பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இஸ்லாமிய வரலாற்றில் கொள்கையை காக்கும் பொருட்டு முதன் முதலாக செய்யப்பட்ட ஹிஜ்ரத் அபிசீனியா ஹிஜ்ரத்தாகும். இந்த தியாகப் பயணத்தில் ஜாஃபர் இப்னு அபீதாலிப் [ரலி] அவர்களும் அவர்களது அருமை மனைவி அஸ்மா பின்த் உமைஸ் [ரலி] அவர்களும் அடங்குவர். பின்னாளில் நபி[ஸல்] அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து அங்கு இஸ்லாமிய சாம்ராஜ்யம் நிறுவி, யூதர்களை கைபர் போரில் வெற்றி கொண்ட சமயத்தில் அபிசீனியாவில் இருந்த முஹாஜிர்கள் மதீனாவை வந்தடைந்தனர்.
அப்படி மதீனாவை வந்தடைந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களுக்கும், தியாக வேங்கை உமர்[ரலி] அவர்களுக்கும் ஒரு வாக்குவாதம். அதாவது அபிசீனியா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? அல்லது மதீனா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? என்று. இனி ஹதீஸில் இருந்து பார்ப்போம்;
[அபிசீனியாவில் இருந்து]மதீனாவிற்கு வந்தவர்களில் ஒருவரான அஸ்மா பின்த் ஹுமைஸ்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் மனைவியார் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை சந்திப்பதற்காக சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் தமது புதல்வி ஹஃப்ஸா[ரலி] அவர்களை காண அவர்களின் இல்லத்திற்கு சென்றார்கள்.
அப்போது ஹஃப்ஸா[ரலி] அவர்களுக்கு அருகில் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் இருந்தார்கள். உமர்[ரலி] அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களை கண்டபோது இவர் யார்.? என்று [தம் மகளிடம்] கேட்டார்கள்.
இவர் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] என்று மறுமொழி பகர்ந்தார்கள் ஹஃப்ஸா[ரலி]. இவர் அபிசீனியரா..? கடல் மார்க்கமாக [மதீனா] வந்தவரா என்று உமர்[ரலி] கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் கூறினார்கள். அப்போது உமர்[ரலி] அவர்கள்,
உங்களுக்கு முன்பே நாங்கள் [மதீனாவிற்கு] ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். எனவே உங்களை விட நாங்களே இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு உரியவர்கள் என்று கூறினார்கள். இதைக்கேட்டு அஸ்மா[ரலி] அவர்கள் கோபப்பட்டு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர்[ஸல்] அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவர்களுக்கு அவர்கள் உணவளித்தார்க்கள்.
உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். நாங்களோ வெகு தொலைவில் இருக்கும் பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில் அல்லது பூமியில் இருந்தோம். அல்லாஹ்வுக்காவும், அவனது தூதருக்காகவுமே இதைச்செய்தோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர்[ஸல்] அவர்களிடம் தெரிவிக்கும்வரை நான் எதையும் உண்ணவோ, குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம் , அச்சுறுத்தப்பட்டோம்.
இதை நான் இறைத்தூதரிடம் கூறுவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் பொய் சொல்லவும் மாட்டேன். திரித்துக் கூறவும் மாட்டேன். நீங்கள் கூறியதை விட எதையும் கூட்டிச்சொல்லவும் மாட்டேன் என்றார்கள்.
பின்பு நபி[ஸல்] அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் 'உமர் [ரலி] இன்னின்னவாறு கூறினார்கள்' என்றார்கள். அதற்கு நபி[ஸல்] அவர்கள், அவருக்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்..? என்று கேட்டபோது, அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன் என்று அஸ்மா[ரலி] கூறினார்கள்.
அப்போது நபி[ஸல்] அவர்கள், உங்களைவிட அவர் எனக்கு உரியவர் அல்லர்; அவருக்கும் அவரது சகாக்களுக்கும் ஒரே ஒரு ஹிஜ்ரத் [செய்தசிறப்பு] தான் உண்டு. [அபிசீனியாவிலிருந்து] கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு இரண்டு [அபிசீனியா-மதீனா] ஹிஜ்ரத் [செய்த சிறப்பு] உண்டு என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி எண் 4230
அன்பானவர்களே! நாம் ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புகார் அளிக்க செல்வோமாயானால், நாம் யார் மீது புகாரளிப்போமோ அவர்மீது அவர் சொன்னவை மட்டுமன்றி, சொல்லாதவைகளையும் இட்டுக்கட்டி நமது கருத்தை நிலைநாட்டிட, நமக்கு சாதகமான கருத்தை தீர்ப்பாக பெற்றிடவே முனைவது நம்மில் பலரது இயல்பாகவே உள்ளது.
இயக்கங்கள் பிரிவுக்குப்பின் பின் ஒருவரை ஒருவர் சேற்றை வாரி வீசிக்கொள்வதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் இந்த பொன்மொழியிலோ, இறைத்தூதர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் வந்தபின்னால் மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களில் தாமே முதலானவர் என்பதை வைத்து, நாங்கள்தான் இறைத்தூதருக்கு உவப்பானவர்கள் என்று எதேச்சையாக உமர்[ரலி] அவர்கள் கூறியதைக் கண்டு சீரும்வேங்கையாக பொங்கி எழுந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி]அவர்கள், உமர்[ரலி] அவர்கள் குறித்து இறைத்தூதரிடம் புகாரளிக்க செல்லும் போது சொன்ன வார்த்தை, பொய்யுரைக்கமாட்டேன்; திரித்துக் கூறமாட்டேன்; நீங்கள் சொன்னதை விட கூடுதலாக ஒரு வார்த்தை கூட கூறமாட்டேன் என்றார்களே!
இது சஹாபாக்கள் தியாகிகளாக மட்டுமல்ல; வாய்மையாளர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாறு கூறும் சான்றாகும். தனக்கு ஒருவனை பிடிக்கவில்லைஎன்றால் அவனை எங்ஙனமேனும் மண்ணை கவ்வவைக்க சபதமேற்று அவனைப்பற்றி 'கையில் மடியில்' போட்டு சொல்லும் கெட்ட குணத்தை கொண்டவர்களுக்கு இந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களின் வாழ்க்கை மிகப்பெரும் படிப்பினையாக உள்ளது.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Sunday, August 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன