(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, May 16, 2012

இழிவை நோக்கி இந்தியச் சமூகம் - ஓர் எச்சரிக்கை


தனிமனித ஒழுக்கமே ஒரு உயர்ந்த நாகரீகத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கான அடையாளம். ஒழுக்கம் சார்ந்த வாழ்வியல் முறை எந்தச் சமூகத்தில் கண்ணும் கருத்துமாக கடைபிடிக்கப்படுகிறதோ அந்தச் சமூகமும் நாடும் உலகில் உயர்ந்து நிற்கும். அதுவல்லாத நாடும் சமூகமும் அதல பாதாளத்தில் வீழும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

ஆனால், இந்த உண்மை நமது நீதிமன்றங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கசப்பாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ சமீபகாலமாக இந்திய அரசும் இந்திய நீதிமன்றங்களும் ஒழுக்கம் தொடர்பான முடிவுகளில் கீழ்த்தரமான நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன.

2009-இல் டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது 377பிரிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்தது. அன்றைக்கு மத்திய சுகாதார அமைச்சராக இருந்த தமிழ் கலாச்சாரம் குறித்து வாய்கிழியப் பேசும் பச்சைத் தமிழர்அன்புமணி ராமதாஸ் அவர்களும் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது என்று அறிவுப்பூர்வமாகஅறிவித்தார். சமீபத்தில் மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென், எழுத்தாளர் விக்ரம்சேத் போன்ற இந்தியாவின் அறிவு ஜீவிகள் (?) ஆதரவும் கிடைத்துள்ளது. ஓரினச் சேர்க்கையை ஆதரித்ததால்தான் அமர்த்தியசென்னுக்கு நோபல் பரிசு கிடைத்தது போலும்! இந்திய கலாச்சாரம், பண்பாடு குறித்து தொண்டை கிழிய பேசும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இதுபற்றி கள்ள மவுனம் சாதிக்கிறது.

காதலர் தின கொண்டாட்டத்தை கடுமையாக எதிர்க்கும் இவர்கள் இந்தத் தீர்ப்பு குறித்து வாய் திறக்கவில்லை. சட்டப் பேரவையிலேயே தமது உறுப்பினர்கள் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக் கொண்டதால் அம்பலப்பட்டு நிற்கிறது பா.ஜ.க. இந்துத்துவ கோட்பாட்டுக் கூறுகளில் ஓரினச்சேர்க்கையும் அடங்குவதால் இது குறித்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களால் கருத்துச் சொல்ல முடியவில்லை.

மனிதனுக்கும் மிருகத்திற்கும் இருக்கும் வேறுபாடு பாலியல் ஒழுங்குமுறைதான். வயது வந்த ஆண் பெண் இருவரும் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு குழந்தைகள் மூலம் குடும்பமாக தரம் உயர்ந்து அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினருக்காகவே தங்களை அர்ப்பணித்து வாழ்வது என்ற கோட்பாடே உலகின் உயரிய கோட்பாடு.

இந்தியச் சமூகத்தின் ஆணிவேராக இருந்ததும் இந்தக் குடும்பவியல் கோட்பாடுதான். ஆண்டாண்டு காலமாக இந்தியச் சமூகம் நிலைகுலையாமல் நிலைத்து நின்றதுக்கு காரணமும் குடும்பத்தை மைய்யமாக கொண்ட இந்த வாழ்வியல் சூழல்தான்.

தனிமனித சுதந்திரம் என்ற பெயரால் தறிகெட்ட வாழ்க்கை முறையை தங்குதடையின்றி உலக நாடுகள் மீது திணித்து வரும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. ஐ.நா. சபை மூலம் நிர்ப்பந்தம் செய்து ஓரினச்சேர்க்கை குற்றம் கிடையாது என்ற கருத்தை இந்திய நீதிமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் மூலமாக சட்டமாக்கியுள்ளனர். ஐ.நா. சபையின் அதிமுக்கியான பணி இப்போது ஓரினச்சேர்க்கையை உலகில் நிலைப்படுத்துவதுதான்!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குடும்ப வாழ்வு முறை என்ற கோட்பாடு சிதைந்து சின்னாபின்னமாகி விட்டது. மொத்தச் சமூகமும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதனால் உலகில் வேறு எந்தச் சமூகமும் நாடும் முறையான வாழ்வு வாழக்கூடாது என்ற உயர்ந்த எண்ணமேஓரினச்சேர்க்கை போன்ற கேடுகெட்ட வழிமுறைகளை தனிமனித உரிமை என்ற பெயரால் உலகம் முழுவதும் நிலைநிறுத்தத் துடிக்கின்றனர்.

இந்தியாவில் இந்த காட்டுமிராண்டித்தனத்தை தங்கு தடையின்றி பரப்புவதற்காகவே நாஸ் இந்தியா ஃபவுன்டேஷன்என்ற அரசு சாரா நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் இயக்குநர் அஞ்சலி கோபாலன் என்ற பெண் 1990 வரை அமெரிக்காவில் இந்த வேலையைச் செய்து வந்தார்.

1990க்குப் பிறகு இந்தய அரசின் பார்வை அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கை சார்ந்ததாக புண்ணியவான்மன்மோகன் சிங் அவர்களால் மாற்றப்பட்டவுடன் இந்த அஞ்சலி கோபாலன் என்ற சமூக சேவகிஇந்தியாவிற்கு வந்து இந்த அமைப்பைத் தொடங்கி வெற்றிகரமாகநடத்தி வருகிறார். இந்திய அரசின் உயர் அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு அமெரிக்க நிறுவனங்களின் நிதியுதவியோடு எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துகின்றோம்…’ என்ற பெயரில் ஓரினச் சேர்ச்கையில் பாதுகாப்பாகச் செயல்படுவது எப்படி என்று மூன்று மாத ஆறுமாத வகுப்புகள் எடுத்து வருகிறது நாஸ் இந்தியா ஃபவுன்டேஷன்என்ற இந்த நாசகார நிறுவனம். டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்காடிய ஓரினச் சேர்க்கை ஆதரவு அமைப்புகளில் இந்த நிறுவனம் தான் முன்னணி நிறுவனம்.

ஓரினச்சேர்க்கை மட்டுமா இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது? அரசின் அனுமதியோடு விபச்சார விடுதிகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமலேயே புரிந்துணர்வு அடிப்படையில் வாழ்வதுஎன்ற பச்சை விபச்சாரம் கல்லூரிகளிலும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மத்தியிலும் பெருகி வருகிறது. பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுறையை பயன்படுத்துங்கள் என்ற விளம்பரம் விண்ணைப் பிளக்கிறது.

சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகள் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்கின்றனர் என்பதால் அரசு மிகவும் கவலையடைந்துதினமும் ஆயிரம் ஆணுறைகள் காலையில் இலவசமாக பெட்டிகளில் வைக்கப்படுகிறது. மாலையில் பெட்டி காலியாகி விடுகிறது. இந்த கேவலத்தை மெரீனாவில் கண்கூடாக பார்க்கலாம்.

குடும்பப் பெண்களைக் கூட கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் வகையில் எவ்வித தடையுமின்றி ஆபாசக் காட்சிகளை, பாடல்களை தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படுகிறது. இதுபோதாதென்று மனிதனின் தலைமுறை பாரம்பரிய தொடர்புகளையும் அறுத்தெறிய வேண்டும் என்பதற்காகவே புதிய புதிய வழிமுறைகளில் இயற்கைக்கு மாறாக குழந்தை பெறுதல் என்ற அடிப்படையில் வாடகை தாய் கலாச்சாரம் பெருகி வருகிறது. உலகிலேயே வாடகை தாய் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும் நாடு நமது நாடுதான். ஆந்திரா முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டி வாடகைத் தாய்கள் தங்களது கர்ப்பப் பைகளை வறுமையின் காரணமாக விற்கின்றனர்.

கணவனின் உயிரணுவையும் மனைவியின் கருமுட்டையையும் செறிவூட்டி வாடகைத் தாயின் கருப்பையில் வைத்து குழந்தை பிறக்கச் செய்கின்றனர். கணவனின் உயிரணுவில் வலிமை இல்லாவிட்டால் உயிரணு வங்கிக்கு சென்று வேறு எவனோ விலைக்கு விற்ற உயிரணுவை வாங்கி மனைவியின் கருமுட்டையுடன் சேர்த்து மனைவி கருத்தரிக்கிறாள். இல்லையென்றால் வாடகைத் தாய் கருத்தரிக்கிறாள்.

இதற்காகவே விந்தணு வங்கிகள் சென்னையில் முளைத்து வருகின்றன. சென்ற மாதம் திருமணமான பெண் ஒருவர் இந்த விந்து வங்கிக்குச் சென்று ஐ.ஐ.டி. மாணவனுடைய விந்தணு வேண்டும்; அதற்காக இருபதாயிரம் ரூபாய் தருகிறேன் என்று கேட்டதாக ஒரு மகளிர் மாத இதழில் அதிர்ச்சி செய்தி வெளியாகி இருந்தது. ஐ.ஐ.டி. மாணவன் என்றால் அவன் அறிவாளியாக இருப்பான் அவருடைய விந்தணுவினால் உருவாகும் குழந்தையும் அறிவாளியாக இருக்கும் என்ற கடைந்தெடுத்த கயவாளித்தனமான சிந்தனை அந்த மெத்தப் படித்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது என்றால் இந்திய சமூகம் எங்கே செல்கிறது?

இன்னும் சோதிடம் ஜாதகம், நல்ல நாள்-கெட்ட நாள் என்ற மூடநம்பிக்கைகள் உச்சந்தலைக்கேறி தாய்க்கு பிரசவ வலி எடுக்கும் முன்பே நல்லநாள் என்று சோதிடன் குறித்த தேதியில் குழந்தை பெறவேண்டும் என்பதற்காக தாய்லாந்து நாட்டிற்கு பறந்து சென்று குறிப்பிட்ட தேதியில் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கின்றனர்.

இந்தியச் சமூகத்திற்கான முறைப்படுத்தப்பட்ட வாழ்வியல் வழிகாட்டுதல் இல்லாததே இந்த கேவலங்களுக்குக் காரணம். இந்தியச் சமூகக் கட்டமைப்பே குடும்பங்களின் வெற்றியில்தான¢ இருக்கிறது. அதைச் சீரகுலைக்க வேண்டும் என்பதே முதலாளித்துவ சக்திகளின் சதி. இந்தச் சதியை நிறைவேற்றிட இந்திய அரசும் அதன் கொள்கைகளும் வழிகளை எளிதாக்கி வருகின்றன. விபச்சாரத்திற்கு முறைப்படியான சான்றிதழ் வழங்கும் இந்திய அரசு திருமணத்திற்கான வயது பெண்ணுக்கு 21 என்றும் ஆணுக்கு 24 என்றும் சரியான நேரத்தில் முறைப்படியான திருமணங்களை வலிந்து தள்ளிப்போட வைக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் கடந்த 63 ஆண்டுகளாக குறிப்பிட்டு வரும் இந்துச் சமூகத்தில் நிலவும் சாதிய கொடுமைகள் சமூகக் கொடுமைகள் பெண்ணடிமைத்தனம் திருமணங்களில் பாகப்பிரிவினைகளில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்கு சட்டம் இயற்றுகிறோம் திட்டம் தீட்டுகிறோம் என்ற பெயரில் இந்துசமூகத்தை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்படும் பொதுவான சட்டங்களும் திட்டங்களும¢ கொள்கை முடிவுகளும் இந்து அல்லாத பிற சமூகங்களையும் பாதிக்கிறது.

குறிப்பாக மனித இனத்திற்கான வாழ்வியல் கோட்பாடாக, முழுமைப்படுத்தப்பட்ட சட்டங்களாக, மாறுதல் தேவையற்ற கொள்கை முடிவுகளாக கடந்த 1433 ஆண்டுகாலமாக அணுஅளவும் மாற்றம் இல்லாமல் அகிலம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் இந்திய முஸ்லிம்களும் இந்திய அரசின் முறையற்ற இத்தகைய சமூகவியல் சட்டங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

திருமணம் என்ற வழிமுறையையும் கணவன் மனைவி என்ற பந்தத்தையும் குடும்பம், இரத்த உறவுகள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற வாழ்வின் எதார்த்தங்களையும் பிறருக்காக வாழ்வது என்ற இயற்கையான ஈகை குணங்களையும் குழிதோண்டிப் புதைத்து இப்படி ஒரு பாசப் பிணைப்பே உலக மக்களிடம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இயற்கைக்கு மாற்றாக மனித சமூகத்தையும் உலகையும் வழிநடத்தப் பார்க்கின்றனர், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள்சிலர்.

இயற்கைக்கு மாற்றமாக எது நடந்தாலும் அதன் விளைவுகள் மிகவும் கோரமாக அமையும் என்பதற்கு உலக வரலாற்றில் பல சம்பவங்கள் சான்றாக உள்ளன. இறைவனுடைய பிடி இறுகப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஜசாகல்லாஹ் : CMN சலீம் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...