சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும்.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது . இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும். பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்வுக்கு சந்திரகிரகணம் என்று கூறப்படுகிறது.
சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் என்பவை அல்லாஹ் ஏற்படுத்திய பிரபஞ்ச விதிகளுக்கு அமைவாக வானில் ஏற்படும் நிகழ்வுகளாகும். இது புவியில் ஏற்படும் வேறு எந்த நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுபவையல்ல என்பதை இஸ்லாமும் , இன்றைய விஞ் விஞ்ஞானமும் உம்மைப்படுத்துகிறது.
‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் மரணித்தபோது சூரியக்கிரகணம் ஏற்பட்டது. அதனால் மக்கள் எல்லோரும் ‘(நபி (ஸல்) அவர்களின் மகனார்) இப்ராஹீமுடைய மரணத்திற்காகத்தான் இந்த சூரியக்கிரகணம் ஏற்பட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘சூரிய, சந்திர கிரகணங்கள் யாருடைய வாழ்விற்காகவோ (பிறப்பிற்காகவோ) இறப்பிற்காகவோ ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணங்களைக் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அவனைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்’அறிவிப்பவர்: அபூமுகீரா இப்னு ஷுஐபா (ரலி), நூல்: புகாரி.
அறிவியல் உண்மை இவ்வாறு இருக்க, சந்திர கிரகணம் என்பது சந்திரன் என்னும் கோளை ராகு என்னும் பாம்பு விழுங்குவதால் உருவாகிறது என்றும், கிரகணம் நீங்குதல் என்பது விழுங்கிய நிலவினை அப் பாம்பானது வெளியே உமிழும் நிகழ்ச்சி என்றும் கூறுவது அறிவியலுக்குப் புறம்பான ஒரு கற்பனையே என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்
இவையிரண்டும் ஏற்படும் போது முஸ்லீம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.உடனே அவர்கள் பள்ளிக்குச்சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப்பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்டநேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள்.
பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்டநேரம் – முதலில் ஓதியதை விடக குறைந்த நேரம் – ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள்.பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.(இரண்டு ரக்அத்களில்)நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.
(தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம்விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள்.பின்னர் ‘ இவ்விரண்டும் (சூரியன் ,சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.எவரது மரணத்திற்கோ ,வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள் ‘ என்று கூறினார்கள் .
அறிவிப்பவர்:ஆயிஷா (ரலி) நூல்கள்:புகாரீ 1046, முஸ்லிம் 1500
சூரிய,சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள் .கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.பள்ளியில் தொழவேண்டும். இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழவேண்டும்.இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.
ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்யவேண்டும்.
நிலை,ருகூவு,ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்.கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூறவேண்டும். மேலும் திக்ர் செய்தல் ,பாவமன்னிப்புத் தேடல் , தர்மம்செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபடவேண்டும் .
கிரகணம் ஏற்படும் போது அதற்கான தொழுகையை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. கிரகணம் எப்போது ஏற்படும் என்பதை இன்றைக்கு மிகத் துல்லியமாக முன்கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டாலும், அதில் மாத்திரம் நம்பிக்கை வைக்காமல் , அது ஏற்படுவதை நேரடியாக பார்த்த பின்னரே தொழுகை நிறைவேறப்பட வேண்டும் என்பது “நீங்கள் கிரகணங்களைக் கண்டால்” என்ற நபிமொழியில் இருந்தும், நபியவர்களின் நடைமுறையில் இருந்து தெளிவாகிறது.
இந்நடைமுறை நமது கிரகணத் தொழுகைகளின் போது கவனிக்கப்படுவதில்லை. மாறாக வானியல் கணிப்பீட்டை மாத்திரம் அடிப்படையாக வைத்து தொழுகை நிறைவேற்றப்படுவதால் சிலவேலைகளில் கிரகணம் ஏற்படுவதற்கு முன்னரும், கிரகணம் ஏற்பட்டது நமது கண்களுக்கு தென்படாத போதும் தொழுகை நிறைவேற்றப்படுவதை அவதானிக்க முடிகிறது. இது ஸுன்னாவுக்கு மாற்றமான நடைமுறையாகும்.
மூட நம்பிக்கைகள்:
பழங்காலந்தொட்டே மக்கள் மத்தியில் கிரகணம் குறித்த பல மூட நம்பிக்கைள் நிலவி வருகின்றன, இதில் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கான ஒன்றல்ல என்பது இன்றும் கூட கிரகணம் தொடர்பில் நிலவி வரும் மூட நம்பிக்கைகள் கட்டியம் கூறுகின்றன.
உலக வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளதை அறியமுடிக்கிறது, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் என்பவர் சூரிய, சந்திர கிரகணங்கள் எப்போது ஏற்படும் என்பதை முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, தமக்கு உணவுப் பொருட்களைத் தரமறுத்த செவ்விந்தியர்களிடம் ‘
நீங்கள் எங்களுக்குப் போதுமான அளவில் உணவளிக்காததால் குறிப்பிட்ட தினத்தில் சூரியன் இருட்டில் மறைந்து விடும்’ என்று அச்சுறுத்தினார். அவர் குறிப்பிட்ட தினத்தன்று சூரியக்கிரகணம் ஏற்படவே, அதைக் கண்டு பயந்து நடுங்கிய செவ்விந்தியர்கள் கொலம்பஸ்ஸிற்கு ஏராளமான உணவுப்பொருட்களையும், மற்ற பொருட்களையும் கொடுத்ததாக சரித்திர குறிப்புகள் கூறுகின்றன.
கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தைப் பார்த்தால், கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்து என்றும், கிரகணம் அன்று வெளியில் செல்லக்கூடாது, குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியே சென்றால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்றும் கிரகணங்களின் போது கர்ப்பிணிப் பெண்கள் ஏதாவது செயலைச் செய்து கொண்டிருந்தால், எந்தச் செயலைச் செய்கிறார்களோ, அதை ஒத்திருக்கின்ற குறைபாடுடைய குழந்தைப் பிறக்கும் என நம்புகின்றனர். இவையெல்லாம் அறிவுக்கு ஒத்துவராத வெறும் மூட நம்பிக்கைகளாகும்.
இதனால் அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி சில குறைபாடுகளுடன் குழந்தை பிறந்தாலும் அதை கிரகணத்தோடு தொடர்புபடுத்துவதும், அன்றைய தினம் கற்பிணிகளை அறைகளுக்குள்ளே அடைத்து வைக்கின்றனர்.
இதனை விஞ்சான ரீதியாக பார்க்கின்ற அறிஞ்சர்கள் கூட கிரகணங்களின் அதிகபட்ச பாதிப்பு என்பது அதை வெற்றுக் கண்ணால் பார்க்கும் போது அதன் கதிர்கள் கண்களைப் பாதிப்பதாகும், அதன் காரணமாகவே அதற்குரிய கருவிகளைக்கொண்டு பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதுவும் சூரிய கிரகணம் என்கின்ற போதுதான் கூடுதலாக ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சந்திர கிரகணம் இரவில் நிக்ழ்வதால் அதனைப் பார்ப்பதால் பாதிப்பு இல்லை எனவும் விஞ்சானிகள் குறிப்பிடுகின்றனர்.
வெளியில் சாதாரணமாக நடமாடும் மனிதர்களுக்கே பாதிப்பு இல்லை எனும் போது வயிற்றில் உள்ள குழந்தை பாதிக்கப்படும் எனக்கூறுவது அறியாமையாகும் என்கின்றனர்.
எனவே இவ்விரு நிகழ்வுக்காகவும் ஸுன்னாவை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் போது இது தொடர்பிலான மூடநம்பிக்கை களையும் களைவதற்கு உலமாக்கள் முயற்சிக்கவேண்டும்.
ஜசாகல்லாஹ் : அஷ்ஷேக் M.H.M.அஸ்பர் ஹசன் (பலாஹி)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன