(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, May 12, 2012

நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்


நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

லகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.

இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில் பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.

யார் இவர்?
எந்த போட்டி அது?
என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?

தற்போது நடந்துவரும் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த சம்பவம் சென்ற ஞாயிறுக்கிழமை நடந்தேறியுள்ளது. இந்த வீரரின் பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தான். அதில் வென்று விட்டால் சரித்திரம் படைக்கப்போகின்றது இந்த டீம்.

யாயா டோரே - இந்த மனிதர் கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் கில்லாடி.

Yaya Toure (Image courtesy - goal.com)

ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று விருதை (African Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box player என்ற செல்லப்பெயரும் உண்டு.

கடந்த ஞாயிறுக்கிழமை newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne) பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.

என்ன காரணம்?

இதற்கு அவர் கூறிய காரணம்,

 "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம் (I don't drink because I am a Muslim)"

MASHAALLAH

மது வாங்க மறுத்த காட்சியை கீழே காணலாம்.


EPL நிர்வாகத்தாருக்கு யாயா டோரேயின் இந்த செய்கை சங்கடத்தை தந்தாலும், இந்த நிகழ்வுக்கு பின்னணியில் மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. அதாவது, இம்மாதிரி நடக்கலாம் என்று முன்பே தாங்கள் யூகித்து பரிசை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்ததாக கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளனர் நிர்வாகத்தினர். இருப்பினும், ஷாம்பைன், வீரர்களால் மிகவும் விரும்பப்படும் பரிசு என்பதால் அதனை மாற்ற வேண்டாம் என்று இறுதியில் முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் எண்ணியது போலவே தற்போது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் பரிசுகளில் மாற்றம் கொண்டு வர எண்ணியுள்ளனர். அதாவது, ஷாம்பைன் பாட்டிலுடன் பதக்கவில்லையும் சேர்த்து தர திட்டம் தீட்டியுள்ளனர். மது வேண்டாமென்னும் வீரர்களுக்கு பதக்கம் மட்டும் தரப்படும்.

மான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய வீரர்கள் பலரும் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்கென தனி தொழுகை அறை வசதியை அணி நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

நட்சத்திரங்களின் செய்கைகள் அவர்களது ரசிகர்களை பாதிக்கும் என்பது உண்மை. அந்த வகையில் மதுவை நிராகரித்து தன் ரசிகர்களுக்கு ஒரு மிக சிறந்த முன்னுதாரணத்தை காட்டிவிட்டார் யாயா டோரே என்றால் அது மிகையாகாது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

References:
1. Not for me! Yaya Toure turns down man-of-the-match champagne on religious grounds - Dailymail, 6th May 2012.link
2.  Soccer and religion meet on the pitch, where the English Premier League considers a change - Yahoo sports, 7th May 2012. link
3. “I Don’t Drink Because I’m Muslim” - On Islam. 7th May 2012. link
4. Yaya toure - wikipedia. link.
5. African footballer of the year - wikipedia. link
ஜசாகல்லாஹ் :  ஆஷிக் அஹமத் அ

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...