(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, November 3, 2009

ஸூபித்துவம் என்றால் என்ன ?...

ஸூபித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான வரைவிலக்கணத்தை ஸூபித்துவ வாதிகளின் நூல்களில் கூட விரிவாகக் காணமுடியவில்லை . எனினும் அவர்களது கருத்துக்கள் சிந்தனைப் போக்குகளிலிருந்து இவ்வாறு விளங்க முடிகின்றது.
ஸூபித்துவம் என்பது 'இஸ்லாமியப் போர்வையில் உருவாக்கப்பட்ட யூத .கிருஷ்த்தவ, கிரேக்கம் போன்ற மாற்று மத தத்துவங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட சித்தார்த்தங்களை அடிப்படையாக வைத்து துறவரம் பூண்டு ஆத்மீகவழி நடப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு கொள்கைக்கே ஸூபித்துவம் எனப்படும்' இதன் வழி நடப்பவர்கள் ஸூபிகள் என அழைக்கப்படுவார்கள்.


எனவே பாமர மக்கள் நம்புவதைப் போன்று உலக ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி ஆத்மீகப் பாதையின் பக்கம் அழைக்கும் ஒரு அமைப்பே ஸூபித்துவம், ஸூபிகள் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற இறைநேசச் செல்வர்கள் என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான மூடத்தனமான கருத்தாகும் . ஸூபித்துவம் பற்றி எடுத்துக் கூறிய தமிழ் நூல்கள் கூட இவர்களின் யதார்த்த நிலை பற்றிப் பெரிதாக ஆராயாது இதைப் பற்றி நல்லபிப்பிராயம் தெரிவித்திருப்பதன் விளைவே இந்த இறை மறுப்புச் சித்தாந்தம் இன்று பாமர மக்கள் மத்தியில் பரவி நன்மதிப்பைப் பெற்றுள்ளது . எனவே இதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதற்கும் நபிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . மாறாக நபியவர்கள் கூறியது போல் சீரிய நபி வழியை விட்டும் நெறி தவறிய வழிகெட்ட கூட்டங்களில் மிகமிக வழிகெட்ட கூட்டத்தினரே இந்த ஸூபித்துவவாதிகள் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும் .



ஸூபித்துவத்தின் தோற்றம்

இவ்விடத்தில் முக்கியமான ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது அல்லாஹ்வின் பகிரங்க விரோதியான ஷைத்தான் மனித சமூகத்தை நேர்வழியை விட்டும் திசை திருப்பி நரகத்தில் வீழ்த்துவதற்காக இரண்டு விதமான யுக்திகளைக் கையாள்வான். ஓன்று இஸ்லாமியக் கோட்பாடுகள் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில் வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி வெளியேற்றி பாவச் செயல்களில் ஈடுபடச் செய்து வழிகெடுத்து விடுவான். கொஞ்சம் இறை பக்தி ஆத்மீகப் பற்று, வணக்க வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவேரை வழிகெடுப்பதற்கு மற்றொரு வழிமுறையைக் கடைப் பிடிப்பான் . அதாவது அவர்களின் மார்க்க அறிவின்மையைப் பயன்படுத்தி இஸ்லாத்தில் இல்லாத , இஸ்லாம் தடுத்த விடயங்களை – அவைதான் இஸ்லாமிய அனுஷ்ட்டானங்கள் என நம்ப வைத்து அதன் வழியில் நடக்க வைத்து வழிகெடுத்து விடுவான் . இந்த வகையில் ஷைத்தானால் சூழ்ச்சி செய்யப்பட்டு ஆத்மீகத்தின் பெயரால் வழிகெடுக்கப்பட்டவர்களே ஸூபித்துவ வாதிகள் எனும் உண்மை ஆரம்ப கால ஸூபிகளில் வரலாற்றைப் படிக்கும் போது தெளிவாகும் .

உண்மையைச் சொல்லப் போனால் ஸூபித்துவ வாதிகள் தமக்கு இருப்பதாக வாதிடும் மறைவான அறிவு, கஸ்பு, தரீக்கத், ஹக்கீக்கத், மஃரிபத் ஞானம், ஜத்பு ( தன்னை மறந்த நிலை), பனாஃ (கடவுளோடு சஞ்சரித்தல்) இவை போன்ற அனைத்து விவகாரங்களும் இவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தி இவர்களை வழி கெடுப்பதற்காக இவர்களின் சிந்தனையில் ஏற்படுத்தும் குழப்பங்களேயாகும் . இவையனைத்தும் அவனின் மாயாஜால யுக்திகளே என்பதை முதலில் தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


சரி விடயத்துக்கு வருவோம்.
ஸூபித்துவம் எப்போது ஆரம்பமானது என்று ஆராயும் போது நபி (ஸல்) அவாகளின் காலத்திலோ அவர்கள் உருவாக்கி விட்டுச் சென்ற ஸஹாபாச் சமூகத்தினர் மத்தியிலோ, அதன் பின் சிறந்த காலத்தினரென நபியவர்கள் விதந்துரைத்த தாபியீன்களது காலத்திலோ இவ்வாறான ஒரு வாசகமே உபயோகத்தில் இருந்ததில்லையென்று அடித்துச் சொல்ல முடியும் . ஆனால் நபியவர்களின் காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் கூட இன்றைய வழிகெட்ட ஸூபிகள் கொண்டுள்ள கருத்துக்களும், சித்தாந்தங்களும் அக்கால யூத, கிறிஸ்த்தவ, இந்து, கிரேக்க, யூனானிய தத்துவங்களில் நிறைந்து காணப்பட்டதையும், அவை அந்தந்த சமூகத்தில் உள்ள ஒரு பிரிவினரிடம் செல்வாக்குப் பெற்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்ததையும் தெளிவாக அறிய முடியும்.


எனினும் ஆரம்ப கட்டமாக இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் நபியவர்கள் ஏற்கனவே கூறி வைத்தது போல் பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்பட்ட வேளை இஸ்லாமிய சமூகத்தில் வாழ்ந்த சில நல்ல மக்கள் கூட இப்பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி எவற்றிலுமே சம்பந்தப்படாமல் வாழமுற்பட்டது உண்மை . ஆனால் அவர்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய வரையறைக்குள் இருந்தார்கள் . இஸ்லாம் துறவரத்தைப் போதிக்கவில்லை . அதை எதிர்க்கின்றது .ஆனால் அதேவேளை உலக மாயைகளில் அதன் ஆசாபாசங்களில் வீழ்ந்து அதன் அலங்காரங்களில் மயங்கி தனது மறுமை வாழ்வை அழித்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கின்றது .


அல்குர்ஆன் கூறுகின்றது ...


اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الأَمْوَالِ وَالأَوْلادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرّاً ثُمَّ يَكُونُ حُطَاماً وَفِي الآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ ( الحديد 20)


அறிந்துகொள்ளுங்கள்!!. இவ்வுலக வாழ்க்கையானது வீண்விளையாட்டும், கேளிக்கையும், ஆடம்பர - அலங்காரமும், செல்வத்தையும் பிள்ளைகளையும் வைத்துப் பெருமையடித்துக் கொள்வதுமேயன்றி வேறில்லை . எப்படி ஒரு மழையின் மூலம் பயிர்கள் செழித்து வளர்வது கண்டு விவசாயிகள் ஆச்சரியப்பட்ட வேளை பின்னர் அது காய்ந்து மஞ்சள் நிறமாகி பின் சருகாகி விடுகின்றதோ .(இவ்வாறுதான் உலக வாழ்க்கையும்) . மறுமையில் (இவ்வுலகில் தீமை புரிந்தோருக்கு) மிகக் கடுமையான வேதனையும், (நல்லோருக்கு) அவனது கருனையும் மன்னிப்பும் காத்திருக்கின்றன. இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை . (ஸூரா அல்ஹதீத் : 20 )

நீ உலக வாழ்வில் ஒரு வழிப்போக்கனைப் போன்று அல்லது அநாதரவானவனைப் போன்று வாழ்ந்து கொள். எனக்கும் இவ்வுலக ஆடம்பரத்திற்கும் என்ன சம்பந்தம் ? நான் இளைப்பாறுவதற்காக ஒரு மரநிழலில் தங்கியிருக்கும் வழிப்போக்கனைப் போன்றே இவ்வுலகில் வாழ்கின்றேன் என் நபியவர்கள் இப்னு உமர் ( றழி )அவர்களுக்கு உபதேசித்திருக்கின்றார்கள் .


இப்னு உமர் அடிக்கடி இப்படிக் கூறுவார்கள் ... காலையில் நீ விழித்தெழுந்தால் மாலை வரை உயிரோடிருப்போமென்று உறுதி கொள்ளாதே . மாலைப் பொழுதை அடைந்து விட்டால் மறுநாள் காலை விழித்தெழுவோமென உறுதி கொள்ளாதே . இவ்வுலகில் வைத்தே மறுமைக்குத் தேவையானதைச் சேகரித்துக் கொள் . ( ஆதாரம் : புகாரி 5937 திர்மிதி 2299 இப்னு மாஜா 4099 )

எனவே இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் உதுமான் (றழி) அவர்களது படுகொலைக்குப் பின் குழப்பங்களும் பிளவுகளும், அரசியல் அராஜகங்களும் தோன்ற ஆரம்பித்தபோது ஸூபித்துவம் என்ற பெயரில்லாவிட்டாலும் - முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அறிமுகமான ஒரு இறை பக்தி மிகு கூட்டத்தினர் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட, இஸ்லாம் போதித்த விடயங்களை மாத்திரம் சமூகத்தின் மத்தியில் முன்வைத்து மக்களை உலக ஆசையிலிருந்து விடுவித்து ஆத்மீகத்தின் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தனர் என்பது உண்மை . அதன் காரணமாகவே அக் காலப் பகுதியில் வாழ்ந்த உலமாக்கள் இமாம்கள் கூட இந்தப் பிரிவினருக்கு ஆதரவு நல்கியதும் உண்மை. ஆனால் காலப் போக்கிலேதான் அதாவது நபியவர்கள் சிறப்பித்துக் கூறிய மூன்று தலைமுறையினரின் காலத்தின் பின்னரே அன்னிய இந்து , கிரேக்க , யஹூதிய நச்சுக் கருத்துக்கள் , விஷமத்தனமான சிந்தனைகளையெல்லாம் பின்வந்த ஸூபிகள் அவர்களது நூல்களின் மொழிபெயர்ப்பிலிருந்து இரவல் பெற்று அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசி சமூகத்தின் மத்தியில் ஸூபித்துவம் எனும் பெயரில் உலவ விட்டு விட்டார்கள். தாம் கோர்வை செய்த நூற்களிலும் இந்த சிந்தார்த்தங்களை விபரித்து அதற்கு உரமூட்டும் விதமாக ஒரு சில குர்ஆன் வசனங்களையும் , நபி மொழிகளையும் அவற்றின் விளக்கத்தைத் திரிபுபடுத்திக் கூறி இந்த நச்சுக் கருத்துக்களும் அல்குர்ஆன் ஹதீதுகளில் கூறப்பட்டவைகள்தான் எனப் பாமரர்களையும் நம்பச் செய்து விட்டார்கள் .

இதன் பின்பு வாழையடி வாழையாக இந்த வழிகெட்ட கொள்கையைத் தத்தெடுத்த ஸூபித்துவ வாதிகள் அதிலுள்ள தவறான வழிகெட்ட சித்தார்த்தங்களை நியாயப்படுத்தி அதற்கு வலுவூட்டும் விதமாக குர்ஆன் ஹதீஸ் வசனங்களை வளைப்பதிலும் திரிபுபடுத்துவதிலுமே தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள் . அதுமட்டுமின்றி அப்பாஸிய ஆட்சியில் அனேக கிரேக்க தத்துவ நூல்கள் அறபியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவற்றிலுள்ள தமது கொள்கைக்குச் சார்பான விடயங்களையும் அவற்றிலிருந்து திருடி அவற்றைத் தமது சொந்தக் கருத்துக்களாக மெஞ்ஞானம் என்ற பெயரில் பாமர மக்களுக்கும், தமது நூல்களிலும் அறிமுகப்படுத்தினார்கள் . இங்கு ஒரு கவலைக்குரிய விடயம் யாதெனில் உண்மையாகவே, சமூகத்தின் மத்தியில் மதிக்கப்பட்ட கஸ்ஸாலி போன்ற சில பேரறிஞர், உலமாக்கள் சிலரும் இந்த வழிகெட்ட சிந்தனையால் உந்தப்பட்டு – கவரப்பட்டு , சிந்தனைக் குழப்பத்துக்குற்பட்டு பின்னர் இக்கொள் கையை ஒருவகையில் அங்கீகரிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள் . அன்றைய முஸ்லிம் சமூகமே போற்றி வந்த இது போன்ற நல்ல உலமாக்களின் திடீர் மாற்றமே இவ்வழிகெட்ட கொள்கை மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு உரமாக இருந்தது என்பதே உண்மை . கஸ்ஸாலி இமாம் சிந்தனைக் குழப்பத்தில் இருந்த காலப்பகுதியில் கோர்வை செய்த 'இஹ்யா உலூமுத்தீன் ' எனும் ஆத்மீகப் பயிற்சிக்குரிய விடயங்களை விளக்கும் இந்த நூலில் இந்த ஸூபித்துவ அத்வைதக் கொள்கை பற்றி ஆங்காங்கே பகிரங்கமாகக் குறிப்பிட்டிருப்பதையும், இக்கொள்கையுள்ள வழிகேடர்களுக்கு இடம் பெற்ற ஷைத்தானிய சேட்டைகள் சிலதைக் ' கராமத் ' எனும் பெயரில் தம் நூலில் குறிப்பிட்டிருப்பதையும் அவதானிக்க முடியும். எனவே சமூக ஆதரவுள்ள இவரின் இச்செயல் சமூகத்தின் வழிகேட்டுக்கே பாலம் அமைத்துக் கொடுத்து விட்டது . 'இஹ் யா உலூமித்தீன்' மார்க்க அறிவுகளுக்கு உயிரூட்டல் எனும் பெயரில் வெளி வந்த இந்நூல் தூய இஸ்லாமிய மார்க்கத்தையே சாவடிக்கக் கூடியதாக - நஞ்சாக ஆகி விட்டதென்றால் மிகையாகாது .


எனவே அக்கால ஸூபித்துவ வாதிகளின் வழிகெட்ட சித்தாந்தங்களைச் சுருக்கமாகச் சொல்லப் போனால் இவர்கள் தமது அடிப்படைக் கொள்கைகளை நான்கு பிரிவுகளாக வகுக்கின்றனர் இஸ்லாத்தை இவ்வாறு கூறு போட்டு எந்த ஷிர்க்கையும் பித்அத்தையும் அழித்தொழிப்பதற்காக நபியவர்கள் அனுப்பப்பட்டார்களோ அந்தக் குறிக்கோளையே இடித்துத் தரைமட்டமாக்கும் வகையில் இஸ்லாத்தில் விளையாடியிருக்கின்றனர். அவர்களது வழிகெட்ட கொள்கைப்படி பின்வருமாறு இஸ்லாத்தைக்கூறு போட்டிருக்கின்றார்கள் .

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...