அண்மையில் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி எனப் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி ஒன்று தொடங்க உள்ளதாகவும் அதில் பங்கு பெற அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தேர்ந்தெடுக்கப் படும் அதிர்ஷ்டசாலிகள் கோடீஸ்வரராகி விடுவார்கள் என்றும் விளம்பரம் செய்யப் பட்டு வருகிறது.
இது போன்ற தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் நடத்த எந்தத் தடையும் இந்தியாவில் இல்லை; தமிழகத்தில் லாட்டரிச் சீட்டுக்குத் தடை உள்ளது. இதற்கும் லாட்டரிச் சீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகூட எழக் கூடும். சம்பந்தம் இருக்கிறது.
நிகழ்ச்சி நடத்துபவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு பெறக் கூடியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை லாட்டரிச் சீட்டு முறையை ஒத்துள்ளதே அது. பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி எனில் நிகழ்ச்சியில் பங்குபெறக் கூடியவர்களை நுழைவுத் தேர்வு போன்றோ அல்லது வாய்மொழித் தேர்வு போன்றோ நடத்தித் தேர்வு செய்ய வேண்டுமேயன்றி பொது மக்களின் சட்டைப்பையில் உள்ள பணத்தைக் கொள்ளை அடிக்க முயலக்கூடாது. ஆனால் இங்கு நடப்பதோ முற்றிலும் தலைகீழ்.
நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுமெனில் அவர்கள் கேட்கும் சுண்டைக்காய் கேள்விகளுக்கு நாம் எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். நாம் அனுப்பும் ஒரு எஸ்.எம்.எஸ்ஸு க்கு நமக்குச் சேவை வழங்கும் தொலை தொடர்பு நிறுவனத்தைப் பொறுத்து ரூ 3 முதல் ரூ 6 வரை நாம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களில் 5% மக்கள் போட்டியில் பங்கு பெற வேண்டுமென்ற ஆசையில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால்கூட இந்தத் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ள தனியார் தொலைக் காட்சியும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் கல்லா கட்டி விடுவர்.
லாட்டரிச்சீட்டு வாங்கினால் கூட யாருக்காவது முதல் பரிசு கிடைக்கும் என்ற உறுதி உண்டு. இந்நிகழ்ச்சியில் அதுவும் இல்லை. நுழைவுத் தேர்வில் சுண்டைக்காய் கேள்வி வைத்து நமக்கு ஆசை காட்டும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சியில் அது போன்ற எளிதான கேள்விகளை வைத்து நமக்கு ஒரு கோடியைத் தூக்கித் தரப் போவதில்லை.
லாட்டரியைத் தடை செய்துள்ள தமிழக அரசு, மக்களிடம் ஆசையைக் காட்டி மோசம் செய்யும் வகையில் லாட்டரியின் மறு உருவமாக வந்துள்ள இது போன்ற நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்பதே அறிவார்ந்தோரின் அவா! தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?.
அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ .. இந்த மோசடியில் சிக்காமல் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ .. இந்த மோசடியில் சிக்காமல் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
Thanks : inneram.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன