(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, February 4, 2010

நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்....

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிட்டத்தட்ட அடிமைகளைப் போல் தான் வாழ்ந்து வருகின்றனர்.

பெரிய மாளிகைகளின் மூலையில் இருக்கும் ஒரு சின்ன ரூம் தான் இவர்களது உலகம். ரூபாய் 6000/7000 சம்பளத்தில் ஆரம்பிக்கும் அரபுலக வாழ்க்கை, 10 ஆண்டுகள் ஒரே வீட்டில் இருந்தால் 15000- வரை ஆகும்.

10- 20% நபர்களுக்குத் தான் இந்த வாய்ப்பும் கிட்டும். 20% சகோதரர்கள் வேறு கம்பெனிக்கோ, ஊருக்கோ சென்று விடுவார்கள். மீதம் இருப்பவர்கள் அதே நிலையில், குடும்பத்தை பிரிந்து, எதோ கொடுக்கும் உணவை உண்டு, குடும்பங்களை விட்டு வருடக் கணக்கில் பிரிந்து, மொபைல் ஃபோனில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த வாழ்க்கையில் பலர் சூழ்நிலைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப குற்றவாளிகளாகவும் இருக்கின்றார்கள். நவீன உலக கலாச்சாரத்தின் சீரழிவுகளின் தாக்கம் இன்று எழை, எளிய மக்களைத் தான் முதலில் தாக்கும் என்பது எதார்த்தம். அதற்கேற்ப இவர்களில் பலர் பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

இதில் வெளியே சொல்ல முடியாத இன்னல்களை ஏற்றுக் கொண்டு இருப்பவர்கள் வீட்டு வேலை செய்யும் ஹவுஸ் மெயிட் என்ற இளம் பெண்களே. இதில் தமிழ் பேசுபவர்கள் குறைவு.

அண்மையில் உலகில் பணக்கார நாடு ஒன்றில் நடந்த சில உண்மை நிகழ்வுகளை தங்கள் முன் வைப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். இதற்கு இன்றைய சூழலில் என்ன தீர்வு என்பதையும் சற்று நோக்குவோம்.

1) திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை ஒரு விளையாட்டு விபத்தில் சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் (நிஜமான துப்பாக்கி) காலின் மேல் பகுதியில் சுட்டு விட்டான். இவரது விதி குண்டு காலில் பாய்ந்தது.

இவரை 4 மாதங்கள் வீட்டு சிறையில் வைத்து, உடல்நிலை சரியான பின் வெளியே விடப் பட்டார். அதையும் தாங்கிக் கொண்டு தான் நம் சகோதரர் ஜெயக்குமார் இருந்துள்ளார். ஆனால் தான் செய்யாத குற்றத்திற்காக வீட்டு சிறையில் இருந்த அந்த 4 மாதங்களுக்கு, " நீ தான் வேலையே செய்ய வில்லையே அதனால் உனக்கு சம்பளம் கிடையாது " என்று முதலாளி சொன்னவுடன் தான் ஜெயக்குமாருக்கு கோபம் வந்து,

இந்திய தூதரகத்தை தமுமுக மூலம் அணுகினார். வெகு விரைவில் இவர் ஊர் வருவார். இன்ஷா அல்லாஹ்.

2) மற்றொருவர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சத்தம் போட்டு பேசுவதற்குக் கூட பயப் படுபவர். இவர் கடந்த 10 மாதங்களாக வெறும் 20தினார்கள் (ரூபாய்3200) சம்பளத்திற்கு வேலை செய்துள்ளார். சில தினங்களுக்கு முன் இவரை கழுத்தைப் பிடித்து நெரித்ததால், இவரால் தற்போது பேச இயலவில்லை.

இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று டாக்டரை சந்தித்து விட்டார். ஒரு கோளாறும் இல்லை என்று மருத்துவர் கூறும் நிலை. ஆனால் பேச முடியவில்லை. லேசாக தொண்டையில் வலி இருக்கின்றது. இவர் வேலை செய்யும் வீட்டில் 8 பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளார்கள்.

எஜமானி அம்மாவும் வேலைக்கு செல்வார். காலை 7.30 மணிக்கு வண்டியை எடுப்பவர் இரவு 8 மணி வரை நிப்பாட்ட இயலாது. பேசுவதற்குக் கூடப் பயப்படுபவர் தன்னுடைய சூழலை வெளியே சொல்லாமல் மறுபடியும் பம்பரமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். அருகில் இருக்கும் நம் சகோதரர்கள் தான் நமக்கு ஃபோன் செய்தார்கள்.

3) மற்றும் ஒரு ஆந்திரா சகோதரரது (அப்துல் ரஹீம்) சோக நிகழ்வு. இவர் 10 மாதங்களுக்கு முன் வீட்டு வேலை விசா ரூபாய் 80000/- கொடுத்து வாங்கியுள்ளார். இடைத் தரகர் (ஆந்திரா பெண்மணி) ஒருவரை நம்பி அப்துல் ரஹீம் பணத்தைக் கொடுத்துள்ளார்.

விசா கொடுக்கும் ஸ்பான்சரை (இந்த நாட்டுக் காரரை) அப்துல் ரஹீம் பார்த்தது கூட இல்லை. இது அடிப்படையிலேயே இந்த நாட்டு சட்டத்திற்கு எதிரான செயல். வீட்டு வேலை விசாவில் இருந்து கொண்டு வேறு வெளிவேலைகளைப் பார்ப்பது சட்டப் படி குற்றமாகும்.

அதுவும் தன்னுடைய விசா ஸ்பான்சர் யாரென்று தெரியாமலேயே வேலை பார்ப்பது இன்னும் பிரச்னைக் குரிய செயலாகும். கடந்த காலங்களில் இது ஒரு பெரிய குற்றமாக கருதப் படவில்லை. ஆனால் தற்போது எல்லா வளைகுடா அரசாங்கங்களும் வெளிநாட்டினர் வேலை செய்வதில் உள்ள சட்டங்களை கடினமாக்கிக் கொண்டு வருகின்றனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற மற்ற நாடுகளில் வெளிநாடுகளில் இருந்து படித்தவர்கள், வல்லுனர்கள் மட்டுமே சுலபமாக வேலை செய்ய உள்ளே வர இயலும். அங்கெல்லாம் வாகன ஓட்டுனர் என்ற வேலையே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

அப்துல் ரஹீமின் இடைத் தரகர், ஆந்திரா பெண்மணி நம் சகோதரரையும் ஏமாற்றி, விசா கொடுத்த இந்த நாட்டுக் காரரையும் ஏமாற்றியுள்ளார். விசா கொடுத்தவர் தனக்கு சேர வேண்டிய பணம் 6 மாதங்களாகியும் வந்து சேராததால், போலிஸில் தன்னுடைய வேலை ஆள் வீட்டை விட்டு ஓடி விட்டதாகப் புகார் கொடுத்து விட்டார்.

போலிஸ் இவரை பிடித்து சிறையில் அடைத்து விட்டது. இந்த சூழலில் விசா ஸ்பான்சர் தான் தன் வேலை ஆளுக்கு முழுப் பொறுப்பு. ஆனால் நம் சகோதரருக்கு அவர் யாரென்றே தெரியாது. விசா ஸ்பான்சரின் வீட்டு முகவரிக்கு சென்று பார்த்தால், அங்கே வீடே இல்லை.

வீடு இருந்ததற்கான அடையாளம் மட்டுமே இருந்தது. பின்னர் போலிஸ் அதிகாரியைச் சந்தித்து நடந்ததைச் சொல்லி, அவர் உதவி செய்யும் எண்ணம் இருப்பவராக இருந்ததால், சில நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் ஊர் திரும்புவார்.

இப்படி தொடர் கதைகளாக பல சோக நிகழ்வுகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் நம் சகோதரர்களின் அறியாமையும், எப்படியாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற ஆவலும், இடைத் தரகர்களின் பேராசையும் தான் ஆகும்.

எனவே இதைப் பற்றிய விழிப்புணர்வை நம் சகோதரர்கள் மத்தியில் நாம் கொண்டு வர வேண்டும். எந்த நோயும் வரும் முன் காப்பதே சாலச் சிறந்ததாக அமையும். எனவே இத்தகைய வேலைக்கு வரும் சூழலை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா ஒளிர்ந்து விட்டதோ இல்லையே, உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் ஊரிலேயே இன்றைய சூழலில் ரூபாய் 10000/- சம்பாதிக்க நிறைய நல்ல வழிகள் உள்ளன. மனைவி மக்களோடு கூழானாலும் குடும்பத்துடன் குடித்து வாழலாம்.

இதற்கு வாய்ப்பே இல்லை, வெளிநாட்டில் டிரைவர் வேலை தான் வேண்டும் என்றால் அதை இந்திய சட்ட விதிமுறைகளுக்கு முழுதும் உட்பட்டு வந்தால் தான், பின் ஏற்படும் பிரச்னைகளை சட்டப்படி சந்திக்க இயலும்.

தற்போதுள்ள சட்டங்களைச் சரியாக புரிந்து அதன்படி வந்தால்தான், இந்திய தூதரகம் பின்னர் ஏற்படும் சிக்கல்களில் சுலபமாக தன் அதிகாரத்தை பயன் படுத்த இயலும்.

உதாரணமாக தற்போதுள்ள ஒரு சட்டம், படிக்காதவர்கள் எந்த வேலைக்கு வந்தாலும், முதலில் சரியான கான்ட்ராக்ட் (வேலை ஒப்பந்தம்) இல்லாமல் வர இயலாது. சட்டப் படி இந்தியர்களுக்கு குறைந்தது ரூபாய்10000/- சம்பளம் கொடுத்தால் தான் ஒப்பந்தமே எழுத இயலும்.

இந்த ஒப்பந்தத்தை வெளி நாட்டில் உள்ள இந்திய தூதரகம் சரி பார்த்து, ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் வழங்க அது ஒரு தொகையை வசூல் செய்து வைத்துக் கொள்கிறது. இந்த தொகை பின்னர் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு ஊர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த நபருக்கு எளிதாக விமான டிக்கட் எடுத்து ஊருக்கு இந்திய தூதரகம் அனுப்பி விடும்.

தற்போது டிக்கட்டிற்காக பல மாதங்கள் பலர் சிறையில் வாடும் நிலையே உள்ளது. அடுத்ததாக வேலை செய்யும் ஸ்பானசரும், விசா கொடுத்தவரும் ஒரே ஆளாக அல்லது குறைந்த பட்சம் ஒரே குடும்பத்தினராக இருக்க வேண்டும். இடைத் தரகர்களை நம்பி எங்கோ விசா எடுத்து விட்டு, வேறு எங்கோ வேலை செய்வது சட்டப் படி குற்றமாகும்.

இதில் பல சூழலில் படித்தவர்களும் ஏமாறுகின்றனர். எந்த வேலை செய்யப் போகிறோமோ அதற்கு சம்பந்தம் உள்ள விசாவிலேதான் வர வேண்டும். உதாரணமாக ஒரு முடி திருத்தும் கடையில் வேலை செய்பவரின் விசாவில் உள்ள தொழிலைப் பார்த்தால், தோட்டக்காரர் என்று இருந்தால் அதுவும் குற்றமே ஆகும்.

அண்மையில் ஒரு சின்ன வளைகுடா நாட்டில் 600 போலி நிறுவனங்களை கண்டு பிடித்துள்ளார்கள். அதாவது அப்படி ஒரு கம்பெனியே உண்மையில் இயங்கவில்லை. ஆனால் அந்த கம்பெனியில் வேலை செய்வது போல் 100 பேர்கள் எங்கோ, எதோ வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். இதற்கும் நம் சகோதரர்கள் பலர் பலியாகி உள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு முன் வளைகுடா நாடுகளில் யாரும் எந்த வேலையும் செய்ய இயலும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் திறமை இருந்தவர்கள் எல்லோரும் சம்பாதித்தார்கள்.

நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த இட ஒதுக்கீடு என்று கூட இந்த வாய்ப்பை கூறலாம். ஆனால் இதை பயன் படுத்தி, நம்மவர்கள் அடுத்த தலைமுறையை கல்வியில் உயர்த்த வேண்டும். காலச் சக்கரம் சுழல்வதில் எதிர் திசையிலும் செல்ல வேண்டி இருக்கும். அதற்கும் நம்மையும், நம் சந்ததியினரையும் தயார் செய்ய வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் எங்கும், எப்போதும், எந்நிலையிலும் நேர்வழி காட்டுவானாக.

thanks 2 muthupetexpress & TMMK

1 comment:

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...