(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, March 17, 2014

முஸ்லிம் லீக் எம்.பி. அப்துல் ரஹ்மான் கார் தாக்கப்பட்டது..

“அவலை நினைத்து உரலை இடிச்ச கதை” என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்படாதவர்கள், ஒரு நடை வேலூர் தொகுதி வரை போய், அங்கு தி.மு.க.வினர் செய்த காரியத்தை நேரில் பார்த்துவிட்டு வரலாம்.

வேலூரில் தி.மு.க.வினர் உரலை இடிக்கவில்லை. அகில இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளரின் காரை இடித்திருக்கிறார்கள்.தமது கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் வேட்பாளரின் காரை சேதப்படுத்திய உடன்பிறப்புகள், துரைமுருகனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. பிரசாரம் சூடு பிடிப்பதற்கு முன்னரே தமது கூட்டணிக் கட்சி வேட்பாளரின் காரை சேதப்படுத்தியவர்கள், தேர்தல் நெருங்க நெருங்க, எதையெல்லம் இடிப்பார்களோ! இதனால் வேலூர் தொகுதி, தி.மு.க. கூட்டணியிடமிருந்து கை நழுவுவது உறுதி போல தெரிகிறது.

அகில இந்திய முஸ்லிம் லீக் தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும்போதெல்லாம் வேலூர் தொகுதியை அக்கட்சிக்கே ஒதுக்குவது தொன்று தொட்டு வரும் பழக்கமாக இருந்து வருகிறது. தொகுதியில் முஸ்லிம்கள் அதிகம் என்பதால், அக்கட்சி இந்த தொகுதியை விரும்பிப் பெற்றுக்கொண்டு வருகிறது.

ஆனால், இந்தத் தேர்தலில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான துரைமுருகன், வேலூர் தொகுதியை தனது மகனுக்கு வேண்டும் என அடம் பிடித்துக் கேட்டார். “கூட்டணிக்கு எப்போதும் ஒதுக்கும் தொகுதியை எப்படி நாம் எடுத்துக்கொள்வது?” என ஸ்டாலின் எடுத்துக்கூறினார்.

தி.மு.க. தலைமை, 40 தொகுதிகளுக்கும் விருப்பு மனு வழங்கலாம் என அறிவித்தபோது, இதுதான் சமயம் என துரைமுருகன் தனது மகனை வேலூர் தொகுதிக்கு மனு அளிக்க வைத்தார்.
கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தை நடந்தபோது, வேலூர் தொகுதியை தாங்கள் எடுத்துக் கொள்வதாகவும், அதற்குப் பதிலாக வட சென்னை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய ஏதேனும் ஒரு தொகுதிகளை எடுத்துக்கொள்ளுங்கள் என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வந்த தொகுதியைப் பிடுங்கி கொள்வதா? என ஆத்திரமடைந்த முஸ்லிம் லீக் கட்சியினர், “வேலூர் கொடுத்தால் கொடுங்கள் இல்லாவிட்டால், வேறு எந்தத் தொகுதியும் எங்களுக்கு வேண்டாம்” எனக் கூறிவிட்டனர்.

இதனால், அவர்களை சமாதானப்படுத்த வேறு வழியின்றி கருணாநிதியும் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை அழைத்து, “சரி. வேலூரையே எடுத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டார். பின்னர் துரைமுருகனையும் அழைத்து கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் சமாதானப் படுத்தி விட்டனர்.
அத்துடன் “எல்லாம் சுமுகம்” என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இந்த விவகாரத்தை துரைமுருகன் சும்மா விட தயாரில்லை.

காரணம், கட்சிக்கு துணைப் பொதுச் செயலாளர், கட்சியில் சீனியர், தலைமைக்கு நெருக்கமானவர் என்ற தகுதிகள் தமக்கு இருப்பதால் சீட் எப்படியும் கிடைத்துவிடும் எனக் கணக்குப் போட்ட துரைமுருகன், மகனை தொகுதியில் வேலை செய்யுமாறு ஏற்கெனவே கூறிவிட்டார்.

இதனால், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஒரு மாதத்துக்கு முன்னரே தொகுதியில் வி.ஐ.பி.களைச் சந்தித்து “அண்ணே சீட் நமக்குத்தான், எனக்கு ஆதரவு கொடுங்கள்” எனக் கூறி பிரசாரத்தையே தொடங்கிவிட்டார். இதற்காக பல லட்சங்களையும் செலவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
சீட் கிடைக்காததால் துரைமுருகன் குடும்பமே ஆத்திரத்தில் இருந்தது. அதுமட்டுமின்றி அவர்களது ஆதரவாளர்களை துரைமுருகனால் சமாதானப்படுத்த முடியவில்லை.

இந்தப் பிரச்னை நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்தது.
இதற்கிடையே, வேலூர் தொகுதி முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக தற்போதைய எம்.பி.யான அப்துல் ரஹ்மான் அறிவிக்கப்பட்டு, அவரும் தேர்தல் பணியைத் தொடங்கினார். கூட்டணிக் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகளை உடன் அழைத்தார்.  

கட்சித் தலைமையின் உத்தரவின் பேரில், வேறு வழியின்றி, வேலூர் மாவட்டச் செயலாளர் காந்தி, தேர்தல் பொறுப்பாளர் பிச்சாண்டி ஆகியோர் வேட்பாளருடன் சென்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர்.

இந்த வகையில், கே.வி. குப்பம் மற்றும் குடியாத்தம் தொகுதியில் ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது துரைமுருகனின் ஆதரவாளர்கள் வேட்பாளர் அப்துல் ரஹ்மானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.
அதை கண்டுகொள்ளாத அப்துல் ரஹ்மான் மற்றும், தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள கே.வி.குப்பம் வழியாக காரில் சென்றனர்.

அப்போது கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் அப்துல் ரஹ்மான் சென்ற காரை நிறுத்திய தி.மு.க.வினர் சிலர், “எங்கள் அண்ணனின் மகன் தேர்தலில் நிற்காமல் போனதற்கு நீங்கள்தான் காரணம், வேறு தொகுதி உங்களுக்கு இல்லையா? வேலூர் தொகுதிதான் வேண்டுமா?” என கூறியபடி கார் கண்ணாடியை கற்களால் தாக்கினர். இதில், அப்துல் ரஹ்மானின் கார் கண்ணாடி சேதமடைந்தது.

வேட்பாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் அங்கிருந்த முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகளை தி.மு.க. மாவட்டச் செயலாளர் காந்தி சமாதானம் செய்தார்.
தாக்குதலுக்கு வந்த தி.மு.க.வினரோ, “எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் உங்க கட்சிக்கு வேலையெல்லாம் செய்யமாட்டோம், உனக்கு எதிராத்தான் வேலை செய்வோம் முடிஞ்சா நீ ஜெயிச்சுப்பாரு” என்று சத்தம் போட்டு சவால் விட்டதில், அதிர்ச்சியடைந்த வேட்பாளர் அப்துல் ரஹ்மான், சேதமடைந்த காரை அங்கேயே விட்டுவிட்டு வேறொரு காரில் குடியாத்தம் புறப்பட்டுச் சென்றார்.

குடியாத்தம் பகுதியில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அப்துல் ரஹ்மானுக்கு எதிர்ப்புக் கிளம்பியது.
தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, குடியாத்தம் ஒன்றியப் பொருளாளர் ஜி.ஆர்.அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலூர் தொகுதியை துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு ஒதுக்க வேண்டும் எனக் கூறி சித்தூர் கேட் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நேரம் என்பதால் அவர்களை போலீஸார் வார்த்தையால் பேசி சமாதானம் செய்தனர். இல்லையென்றால் போலீசாரின் லத்திதான் பேசியிருக்கும்.


அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையாக தி.மு.க. தலைமையிடம் மோத வேண்டிய துரைமுருகனின் ஆதரவாளர்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளரிடம் தங்கள் வீரத்தைக் காட்டுகின்றனர்.

தி.மு.க. ஒரு குடும்பம் என்று அறிஞர் அண்ணா கூறி வந்தார். ஆனால், அண்ணாவை பின்பற்றுவதைவிட கருணாநிதியைப் பின்பற்றுவதுதான் ரியாலிட்டி என புரிந்துகொண்ட தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என பலரும், தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு, “கழகம் ஒரு குடும்பம் அல்ல, எங்கள் குடும்பம்தான் கழகம்” என்று மாற்றிவிட்டனர்.

அதன் விளைவுதான் வேலூர் தொகுதியில் கூட்டணிக்கு ஒதுக்கிய பின்னும் அடம் பிடித்துக்கொண்டு கூட்டணி தர்மத்துக்கு எதிராக வேலை செய்வதும், கூட்டணி வேட்பாளரையே தாக்க முயல்வதும்! இதுதான் அறிஞர் அண்ணாவுக்குப் பின் தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி ஜனநாயகம்.
வேலூர் தொகுதியில் நிலவும் இந்தப் பிரச்னையை முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க. தலைமையிடம் எடுத்துக்கொண்டு சென்றுள்ளது. 

தென்மாவட்டங்களில் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னைக்கு வந்ததும் அறிவாலயத்தில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் வேலூர் பகுதி நிர்வாகிகளை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னதான் சமாதானம் செய்து வைத்தாலும் டியூப் பஞ்சரானது ஆனதுதான். எத்தனை ஒட்டுப் போட்டாலும் நிற்கப்போவதில்லை. அது போலத்தான் தி.மு.க. நிர்வாகிகள் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வேலை செய்யப்போவதில்லை. செய்வதென்றால், உள் ரவுண்ட் வேலைதான் செய்வார்கள்.

நன்றி : விறுவிறுப்பு

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...