(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, September 2, 2010

இறைவனால் இதயத்தில் முத்திரை இடபட்ட காஃபிர்கள் எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.

கேள்வி :இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் - (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.

பதில்:

இறை மறுப்புக் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் இறை நிராகரிப்பாளர்களின் உள்ளத்தை அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்:

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் ஆறாவது மற்றும் ஏழாவது வசனங்களில் அல்லாஹ் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்:
'நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.' 'அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களின் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்து விட்டான். இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது. மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டணையும் உண்டு.'. (அல் குர்ஆன் 2: 6-7)

மேற்படி வசனம் உண்மையை மறுக்கக் கூடிய பொதுவான நிராகரிப்பவர்களை பற்றி கூறவில்லை. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ' என்பதன் பொருள் என்னவெனில் தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்கள் என்பதாகும். இவ்வாறு தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்களான இவர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்தாலும் சரி, எச்சரிக்கை செய்யாவிட்டாலும் சரியே. அவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்களின் உள்ளங்களிலும், செவிப் புலனிலும் முத்திரை வைத்து விட்டதாகவும், அவர்களின் பார்வைகளில் திரையிட்டுவிட்டதாகவும் அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டதால் அவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதல்ல இதன் பொருள். தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்கள், உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அவர்களை பார்த்து அல்லாஹ் மேற்கண்டவாறு கூறுகின்றான். எனவே மேற்படி உண்மையை நிராகரிப்பவர்கள் தொடர்ந்து உண்மையை நிராகரிப்பதற்கு அல்லாஹ் பொறுப்பாளி அல்ல. மாறாக உண்மை என்னவென்று அறிந்திருந்தும் - மேற்படி உண்மையை தொடந்து நிராகரித்து வருகின்ற நிராகரிப்பவர்கள்தான் இதற்கு பொறுப்பாவார்கள்.

2. உதாரணத்திற்கு வகுப்பாசிரியர், மாணவன் தேறமாட்டான் என்று கணிப்பது.
உதாரணத்திற்கு பள்ளிக் கூடத்தின் அனுபவமிக்க வகுப்பாசிரியர் ஒருவர், வகுப்பில் கவனம் செலுத்தாத - அதிகமாக தொந்தரவு செய்கிற - தனது வீட்டுப்பாடங்களை செய்து வரத் தவறுகிற மாணவன் ஒருவனை - அவன் இறுதித் தேர்வில் தேற மாட்;டான் என்று கணிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாணவனும் இறுதித் தேர்வை எழுதி மேற்படித் தேர்வில் வெற்றியடையவில்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். மாணவன் இறுதித் தேர்வில் தோல்வியுற்றதற்கு யாரை குற்றம் சொல்வீர்கள்?. மாணவனையா? . ஆசிரியரையா?. மாணவன் இறுதித் தேர்வில் வெற்றி பெறமாட்டான் என்ற கணித்த காரணத்திற்காக ஆசிரியரை யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். மாறாக படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத மாணவன்தான் தனது தோல்விக்கு பொறுப்பாவான்.


அதுபோலவே உண்மையை தொடர்ந்து நிராகரித்து வரும் மனிதர்களை பற்றி அல்லாஹ் அறிவான். இவ்வாறு உண்மையைத் தொடர்ந்து நிராகரித்து வருபவர்கள்தான் தங்களது செயலுக்குப் பொறுப்பேத் தவிர, அல்லாஹ் அல்ல.

தமிழில் : அபு இஸாரா

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...