(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, November 6, 2012

வி.சி கட்சி பிரமுகர் நாகூரில் வெட்டி கொலை ..!


நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்
நாகூர் அமிர்தானந்தமயி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் சத்தியமூர்த்தி (வயது35). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகூர் நகர பொறுப்பாளராக உள்ளார். நேற்று மாலை சத்தியமூர்த்தி தனது நண்பருடன் நாகைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இரவு 7 மணி அளவில் நாகையில் இருந்து நாகூருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள நாகூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே அவர் சென்றபோது சத்தியமூர்த்தியை ஒரு மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட சத்தியமூர்த்தி தப்பி ஓட முயன்று, அங்குள்ள ஒரு சிறிய சந்துக்குள் சென்றார். ஆனால் அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் பின் தொடர்ந்து அவரை சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
கொலை வெறி தாக்குதல்
இதில் கழுத்து உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்களில் வெட்டுப்பட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட கீழே விழுந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதன்பின் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.இது குறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பழனி, தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கடைகள் அடைப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நாகையில் இருந்து நாகூருக்குச் சென்று கொண்டிருந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை சத்தியமூர்த்தியின் ஆதரவாளர்கள் சிலர் தாக்கினர். 
இதனால் நாகை– காரைக்கால் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த கொலை குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தியின் தம்பி ரெங்கையன் கடந்த ஜனவரி மாதம் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...