அல்லாஹ் கூறுகிறான்: 'இணைவைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்' (லுக்மான் 31:13)
இணைவைப்பாளர்கள் மீது சுவர்க்கம் ஹராமாகும். அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில், 'நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். மேலும் அவர் தங்குமிடம் நரகம்தான். இன்னும் (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் யாரும்இல்லை'. (அல்மாயிதா 5:72).
எவன் ஷிர்க் எனும் கொடிய பாவத்தில் வீழ்ந்து விடுகிறானோ அவனது அனைத்து நல்லறங்களும் (தொழுகை, நோன்பு, தான தர்மங்கள், ஹஜ், ஜிஹாத்) பாழாகி விடும்.
அல்லாஹ் தனது திருமறையில், '(நபியே) நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய நற்செயல் (கள் யாவும்) அழிந்து விடும், நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களில் ஆகிவிடுவீர் என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது' (ஸுமர் 39: 65)
ஷிர்க் ஒருவனை மார்க்கத்தை விட்டு வெளியேற்றும், அவன் பாவ மன்னிப்பு வேண்டாமல் மரணித்து விடுவானானால் நிரந்தர நரகவாதியாக மாறிவிடுவான்.
அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது, நெருக்கத்தைப் பெறுவதற்காக அல்லாஹ் அல்லாத கப்றுகளுக்காக, ஜின்களுக்காக, ஷைத்தான்களுக்காக அறுத்துப் பலியிடுவது, நேர்ச்சை செய்வது, அல்லது மரணித்தோருக்கு அஞ்சி அல்லது ஜின்களின், ஷைத்தான்களின் தீங்குகளுக்கு அஞ்சி அவர்கள் நோய் நொடிகளையோ சோதனைகளையோ ஏற்படுத்துவார்கள் எனப் பயந்து அவைகளுக்காக இவ்வாறான செயல்களைச் செய்வது பெரும் ஷிர்க்காகும்.
அல்லாஹ் மாத்திரம் அனைத்தையும் செய்ய ஆற்றல் பெற்றிருக்க அவனல்லாதவர்களிடம் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், துன்பங்களை போக்குவதற்கும் ஆதரவு வைப்பது பெரும் ஷிர்க்காகும்.
கப்றுகளைத் தரிசிக்க அனுமதிக்கப்பட்டது மறுமையை சிந்தனையை ஏற்படுத்திக்கொள்வதற்கும், மரித்தோரின் பாவங்களுக்கு அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுவதற்குமாகும். 'கப்றுகளை தரிசியுங்கள் நிச்சயமாக அது மறுமையின் சிந்தனையை உங்களுக்கு ஏற்படுத்தும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இது ஆண்களுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டதாகும். பெண்கள் கப்றுகளை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கப்றுகளை தரிசிக்கும் பெண்களைச் சபித்துள்ளார்கள், அவர்கள் அவைகளை தரிசிப்பதன் மூலம் அவர்களுக்கோ, அவர்கள் மூலமாகப் பிறருக்கோ பிரச்சனைகளும் மார்க்கவிரோத விடயங்களும் ஏற்பட வாய்ப்புண்டு.
கப்றுகளைத் தரிசிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அங்குள்ளவர்களுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்கேயன்றி, அவர்களிடம் உதவி தேடுவதற்கோ, அல்லது அவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதற்கோ, அல்லது அவர்களைக்கொண்டு அருள் பெறுவதற்கோ, அவர்களிடம் தேவைகளைக் கேட்பதற்கோ, அவர்களுக்காக நேர்ச்சைகளை நிறைவேற்றுவதற்கோ அல்ல. அவைகள் யாவுமே கொடிய பெரும் ஷிர்க்காகும்.
அந்த கப்றுகள் நபிமார்களுடையதாக அல்லது நல்லடியார்களுடையதாக, அல்லது வலிமார்களுடையதாகக் கூட இருக்கலாம். அவர்களில் யாரை அழைத்தாலும் அவர்கள் அனைவரும் மனிதர்களே! எந்த ஒரு தீங்கோ நன்மையோ இழைப்பதற்கு அவர்கள் அதிகாரம் படைத்தவர்கள் (சக்தி பெற்றவர்கள்) அல்லர்.
அல்லாஹ் தனது படைப்புக்களில் மிக விருப்பமான முஹம்மது நபியைப் பார்த்து இவ்வாறு சொல்கிறான், '(நபியே) நீர் கூறுவீராக அல்லாஹ் நாடியதைத் தவிர எவ்வித நன்மை(யைச் செய்வதற்)கும், தீமை(யைத் தடுத்துக் கொள்வதற்)கும் நான் சக்தி பெறமாட்டேன்'.(அஃராப் 7:188)
மார்க்க அறிவற்ற சில மூடர்கள் நபியுடைய கப்ரின் முன்னால், அல்லது ஹுஸைன் (ரலி) யின் கப்ரின் முன்னால், அல்லது ஃபதவியின், ஜைலானியின், இவர்கள் அல்லாத வேறு நல்லடியார்களுடைய கப்ரின் முன்னால் பிரார்த்திப்பது அவர்களிடம் உதவி தேடுவது அனைத்தும் அந்த பெரும் பாவத்திலேயே சேரும்.
கப்றுகளைத் தரிசித்து அவைகளுக்கு முன்னால் தொழுவது, குர்ஆன் ஓதுவது அனைத்துமே வழிகெட்ட பித்அத்துக்களாகும். கப்றுகளைத் தரிசித்தல் அனுமதிக்கப் பட்டதே மறுமை சிந்தனையை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அங்கு அடக்கப்ட்டுள்ளோரின் பாவங்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதற்குமாகும்.
அந்த கப்றுகளில் இருப்பது வெறும் உக்கிப்போன எழும்புக் கூடுகளே என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தும்கூட அவைகளை நாடிச்செல்வது பெரும் வேதனையாகவும் வியப்பாகவும் உள்ளது. அவர்களுக்கே எந்த ஒன்றும் செய்ய சக்தி பெறாத நிலையில் அவர்களிடம் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்ளுமாறு கோருவதும் துன்பங்களை அகற்றுமாறு கோருவதும் விந்தையிலும் விந்தையாகும்.
பெரும்பான்மையான தர்ஹாக்கள், கப்றுகளைப் பொறுத்த வரைக்கும் அவற்றைப் பரிபாலிக்கும் போர்வையில் அவைகளுக்கு பாமரர்கள் கொண்டுவந்து குவிக்கும் பணத்தையும் ஏனைய நேர்ச்சைப் பொருட்களையும் விழுங்கி கபளீகரம் செய்து கொள்வதற்காகவே தர்ம கர்த்தாக்கள் எனும் பெயரில் பலர் செயல்படுவது அதிகம் பேருக்குத் தெரியாத உண்மையாகும்.
இவர்களே வருமானம் தேடி தம் பைகளை நிறைத்துக் கொள்ளும் சுயநல நோக்குடன் அக்கப்றுகளில் அடங்கப் பெற்றிருக்கும் அவ்லியாக்களைப் புனிதப்படுத்துவது போல் பாசாங்கு செய்து போலி பயபக்தியை வெளிப்படுத்தி பாமர மக்களுக்கு அவ்லியாக்கள் பேரில் பொய்யான கதைகளையும், கப்ஸாக்களையும் கூறி, அவர்களின் கப்றுகளிலிருந்து பல கராமத்துகள்(அதிசயங்கள்) நிகழ்ந்ததாகக் கபட நாடகமாடி அப்பாவிப் பொதுமக்களை வழிகெடுத்து அவர்களை ஷிர்கின் பால் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன