ற பெயரில் எதையோ சொல்லி முடிக்கிறார்கள். கள்ளக்காதலும், கள்ளத்தொடர்புகளும் இங்கே பஞ்சாயத்து செய்யப்படுகின்றன.



அதிகரிக்கும் வன்முறை

இன்றைய தொடர்களில் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போதல், கணவன்-மனைவி பிரிந்து வாழ்வது, கள்ளக்காதல், பெற்றோரை அவமதிப்பது, சூழ்ச்சி, சுயநலம், - இவைகளால் பின்னப்பட்ட சீரியல்களை தினமும் ஐம்புலன்களையும் ஒன்றுபடுத்தி கவனக்குறைவின்றி தவறாமல் பார்த்து மகிழும் பிள்ளைகளின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.



இரண்டு லட்சம் வன்முறை காட்சி

18 வயதை அடையும் முன் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வன்முறைக்காட்சிகளைப் பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகள் தங்களின் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கிறார்கள் என்பதை சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாணவ சமுதாயத்திற்கும் குற்றங்களுக்கும் இடையே உள்ள தூரம் குறைய பொறுமை, சகிப்புத் தன்மை, மனிதநேயம் மிக்க இளைஞர்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.



சமூகத்தை பாதிக்கும் தொடர்கள்

வியாபார நோக்கத்திற்காக தொலைக்காட்சி சானலை தொடங்கும் பணக்காரர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் புள்ளிகள் சமூக அக்கறையில்லாமல் எடுக்கப்படும் திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமூகத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணரவேண்டும்.

தணிக்கை தேவை

சின்னத்திரையில் சில நிமிடம் வரும் விளம்பரங்களுக்கே தணிக்கை சானறிதழ் கட்டாயம் பெற வேண்டும் என சட்டம் இருக்கும் போது. அதிகம் பேர் பார்க்கும் தொடர்களுக்கும் நிச்சயம் தணிக்கை தேவை. மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை மட்டுமே காட்டுபவையாக தொலைக்காட்சிகள் மாற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

தரமான நிகழ்ச்சிகள்

தேவை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிக்கும்படியான, தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதை செயல்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய-மாநில அரசுகளின் கையில் உள்ளது. இளைய சமுதாயத்தை, எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பெரும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்பதை தொலைக்காட்சி சானல்களை நடத்துபவர் களும், மத்திய-மாநில அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.


நன்றி: தட்ஸ்தமிழ்.

Saturday, May 19, 2012

குழந்தைகளுக்கு வில்லனாகும் டிவி ரியாலிட்டி ஷோக்கள்!

தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பங்கேற்கும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் பெரும்பாலான குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் குழந்தைகளுடன் தமது குழந்தைகளை பெற்றோர்கள் ஒப்பிட்டு பேசுவதால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதனைத் தொடர்ந்து உடல் நல பாதிப்பும் ஏற்படும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

பிரபலமான தொலைக்காட்சியில் பிரசித்தி பெற்ற ரியாலிட்டி ஷோ. சீசன் 3 வரை வந்து விட்டது. சின்னக்குழந்தை ஒன்று மைக் பிடித்து அழகாக பாடிக்கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களோ குற்றம் குறை கூறி பாடியது சரியில்லை என்று ரிஜெக்ட் செய்து விட்டனர். அதனால் அழுது ஆர்பாட்டம் செய்கிறது அந்த குழந்தை.



தொலைக்காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பெரும்பாலானவர்களை இந்த காட்சி பாதித்துள்ளது. என்னதான் போட்டியாக இருந்தாலும் நிராகரிப்பு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை சொல்லும் விதமும் இருக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கை மனதில் வைத்து நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளினால் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

குழந்தைகளின் தனித்திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறோம் என்ற போர்வையில் தொடங்கப்பட்டவைதான் இந்த ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சிகளில் பத்து குழந்தைகளுக்கு நன்மை ஏற்பட்டிருக்கிறது என்று வைத்துகொண்டாலும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதே உண்மை. தங்கள் குழந்தைகளும் அவர்களைப் போல டிவியில் தோன்றவேண்டும் என்ற ஆவலில் பிஞ்சு குழந்தைகளை படிப்பு தவிர பாட்டு, நடனம் என தனித்திறமை வகுப்புகளுக்கு டியூசன் அனுப்புகின்றனர் பெற்றோர்கள்.


அது போன்ற வகுப்புகளுக்கு குழந்தைகள் விரும்பி சென்றால் எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம் அவர்களுக்கு விருப்பமே இல்லாமல் அதுபோன்ற வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பது காசு கொடுத்து நாமே நம் பிள்ளைகளுக்கு சூனியம் வைப்பதற்கு சமம் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடுகின்றனர். பாட்டு நிகழ்ச்சி என்றால் குரல் வளம் மட்டுமே பாதிக்கப்படும். நடனம் என்றால் உடலின் அனைத்து உறுப்புகளும் ஓய்வுக்காக கெஞ்சும் நிலைக்கு வந்து விடும். டிவியில் வந்து நடனம் ஆடும் போது அந்த புகழ் வெளிச்சம் பெற்றோர்களுக்கு நன்றாகத்தான் இருக்கும். இயல்பாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேசமயம் பெற்றோர்களின் கட்டாயத்திற்காக அவர்கள் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்ளும் பட்சத்தில் உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். தோல்வியை தாங்கும் மனப்பக்கும் இல்லாத குழந்தைகள் மன ரீதியான பாதிப்பிற்கும் ஆளாகும் சூழ்நிலை உருவாகும் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கையாகும்.

டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக ரியாலிட்டி ஷோ வில் சில செயற்கைத்தனமான செயல்களும் செய்யப்படுவதுண்டு. அதை உண்மை என்று நம்பிவிடும் குழந்தைகளும், பெற்றோர்கள் சில சமயம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அதேபோல் டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகளுடன் வீட்டில் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கும் நமது குழந்தைகளை ஒப்பிடவே கூடாது. ஏனெனில் அந்த குழந்தைகளின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். அதற்கு அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எத்தனையோ தியாகங்களை செய்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்க அந்த குழந்தைகள் போடும் மேக் அப் அவர்களின் சருமத்தை பாதிக்கும். 



அதே போல் செயற்கை வெளிச்சம் குழந்தைகளின் கண்களையும் பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.ஆனால் நமது குழந்தைகளுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. நாம் அளிக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப நம் குழந்தைகள் நிச்சயம் முன்னேறுவார்கள். அதேசமயம் பிற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது பெற்றோர் மீதே ஒரு வெறுப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.


குழந்தை ஏதேனும் தவறு செய்தால் கூட அங்கே பார், டிவியில் பாரு அந்த புள்ள என்னமா  பாடுது , ஆடுது நீயும் தான் இருக்கிறியே  ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லை என்று குழந்தைளிடம் சிறுவயதிலயே குற்றஉணர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள்.

எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகளும் ஹீரோக்கள்தான். தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ப்பது தான் திறமைசாலிகளுக்கான அளவுகோள் என்று எண்ணி உங்கள் குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசி அவர்களை ஜீரோவாக்கி விடாதீர்கள்..



பெற்றோர்கள் இதை கருத்தில் கொள்வார்களா...?


நன்றி : தட்ஸ்தமிழ்.காம் 

Wednesday, May 16, 2012

இழிவை நோக்கி இந்தியச் சமூகம் - ஓர் எச்சரிக்கை


தனிமனித ஒழுக்கமே ஒரு உயர்ந்த நாகரீகத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கான அடையாளம். ஒழுக்கம் சார்ந்த வாழ்வியல் முறை எந்தச் சமூகத்தில் கண்ணும் கருத்துமாக கடைபிடிக்கப்படுகிறதோ அந்தச் சமூகமும் நாடும் உலகில் உயர்ந்து நிற்கும். அதுவல்லாத நாடும் சமூகமும் அதல பாதாளத்தில் வீழும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

ஆனால், இந்த உண்மை நமது நீதிமன்றங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கசப்பாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ சமீபகாலமாக இந்திய அரசும் இந்திய நீதிமன்றங்களும் ஒழுக்கம் தொடர்பான முடிவுகளில் கீழ்த்தரமான நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன.

2009-இல் டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது 377பிரிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்தது. அன்றைக்கு மத்திய சுகாதார அமைச்சராக இருந்த தமிழ் கலாச்சாரம் குறித்து வாய்கிழியப் பேசும் “பச்சைத் தமிழர்” அன்புமணி ராமதாஸ் அவர்களும் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது என்று “அறிவுப்பூர்வமாக” அறிவித்தார். சமீபத்தில் மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென், எழுத்தாளர் விக்ரம்சேத் போன்ற இந்தியாவின் அறிவு ஜீவிகள் (?) ஆதரவும் கிடைத்துள்ளது. ஓரினச் சேர்க்கையை ஆதரித்ததால்தான் அமர்த்தியசென்னுக்கு நோபல் பரிசு கிடைத்தது போலும்! இந்திய கலாச்சாரம், பண்பாடு குறித்து தொண்டை கிழிய பேசும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இதுபற்றி கள்ள மவுனம் சாதிக்கிறது.

காதலர் தின கொண்டாட்டத்தை கடுமையாக எதிர்க்கும் இவர்கள் இந்தத் தீர்ப்பு குறித்து வாய் திறக்கவில்லை. சட்டப் பேரவையிலேயே தமது உறுப்பினர்கள் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக் கொண்டதால் அம்பலப்பட்டு நிற்கிறது பா.ஜ.க. இந்துத்துவ கோட்பாட்டுக் கூறுகளில் ஓரினச்சேர்க்கையும் அடங்குவதால் இது குறித்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களால் கருத்துச் சொல்ல முடியவில்லை.

மனிதனுக்கும் மிருகத்திற்கும் இருக்கும் வேறுபாடு பாலியல் ஒழுங்குமுறைதான். வயது வந்த ஆண் பெண் இருவரும் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு குழந்தைகள் மூலம் குடும்பமாக தரம் உயர்ந்து அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினருக்காகவே தங்களை அர்ப்பணித்து வாழ்வது என்ற கோட்பாடே உலகின் உயரிய கோட்பாடு.

இந்தியச் சமூகத்தின் ஆணிவேராக இருந்ததும் இந்தக் குடும்பவியல் கோட்பாடுதான். ஆண்டாண்டு காலமாக இந்தியச் சமூகம் நிலைகுலையாமல் நிலைத்து நின்றதுக்கு காரணமும் குடும்பத்தை மைய்யமாக கொண்ட இந்த வாழ்வியல் சூழல்தான்.

தனிமனித சுதந்திரம் என்ற பெயரால் தறிகெட்ட வாழ்க்கை முறையை தங்குதடையின்றி உலக நாடுகள் மீது திணித்து வரும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. ஐ.நா. சபை மூலம் நிர்ப்பந்தம் செய்து ஓரினச்சேர்க்கை குற்றம் கிடையாது என்ற கருத்தை இந்திய நீதிமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் மூலமாக சட்டமாக்கியுள்ளனர். ஐ.நா. சபையின் அதிமுக்கியான பணி இப்போது ஓரினச்சேர்க்கையை உலகில் நிலைப்படுத்துவதுதான்!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குடும்ப வாழ்வு முறை என்ற கோட்பாடு சிதைந்து சின்னாபின்னமாகி விட்டது. மொத்தச் சமூகமும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதனால் உலகில் வேறு எந்தச் சமூகமும் நாடும் முறையான வாழ்வு வாழக்கூடாது என்ற “உயர்ந்த எண்ணமே” ஓரினச்சேர்க்கை போன்ற கேடுகெட்ட வழிமுறைகளை தனிமனித உரிமை என்ற பெயரால் உலகம் முழுவதும் நிலைநிறுத்தத் துடிக்கின்றனர்.

இந்தியாவில் இந்த காட்டுமிராண்டித்தனத்தை தங்கு தடையின்றி பரப்புவதற்காகவே “நாஸ் இந்தியா ஃபவுன்டேஷன்” என்ற அரசு சாரா நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் இயக்குநர் அஞ்சலி கோபாலன் என்ற பெண் 1990 வரை அமெரிக்காவில் இந்த வேலையைச் செய்து வந்தார்.

1990க்குப் பிறகு இந்தய அரசின் பார்வை அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கை சார்ந்ததாக ‘புண்ணியவான்’ மன்மோகன் சிங் அவர்களால் மாற்றப்பட்டவுடன் இந்த அஞ்சலி கோபாலன் என்ற ‘சமூக சேவகி’ இந்தியாவிற்கு வந்து இந்த அமைப்பைத் தொடங்கி ‘வெற்றிகரமாக’ நடத்தி வருகிறார். இந்திய அரசின் உயர் அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு அமெரிக்க நிறுவனங்களின் நிதியுதவியோடு ‘எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துகின்றோம்…’ என்ற பெயரில் ஓரினச் சேர்ச்கையில் பாதுகாப்பாகச் செயல்படுவது எப்படி என்று மூன்று மாத ஆறுமாத வகுப்புகள் எடுத்து வருகிறது ‘நாஸ் இந்தியா ஃபவுன்டேஷன்’ என்ற இந்த நாசகார நிறுவனம். டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்காடிய ஓரினச் சேர்க்கை ஆதரவு அமைப்புகளில் இந்த நிறுவனம் தான் முன்னணி நிறுவனம்.

ஓரினச்சேர்க்கை மட்டுமா இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது? அரசின் அனுமதியோடு விபச்சார விடுதிகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமலேயே “புரிந்துணர்வு அடிப்படையில் வாழ்வது” என்ற பச்சை விபச்சாரம் கல்லூரிகளிலும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மத்தியிலும் பெருகி வருகிறது. பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுறையை பயன்படுத்துங்கள் என்ற விளம்பரம் விண்ணைப் பிளக்கிறது.

சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகள் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்கின்றனர் என்பதால் அரசு மிகவும் “கவலையடைந்து” தினமும் ஆயிரம் ஆணுறைகள் காலையில் இலவசமாக பெட்டிகளில் வைக்கப்படுகிறது. மாலையில் பெட்டி காலியாகி விடுகிறது. இந்த கேவலத்தை மெரீனாவில் கண்கூடாக பார்க்கலாம்.

குடும்பப் பெண்களைக் கூட கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் வகையில் எவ்வித தடையுமின்றி ஆபாசக் காட்சிகளை, பாடல்களை தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படுகிறது. இதுபோதாதென்று மனிதனின் தலைமுறை பாரம்பரிய தொடர்புகளையும் அறுத்தெறிய வேண்டும் என்பதற்காகவே புதிய புதிய வழிமுறைகளில் இயற்கைக்கு மாறாக குழந்தை பெறுதல் என்ற அடிப்படையில் வாடகை தாய் கலாச்சாரம் பெருகி வருகிறது. உலகிலேயே வாடகை தாய் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும் நாடு நமது நாடுதான். ஆந்திரா முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டி வாடகைத் தாய்கள் தங்களது கர்ப்பப் பைகளை வறுமையின் காரணமாக விற்கின்றனர்.

கணவனின் உயிரணுவையும் மனைவியின் கருமுட்டையையும் செறிவூட்டி வாடகைத் தாயின் கருப்பையில் வைத்து குழந்தை பிறக்கச் செய்கின்றனர். கணவனின் உயிரணுவில் வலிமை இல்லாவிட்டால் உயிரணு வங்கிக்கு சென்று வேறு எவனோ விலைக்கு விற்ற உயிரணுவை வாங்கி மனைவியின் கருமுட்டையுடன் சேர்த்து மனைவி கருத்தரிக்கிறாள். இல்லையென்றால் வாடகைத் தாய் கருத்தரிக்கிறாள்.

இதற்காகவே விந்தணு வங்கிகள் சென்னையில் முளைத்து வருகின்றன. சென்ற மாதம் திருமணமான பெண் ஒருவர் இந்த விந்து வங்கிக்குச் சென்று ஐ.ஐ.டி. மாணவனுடைய விந்தணு வேண்டும்; அதற்காக இருபதாயிரம் ரூபாய் தருகிறேன் என்று கேட்டதாக ஒரு மகளிர் மாத இதழில் அதிர்ச்சி செய்தி வெளியாகி இருந்தது. ஐ.ஐ.டி. மாணவன் என்றால் அவன் அறிவாளியாக இருப்பான் அவருடைய விந்தணுவினால் உருவாகும் குழந்தையும் அறிவாளியாக இருக்கும் என்ற கடைந்தெடுத்த கயவாளித்தனமான சிந்தனை அந்த மெத்தப் படித்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது என்றால் இந்திய சமூகம் எங்கே செல்கிறது?

இன்னும் சோதிடம் ஜாதகம், நல்ல நாள்-கெட்ட நாள் என்ற மூடநம்பிக்கைகள் உச்சந்தலைக்கேறி தாய்க்கு பிரசவ வலி எடுக்கும் முன்பே நல்லநாள் என்று சோதிடன் குறித்த தேதியில் குழந்தை பெறவேண்டும் என்பதற்காக தாய்லாந்து நாட்டிற்கு பறந்து சென்று குறிப்பிட்ட தேதியில் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கின்றனர்.

இந்தியச் சமூகத்திற்கான முறைப்படுத்தப்பட்ட வாழ்வியல் வழிகாட்டுதல் இல்லாததே இந்த கேவலங்களுக்குக் காரணம். இந்தியச் சமூகக் கட்டமைப்பே குடும்பங்களின் வெற்றியில்தான¢ இருக்கிறது. அதைச் சீரகுலைக்க வேண்டும் என்பதே முதலாளித்துவ சக்திகளின் சதி. இந்தச் சதியை நிறைவேற்றிட இந்திய அரசும் அதன் கொள்கைகளும் வழிகளை எளிதாக்கி வருகின்றன. விபச்சாரத்திற்கு முறைப்படியான சான்றிதழ் வழங்கும் இந்திய அரசு திருமணத்திற்கான வயது பெண்ணுக்கு 21 என்றும் ஆணுக்கு 24 என்றும் சரியான நேரத்தில் முறைப்படியான திருமணங்களை வலிந்து தள்ளிப்போட வைக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் கடந்த 63 ஆண்டுகளாக குறிப்பிட்டு வரும் “இந்து”ச் சமூகத்தில் நிலவும் சாதிய கொடுமைகள் சமூகக் கொடுமைகள் பெண்ணடிமைத்தனம் திருமணங்களில் பாகப்பிரிவினைகளில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்கு சட்டம் இயற்றுகிறோம் திட்டம் தீட்டுகிறோம் என்ற பெயரில் “இந்து” சமூகத்தை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்படும் பொதுவான சட்டங்களும் திட்டங்களும¢ கொள்கை முடிவுகளும் இந்து அல்லாத பிற சமூகங்களையும் பாதிக்கிறது.

குறிப்பாக மனித இனத்திற்கான வாழ்வியல் கோட்பாடாக, முழுமைப்படுத்தப்பட்ட சட்டங்களாக, மாறுதல் தேவையற்ற கொள்கை முடிவுகளாக கடந்த 1433 ஆண்டுகாலமாக அணுஅளவும் மாற்றம் இல்லாமல் அகிலம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் இந்திய முஸ்லிம்களும் இந்திய அரசின் முறையற்ற இத்தகைய சமூகவியல் சட்டங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

திருமணம் என்ற வழிமுறையையும் கணவன் மனைவி என்ற பந்தத்தையும் குடும்பம், இரத்த உறவுகள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற வாழ்வின் எதார்த்தங்களையும் பிறருக்காக வாழ்வது என்ற இயற்கையான ஈகை குணங்களையும் குழிதோண்டிப் புதைத்து இப்படி ஒரு பாசப் பிணைப்பே உலக மக்களிடம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இயற்கைக்கு மாற்றாக மனித சமூகத்தையும் உலகையும் வழிநடத்தப் பார்க்கின்றனர், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள “விஞ்ஞானிகள்” சிலர்.

இயற்கைக்கு மாற்றமாக எது நடந்தாலும் அதன் விளைவுகள் மிகவும் கோரமாக அமையும் என்பதற்கு உலக வரலாற்றில் பல சம்பவங்கள் சான்றாக உள்ளன. இறைவனுடைய பிடி இறுகப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஜசாகல்லாஹ் : CMN சலீம் 

Wednesday, November 9, 2011

இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" - இம்மாதிரியான எண்ணம் நம்மில் பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி பார்க்கவுமே இந்த பதிவு.

சகோதரி பிர்தவ்ஸ் - இவர் கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இஸ்லாத்தை தழுவியதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, சரியான இருப்பிடம் உணவு இல்லாமல் தவித்து என்று இவருக்கும், இவருடைய அண்ணனுக்கும் இறைவன் கொடுத்த சோதனைகள் ஏராளம்.

சகோதரி பிர்தவ்ஸ் அவர்களின் அண்ணனான சகோதரர் முஹம்மது உமர்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் உமர். வேதங்களில் நல்ல புலமை பெற்றவர். மைசூரில் இருந்து இவரது குடும்பம் பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்தபோது, கூடுதல் வருமானத்திற்காக சையத் கலீம் என்பவரது துணிக்கடையில் முதலீடு செய்தனர் இவரது குடும்பத்தினர். வரும் லாபத்தில், முதலீட்டிற்கு ஏற்ற பங்கை உமரின் குடும்பத்தினருக்கு கொடுத்துவிட வேண்டுமென்பது ஒப்பந்தம்.

சையத் கலீம் அவர்களின் நேர்மையான வியாபாரத்தால் கவரப்பட்ட உமரின் பெற்றோர், தாங்களும் அந்த கடையில் முதலீடு செய்திருப்பதால், சையத் கலீமுடன் சேர்ந்து பணியாற்றுமாறு உமரை கேட்டுக்கொண்டனர். ஆனால் முஸ்லிம்களுடன் பணியாற்ற மறுத்து விட்டார் உமர். நாளடைவில் பெற்றோர்களின் வற்புறுத்தல் அதிகமாக வேண்டா வெறுப்பாக அந்த கடையில் பணியாற்ற ஆரம்பித்தார் (அப்போது டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தால் பகுதி நேரமாகவே பணியாற்றினார் உமர்).

சையத் கலீம் அவர்களின் துணிக்கடை வாயிலாக உமருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினான் இறைவன். அங்கே அவருக்கு குர்ஆன் கொடுக்கப்பட, மாற்றங்கள் மிக வேகமாக நடந்தேற ஆரம்பித்தன.

முஸ்லிம்கள் மீதான வெறுப்பு முற்றிலும் மறைந்து, இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் உமர். தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்திய மார்க்கத்தை தன் குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். உமரின் இறைப்பணி வெற்றியளிக்க ஆரம்பிக்க, அவரின் சகோதரி பிர்தவ்ஸ்சும் இஸ்லாத்தை பின்பற்றுவதென முடிவெடுத்தார். 

இறைவனின் கடுமையான சோதனைகள் ஆரம்பித்தன.

எவ்வாறான சோதனைகள் அவை? இறைவனின் சோதனைகளை எப்படி கையாண்டனர் உமரும், சகோதரி பிர்தவ்சும்?


சகோதரி பிர்தவ்ஸ் யின் வார்த்தைகளில் இருந்து....

"கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். நான் (ஆஷா), என் சகோதரி வீணா மற்றும் எங்கள் அண்ணன் நாகராஜ் என்று நாங்கள் மூன்று பேர். கடைசிப் பிள்ளை என்பதால் என் மீது செல்லம் அதிகம். 

என் அண்ணன் ஆன்மீக விசயத்தில் மிகவும் தீவிரமானவர். தினமும் காலை மாலையென பூஜைகளை மேற்கொள்வார். முரட்டுத்தனமும் அதிகம். சமயங்களில் அவரிடம் அடி கூட வாங்கியிருக்கின்றோம். 

சையத் கலீம் என்பவரின் துணிக்கடைக்கு வேலைக்கு போக ஆரம்பித்ததில் இருந்து பூஜைகள் செய்வதை நிறுத்திவிட்டார் என் சகோதரர். இதனால் என் அம்மாவிற்கும், அவருக்குமிடையே பெரிய அளவிலான வாக்குவாதங்கள் நடைபெறும். அவருடைய நடவடிக்கைகளும் மாற ஆரம்பித்திருந்தன. என் சகோதரர் இப்போது அதிக பொறுப்பானவராக மாறியிருந்தார். மென்மையாக பேசவும் செய்தார். 

நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய இந்த திடீர் மாற்றம் எனக்கு அதிர்ச்சியை தந்தது.    

தினமும் என் அம்மாவிடம் விவாதிப்பார். ஈஸ்வரனுக்கு எதற்கு மனைவி?, சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரனுக்கு எதற்கு குடும்பம், மகன்கள்?, இறைவன் அவ்வளவு வலிமையானவன் என்றால், விநாயகரின் தலையை ஏன் ஈஸ்வரனால் திரும்ப கொண்டுவர முடியவில்லை?...

இப்படியான அவருடைய கேள்விகளால் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். 

என் அண்ணனது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். தினமும், சில நிமிடங்கள் தன் அறைக்குள் நுழைந்து பூட்டிக்கொள்வார். உள்ளே என்ன செய்துக்கொண்டிருக்கின்றார் என்பதை அறிய விரும்பினேன். ஒருநாள், அவர் வெளியே சென்றிருந்த நேரம், அவரது அறைக்குள் சென்று, எதையாவது மறைத்து வைத்திருக்கின்றாரா என்று தேட ஆரம்பித்தேன். அப்போது கையில் அகப்பட்டது ஒரு டைரி. அதனைத் திறந்தேன். உள்ளே இருந்த எந்த வார்த்தையும் எனக்கு புரியவில்லை, ஒரே ஒரு வார்த்தையை தவிர. அது நமாஸ் (தொழுகை) என்ற வார்த்தை. 

அன்று மாலை இது குறித்து என் சகோதரரிடம் கேட்க நினைத்தேன். அதற்கேற்ப, என் அம்மாவும் சகோதரியும் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். அந்த டைரி குறித்தும், அவருடைய இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்தும் கேட்டேன்.

என் சகோதரர் கூற ஆரம்பித்தார். ஆதாம், ஏவாள், இப்லீஸ் என்று விளக்க ஆரம்பித்தார். இந்த சிலை வணக்கங்கள் தவறென்றார். இவை மனிதனை நேரான பாதையிலிருந்து விலகிச் செல்ல வைக்கின்றன என்று கூறினார். 

இப்போது நான் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். எப்படி மனிதனால் இறைவனின் உருவத்தை கற்பனை செய்யமுடியும்? வெற்று கண்களால் நம்மால் ஒரு குறிப்பிடத்தக்க தூரம் வரை வானத்தை பார்க்க முடியும். அதற்கு மேலாக பார்க்க நம்மால் முடியாது. நம் கண்களுக்கு அவ்வளவுதான் வரையறை. அது போல, நம் மனதிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க எல்லை இருக்க வேண்டும். நம்மால் அந்த வரையறையை வைத்துக்கொண்டு இறைவனின் உருவத்தை கற்பனை செய்ய முடியாது. 

என்னுடைய ஆய்வுக்கு பிறகு, இறைவனுக்கான இந்த உருவங்கள், மனிதர்களின் கற்பனையால் உருவானவை என்ற முடிவுக்கு வந்தேன். 

ஒருநாள், என் சகோதரர் வேலை செய்துக்கொண்டிருந்த சையத் கலீம் அவர்களின் கடைக்கு சென்றேன். அங்கே கலீம் அவர்களின் சகோதரர் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார். அது அப்துல்லாஹ் யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு. அல்-கஹ்ப்f என்ற அத்தியாயத்தில் இருந்து நான் வாசித்த வசனம் என்னை யோசிக்க வைத்தது. 'கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும், இறைவனின் வார்த்தைகளை எழுதி முடிக்க முடியாது' என்று கூறியது அந்த வசனம்.

இறைவன் அவ்வளவு போற்றுதலுக்கு உரியவனா? இந்த வசனத்தை பிரதிபலிக்க ஆரம்பித்தேன். மனிதனின் படைப்பு, உயிரினங்கள், இந்த பூமி என்று இவை அனைத்து குறித்தும் பிரதிபலிக்க ஆரம்பித்தேன். ஆம், அந்த வசனம் கூறுவது உண்மைதான். எனக்குள் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. 

இஸ்லாத்தை பின்வற்றுவதென முடிவெடுத்தேன். இதனை என் குடும்பத்தில் யாரிடமும் கூறவில்லை. இந்த இடைநேரத்தில், இஸ்லாம் குறித்த சரியான புரிதலை என் குடும்பத்தாரிடம் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார் என் சகோதரர். அவர்களிடம் இஸ்லாம் குறித்து பல தலைப்புகளில் பேசுவார், விளக்க முயற்சிப்பார். அவருடைய உரையாடல்களை உற்று கவனிப்பேன். எனக்குள் இருந்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் கிடைக்க ஆரம்பித்தது. 

டிப்ளமா இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, இனி என்னுடைய வாழ்வை ஒரு முஸ்லிமாக தொடர வேண்டுமென்று முடிவெடுத்தேன். வீட்டில் நடந்த பூஜைகளை புறக்கணிக்க ஆரம்பித்தேன். 

'ஒரு பெண்ணாக எப்படி வீட்டிலிருந்து வெளியேறுவது?'

'ஒரு பெண் என்பதால், உண்மையை ஏற்றுக்கொள்வதிலிருந்தும், பின்பற்றுவதிலிருந்தும் பின்வாங்க வேண்டுமா?..........கூடாது' - இதுப்போன்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன.

இந்த கால கட்டத்தில் என்னுடைய சகோதரியும் இஸ்லாம் குறித்து தெளிவுபெற ஆரம்பித்தார். ஒரு விநாயகர் சதுர்த்தியின் போது, நாங்கள் மூவரும் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களை எதிர்க்க ஆரம்பித்தோம். எங்களுடைய நடவடிக்கைகளை என் தாய் கண்டித்தார். கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்.

நாங்கள் வெளியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்றார் எங்கள் சகோதரர். சையத் கலீம் அவர்களின் கடையில் வேலை செய்த குர்ஷித் பாய் என்பவர் நாங்கள் தங்கிக்கொள்ள அவருடைய ஸ்டோர் ரூமை சில நாட்களுக்கு கொடுத்துதவ முன்வந்தார். என்னுடைய சகோதரி கடைசி நேரத்தில் எங்களுடன் வருவதில் இருந்து பின்வாங்கினார். ஆனால் நான் உறுதியாக இருந்தேன், அல்ஹம்துலில்லாஹ். என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார் அம்மா. தங்க நகைகளும், சிறந்த வரன் பார்த்து திருமணம் செய்து தருவதாகவும் கூறினார். எனக்கு இவையெல்லாம் தேவையில்லை என்று உறுதிப்பட தெரிவித்துவிட்டேன்.

அன்று மாலை, நானும் என் சகோதரரும் வீட்டிலிருந்து வெளியேறினோம். என் அண்ணனிடம் அப்போது இருந்ததோ நூறு ரூபாய் மட்டுமே. அல்ஹம்துலில்லாஹ், ஆனாலும் எங்களுக்கு அப்படியொரு துணிச்சலை இறைவன் கொடுத்திருந்தான்.

வீட்டிலிருந்து வெளியேறிய போது நான் இறுதியாண்டு டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரியில் என்னை சந்தித்த என் அம்மா, பாட்டியை சந்திக்க சொல்லி கேட்டுக்கொண்டார். பாட்டி வீட்டிற்கு சென்றேன்.

'நீ முஸ்லிமாகி விட்டாயல்லவா?', என் பாட்டி கேட்டார்.

'ஆம்', பதிலளித்தேன்.

'நீ கிருத்துவராகவோ அல்லது வேறு எந்த மதத்தையும் வேண்டுமென்றாலும் ஏற்றுக்கொள். ஆனால் முஸ்லிமாக வேண்டாம். அவர்கள் மோசமாவர்கள்'.

'உங்களுக்கு இஸ்லாம் பற்றி தெரியவில்லை, அதனால் தான் இப்படி பேசுகின்றீர்கள்'.

என்னை ஒரு அறையில் அடைத்து வைக்க முயற்சித்தார்கள். 'என்னால் உங்களுடன் வாழ முடியாது' என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து தப்பிவந்துவிட்டேன். அன்றைய தினத்தில் எனக்கு அப்படியொரு வலிமையையும், துணிச்சலையும் கொடுத்திருந்தான் இறைவன், அல்ஹம்துலில்லாஹ்.

காவல்துறையிலும், கல்லூரி முதல்வரிடத்திலும் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார் என் அம்மா. ஆனால் நாங்கள் எதற்கும் மசியவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தோம்.

நாங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, வேறொரு நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் சகோதரர் அந்த வேலையை கைவிட்டார். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு (கூட) அந்த வேளையில் போக முடியவில்லை என்பதே காரணம்.

ஒரு சிறிய இடத்தில் வாழ ஆரம்பித்தோம்.

சிறிய ஸ்டவ், ஒரு விரிப்பு (பாய்), சில சமையல் பாத்திரங்கள் - இவைதான் எங்களிடம் அப்போது இருந்த பொருட்கள். எங்களுடைய துணிமணிகளை தரையில் வைத்துக்கொள்வோம். புத்தகங்களை தலையணைகளாக பயன்படுத்திக்கொள்வோம். என்னுடைய துப்பட்டா தான் தரைவிரிப்பாக இருந்தது. சாப்பிடும் தட்டுக்களை கண்ணாடிகளாக உபயோகப்படுத்தி தலை வாரிய அந்த நாட்கள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.

அல்ஹம்துலில்லாஹ், அவை என் வாழ்வின் மிக அழகான நாட்கள். இவ்வளவு சோதனைகளை அளித்து எங்களை கெளரவப்படுத்தியதற்காக இறைவனுக்கு என்றென்றும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

மதிய உணவோடு என்னை சந்திக்க கல்லூரிக்கு வருவார் என் அம்மா. வீட்டிற்கு திரும்ப வேண்டுமென்று சொல்லுவார். நான் மிகுந்த பசியுடன் இருந்தாலும், அந்த உணவை வாங்க மறுப்பேன்.

சுமார் 8-12 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தார் என் சகோதரர். சில நேரங்களில், வாழைப்பழங்கள் மற்றும் சில ரொட்டி துண்டுகளுடன் எங்கள் நாட்களை கழித்திருக்கின்றோம். விழித்திருந்தால் பசிக்கும் என்பதால், சில நாட்களில், கல்லூரியில் இருந்து திரும்பியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு உறங்க சென்று விடுவேன்.

இன்று என்னுடைய வாழ்வை திரும்பி பார்க்கின்றேன். இறைவனின் மகத்தான கிருபை மட்டும் இல்லையென்றால் எங்களால் இத்தனை சோதனைகளை கடந்து வந்திருக்க முடியாது.

அல்ஹம்துலில்லாஹ், தற்போது தொலைத்தொடர்பு (டெலிகாம்) துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கின்றேன். என் சகோதரர், ஒரு பெரிய நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிகின்றார்.

என் முஸ்லிம் நண்பர்களை கிண்டல் செய்த பள்ளி நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். இன்றோ, அவன் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கின்றான் இறைவன். தினமும் அவனை ஐந்து முறை தொழ வைத்திருக்கின்றான்.

பல்வேறு சோதனைகளை கொண்டு எங்களுக்கு பயிற்சியளித்து தூய்மைபடுத்தியிருக்கின்றான் இறைவன். இதனை கண்களில் கண்ணீர் ததும்ப நினைத்துப் பார்க்கின்றேன்.

'இறைவன் யாரை அதிகம் நேசிக்கின்றானோ அவர்களுக்கு அதிக சோதனைகளை கொடுக்கின்றான்' என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த நபிமொழியை நினைவு கூறும்போதெல்லாம் இறைவன் எங்களுக்கு இன்னும் சோதனைகளை கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம். அதனை மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்ள தயாராக இருக்கின்றோம்"

சுப்ஹானல்லாஹ்....

இவர்களின் அனுபவத்தை கேட்கும் போதே புது உற்சாகம் பிறக்கின்றது. இவர்களுக்கு மிகச் சிறந்த நற்கூலியை இன்மையிலும் மறுமையிலும் இறைவன் வழங்குவானாக...ஆமீன்.

சகோதரி பிர்தவ்ஸ் அவர்களுக்கு ஒரு அழகான, நிறைவான வாழ்வை இறைவன் கொடுத்திருக்கின்றான். ஒரு பெண், பின்பு ஆண் இரட்டையர்கள் என்று மூன்று குழந்தைகளை இறைவன் சகோதரிக்கு அருளியிருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்.

இறைவனின் சோதனைகள் நமக்கான பயிற்சிகள், நம்மை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் என்றெண்ணி பொறுமை காப்போம். இன்ஷா அல்லாஹ்.

இறைவா, எங்களுக்கு எவ்வளவு சோதனைகளை கொடுத்தாலும் அதனை தாங்கிக்கொள்ளும் பொறுமையையும், வலிமையையும் தந்தருள்வாயாக...ஆமீன்.

அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவு சோதனையை கொடுப்பதில்லை - குர்ஆன் 2:286. 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக....ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note:
1. இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.
2. சகோதரர் உமர் அவர்களின் அனுபவத்தை காண கீழே உள்ள youtube சுட்டியை பயன்படுத்தவும்.

My Sincere thanks to:
1. சகோதரி அன்னு.

References:
1. Firdouse Rao - My Journey to Islam: whyislam.org. link
2. Birth of Twins - Mumlovesme.com. link
3. Br.Omar rao - youtube. link
4. Muhammed Umar Rao - Islamreligion.com. link


ஜசாகல்லாஹ் : : ஆஷிக் அஹமத் (http://www.ethirkkural.com
)
Related Posts Plugin for WordPress, Blogger...