அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒன்பது ஆண்டுகள் ஹஜ் செய்யாது தங்கியிருந்தனர்.பிறகு பத்தாம் ஆண்டில் இந்த ஆண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை
நிறைவேற்றச் செல்கின்றார்கள்’ என்று மக்களிடம் அறிவிக்கச் செய்தார்கள்.
உடனே அதிகமான மக்கள் மதீனாவிற்கு வந்தனர். வாகனத்திலோ அல்லது நடந்தோ வர சக்தி பெற்ற எவரும் மதீனா வரத் தவறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்ல வேண்டும் என்பதற்காக மக்கள் (மதீனா) வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்கள் (ஹஜ்) செய்வது போல் தாங்களும் (ஹஜ்) செய்ய வேண்டும் என்று நாடிய வண்ணம் இருந்தனர்.
மதீனாவாசிகளின் இஹ்ராம் எல்லை துல்ஹுலைஃபா’ என்றும், ஷாம்வாசிகளின் இஹ்ராம் எல்லை ஜுஹ்ஃபா’ என்றும், இராக்வாசிகளின் இஹ்ராம் எல்லை தாது இர்க்’ என்றும், நஜ்த்வாசிகளின் இஹ்ராம் எல்லை கர்ன்’ என்றும், யமன்வாசிகளின் இஹ்ராம் எல்லை யலம்லம்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராம் கட்டும் எல்லைகள் பற்றிக்) குறிப்பிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்கஃதா 25 அல்லது 26ல் புறப்பட்டார்கள். அவர்கள் (தம்முடன்) பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் புறப்பட்டோம். எங்களுடன் பெண்களும், குழந்தைகளும் இருந்தனர்.
நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.
“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள். “நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.(தல்பியா எதுவும் சொல்லாமல்) மவுனமான நிலையில் பள்ளியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.
இஹ்ராம் அணிதல்
பிறகு கஸ்வா (என்ற தமது ஒட்டகத்தின்) மீது ஏறினார்கள். அவர்கள் ஏறிய ஒட்டகம் பாலைவனத் தரையில் நிமிர்ந்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள் (லப்பைக் ஹஜ்ஜன் – ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்து விட்டேன் என்ற) ஹஜ்ஜுக்கான தல்பியா கூறி (இஹ்ராம் கட்டி)னார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ்ஜுக்காக மட்டுமே இஹ்ராம் கட்டினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் வாகனத்தில் அமர்ந்தும், நடந்தும் வருவதை நான் (ஜாபிர்) கண்டேன். அது போன்றே அவர்களது வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும், அவர்களது பின் பக்கத்திலும் (மக்கள் வருவதைக்) கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மத்தியில் இருக்கும் போது அவர்களுக்குக் குர்ஆன் அருளப்படும். அவர்கள் அதன் விளக்கத்தை அறிந்து கொள்வார்கள். (அதன் அடிப்படையில்) அவர்கள் செய்கின்ற வணக்கத்தை நாங்களும் அப்படியே செய்வோம்.
“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக்க லக்” என்ற அல்லாஹ்வை ஒருமைப்படுத்தும் தல்பியாவை நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராமின் போது) சொன்னார்கள். மக்களும் இதைச் சொல்லிக் கொண்டு இஹ்ராம் கட்டினர். “லப்பைக் தல் மஆரிஜ் லப்பைக் தல் ஃபவாழில்” என்று கூடுதலாகவும் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதில் எதையும் மறுக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தல்பியாவை விடாது முழங்கிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் – லப்பைக்கல்லாஹும்ம – லப்பைக்க பில் ஹஜ் என்று உரத்துக் கூறினோம். நாங்கள் ஹஜ்ஜையன்றி வேறெதனையும் மனதில் உறுதி கொண்டிருக்கவில்லை. ஹஜ்ஜுடன் நாங்கள் உம்ராவைக் கலக்கவில்லை. நாங்கள் (ஹஜ்ஜுடன் சேர்த்து) உம்ரா செய்வதை அறிந்திருக்கவில்லை. (அதனால்) தனி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினோம்.
ஆயிஷா (ரலி) உம்ரா செய்வதற்காக வந்து கொண்டிருக்கையில் சரிப் என்ற இடத்தை அடைந்ததும் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது.
மக்காவில் நுழைதல்
முற்பகல் நேரம் உயரும் போது நாங்கள் மக்காவில் நுழைந்தோம். துல்ஹஜ் மாதம் நான்காம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்களுடன் கஅபாவிற்கு (அருகில்) வந்தோம்.
அதன் பின் நபி (ஸல்) அவர்கள் பள்ளியின் வாசலுக்குச் சென்று தமது வாகனத்தைப் படுக்க வைத்து விட்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள்.
கஅபாவின் மூலையை – ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டார்கள்.
பிறகு (கஅபாவை தமது இடது பக்கம் ஆக்கியவாறு) தமது வலது பக்கமாகச் சென்றார்கள். மீண்டும் அதன் பால் திரும்ப வரும் வரை மூன்று முறை வேகமாக நடந்தார்கள். நான்கு முறை அமைதியாக நடந்தார்கள்.பிறகு மகாம் இப்ராஹீமை நோக்கிச் சென்று, “வத்தஹிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா” என்று மக்களுக்குக் கேட்கச் செய்யும் விதமாக தமது குரலை உயர்த்திக் கூறினார்கள். தமக்கும் கஅபாவிற்கும் இடையில் மகாம் இப்ராஹீமை ஆக்கிய வண்ணம் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களிலும், குல்யா அய்யுஹல் காஃபிரூன்’ மற்றும் குல்ஹுவல்லாஹு அஹது’ ஆகிய அத்தியாயங்களை ஓதினார்கள்.
பிறகு ஜம்ஜமை நோக்கிச் சென்று அதிலிருந்து குடித்தார்கள். தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள். பிறகு கஅபாவின் மூலைக்கு வந்து முத்தமிட்டார்கள்.
ஸஃபா, மர்வாவில்…
ஸஃபா (செல்லும்) வாசல் வழியாக ஸஃபாவை நோக்கி வந்தார்கள். ஸஃபாவை நெருங்கியதும், “இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷஆரில்லாஹ்” என்று ஓதினார்கள். அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் நான் ஸஃபாவைக் கொண்டே துவக்குகின்றேன் என்று சொன்னார்கள். அதன் படி ஸஃபாவிலிருந்து (தமது ஓட்டத்தை) துவங்கும் விதமாக அதன் மீது ஏறி கஅபாவைப் பார்த்தார்கள்.
கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை மூன்று முறை ஒருமைப் படுத்தி தக்பீர் சொல்லிப் புகழ்ந்தார்கள்.
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு அன்ஜஸ வஃதஹு, வநஸர அப்தஹு, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு”
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையானவன் இல்லை. அவனுக்கு ஆட்சியதிகாரம் சொந்தமானது. அவனுக்கே புகழும் சொந்தம். அவனே உயிர்ப்பிக்கின்றான். அவனே மரணிக்கச் செய்கின்றான்.
அவன் அனைத்திலும் ஆற்றல் பெற்றவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் இல்லை. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுத்தான். அவன் தன் அடியாருக்கு உதவி செய்தான். (எதிரிகளின்) படைகளை அவனே தோற்கடித்தான்) என்று சொன்னார்கள். பிறகு இதற்கிடையே அவர்கள் துஆவும் செய்தார்கள். அவர்கள் இவ்வாறு மூன்று தடவை சொன்னார்கள்.
பிறகு இறங்கி மர்வாவை நோக்கி நடக்கலானார்கள். அவர்கள் இறங்கி பத்னுல்வாதியில் கால் வைத்தவுடன் ஓடலானார்கள். அவர்கள் மர்வாவில் கால் வைத்து ஏறத் துவங்கி மர்வாவை அடையும் வரை நடக்கலானார்கள். இறுதியாக மர்வாவுக்கு வந்து அதன் மீது ஏறி கஅபாவைப் பார்த்தார்கள்.ஸஃபாவில் செய்தது போன்றே மர்வாவிலும் செய்தார்கள்.
மாற்றல் உத்தரவு
மர்வாவில் ஏழாவதாக அமைந்த அவர்களது கடைசி ஸஈ முடிவுற்றதும், “மக்களே! இப்போது நான் அறிந்து கொண்ட (ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவும் செய்வது கூடும் என்ற) விபரத்தை முற்கூட்டியே அறிந்திருந்தால் நான் பலிப் பொருட்களைக் கொண்டு வராமல் இருந்திருப்பேன். (ஹஜ்ஜுக்குப் பதிலாக) அதை உம்ராவாக ஆக்கியிருப்பேன். எனவே உங்களில் பலிப் பிராணிகளைக் கொண்டு வராதவர் இஹ்ராமைக் களைந்து விட்டு இதை உம்ராவாக ஆக்கிக் கொள்வாராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இன்னோர் அறிவிப்பின் படி – நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள். கஅபாவில் தவாஃப் செய்யுங்கள், ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஈ செய்யுங்கள். முடியைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
(மக்காவில்)இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களாகத் தங்கிக் கொள்ளுங்கள். துல்ஹஜ் பிறை 8ம் நாள் அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். இதற்கு முன்னர் செய்ததை – முதலில் உம்ரா செய்து இஹ்ராமைக் களைந்து விட்டு மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்யும் – தமத்துஃ வகை* ஹஜ்ஜாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.)
இப்படி நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் மர்வாவின் அடியில் நின்று கொண்டிருந்த சுரகா பின் மாலிக் பின் ஜுஷ்அம் என்பார், “அல்லாஹ்வின் தூதரே! எங்களது உம்ரா, எங்களது இந்த (முதலில் உம்ரா செய்து இஹ்ராமைக் களைந்து விட்டு மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்யும்) தமத்துஃ வகை ஹஜ் இந்த ஆண்டில் மட்டும் தான் கடமையா? அல்லது இனி என்றைக்குமா?” என்று வினவினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி என்றைக்கும் தான் என்று காட்டும் விதமாக) தமது கைவிரல்களை ஒன்றை இன்னொன்றோடு கோர்த்துக் காட்டினார்கள். மேலும் “கியாமத் நாள் வரை ஹஜ்ஜில் உம்ரா நுழைந்து விட்டது. இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல! மாறாக என்றைக்கும் தான்! இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல! மாறாக என்றைக்கும் தான்!” என்று மூன்று முறை கூறினார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இப்போது தான் படைக்கப் பட்டிருக்கின்றோம் என்பது போல் (கருதி) எங்களுக்கு எங்கள் மார்க்கத்தை விளக்குங்கள். இன்றைய தினம் செய்யும் அமல் எந்த அடிப்படையில்? ஏற்கனவே எழுதுகோல் எழுதி முடிந்து போன விதியில் அடிப்படையிலா? அல்லது இனி நமக்கு நடக்கப் போகும் விஷயங்கள் அடிப்படையிலா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இனி நடக்கப் போகும் விஷயங்கள் அடிப்படையில்) அல்ல! ஏற்கனவே எழுதுகோல் எழுதி முடிந்து போன விதிகளின் அடிப்படையில் தான்!” என்று பதிலளித்தார்கள்.
“அப்படியானால் அமல் ஏன் செய்ய வேண்டும்?” என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் அமல் செய்யுங்கள். ஏனெனில் ஒருவர் எதற்காகப் படைக்கப் பட்டிருக்கின்றாரோ அதை நோக்கி அவர் எளிதாக இழுத்துச் செல்லப் படுவார்” என்று பதிலளித்தார்கள்.
நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டதும் பலிப்பிராணிகளைப் பலியிடுமாறும், பலிப்பிராணி இல்லாதவர் (மக்காவில்) மூன்று நோன்புகளும் ஊர் திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும் என்றும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். எங்களில் உள்ள ஆட்கள் பிராணிகளைப் பலி கொடுப்பதில் கூட்டு சேர்ந்து கொண்டனர். எங்களில் ஏழு பேர்கள் ஓர் ஒட்டகத்திற்கு என்ற கணக்கில் பங்கு சேர்ந்தோம்.
(நபி (ஸல்) அவர்கள், இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள் என்று சொன்னதும், இஹ்ராமின் போது தடுக்கப் பட்ட காரியங்கள் எத்தனையோ உள்ளன. அதனால்) எந்தக் காரியத்திலிருந்து நாங்கள் விடுபடுவது? என்று கேட்டோம். எல்லாக் காரியங்களிலிருந்தும் விடுபடுதல் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(இஹ்ராமிலிருந்து விடுபட்டு புனித பூமியிலேயே மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடலாம் என்ற) இந்த அனுமதி எங்களுக்குப் பெரும் கஷ்டமாக ஆனது. இதன் காரணமாக எங்கள் உள்ளங்கள் நெருக்கடிக்கு உள்ளாயின.
பத்ஹாவில் தங்குதல்
நாங்கள் (தங்குவதற்காக பொடிக் கற்கள் நிறைந்த ஓடைப் பகுதியான) பத்ஹாவுக்குச் சென்றோம். “இன்றைய தினம் என் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளது” என்று எங்களுடன் உள்ளவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஹஜ்ஜை மட்டுமே நாடி வேறெதனையும் குறியாகக் கொள்ளாமல் ஹாஜிகளாகப் புறப்பட்டு வந்தோம். நமக்கும் நாம் அரஃபா செல்வதற்கும் நான்கு அல்லது ஐந்து இரவுகள் இருக்கின்றன. அதற்குள்ளாக நம்முடைய மனைவியரிடம் இல்லறத்தில் ஈடுபடும்படி நமக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு விட்டார்களே! பெண்களிடம் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு இந்திரியத் துளிகள் சொட்டிய (பின் குளித்து முடித்த) வண்ணம் நாம் அரஃபாவிற்கு வருவது முறையாகுமா? என்று நாங்கள் கூறிக் கொண்டோம்.
(மேற்கண்ட இந்தச் செய்தியை அறிவிக்யில், ஜாபிர் (ரலி) கையசைத்தவாறு கூறிய அந்தக் காட்சியை இப்போதும் நான் நேரில் பார்ப்பது போல் உள்ளது என்று அறிவிப்பாளர் கூறுகின்றார்) நாம் ஹஜ் என்று குறிப்பிட்டு வந்திருக்கும் போது இதை எப்படி (முதலில் உம்ரா செய்து இஹ்ராமைக் களைந்து விட்டு மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்யும்) தமத்துஃ வகை ஹஜ் ஆக ஆக்கிக் கொள்ள முடியும்? என்றும் நபித்தோழர்கள் வினவினர்.
(நாங்கள் பேசிக் கொண்ட) இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இது அவர்களுக்கு வஹீ மூலம் தெரிந்ததா? அல்லது மக்கள் மூலமாகவே தெரிந்ததா? என்று எங்களுக்குத் தெரியாது.ஆணைக்குக் கட்டுப் படுமாறு ஆற்றிய உரை
நபி (ஸல்) அவர்கள் இதைத் தெரிந்து கொண்டதும் எழுந்து நின்று உரையாற்றுகையில் அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.
“மக்களே! நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி என்னிடமே பாடம் நடத்துகின்றீர்களா? உங்களில் அல்லாஹ்வை மிக அஞ்சுபவன் நான்! உங்களில் மிக உண்மை சொல்பவன் நான்! உங்களில் மிக நல்லவன் நான் என்பதை நன்றாகவே நீங்கள் அறிந்து வைத்திருக்கின்றீர்கள். உங்களுக்கு நான் உத்தரவிடுவதை அப்படியே செய்யுங்கள். நான் மட்டும் பலிப்பிராணிகளைக் கொண்டு வரவில்லை என்றால் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டது போல் நானும் விடுபட்டிருப்பேன்.
ஆனால் (நான் பலிப்பிராணிகளுடன் வந்துள்ளதால் அந்த) பலிப்பிராணிகள் உரிய இடத்தில் போய் சேரும் வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபட முடியாது. இப்போது நான் தெரிந்து கொண்டிருக்கும் (ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவும் செய்வது கூடும் என்ற) செய்தி முற்கூட்டியே தெரிந்திருந்தால் நான் பலிப் பிராணிகளைக் கொண்டு வந்திருக்க மாட்டேன். எனவே இஹ்ராமிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்.
(இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்களை இப்போது செய்து கொள்ளுங்கள்)” என்று குறிப்பிட்டார்கள்.
நாங்கள் எங்கள் மனைவியரிடம் இல்லறத்தில் ஈடுபட்டோம். நறுமணம் பூசிக் கொண்டோம். நாங்கள் எங்களது (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்து கொண்டோம். நாங்கள் செவியுற்றோம். (நபியவர்களின் கட்டளைக்குக்) கட்டுப்பட்டோம்.
நபி (ஸல்) அவர்களும், தம்முடன் பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தவர்களும் தவிர மற்ற மக்கள் அனைவரும் முடியைக் குறைத்துக் கொண்டு இஹ்ராமைக் களைந்தனர்.அவ்வாறு பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தவர்களின் பட்டியலில் நபி (ஸல்) அவர்களையும் தல்ஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாருமில்லை.
யமனிலிருந்து அலீ (ரலி) வருகை
அலீ (ரலி) அவர்கள் யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்குரிய (பலிப் பிராணிகளான) ஒட்டகங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள்.
அப்போது ஃபாத்திமா (ரலி) இஹ்ராமைக் களைந்து, தலை சீவி, வண்ண ஆடை அணிந்து கண்ணுக்கு மை தீட்டியிருந்தார்கள். இந்த நிலையில் அவரைக் கண்ட அலீ (ரலி), அந்தச் செயல் தமக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரிடம் தெரிவித்து, “உன்னை இவ்வாறு செய்யக் கட்டளையிட்டவர் யார்?” என்று கேட்டார். “என்னுடைய தந்தை தான் இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டார்கள்” என்று ஃபாத்திமா (ரலி) கூறினார்கள்.இந்நிகழ்ச்சியை அலீ (ரலி) அவர்கள் இராக்கில் இருக்கும் போது சொல்லிக் கொண்டிருந்தார்கள். (அப்போது அவர் குறிப்பிட்ட விபரம் வருமாறு) ஃபாத்திமா (ரலி) இவ்வாறு பதிலளித்ததும் அவர் செய்த இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாகவும், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஃபாத்திமா (ரலி) குறிப்பிட்ட கட்டளை தொடர்பாக விளக்கம் கேட்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். ஃபாத்திமா செய்த செயல் தனக்குப் பிடிக்கவில்லை என்று அவர்களிடம் தெரிவித்த போது என்னுடைய தந்தை தான் இவ்வாறு செய்யும் படி கட்டளையிட்டதாக அவர் பதில் சொல்கின்றார் என்று நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், “ஃபாத்திமா உண்மை சொன்னார். ஃபாத்திமா உண்மை சொன்னார். ஃபாத்திமா உண்மை சொன்னார். நான் தான் ஃபாத்திமாவுக்கு அவ்வாறு கட்டளையிட்டேன்” என்று பதில் சொன்னார்கள்.
“நீ ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியும் போது என்ன சொன்னாய்?” என்று அலீ (ரலி)யிடம் விசாரித்தார்கள். அதற்கு அலீ (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தது மாதிரியே நானும் ஹஜ் செய்கின்றேன் என்று கூறினேன்” என்று பதிலளித்தார்.
“என்னுடன் பலிப் பிராணிகள் உள்ளன. (நான் இஹ்ராமைக் களையாமல் இருப்பது போல்) நீ இப்போது இஹ்ராமைக் களையாமல் இருந்து விடு” என்று சொன்னார்கள்.
யமனிலிருந்து அலீ (ரலி) கொண்டு வந்த பலி ஒட்டகங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து கொண்டு வந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை மொத்தம் நூறாகும்.
ஆக, நபி (ஸல்) அவர்களும், இன்னும் யாரிடம் பலிப் பிராணிகள் இருந்தனவோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு முடியைக் குறைத்துக் கொண்டனர்.
இஹ்ராம் அணிந்தவர்களாக மினாவை நோக்கிப் பயணம்
துல்ஹஜ் பிறை 8 ஆனதும் மக்கா எங்கள் பின்புறமாக அமைந்திருக்க மினாவை நோக்கி மக்கள் சென்றனர். (அவர்கள் தங்கியிருந்த) பத்ஹாவிலிருந்து ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி)யிடம் சென்றார்கள். அப்போது அவர் அழுது கொண்டிருப்பதைக் கண்டதும், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். நான் இன்னும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
கஅபாவை தவாஃபும் செய்யவில்லை. இப்போது மக்கள் ஹஜ்ஜுக்காக சென்று கொண்டிருக்கின்றார்கள்” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இதை ஆதமின் பெண் மக்கள் மீது (இயற்கையாகவே) விதித்திருக்கும் விஷயமாகும். நீ குளித்து விட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டு ஹஜ் செய்! ஹஜ் செய்பவர் செய்யும் எல்லா வணக்கத்தையும் செய்! ஆனால் நீ தவாஃப் செய்யாதே! தொழாதே! அது போலவே தவாஃப் செய்யாமல் (மற்றும் தொழாமல்) ஹஜ்ஜுடைய மற்ற அனைத்து வணக்கங்களையும் செய்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிச் சென்று லுஹர், அஸர், மக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகியவற்றை மினாவிலேயே தொழுதார்கள்.
சூரியன் உதிக்கின்ற வரை கொஞ்ச நேரம் அங்கு தங்கினார்கள்.
கம்பளியால் அமைந்த கூடாரத்தை (அரஃபாவுக்கு அருகிலுள்ள) நமிராவில் அடிக்கும் படி உத்தரவிட்டார்கள்.அரஃபாவை நோக்கிப் பயணம்
(ஒன்பதாம் நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள். குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி* நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்! அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப் பட்டு தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள்.
*(குறைஷிகள் தங்களை ஹரமைப் பரிபாலணம் செய்யும் உயர் குலத்தார் என்று கருதிக் கொண்டு, மற்றவர்களைப் போல் அரஃபாவில் போய் தங்காமல் முஜ்தலிஃபாவிலேயே தங்கிக் கொள்வர். இதையே நபி (ஸல்) அவர்களும் செய்வார்கள் என்று எதிர்பார்த்தனர்)
சூரியன் சாயத் தொடங்கியதும், ஒட்டகத்தைக் கொண்டு வரும் படி கட்டளையிட்டார்கள். அது பயணத்திற்குத் தயார் ஆக்கப் பட்டவுடன் அதில் பத்னுல்வாதிக்கு வந்தார்கள். (பத்னுல்வாதி என்பது உர்னா என்ற ஓடையாகும். ஆனால் இது அரஃபா எல்லையில் இல்லை)
அரஃபா பேருரை
இப்போது மக்களுக்கு உரையாற்றத் துவங்கி அவர்கள் கூறியதாவது:
(புனித மிக்க) இந்த ஊரில், இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அது போல் உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் (உங்கள் மானம், மரியாதைகளும்) புனிதம் வாய்ந்தவையாகும். அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப் படுகின்றன. அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப் படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும்.
ரபீஆ அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப் படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப் படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்) அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது. பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். (திருமணம் முடியுங்கள் என்ற) அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள்.
நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும் உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். உங்களிடம் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போதெல்லாம் வழி கெடவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்.
“நீங்கள் (மறுமையில்) என்னைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் என்ன (பதில்) சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். “உங்கள் தூதுச் செய்தியை எடுத்து வைத்து விட்டீர்கள். அதை நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் சமுதாயத்திற்கு நன்மையை நாடினீர்கள். உங்கள் மீதுள்ள பொறுப்பை ஆற்றி விட்டீர்கள் என்று நாங்கள் சான்று பகர்வோம்” என்று பதிலளித்தனர்.
அப்போது அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தியும் பின்னர் அதை மக்களை நோக்கி தாழ்த்தியும், “யா அல்லாஹ்! நீயே சாட்சி! யா அல்லாஹ்! நீயே சாட்சி!” என்று சொன்னார்கள்.சேர்த்துத் தொழுதல் மற்றும் அரஃபாவில் தங்குதல்
பிறகு பிலால் (ரலி) ஒரே ஒரு முறை பாங்கு சொன்னார். பிறகு இகாமத் சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுதார்கள். பிறகு பிலால் இகாமத் சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் அஸரைத் தொழுதார்கள்.இவ்விரண்டிற்கும் இடையே வேறெதையும் அவர்கள் தொழவில்லை.
பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் ஏறி (ஜபல் ரஹ்மத்திற்கு அருகிலுள்ள) இடத்திற்கு வந்தார்கள். ஒட்டகத்தின் வயிற்றுப் பகுதியை (ஜபல் ரஹ்மத்தின் அடிவாரத்தில் உள்ள) பாறைகளை நோக்கியும், நடந்து செல்லும் மக்கள் கூட்டத்தை தமக்கு முன்னாலும் ஆக்கியவாறு கிப்லாவை நோக்கி நின்றார்கள்.சூரியன் மறையும் வரை நின்று கொண்டிருந்தார்கள். அப்போது சூரியனின் மஞ்சள் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கி அதன் முழு வட்டமும் மறைந்து விட்டிருந்தது.
“நான் இந்த இடத்தில் நின்றேன். (இங்கு தான் எல்லோரும் நிற்க வேண்டும் என்று கருதி விடக் கூடாது) அரஃபா முழுவதுமே (தங்கி) நிற்கும் இடமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உஸாமா பின் ஸைதை தமக்குப் பின்னால் உட்கார வைத்திருந்தார்கள்.
அரஃபாவிலிருந்து கிளம்புதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக (அரஃபாவிலிருந்து) திரும்பினார்கள். (ஒட்டகம் விரைந்து செல்லக் கூடாது என்பதற்காக) ஒட்டகத்தின் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தார்கள். அதன் விளைவாக அதனுடைய தலை, ஓய்வுக்காக காலை மடக்கி வைக்கும் பகுதியைத் தொட்டது. “மக்களே! அமைதி! அமைதி!” என்று தமது வலது கையின் உள்ளங்கை வானத்தை நோக்கி அமைந்திருந்தவாறு சைகை செய்தார்கள்.திட்டுத் திட்டாக அமைந்திருக்கும் மணல் திட்டுக்கு அவர்கள் வரும் போது ஒட்டகம் ஏறுகின்ற வரை அதன் கடிவாளத்தைத் தளர்த்தினார்கள்.
முஜ்தலிஃபாவில் இரவு தங்குதல் மற்றும் சேர்த்துத் தொழுதல்
இவ்வாறு அவர்கள் முஜ்தலிஃபாவை அடைந்ததும் அங்கு ஒரு பாங்கு இரண்டு இகாமத்துகள் சொல்லப்பட்டு மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.
அவ்விரு தொழுகைகளுக்கு இடையே வேறெதையும் தொழவில்லை.
பிறகு ஃபஜ்ர் உதயமாகின்ற வரை ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார்கள்.
ஃபஜ்ர் நேரம் தெளிவானதும் ஒரு பாங்கு, ஒரு இகாமத்தைக் கொண்டு ஃபஜ்ர் தொழுதார்கள்.
மஷ்அருல் ஹராமில் நிற்குதல்
பிறகு ஒட்டகத்தில் அமர்ந்து மஷ்அருல் ஹராமுக்கு வந்தார்கள். அதன் மீது ஏறினார்கள்.கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். தக்பீர் சொன்னார்கள். “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு” என்று கூறினார்கள்.காலை நன்கு வெளுக்கின்ற வரை நின்றார்கள்.
“இந்த இடத்தில் நான் நின்றிருக்கின்றேன். முஜ்தலிஃபா முழுவதும் நிற்கக் கூடிய இடமாகும்” என்று சொன்னார்கள்.
முஜ்தலிஃபாவிலிருந்து கல்லெறியச் செல்லுதல்
சூரியன் உதிப்பதற்கு முன்னால் அமைதியான நிலையில் முஜ்தலிஃபாவிலிருந்து கிளம்பினார்கள்.தமக்குப் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸை அமர்த்தி வைத்திருந்தார்கள். அவர் அழகிய முடியுடையவராகவும் வெள்ளை நிறம் கொண்டவராகவும் கவர்ச்சியானவராகவும் இருந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செல்லும் போது அவர்கள் அருகே பெண்கள் கடந்து சென்றனர். ஃபழ்ல் பின் அப்பாஸ் அந்தப் பெண்களைப் பார்க்க முற்பட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை ஃபழ்லின் முகத்தில் வைத்து அதை மற்றொரு பக்கம் திருப்பினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பக்கத்திலிருந்து கையை மாற்றிக் கொண்டு வந்து ஃபழ்ல் பின் அப்பாஸின் முகத்தில் வைத்து அந்தப் பகுதியிலிருந்து அவர் பார்க்காதவாறு திருப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவ்வாறு பத்ன் முஹஸ்ஸிர் என்ற இடத்தை அடைந்ததும் சற்று வேகமாகச் சென்றார்கள்.அமைதியாகச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.கல் எறிதல்
பிறகு ஜம்ரத்துல் குப்ரா (கல்லெறியும் பெரிய இடத்தை) நோக்கிச் செல்லும் மையப் பாதையில் சென்று மரத்திற்கு அருகில் உள்ள கல்லெறி இடத்திற்கு வந்தார்கள்.
முற்பகல் நேரத்தில், அதில் சுண்டி விடும் அளவிற்குள்ளான ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல் எறியும் போதும் தக்பீர் சொன்னார்கள்.
பத்னுல் வாதி என்ற இடத்திலிருந்து (ஜம்ரத்தில் உகபாவில்) வாகனத்தில் இருந்த வண்ணம் (அவ்வாறு) கல்லெறியும் போது, “உங்களது ஹஜ் மற்றும் உம்ரா வணக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த எனது ஹஜ்ஜுக்குப் பிறகு ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.நஹ்ருடைய (10ம்) நாளைக்குப் பிறகு தஷ்ரீக் (எனும் 11, 12, 13 ஆகிய) நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு கல்லெறிந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருக்கையில் அவர்களை சுரக்கா பின் மாலிக் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதரே! இது எங்களுக்கு மட்டும் உரியதா? அல்லது இனி எல்லோருக்கும் பொதுவானதா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது இனி என்றைக்கும் (எல்லோருக்கும்) உரியதாகும் என்று பதிலளித்தார்கள்.
பலியிடுதலும் மழித்தலும்
பிறகு பலியிடுமிடத்திற்கு திரும்பிச் சென்று 63 ஒட்டகங்களை தமது கையால் அறுத்தார்கள்.மீதமுள்ளவற்றை அலீ (ரலி)யிடம் கொடுத்ததும் அவர்கள் அதை அறுத்தார்கள். தமது பலிப் பிராணிகளில் அலீ (ரலி) அவர்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டார்கள்.
(அறுக்கப் பட்ட) ஒவ்வொரு ஒட்டகத்திலிருந்தும் ஒரு துண்டை கொண்டு வரச் செய்தார்கள். அவை ஒரு சட்டியில் போடப் பட்டு சமைக்கப் பட்டது. அதன் இறைச்சியை அவ்விருவரும் சாப்பிட்டு, அதன் ஆனத்தையும் இருவரும் குடித்தனர்.
தமது மனைவியர் சார்பில் ஒரு மாட்டைப் பலியிட்டார்கள். (ஆதாரம் புகாரி-5122)
நாங்கள் ஒட்டகத்தை அறுத்தோம். ஒட்டகம் (ஒவ்வொரு) ஏழு பேர்கள் சார்பில் அறுக்கப் பட்டது. அதுபோல் மாடும் (ஒவ்வொரு) ஏழு பேர்கள் சார்பில் அறுக்கப் பட்டது. நாங்களும் (அது போல்) ஒட்டகத்தில் ஏழு பேர்களாகக் கூட்டு சேர்ந்து கொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், “மாட்டில் கூட்டு சேரலாமா?” என்று கேட்கப் பட்ட போது, “(இந்த விஷயத்தில்) மாடும் (கூட்டுச் சேர்ந்து கொடுக்கப் படும்) பலிப் பிராணி தான்” என்று பதிலளித்தார்கள்.
நாங்கள் மினாவில் உள்ள மூன்று நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பலியிடப்பட்ட ஒட்டகம் மற்றும் மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடாமல் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்கு (சாப்பிட) அனுமதியளித்து, “சாப்பிடுங்கள், சேமியுங்கள்” என்று சொன்னார்கள். அது போன்று நாங்கள் சாப்பிட்டோம். மதீனா வரும் வரை சேமித்து வைத்தோம்.குற்றமில்லை! குற்றமில்லை!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலியிட்டு விட்டு, தலை முடியை மழித்துக் கொண்டார்கள். மக்கள் பலியிடும் வரை பலியிடும் தினத்தில் மினாவிலேயே இருந்தார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக செய்து விட்ட மற்றொரு செயலைப் பற்றி அவர்கள் வினவிய போதெல்லாம் அவர்கள், “குற்றமில்லை, குற்றமில்லை” என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.
அவ்வாறிருக்கையில் அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் பலியிடுவதற்கு முன்பு தலையை மழித்து விட்டேனே?” என்று கேட்டார். “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
வேறொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்” என்று வினவினார். “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
“நான் பலியிடுவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்”’ என்று வினவினார். “நீ இப்போது பலியிடு, குற்றமில்லை” என்று கூறினார்கள்.
பிறகு வேறொருவர் வந்து, “கல்லெறிவதற்கு முன்னர் பலியிட்டு விட்டேன்” என்று வினவினார். “(இப்போது) கல்லெறி, குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “நான் இந்த இடத்தில் அறுத்திருக்கின்றேன். இந்த (இடத்தில் தான் அறுக்க வேண்டும் என்றில்லை) மினா முழுவதுமே அறுக்குமிடம் தான்” என்று சொன்னார்கள்.
மக்காவுடைய அனைத்து அகன்ற பாதைகளும் பாதை தான். பலியிடக்கூடிய இடம் தான். எனவே நீங்கள் உங்கள் கூடாரங்களிலிருந்தே அறுத்துக் கொள்ளுங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பத்தாம் நாள் பேருரை
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (10ம்) நாளில் உரையாற்றினார்கள். அப்போது, “எந்த நாள் மாபெரும் புனிதம் நிறைந்த நாள்?” என்று கேட்டார்கள். “இந்த நாள் தான்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். “எந்த மாதம் மாபெரும் புனிதம் நிறைந்த மாதம்?” என்று வினவினார்கள். “இந்த மாதம் தான்” என்று தோழர்கள் பதிலளித்தனர். “எந்த ஊர் மாபெரும் புனிதம் நிறைந்த ஊர்?” என்று வினவினார்கள். “இந்த ஊர் தான்” என்று தோழர்கள் பதிலளித்தனர். “(புனிதமிக்க) இந்த ஊரில், இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அது போல் உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும் புனிதம் வாய்ந்தவைகளாகும். நான் (தூதுச் செய்தியை) எடுத்துச் சொல்லி விட்டேனா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ஆம் என்றனர். “யா அல்லாஹ், நீயே சாட்சியாக இரு” என்று சொன்னார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் அமர்ந்து கஅபாவிற்கு வந்தார்கள். அனைவரும் தவாஃப் செய்தனர்.
(ஹஜ் கிரான் அடிப்படையில் இஹ்ராம் அணிந்த) அவர்கள் ஸஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையில் ஸஈ செய்யவில்லை.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் லுஹர் தொழுதார்கள்.
பின்னர் ஜம்ஜம் நீரை புகட்டிக் கொண்டிருந்த அப்துல் முத்தலிப் கிளையாரிடம் வந்து, “அப்துல் முத்தலிப் கிளையினரே, (தண்ணீரை) இறையுங்கள். (நானும் நீர் புகட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் நீர் புகட்டுவதைக் கண்டு இதையே வணக்கம் என்று கருதி மக்களும் போட்டி போட்டுக் கொண்டு நீர் புகட்டத் துவங்கி விடுவார்கள்) நீர் புகட்டுவதில் மக்கள் உங்களை மிகைத்து விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லையெனில் உங்களுடன் சேர்ந்து தண்ணீர் இறைத்திருப்பேன்” என்று சொன்னார்கள்.
அப்துல் முத்தலிப் கிளையினர் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வாளி தண்ணீர் கொடுத்தார்கள் அதிலிருந்து அவர்கள் பருகினார்கள்.
ஆயிஷா (ரலி) சம்பவத்தின் முழு விபரம்
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. தவாஃபைத் தவிர ஹஜ்ஜின் மற்ற அனைத்து வணக்கங்களையும் செய்தார்கள்.ஆயிஷா (ரலி) துப்புரவானதும் கஅபாவில் தவாஃப் செய்து ஸஃபா, மர்வாவில் ஸஈ செய்தார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் சேர்த்து முடித்து விட்டு இஹ்ராமைக் களைந்து விட்டாய்” என்று (ஆயிஷா-ரலி-யிடம்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் கொண்டு செல்கையில் நான் உம்ராவை மட்டும் கொண்டு செல்ல வேண்டுமா?” என்று ஆயிஷா (ரலி) வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களுக்குக் கிடைக்கின்ற (ஹஜ், உம்ராவுக்கான) நன்மை உனக்கும் உண்டு” என்று சொன்னார்கள்.“நான் (உம்ராவுக்கான) தவாஃப் செய்யவில்லை. அதற்குள் ஹஜ்ஜை முடித்து விட்டேனே என்று என்னுள் ஓர் உறுத்தல் இருந்து கொண்டிருக்கின்றது” என்று ஆயிஷா (ரலி) சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மென்மையான மனிதராகத் திகழ்ந்தார்கள். ஆயிஷா (ரலி) எதையும் விரும்பினால் (மார்க்கத்துக்கு முரணில்லாத) அவரது விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்வார்கள்.(ஆயிஷா (ரலி)யின் சகோதரரிடம்) “அப்துர்ரஹ்மானே! ஆயிஷாவை அழைத்துச் சென்று தன்யீமிலிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அழைத்து வா” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே ஆயிஷா (ரலி) ஹஜ்ஜுக்குப் பின் உம்ரா செய்த வண்ணம் (மக்கா) வந்தார்கள். இது தஷ்ரீக் (எனும் 11, 12, 13 ஆகிய) நாட்களின் கடைசி இரவில் நடந்ததாகும்.
மக்கள் நபி (ஸல்) அவர்களை நெரிசலில் சிக்க வைத்த காரணத்தால் மக்கள் தம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் (மக்களை) கண்காணிப்பதற்காகவும், மக்கள் தம்மிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்பதற்காகவும் தமது கைத்தடியால் ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு(முத்தமிட்டு)க் கொண்டு தமது வாகனத்தில் அமர்ந்தவாறே தவாஃப் செய்தார்கள்.
ஒரு பெண் தன்னுடைய குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிக் காட்டி, “அல்லாஹ்வின் தூதரே! இந்தக் குழந்தைக்கும் ஹஜ் இருக்கிறதா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம், உனக்குக் கூலி உண்டு” என்று பதிலளித்தார்கள்.
எம். ஷம்சுல்லுஹா(THANKS 2 TNTJ.NET)
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Saturday, November 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன