(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, March 23, 2010

இன்ஷால்லாஹ் விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் தோழர் திருமா ?? !!

(21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல - தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர்.

அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது - அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் - சில ‘லெட்டர் பேட்’(தாவுத் மியன், கமுதி பஷீர்) அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.

மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி - சிறப்பாக இருந்தது.

பேரா.அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்கா விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தோழர் திருமா அவர்கள் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது.

கூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ‘மக்கா மஸ்ஜித்’ இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் - பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து - ’இஸ்லாத்தை’ விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார் என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ’நாரே தக்பீர்’ முழக்கம் ஒலித்தது..

கூட்டம் தொடங்கிய பிறகு எஸ்.எம்.பாக்கர் மேடைக்கு வந்தார். அவரின் வீராவேச உரை - பேரா.அப்துல்லாவிற்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு பதிலடியாக அமைந்தது. அவரது உரை கூடியிருந்தோரை பலமுறை ‘நாரே தக்பிர்’ முழங்க வைத்தது.

கூட்டத்தின் நடுவிலே மீண்டும் தோழர் திருமா விடமிருந்து மக்கா மஸ்ஜித் காஸிமிற்கு வந்த தொலைபேசி அழைப்பு மூலம் தான் மேடைக்கு வந்த பிறகு தான் பேரா.அப்துல்லாஹ் உரையாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஒருவழியாக தோழர்.திருமா வந்து சேர்ந்ததும் - மக்கா மஸ்ஜித் காஸிமி, பகிரங்கமாக அம்மேடையிலேயே அவருக்கு இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தார் - அதைக்கேட்ட கூட்டத்தினரில் பலருக்கு மகிழ்ச்சி - சிலரின் முகம் சுழித்தது.

திருமாவின் உரை - வழக்கம் போல ’கனீரென்று’ தெள்ளத் தெளிவாக அமைந்திருந்தது. இஸ்லாம் பற்றிய அவரின் அவரின் அறிதலும்-புரிதலும் கூட்டத்தில் பலரின் புருவத்தை உயரவைத்தது. மவ்லவி காஸிமின் அழைப்புக்கு பதிலளித்து உரையை தொடங்கியவர், இஸ்லாத்தை ஏற்க அவருக்கு தடைக் கற்களாக அவர் ஏற்றிருக்கும் கட்சித் தலைமை பொறுப்பை - தமிழக அரசியல் சூழ்நிலையை விவரித்தார்.

ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தலித்களின் முன்னேற்றத்திற்காக - விடுதலைக்காக இன்னமும் செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டார். அவசரப்பட்டு இஸ்லாத்தை தான் ஏற்பதன் மூலம் ‘தலித்களின்’ சமூக-பொருளாதார -சூழ்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றார்.

மேலும், அம்பேத்கார் புத்த மத்தை ஏற்றபோது - அவர் சார்ந்த ’மகர்’ சாதியினர் மட்டுமே பவுத்த மதத்திற்கும் நுழைந்ததாகவும் - பெரும்பான்மையான ‘தாழ்த்தப்பட்ட’ மக்கள் இன்னும் ‘வர்னாசிரம’ பிடியில் இருப்பதாகவும் குறிப்பிட்டு - தமிழகத்திலும் அவ்வாறு நடந்து விடக்கூடாது என்றார்.

உரையின் நிறைவாக இஸ்லாத்திற்குள் நுழைந்தால் ‘வெறும் ஐந்தாயிரம்-பத்தாயிரம் பேருடன்’ நுழையமாட்டேன் - தமிழகத்தில் இருக்கின்ற பறையர் -பள்ளர் - அருந்ததியர் என அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் நுழைவேன் என்று ‘பலத்த’ நாரே தக்பீர் முழக்கத்துக்கு இடையே முழங்கினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேரா.அப்துல்லாஹ், தமிழக நாத்திக-திராவிட அமைப்புகள் கிண்டலும் - கேலியும் கலந்து கண்டனம் தெரிவிக்கும் நேரத்தில், எதைபற்றியும் கவலைப்படாமல் தனக்கு வாழ்த்துரை வழங்க துணிவுடன் வந்த திருமாவுக்கு நன்றி தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்க தன்னை ’இறைவன்’ தூண்டியதாகவும் ‘முஸ்லிம்கள்’ எவரும் தூண்டவில்லை என்றார்.

தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக இருக்கும் ‘குழு மனப்பானமை பற்றி வருந்தினார்.குறிப்பாக, ரியாதிலிருந்து தாயகம் திரும்பிய அவரை வரவேற்க சென்ற முஸ்லிம்கள், அமைப்பு-இயக்க அடிப்படையில் தனித்தனி குழுக்களாக வந்திருந்ததையும் - எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த ‘இந்து முன்னனியினர்’ மட்டும் ஒற்றுமையாக ஒரே கூட்டமாக குழுமியிருந்ததையும் குறிப்பிட்டார்.(இஸ்லாமிய இயக்கங்கள் யோசிக்க கடமைபட்டவர்கள்)



தனக்கு மிரட்டல் விடுக்கும் பெரியார் திராவிட கழகத்தினருக்கு தனக்கேயுரிய பாணியில் பதிலளித்தார். நாத்திகம் பரப்பிய போது தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் - தூய இஸ்லாத்தை ஏற்றவுடன் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரைப்பற்றியும் அஞ்சுவதில்லை என்றார். ஏகத்துவத்தை பரப்பும் பணியை மேற்கொள்ள போவதாகவும் - அப்பணிக்காக தன்னை அனைத்து அமைப்பினரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

தோழமையுடன்,

(பிறைநதிபுரத்தான்)


நன்றி:பிறைநதிபுரத்தான்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...