(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, May 19, 2012

குழந்தைகளுக்கு வில்லனாகும் டிவி ரியாலிட்டி ஷோக்கள்!

தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பங்கேற்கும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் பெரும்பாலான குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் குழந்தைகளுடன் தமது குழந்தைகளை பெற்றோர்கள் ஒப்பிட்டு பேசுவதால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதனைத் தொடர்ந்து உடல் நல பாதிப்பும் ஏற்படும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

பிரபலமான தொலைக்காட்சியில் பிரசித்தி பெற்ற ரியாலிட்டி ஷோ. சீசன் 3 வரை வந்து விட்டது. சின்னக்குழந்தை ஒன்று மைக் பிடித்து அழகாக பாடிக்கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களோ குற்றம் குறை கூறி பாடியது சரியில்லை என்று ரிஜெக்ட் செய்து விட்டனர். அதனால் அழுது ஆர்பாட்டம் செய்கிறது அந்த குழந்தை.



தொலைக்காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பெரும்பாலானவர்களை இந்த காட்சி பாதித்துள்ளது. என்னதான் போட்டியாக இருந்தாலும் நிராகரிப்பு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை சொல்லும் விதமும் இருக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கை மனதில் வைத்து நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளினால் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

குழந்தைகளின் தனித்திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறோம் என்ற போர்வையில் தொடங்கப்பட்டவைதான் இந்த ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சிகளில் பத்து குழந்தைகளுக்கு நன்மை ஏற்பட்டிருக்கிறது என்று வைத்துகொண்டாலும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதே உண்மை. தங்கள் குழந்தைகளும் அவர்களைப் போல டிவியில் தோன்றவேண்டும் என்ற ஆவலில் பிஞ்சு குழந்தைகளை படிப்பு தவிர பாட்டு, நடனம் என தனித்திறமை வகுப்புகளுக்கு டியூசன் அனுப்புகின்றனர் பெற்றோர்கள்.


அது போன்ற வகுப்புகளுக்கு குழந்தைகள் விரும்பி சென்றால் எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம் அவர்களுக்கு விருப்பமே இல்லாமல் அதுபோன்ற வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பது காசு கொடுத்து நாமே நம் பிள்ளைகளுக்கு சூனியம் வைப்பதற்கு சமம் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடுகின்றனர். பாட்டு நிகழ்ச்சி என்றால் குரல் வளம் மட்டுமே பாதிக்கப்படும். நடனம் என்றால் உடலின் அனைத்து உறுப்புகளும் ஓய்வுக்காக கெஞ்சும் நிலைக்கு வந்து விடும். டிவியில் வந்து நடனம் ஆடும் போது அந்த புகழ் வெளிச்சம் பெற்றோர்களுக்கு நன்றாகத்தான் இருக்கும். இயல்பாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேசமயம் பெற்றோர்களின் கட்டாயத்திற்காக அவர்கள் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்ளும் பட்சத்தில் உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். தோல்வியை தாங்கும் மனப்பக்கும் இல்லாத குழந்தைகள் மன ரீதியான பாதிப்பிற்கும் ஆளாகும் சூழ்நிலை உருவாகும் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கையாகும்.

டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக ரியாலிட்டி ஷோ வில் சில செயற்கைத்தனமான செயல்களும் செய்யப்படுவதுண்டு. அதை உண்மை என்று நம்பிவிடும் குழந்தைகளும், பெற்றோர்கள் சில சமயம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அதேபோல் டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகளுடன் வீட்டில் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கும் நமது குழந்தைகளை ஒப்பிடவே கூடாது. ஏனெனில் அந்த குழந்தைகளின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். அதற்கு அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எத்தனையோ தியாகங்களை செய்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்க அந்த குழந்தைகள் போடும் மேக் அப் அவர்களின் சருமத்தை பாதிக்கும். 



அதே போல் செயற்கை வெளிச்சம் குழந்தைகளின் கண்களையும் பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.ஆனால் நமது குழந்தைகளுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. நாம் அளிக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப நம் குழந்தைகள் நிச்சயம் முன்னேறுவார்கள். அதேசமயம் பிற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது பெற்றோர் மீதே ஒரு வெறுப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.


குழந்தை ஏதேனும் தவறு செய்தால் கூட அங்கே பார், டிவியில் பாரு அந்த புள்ள என்னமா  பாடுது , ஆடுது நீயும் தான் இருக்கிறியே  ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லை என்று குழந்தைளிடம் சிறுவயதிலயே குற்றஉணர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள்.

எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகளும் ஹீரோக்கள்தான். தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ப்பது தான் திறமைசாலிகளுக்கான அளவுகோள் என்று எண்ணி உங்கள் குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசி அவர்களை ஜீரோவாக்கி விடாதீர்கள்..



பெற்றோர்கள் இதை கருத்தில் கொள்வார்களா...?


நன்றி : தட்ஸ்தமிழ்.காம் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...