சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில் ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ களவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.
இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.
சமீபத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட உடன், பாகிஸ்தானில் தான் உலகத்துத் தீவிரவாதிகளெல்லாம் இருப்பது போலவும் ஒரு சீன் போட்டது இந்திய வெளியுறவுத்துறை. இதற்காக பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் ‘அதிபயங்கரமான ஐம்பது தீவிரவாதிகள்’ பட்டியல் ஒன்றைத் தயாரித்த உள்துறை அமைச்சகம், அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து களத்திலிறங்கிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள், தமது பஜனையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் வாஜுல் காமர் கான் என்பவர், மும்பையின் அருகே உள்ள தானேவில் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை ஊடகங்களில் அம்பலமானது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டுச் சிதம்பரம், இது ஏதோ சின்னத் தவறு தான் என்றும், தெரியாமல் நடந்து விட்ட இத்தவறைப் பற்றி தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதாகவும், நடந்ததற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.
அவர் சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் அதே பட்டியலில் இருக்கும் இன்னொரு தீவிரவாதியான பெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமாகிறது. முதல் நபராவது ஒளிந்து வாழும் நபர். இரண்டாவது நபரோ ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.
ஏற்கனவே கைதான பெரோஸ் கான் மீது சர்வதேச போலீஸில் சொல்லி ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது சி.பி.ஐ. அது மட்டுமல்லாமல், இந்தியச் சிறையிலிருக்கும் இந்த நபர் பாகிஸ்தானில் ‘ஒளிந்து’ கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இந்தத் தீவிரவாதியைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வந்தது.
தேடப்படுவது யார் பிடிபட்டது யார் என்கிற சாதாரண விவரத்தைக் கூட சரிபார்க்கத் துப்பில்லாத இந்த விசாரணை அமைப்பு தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை விசாரித்து வருகிறது என்பதை வாசர்களுக்கு நினைவூட்டுகிறோம். தீவிரமான போலீஸ் பயிற்சி, ஒற்றறிவதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், விசாரணை முறைகளிலும் உலகத்தரமான பயிற்சி, என்று சகல வகைகளிலும் தேர்ச்சி பெற்ற தொழில் முறை நிறுவனமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, அண்ணா ஹசாரே உருவாக்க நினைக்கும் ஜன் லோக்பால் விசாரணை அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
சி.பி.ஐ, ஐ.பி, என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் உளவுப் பிரிவும் உண்மையில் குற்றத்தடுப்பு, உண்மையைக் கண்டறிதல் என்கிற மக்கள் நல நோக்குக்காக இல்லாமல் வெறும் ஆளும் வர்க்க சேவைக்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதன் விளைவு தான் இப்போதைய இந்த அவமானங்களுக்குக் காரணம். ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ.
ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கருவிகள், என்ன தான் பயிற்சியளிக்கப்பட்டாலும் கடைசியில் இப்படி காமெடிப் பீஸுகளாக சீரழிந்து போவது தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
நன்றி : வினவு
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன