(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, October 2, 2009

நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்!


நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்!

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் தவறிழைக்கக்கூடியவர்களே! அந்தத் தவறிலிருந்து மனிதர்களைத் திருத்தவேண்டுமென்ற நோக்கில், பல்வேறு சட்டங்கள் மனிதனால் இயற்றப்பட்டாலும் தவறுகள் குறைந்தபாடில்லை. நாகரீகம் வளர வளர தவறும் பல்வேறு பரிமாணங்களில் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இத்தகைய தீமையிலிருந்து இரண்டு விஷயங்களால் மட்டுமே மனிதனை தீமைகளிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
1. இறை அச்சம்
2. வெட்கம் [நாணம்]


இறைவனுக்கு அஞ்சக்கூடிய ஒருவன், மக்கள் மத்தியில் இருந்தபோதும் தனிமையில் இருக்கும்போதும் தவறு செய்ய அஞ்சுவான். ஏனெனில், மனிதர்கள் நம்மைப் பார்க்காவிட்டாலும் அகிலமனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கும் இறைவன் நாம் செய்யும் தவறை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். நாளை நியாயத்தீர்ப்பு நாளில் நம்தந்தை ஆதம்[அலை] அவர்கள் முதல், உலகம் அழியும் காலத்தில் இறுதியாக பிறந்த மனிதன்வரை அனைவரையும் ஒன்றுதிரட்டும் அந்த மஹ்ஸர் மைதானத்தில், நம்முடைய தீமைகளை வெளிச்சம்போட்டு காட்டுவான் என்ற அச்சம் இருந்தால் ஒரு மனிதன் தவறு செய்வதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்வான்.


இறை அச்சம் பலவீனமாக இருக்கும் ஒருவனிடத்தில் வெட்கஉணர்வு இருந்தால், அவனும் தவறு செய்ய யோசிப்பான். ஏனெனில், நாம் தவறு செய்யும் போது யாராவது பார்த்துவிட்டால் மானம் போகுமே என்ற அவனுடைய வெட்கம் அவனை அந்தத் தவறிலிருந்து தற்காத்து காப்பாற்றும்.
இந்த இரண்டுமே பலவீனமாக உள்ள மனிதர்கள் தவறு செய்ய யோசிக்கமாட்டார்கள். அதுக்கு உதாரணமாக இன்றைய அரசியல்வாதிகளைச் சொல்லலாம். மக்களின் பொதுப்பணத்தை சுருட்டுகிறார்கள்; அதற்காக கைது செய்யப்படும்போது கொஞ்சம் கூட வெட்கமின்றி, தியாகிபோல கையசைத்துக்கொண்டு போலிஸ் ஜீப்பில் ஏறுகிறார்கள். அதுபோல நேற்றுவரை ஒரு தலைவரை தாறுமாறாக விமர்சித்துவிட்டு மறுநாளே, அந்த தலைவருக்குப் பொன்னாடை போர்த்தி புகழ்மாலை சூட்டுகிறார்கள். நம்முடைய இந்தச் செயலைப் பார்த்து மக்கள் எள்ளிநகையாடுவார்களே என்ற வெட்கம் இவர்களுக்கு இருப்பதில்லை.

இதில் வேதனை என்னவெனில், முஸ்லீம் அமைப்புகளும் ஒவ்வொரு தேர்தலிலும் எந்த அணியில் அங்கம் வகிக்கிறார்களோ அந்த அணியில் தலைவருக்கு ஆதரவாக, எதிரணி தலைவரைச் சாடுவதும் பின்பு இந்த அணிக்கு வந்தவுடன் அந்த அணியைச் சாடுவதுமாக சராசரி அரசியல்வாதிகளாக வலம்வருவதற்கு காரணம் வெட்கமின்மைதான். இப்படிப் பட்டவர்களை பற்றித்தான் நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;


"மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது)மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான், 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்' என்பது" என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். (நூல்; புஹாரி, 6120)


வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்
ஈமான் [இறை நம்பிக்கை] என்றால் நாம் என்ன விளங்கியிருக்கிறோம் என்றால், ஆறு அடிப்படையான விசயங்களை நம்பினால் போதும். அதாவது, அல்லாஹ்வை, மலக்குகளை, வேதங்களை, நபிமார்களை, மறுமையை,விதியை நம்பினால் போதும் நாம் பரிபூரண முஸ்லீம் என்று. ஆனால் இந்த ஆறு விஷயங்களும் மரத்தின் ஆணிவேர் போன்றது, முழுமையான ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டதாகும். நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்:


"ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்". (நூல்: புஹாரி, எண் 9.)


ஒரு மரம் வெறுமனே அதன் அடிப்பகுதியோடு நின்றால் அதைப் பசுமையான மரம் என்று சொல்லமாட்டோம். ஆனால் பல்வேறு கிளைகளுடனும் இலைகளுடனும் காட்சிதரும் மரத்தைத்தான் பசுமையான மரம் என்போம். அதுபோல் வெட்கம் என்ற கிளையும் நம்முடைய ஈமான் என்ற மரத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முழுமையான ஈமானாகும்.
ஆதிமனிதரும் நபியும் நம்தந்தையுமான ஆதம் மற்றும் ஹவ்வா[அலை]ஆகியோரின் வெட்கம்
فَدَلاَّهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَاتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُل لَّكُمَا إِنَّ الشَّيْطَآنَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று. அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு, "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.[7:22]


ஷைத்தானின் சூழ்ச்சிக்குப் பலியான ஆதம்[அலை], ஹவ்வா[அலை] இருவரும் இறைவன் தடுத்த மரத்தின் கனியைப் புசித்தபோது, அவ்விருவரின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டவுடன் இருவரும் தம்பதியர் என்றபோதிலும் அவர்கள் தங்களுக்குள் மறைத்துக்கொள்ளவேண்டியதில்லை என்ற போதிலும் வெட்க உணர்வு அவர்களுக்கு இருந்ததால் இலைகளை வைத்து மறைக்க முற்பட்டனர் என்றால், இன்று நம்சமுதாய பெண்களில் சிலர் கணவர் மட்டும் காணவேண்டிய அழகை கடைவிரிப்பது போன்று, பர்தா அணியாமல் கண்ணாடிபோன்ற சேலைகளை அணிந்து கொண்டு வலம்வருவதும் அதை தடுக்கவேண்டிய பொறுப்பிலுள்ள கணவனோ, அல்லது பெற்றோரோ 'நாகரீகம்' என்று கண்டுகொள்ளாமல் விடுவதும் வெட்கமின்மைதானே!
சினிமாவில் அரைகுறை ஆடைகளுடன் வலம்வரும் நடிகைகளை ரசிப்பதும் அத்தகைய ஆபாச காட்சிகளை மனைவி,மக்கள் சகிதமாக கண்டுகளிப்பதும் வெட்கமின்மைதானே!
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاء بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاء بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும்,

(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.[24:31]
இந்த வசனத்தின் அடிப்படையில் தங்களை மறைத்துக்கொள்ளவேண்டிய முஸ்லீம் பெண்களில் சிலர், இறை கட்டளையை புறக்கணித்து, மச்சான் என்றும் கொழுந்தன் என்றும் குடும்ப நபர் என்றும் நெருங்கிய உறவினர் என்றும் சகஜமாக இவர்கள் முன்னால் சாதாரணமாக வலம்வருவதும் கேலிசெய்து விளையாடுவதும் வெட்கமின்மைதானே!


ரசூல்[ஸல்] அவர்கள், அந்நிய பெண்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லும் விஷயத்தில் உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறியவுடன் சகாபாக்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய சகோதரன் வரலாமா?' என வினவ 'நீங்கள் மரணத்தை விரும்புவீர்களா?' என்று கேட்டார்கள் என்ற செய்தியை நாம் ஹதீஸில் பார்க்கிறோம் என்றால், அல்லாஹ்வின் தூதரின் இந்தக் கட்டளை நடைமுறையில் இல்லாததால் பல்வேறு குடும்பங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதையும் பார்க்கிறோம். இனியேனும் உறவுகள் விஷயத்தில் ஆணாயினும் பெண்ணாயினும் கவனம் செலுத்தி தங்களைப் பேணிக்கொள்வது சிறந்தது.


ரசூல்[ஸல்] அவர்களின் வெட்கம்
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்:

"நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்." ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, "நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்" என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள். (நூல்:புஹாரி,எண் 3562)


சகாபாக்களின் வெட்கம்
"அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நூல்: புஹாரி,எண் 24.)


ரசூல்[ஸல்] அவர்களிடத்திலும், சகாபாக்களிடத்திலும் இறையச்சமும் இருந்தது அதோடு வெட்கமும் இருந்தது. அதனால்தான் அவர்களால் வாய்மையிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கமுடிந்தது.


மார்க்கத்தை அறிய வெட்கப்பட கூடாது
"உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். (நூல்: புஹாரி,எண் 130.)
நம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் வெட்கப்படவேண்டிய விஷயத்தில் வெட்கப்படமாட்டார்கள். ஆனால், மார்க்கவிஷயத்தில் ஆலிம்ஸாவிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டுமேனில் வெட்கப்படுவார்கள். மிகப்பெரிய ஆலிம்ஸாவான ரசூல்[ஸல்]அவர்களிடம் ஒரு பெண்மணி 'பெண்மை' சம்மந்தமான கேள்வியைக் கேட்டுள்ளார்கள் எனில், நம்மில் சிலர் குர்'ஆன் ஓததெரியாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் குர்'ஆனை கற்றுக்கொள்ளவேண்டியது தானே என்றால், இந்த வயசுல போயி குர்'ஆனை கத்துதாங்கன்னு யார்ட்டயாவது சொல்ல வெக்கமாயிருக்கு என்பார்கள். ஆனால் இந்த வயசிலும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வெட்கப்படமாட்டார்கள்.


எனவே மார்க்கத்தை கற்பது நீங்கலாக,மற்ற அனைத்திற்கும் வெட்கப்படவேண்டும். அந்த வெட்க உணர்வும் இறையச்சமும்தான் நம்மை பக்குவப்படுத்தும் என்பதுதான் நிதர்சன உண்மையாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...