(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, August 13, 2010

நோன்பின் சட்டங்களை சுறுக்கமாக அறிந்து கொள்வோம் !

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்று, அதன் படி எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பிரசுரம் வெளியிடப்படுகிறது. புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும்..

ரமழான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும், தெளிவான சான்றுகளைக் கொண்டதும், (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:185)


நோன்பின் நோக்கம்:


‘யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ, அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபி () கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா.
‘நோன்பு நோற்றிருக்கும் போது, உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் – அறியாமையாக நடந்து கொண்டால் – ஏசினால் நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி, திர்மிதி.


நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பயன்கள்:


‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால், நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி () அவர்கள் கூறுகிறார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி.

‘யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி.


ரமழான் மாதத்தை தீர்மானம் செய்தல்:


‘நீங்கள் பிறை பார்த்து நோன்பைத் துவங்குங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால், ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள்.’ (நூல்: புகாரி, முஸ்லிம்)


ஸஹருக்கு அறிவிப்புச் செய்தல்:


மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி () அவர்களால் செய்யப்பட்டிருந்தது. பிலால் (), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் () ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி () அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

‘பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (), நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.
‘பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (), நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ.


ஸஹர் உணவு:


‘நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள்! ஏனெனில், ஸஹர் நேர உணவில் பரகத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (), நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.
‘நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிறிஸ்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (), நூல்: முஸ்லிம்.


குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்யலாமா?


‘ரமழான் மாதத்தில் நபி () அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹ் நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (), நூல்: புகாரி, முஸ்லிம்,


நிய்யத் வைத்தல்:

நிய்யத் என்பது வாயால் மொழிவதன்று, உள்ளத்தால் எண்ணுவதாகும். நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை. பர்ழான நோன்பு நோற்கக்கூடியவர் முதல் நாள் இரவில் காலை நோன்பிருப்பேன் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.’ ‘நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி…’ என்று மக்களால் சொல்லப்படும் நிய்யத்து நபி வழியல்ல. எனவே, நோன்பு நோற்கின்றேன் என மனதால் எண்ணிக்கொள்ள வேண்டும்.


நோன்பின் நேரம்:



சுப்ஹ் நேரம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது, சுப்ஹ் நேரம் துவங்கியது முதல், சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.


உஷ்னத்தைத் தணிக்கலாமா?


‘நபி () அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது, வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.’ (நூல்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ) எனவே, நோன்பாளி சூட்டை தணிப்பதற்காக குளிக்கலாம், தலையில் நீரை ஊற்றிக் கொள்ளலாம்.


நோன்பில் மறதியாகச் செய்யும் காரியத்திற்கு:


‘ஒரு நோன்பாளி மறதியாக ஏதேனும் சாப்பிட்டுவிட்டால், அல்லது பருகிவிட்டால், அவர் தனது நோன்பை நிறுத்திவிடாமல் பூர்த்தியாக்கட்டும். ஏனெனில், அவருக்கு உணவளித்ததும், அருந்தச் செய்ததும் அல்லாஹ்வேயாகும் என நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி, முஸ்லிம். எனவே, நோன்பாளி மறதியாக உண்பதால் நோன்பு முறிந்து விடாது. வேண்டுமென்று யாராவது உண்டால், அல்லது பருகினால் நோன்பு முறிந்து விடும்.


பல்துலக்கலாமா?


‘நபி () அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்ல முடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன்.’ அறிவிப்பவர்: ஆமிர் (), நூல்: திர்மிதி. எனவே, நோன்புடன் பற்துலக்குவது நோன்பை முறித்துவிடாது.


உணவை ருசி பார்த்தல்:


உணவு சமைப்பவர்கள் சமைக்கும் போது, உணவுப் பொருட்களை ருசி பார்த்து விட்டு அந்த எச்சிலைத் துப்பிவிட வேண்டும்.


உறக்கத்தில் விந்து வெளியேறினால்:


‘நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபி () அவர்களிடம் கேட்டார். அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது, அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: அபூதாவூத்.
‘தூக்கத்தின்போது, (கனவில்) விந்து வெளிப்பட்டால், நோன்பை விட்டுவிட வேண்டாம் என நபி () அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: அபூதாவூத்) எனவே, நோன்பாளிக்கு உறக்கத்தில் விந்து வெளியேறினால் நோன்பு முறிந்து விடாது. சுயமாக யாராவது வெளியேற்றினால் நோன்பு முறிந்துவிடும்.


சுருமா, வாசனைப் பொருட்கள் பாவிக்கலாமா?


‘சுருமா, பூசிக்கொள்வதால் நோன்பு முறிந்து விடாது.’ (நூல்: புகாரி, திர்மிதி.) (வாசனைப் பொருட்கள், வைத்தியத்திற்காக ஊசி போட்டுக்கொள்ளுதல் போன்றவற்றாலும் நோன்பு முறியாது.)


நோன்பை முறிக்கும் செயல்கள்


உடலுறவு, உண்ணல், பருகல்:


ஒருவர் வேண்டுமென்று உண்பதும், குடிப்பதும், பகல் நேரத்தில் உடலுறவு கொள்வதும் நோன்பை முறிக்கும்.
மூக்குத் துவாரத்தால் நீரை உட்செலுத்தல்:
‘நோன்பாளி வுழூச் செய்யும் போது, மூக்குக்கு அளவுகடந்து தண்ணீர் செலுத்தலாகாது என நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: லகீத் பின் ஸபீரா (), நூல்: அபூதாவூத்.


இரத்தம் குத்தியெடுத்தல்:


‘இரத்தம் குத்தி எடுத்தவரும், எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்து விட்டனர் என நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜா (), நூல்: திர்மிதி.
வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்:
‘எவருக்கு வாந்தி வந்ததோ, அவர் மீது நோன்பு கழா|இல்லை. யார் வேண்டுமென்று வாந்தி எடுத்தாரோ, அவர் நோன்பைக் கழாச் செய்யட்டும்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: திர்மிதி, அபூதாவூத்.
சிற்றின்பத்தின் மூலம் விந்து வெளிப்படல்:
ஒருவர் கட்டியணைத்தல், முத்தமிடல் போன்ற சிற்றின்பத்தில் ஈடுபடுகின்றார். அதன் மூலம் விந்து வெளிப்படும் எனில், அவரது நோன்பு முறிந்து விடுவதோடு, அவர் அதனை பின்னர் கழாச் செய்ய வேண்டும்.


உடலுறவு கொள்ளல்:


‘ஒரு நோன்பாளி (நோன்பு நோற்றது (ஸஹர்) முதல் மஃரிப் வரையுள்ள நேரத்தில்) உடலுறவு கொண்டால், நோன்பைக் கழாச் செய்வதுடன் குற்றப்பரிகாரமும் (பித்யா) செய்ய வேண்டும். நோன்புடனிருக்கும் போது, உறவு கொண்டால், அவருக்கான குற்றப்பரிகாரம் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும்:

• ஓர் அடிமையை விடுதலை செய்தல்.
• தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றல்.
• 60 ஏழைகளுக்கு உணவளித்தல்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி, முஸ்லிம்.


நோன்பு திறந்தது முதல், ஸஹர் நேரம் வரை உடலுறவு கொள்ள முடியும். அதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.


நோன்பை விடச் சலுகையுடையோர்


மாதவிடாய் பெண்களும், பிள்ளைப் பேற்று தாய்மார்களும்:


‘மாதவிடாய்ப் பெண்கள் நோன்பு நோற்பது ஹராம். ஒரு பெண் நோன்போடு இருக்கும் போது, நோன்பின் இறுதி சில நிமிடங்களுக்கு முன்னர் என்றாலும் சரி, மாதவிடாய் அல்லது நிபாஸ்|இரத்தம் வருமெனில், அவளது நோன்பு முறிந்து விடும். அவள் அதனைப் பின்னர் கழாச் செய்யவேண்டும்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (), நூல்: புகாரி, முஸ்லிம்.
பிரயாணியும் நோயாளியும்:
‘எவரேனும் நோயாளியாகவோ, பிரயாணியாகவோ இருந்தால், (ரமழானில் பிடிக்காத நோன்புகளை) மற்ற நாட்களை எண்ணி (நோற்று) விடவும்’ (அல்குர்ஆன் 2:184) இவ்வசனம் நோயாளியும், பிரயாணியும் ரமழானில் நோன்பை விட்டு விட்டு, ஏனைய மாதங்களில் பிடிக்க அனுமதியளிக்கிறது.


முதியோர்:


‘ரமழான் காலத்தில் நோன்பை விட்டு விட வயது சென்ற முதியவர்களுக்கும், தீராத நோயாளிகளுக்கும் அனுமதி உண்டு. முதுமை என்பது நீங்கக் கூடியதல்ல. தீராத நோயுடையோரது நிலையும் இதுதான். இப்படியான நிலையில் உள்ளவர்கள் விடும் ஒவ்வொரு நோன்பிற்கும் பரிகாரம் (பித்யா) ஒரு ஏழை வீதம் ஒவ்வொரு நாளும் உணவளிக்க வேண்டும்.’ அறிவிப்பவர்: அனஸ் (), நூல்: இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத், திர்மிதி.
கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும்:


‘கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நபி () அவர்கள் நோன்பில் சலுகை அளித்தார்கள். கர்ப்பத்தில் உள்ள சிசுவும், பால் அருந்தும் குழந்தையும் பாதிக்கப்படலாம் என அஞ்சும் தாய்மார்கள் நோன்பை விட்டு விட்டு, பின்னர் அதை கழாச் செய்யலாம்.’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (), நூல்: இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத், திர்மிதி.


ஹைளு, நிபாஸ்வுடைய பெண்கள்:


‘நாங்கள் நபி () அவர்களுடன் இருந்த காலத்தில், மாதவிடாய் ஏற்பட்டு, தூய்மையடைவோம். அப்போது, விடுபட்டிருந்த நோன்பைக் கழாச் செய்யுமாறு நபி () அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கழாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள்.’ அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (), நூல்: புகாரி.


சிறுவர்கள்:


‘பருவம் அடையாத சிறுவர்கள் மீது நோன்பு கடமையில்லை. எனினும், அவர்களை பயிற்றுவிப்பதற்காக ஸஹாபாக்கள் நோன்பு நோற்கச் செய்துள்ளனர். அத்தோடு, அவர்கள் பசியை உணராமல் இருப்பதற்காக அவர்களுடன் சேர்ந்து விளையாடியும் உள்ளனர்.’ (நூல்: புகாரி) அதனால், அவர்களும் நோன்பு பிடிக்கலாம்.


நோன்பு திறத்தல்:



‘யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ, அவர் அதன் மூலம் நோன்பு திறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு திறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானதாகும் என்று நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (), நூல்: நஸயீ.

‘நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று, தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் என்று நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி.


நோன்பு திறப்பதை விரைவு படுத்தல்:


‘நோன்பு திறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம், மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபி () அவர்களின் பொன்மொழி.’ அறிவிப்பவர்: அபூதர் (), நூல்: அஹ்மத்.

நோன்பின் துஆ:
நோன்பு திறக்கும் போது, கூறுவதற்கு ஆதாரபூர்வமான துஆக்கள் இல்லாததால், வழமையாக உணவு உண்ணும் போது, ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவது போன்று கூறிக் கொள்ள வேண்டும்.
நோன்பு திறந்த பின்னர் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும் என்பதால், தமிழ் மொழியிலேயே அதிகமதிகம் தமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திக்கலாம்.


சுன்னத்தான நோன்புகள்

ஆறு நோன்புகள்:

ரமழான் மாதத்திற்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபி () அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
‘யார் ரமழான் மாதம் நோன்பு நோற்று, அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறுநாட்கள் நோன்பு நோற்கிறாரோ, அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என்று நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூ அய்யூப் (), நூல்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி.


வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது:


‘நபி () அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (), நூல்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.
‘ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்பிக்கப்படுகின்றன. எனவே, நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.


அரபா நோன்பு:



துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரபாவில் தங்குவார்கள். அன்றைய தினம் ஹாஜிகள் தவிர்ந்த மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.
‘அரபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம், மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என நபி () அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: முஸ்லிம்)


நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்:



நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதையடுத்த மூன்று நாட்கள் ஆகிய ஐந்து நாட்கள் நோன்பு நோற்பது நபி () அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஷஅபான் முப்பதாம் இரவா? ரமழானின் முதல் இரவா? என்ற சந்தேகம் ஏற்படும் நாளிலும் நோன்பு நோற்பதை நபி () அவர்கள் தடுத்துள்ளார்கள்.
‘நபி () அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.’ அறிவிப்பவர்: அபூஸயீத் (), நூல்: புகாரி, முஸ்லிம்.

‘தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் பிறை 11,12,13) உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி () அவர்கள் கட்டளையிட்டார்கள்.’ அறிவிப்பவர்: ஸஃது () நூல்: அஹ்மத்.
‘(ரமழானா? ஷவ்வாலா? என்று) சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி () அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.’ அறிவிப்பவர்: அம்மார் (),
நூல்: புகாரி.

பராஅத் நோன்பு என்றும், மிஹ்ராஜ் நோன்பு என்றும் நோற்கக் கூடிய நோன்புகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத, குர்ஆன் ஹதீஸில் இடம்பெறாத, மக்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட பித்அத் நோன்புகளாகும். இதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.


இரவு வணக்கம் (கியாமுல் லைல்)


புனித ரமழானின் இரவு காலங்களில் நின்று வணங்குவதை நபி () அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

‘ரமழானில் நபி () அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று அபூ ஸலமா அவர்கள் ஆயிஷா () அவர்களிடம் கேட்டபோது, ரமழானிலும் ரமழான் அல்லாத மாதங்களிலும் நபி () அவர்கள் 11 ரக்ஆத்துக்களுக்கு மேல் தொழுததில்லை என விடையளித்தார்கள்.’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
‘உபைப் பின் கஅப் () அவர்களையும் தமீமுத்தாரி () அவர்களையும் மக்களுக்கு 11 ரக்ஆத்துக்கள் தொழ வைக்குமாறு உமர் () அவர்கள் கட்டளையிட்டார்கள்.’ (நூல்: முஅத்தா)

எல்லா நாட்களிலும் கியாமுல் லைல் தொழுகையை தொழவேண்டும். எனினும், ரமழான் மாதத்தில் இந்த தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. ‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர் நோக்கியும் தொழுகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.

இத்தொழுகையை ஜமாஅத்தாகவும் தனியாகவும் தொழலாம். 20 10 3 ரக்ஆத்துக்கள் தொழுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.


லைலத்துல் கத்ர் இரவு
ரமழான் மாதத்தில் மகத்துவமிக்க ஓர் இரவு உள்ளது. ‘இந்தத் திருக்குர்ஆனை மகத்துவமிக்க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்.’ (அல்குர்ஆன் 97:1-3)
இந்த மகத்துவமிக்க இரவு 27ல் தான் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ கூறப்படவில்லை. கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்துள்ளது.
‘லைலத்துல் கத்ர் இரவை ரமழானில் கடைசி பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ என்பது நபிமொழி. (நூல்: புகாரி)


இஃதிகாப்
கடைசிப் பத்து நாட்களில் நபி () அவர்கள் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை செய்துள்ளார்கள். ‘நபி () அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில், அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்தார்கள்.’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
(அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்)


நன்றி
கடய நல்லூர் அக்ஸா தளத்திலருந்து...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...