(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, August 15, 2010

பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா..?

நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

சந்திர மாதக் கணக்கைப் பொறுத்த வரையில் மாதம் 29 இல் அல்லது 30 இல் முடிவடையலாம். சூரியக் கணக்கைப் போன்று 28 இல் முடியும் மாதங்களோ, 31 இல் முடியும் மாதங்களோ சந்திரக் கணக்கில் கிடையாது.


29 ஆம் அன்று பிறை பார்க்கப்படும் அடுத்த மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டால் புதிய மாதம் தோன்றி விட்டது எனத் தீர்மானிக்கப்படும். அப்படி இல்லையென்றால் இருக்கும் மாதம் 30 இல் முடிவதாகத் தீர்மானிக்கப்படும். சில போது தலைப் பிறை தோன்றி மேக மூட்டம், மழை காரணமாக பிறை தென்படாவிட்டால் கூட மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்தல் வேண்டும். இந்த அணுகுமுறையைக் கையாளும் போது சில இடங்களில் தெரியாத பிறை, மற்றும் சில இடங்களில் தென்பட வாய்ப்புள்ளது.

எனவே, நாட்களைத் தீர்மானிப்பதில் சில முரண்பாடுகள் தோன்றுவது இயல்பாகி விட்டது. ஆரம்ப காலத்தில் இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. எனினும், மார்க்க அறிவுள்ளவர்-அற்றவர் அனைவரும் மார்க்கம் குறித்து வாதம் செய்யும் நிலை அதிகரித்திருப்பதாலும், தொலைத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியாலும் பிறை என்பது பெரும் குழப்பத்தை ஏற்படும் அம்சமாக ஆகிவிட்டது.

ஸஊதியில் பெருநாள் தொழுவதை நோன்புடன் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒருவருக்கு, தான் நோற்ற நோன்பு சரியானது தானா? என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதான். இந்த வகையில் சமீப காலமாகப் பிறை தொடர்பாகப் பல வாதப் பிரதிவாதங்களும், ஏட்டிக்குப் போட்டியான பிரசார அணுகுமுறைகளும், இயக்கப் பிரிவுகளும் தோன்றி வரும் ஆரோக்கியமற்ற சமூகச் சூழலைச் சந்தித்து வருகின்றோம். ஒரு நாளைத் தீர்மானிப்பதில் இவர்களுக்குள் இத்தனை சர்ச்சைகளா? என்ற மாற்று மதச் சகோதரர்களின் ஏளனத்திற்குமுள்ளாகி வருகின்றோம்.

சர்ச்சைகளுக்கான முதல் காரணம்:பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பிறை தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு குழு இருக்கும். இவர்கள் பெரும்பாலும் குர்ஆன்-ஸுன்னா என்ற தூய வட்டத்தை விட்டும் சற்று விலகியவர்களாகவே இருப்பர். இவர்களின் மெத்தனப் போக்கே இந்தச் சர்ச்சை பூதாகரமாக எழுந்ததற்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினால் மிகையாகாது.

பிறை கண்டதாக அறிவித்தால் ஏற்க மறுப்பது, தகவல் உண்மையாக இருந்தாலும் கூட்டம் முடிந்த பின்னர் வந்த தகவல் என்பதற்காக ஏற்க மறுப்பது, ஸஹர் நேரத்தில் பெருநாளை அறிவிப்பது போன்ற செயற்பாடுகளால் பிறைக் குழுக்கள் மீது மக்கள் குறை காண முற்பட்டனர். எனவே, மாற்றுத் தீர்வுக்காக மக்கள் மனம் அலைபாய ஆரம்பித்தது.அந்தந்தப் பிரதேசங்களில் பிறை கண்டு நோன்பு நோற்றல், பெருநாளைக் கொண்டாடுதல் என்ற நிலைப்பாட்டிலிருந்து மக்கள் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தனர்.

அந்தந்தப் பிரதேசத்துப் பிறையை வைத்து நோன்பையும், பெருநாளையும் தீர்மானிப்பது என்பது தவறான நிலைப்பாடு அல்ல. ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. இருக்கின்ற நடைமுறை குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரண்படவில்லை என்றால் அதை மாற்றுவதற்காகப் பெரிய சமூக சவாலைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும், பிறைக் குழுவிலுள்ள குறைகளாலும் தொடர்ந்து ஏற்பட்டு வந்த சிக்கல்களாலும் சர்வதேசப் பிறை என்ற சிந்தனை உருவானது.

பிறை பார்த்து நோன்பு பிடிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்கு பிறை தென்பட்டதாகத் தகவல் கிடைத்தாலும் பிறை பார்த்தல் என்பது நடந்து விட்டது. உள்நாடு-வெளிநாடு என்று நபி(ஸல்) அவர்கள் பிரிக்கவில்லை. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்த நாடுகள். இவை ஒன்றாக இருக்கும் போது ஒரு பிறை; அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்த பின்னர் மூன்று பிறைகளா? இலங்கையில் விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்கின்றனர். அப்படித் தனி நாடு கொடுக்கப்பட்டால் கொழும்பில் கண்ட பிறை வடகிழக்கு முஸ்லிம்களுக்குப் பொருந்தாதா? என்றெல்லாம் வாதம் செய்யப்பட்டது.

ஒரு இறைவன்! ஒரு தூதர்! ஒரு கிப்லா!

பிறை மட்டும் ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது? என்றெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகள் நியாயமாக மக்களால் நோக்கப்பட்டன.இச்சந்தர்ப்பத்தில் குர்ஆன்-ஸுன்னா பேசியோர் இரு கூறுகளாகப் பிரிந்தனர். சிலர் சர்வதேசப் பிறைதான் சத்தியமானது; உள்நாட்டுப் பிறை என்பது அசத்தியம் என்ற தோரணையில் பேச ஆரம்பித்தனர். இந்தக் கருத்து வேறுபாடு பெரும் பிளவாக மாறியது.

உள்நாட்டுப் பிறையை வைத்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துள்ள அறிஞர்கள் சர்வதேசப் பிறையை வன்மையாக மறுக்காததால் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு இந்தப் பிரசாரப் போராட்டம் ஓய்ந்தாலும், இதன் காரணமாக ஏற்பட்ட ரணங்கள் ஆறவில்லை. ஏற்பட்ட பிளவு, பிளவாகவே இருந்து வந்தது. காலப் போக்கில் சர்வதேசப் பிறையிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. பிறை பார்த்தல் என்ற ஸுன்னாவுக்கு இடமில்லாமல், பிறை கேட்டல் என்ற நிலை ஏற்பட்டது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் தொழில் புரிவோர் தரும் தொலைபேசிச் செய்திகளே சர்வதேசப் பிறையைத் தீர்மானிக்கும் சாட்சியங்களாகின. சர்வதேசப் பிறைப் படி நோன்பு நோற்போரே, ஒரு நாள்-இரு நாட்கள் வித்தியாசத்தில் ஒரே நாட்டில் நோன்பையும், பெருநாளையும் அனுஷ்டிக்கும் நிலை ஏற்பட்டது. முழு உலகத்திற்கும் ஒரே நாளில் நோன்பு-பெருநாள் எனப் பிரசாரம் செய்தவர்கள், ஒரே வீட்டிற்குள் இரண்டு பெருநாட்களைக் கொண்டாடும் நிலையை ஏற்படுத்தினர்.

சர்வதேசப் பிறையிலும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை எனும் போது, மக்கள் மனதில் பிறையைக் கணிப்பீடு செய்தல் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இந்தக் கருத்து சர்வதேச மட்டத்திலும் வளர்ந்து வரும் அதே வேளை, தமிழகத்தில் அமைப்புகளைத் துண்டாடுமளவுக்குச் செல்வாக்குப் பெற்று வருகின்றது. இலங்கையில் சிலரின் மனதில் இப்போதுதான் இந்த எண்ணம் துளிர் விட ஆரம்பித்துள்ளது. காலத்தைக் கணிப்பீடு செய்யத் தெரியாத உம்மத்தாக இருக்கும் போதுதான் பிறை பார்த்து நோன்பு பிடிக்க நபி(ஸல்) அவர்கள் ஏவினார்கள். இப்போது காலத்தைக் கணிப்பிடும் அறிவை நாம் பெற்று விட்டோம். நூறு வருடங்களுக்கு நோன்பு-பெருநாள் எப்போது வரும் என்பதை நாம் இப்போதே தீர்மானித்து விடலாம் என இத்தரப்பினர் வாதிடுகின்றனர்.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் வானியல் அறிவில் அரசர்களாக இருந்த போது கூட இந்த எண்ணம் முஸ்லிம் உம்மத்திற்கு ஏற்படவில்லை. அடுத்து, பிறையைப் பார்க்க வேண்டும்! என்ற உத்தரவை எப்படிக் கைவிடுவது என்பதும் புரியவில்லை. எனினும், சர்வதேசப் பிறைக் குழுவினர் எப்படித் தமது வாதத்திற்குத் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகியதை ஆதாரமாக முன்வைத்தனரோ, அதே போன்று விஞ்ஞான வளர்ச்சியை இத்தரப்பார் ஆதாரமாக முன்வைக்கின்றனர். “பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறும் போது, நீங்கள் நிழலைப் பார்த்து அதான் கூறுகின்றீர்களா?” அதே போன்று, “காலத்தைக் கணித்து அந்தக் கணிப்பின் பிரகாரம் நோன்பையும், பெருநாளையும் கொண்டாடினால் என்ன குற்றம் வந்து விடப் போகின்றது?” எனக் கேட்கின்றனர். இந்தக் கேள்விகள் நியாயமானவையாகத் தென்பட்டாலும் முடிவுகளைச் சரியானவை என்று கூற முடியாது. அது இந்தக் கட்டுரையின் நோக்கமுமல்ல.

பிறை தொடர்பான இந்தக் கருத்து வேறுபாடுகளால் குர்ஆன்-ஸுன்னா பேசும் அமைப்புகள் பிளவுபட்டு ஒருவரை மற்றவர் பகைத்துக்கொள்ளலாமா? ஒருவரை மற்றவர் தரக் குறைவாக விமர்சிக்கலாமா? ஹறாத்தைச் செய்பவர்கள் எனக் கண்டிக்கலாமா?இது இஜ்திஹாதுக்கு உரிய ஒரு மஸ்அலாவாகும். இது விடயத்தில் இஜ்திஹாதான அம்சங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய அம்சங்களைக் கடைபிடிக்கின்றோமா? என்பது பற்றி தெளிவுபடுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

பார்வைகள் வித்தியாசப்பட இடமுண்டு:ஒரு ஆயத்தை அல்லது ஹதீஸை நல்ல நோக்கத்துடன் ஆராயும் இருவர், இரு வேறுபட்ட முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. நோக்கமும், ஆராயும் வழிமுறையும் சரியாக இருந்தால் இரு கருத்துகளை வெளியிட்டவர்களும் கண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
“ஒரு ஆய்வாளன், ஆய்வு செய்து சரியான முடிவைக் கண்டால் அவனுக்கு இரு நற்கூலிகளும், தவறான முடிவைக் கண்டால் ஒரு நற்கூலியும் வழங்கப்படும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி: 3662, 344, 7351, 6919, முஸ்லிம்: 1716, 4584, 3576, அபூதாவூத்: 3574, திர்மிதி: 1326)

இங்கே தவறான முடிவை எடுத்தவர் கண்டிக்கப்படவில்லை. இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரனான அல்லாஹ்வே அவருக்கு நற்கூலியைக் கொடுக்கும் போது, அவரைக் கண்டிக்கும் உரிமையை எமக்குத் தந்தது யார்? என்பது சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

அடுத்துத் தீர்ப்புக் கூறுவோர் அதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும். தகுதியில்லாதவர்கள் இதில் தலையிடக் கூடாது! என்பது கவனிக்கப்பட வேண்டும். ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட “அல்ஹாகிம்” என்ற பதம் இதை உணர்த்துகின்றது.

அடுத்து, ஒருவரது தீர்ப்புத் தவறு என்பது தெளிவானால் தீர்ப்பை வெளியிட்டவர் கண்டிக்கப்படாத அதே வேளை, தவறான முடிவு புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

ஒரு வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாகப் புரிந்துகொள்ளும் சாத்தியம் இருப்பதை உணர்த்த மற்றுமொரு நிகழ்ச்சியைக் கவனத்திற்கொள்ளலாம்.

“அப்துல்லாஹ் இப்னு உபை” எனும் முனாஃபிக் மரணித்த போது, நபித் தோழரான அவனது மகன் நபியவர்களிடம் வந்து, தனது தந்தைக்காக ஜனாஸாத் தொழுகை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருக்காகத் தொழுகை நடத்த நபி(ஸல்) அவர்கள் முற்பட்ட போது உமர்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களது ஆடையைப் பிடித்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்காகத் தொழுகை நடத்தப் போகின்றீர்களா? உங்களது இரட்சகன் இவனுக்குத் தொழுகை நடத்துவதைத் தடுத்துள்ளான் அல்லவா?” எனக் கேட்டார்கள்.

அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ் தடுக்கவில்லை.

“(நபியே!) அவர்களுக்காக நீர் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லது பாவ மன்னிப்புக் கோராதிருப்பீராக! நீர் அவர்களுக்காக எழுபது தடவைகள் பாவ மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் நிராகரித்தமையே இதற்குக் காரணமாகும். அல்லாஹ் பாவிகளான இக்கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.” (9:80)

என்ற வசனத்தில் எனக்குப் பாவ மன்னிப்புக் கேட்பதா? இல்லையா? என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தந்துள்ளான். நான் அவருக்காக எழுபதுக்கும் அதிகமான தடவைகள் மன்னிப்புக் கேட்பேன்!” என்றார்கள்.

பின்னர், “அவர்களில் மரணித்து விட்ட எவனுக்காகவும் ஒரு போதும் நீர் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்!..” (9:84) ….. என்ற வசனம் அருளப்பட்டது. (புகாரி 4670, 4393)

மேற்படி சம்பவத்தில் ஒரு வசனத்தை உமர்(ரழி) அவர்கள் நோக்கிய விதமும், நபி(ஸல்) அவர்கள் நோக்கிய விதமும் வித்தியாசப்பட்டுள்ளது.

இது முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுவிப்பது குறித்து நேரடியான சட்டம் வர முன்னர் நடந்த சம்பவம். மேற்படி (9:80) வசனம் முனாஃபிக்களுக்காக பாவ மன்னிப்புத் தேடக் கூடாது! என்று கூறுகின்றது. ஜனாஸாத் தொழுகையில் இறந்தவருக்காகப் பாவ மன்னிப்புக் கோரப்படுகின்றது.

எனவே, முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது! என உமர்(ரழி) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் மேற்படி வசனம் முனாஃபிக்களுக்குப் பாவ மன்னிப்புக் கோருவதைத் தடுக்கவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தனக்குத் தந்துள்ளது என நபி(ஸல்) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஒரே வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாக விளங்க வாய்புள்ளது என்பதை உணர்த்துவதற்காகவே இந்தச் செய்தியைக் கூறினோம்.

பார்வைகள் வித்தியாசப்படுவதுண்டு:
நேரடியான முடிவு கூறப்பட்ட விடயத்தில் வித்தியாசமான விளக்கம் கூற முடியாது. ளுஹர் தொழுகையின் றகஅத்கள் நான்கு என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தால் இது கண்டிக்கத் தக்க கருத்து வேறுபாடாகும். ஏனெனில், முடிவு தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. முடிவு கூறப்படாத ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அம்சத்தில் அவரவரது பார்வை, சிந்தனை, உணர்வுகள், அவரவர் முக்கியத்துவம் கொடுக்கும் துறை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகள் வர வாய்ப்புள்ளது.

இஸ்லாத்தில் நடந்த முதல் போரான “பத்ர்” கைதிகள் குறித்து அபூபக்கர்(ரழி) அவர்களதும், உமர்(ரழி) அவர்களதும் முடிவுகள் வித்தியாசமாக இருந்தன.
உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாப்பையும், அபூபக்கர்(ரழி) அவர்கள் குடும்ப உறவு, சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டும் கருத்துக் கூறினார்கள். எனவே, கைதிகளைக் கொல்ல வேண்டும் என்று உமர்(ரழி) அவர்கள் கூற, அவர்கள் விடயத்தில் மென்மையான கருத்தை அபூபக்கர்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
இதை வைத்து அபூபக்கர்(ரழி) அவர்கள் காஃபிர்களுக்கு support பண்ணுவதாகவோ, வளைந்து கொடுப்பதாகவோ, சமாளிப்பதாகவோ, கொள்கையில் தடம் புரண்டு விட்டதாகவோ உமர்(ரழி) அவர்கள் விமர்சனம் செய்யவில்லை.

பிரிவினை ஏன்?
குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே சில மஸ்அலாக்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மற்றும் சில விடயங்களைப் பொறுத்த வரையில் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களாக உள்ளன. இதில் தாராளமாக விட்டுக் கொடுத்து நடக்கலாம்.மற்றும் சில அம்சங்கள் இஸ்லாம் அங்கீகரித்தவை. ஏற்றுக்கொள்வதற்கும், சந்தர்ப்ப-சூழ்நிலையை அவதானித்துத் தவிர்த்துக்கொள்வதற்கும் அனுமதி உள்ள அம்சங்கள். இது நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளாக இருக்குமே தவிர கொள்கை ரீதியானதாகவோ, மார்க்கச் சட்டதிட்டத்தின் அடிப்படையில் எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்குரியதாகவோ இருக்காது. இந்த மூன்று அம்சங்களிலும் ஒருவர் மற்றவரை விமர்சனம் செய்யாமல் சுமுகமான உறவைக் கையாளலாம்.

இவற்றுக்கு உதாரங்களாகப் பின்வரும் செய்திகளைக் கூறலாம்;

-1- விட்டுக் கொடுத்துப் புரிந்துணர்வுடன் அவரவர் கருத்துப் படி அமல் செய்வதைத் தடுக்காத போக்கைக் கைக்கொள்ள வேண்டிய அம்சம் :

இமாம் சத்தமிட்டு ஓதும் தொழுகைகளில் பின்னாலுள்ளவர்கள் சூறதுல் ஃபாதிஹாவை ஓத வேண்டுமா? அல்லது கேட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

-2- இஜ்திஹாதுக்குரிய அம்சம்
உள்நாட்டுப் பிறையா? சர்வதேசப் பிறையா? எதை வைத்து அமல் செய்வது? உறுப்பு தானம் செய்யலாமா?

-3- நிர்வாக ரீதியான முடிவு:
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சமூகச் சேவைக்காகவும், அழைப்புப் பணிக்காகவும் நிதியைப் பெறலாமா? அல்லது தவிர்க்க வேண்டுமா?

இது போன்ற நிலையில் நாம் நிதி பெறுவதில்லை என முடிவு செய்துள்ளோம். நீங்கள் நிதியைப் பெற்றுச் சேவை செய்வதென்றால் எமக்கு ஆட்சேபனையில்லை என்ற போக்கே கடைபிடிக்கப்பட வேண்டும்.

எனினும், குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணவும், தப்பபிப்பிராயங்களை வளர்க்கவும், அவதூறுகளையும், போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்கவும் இத்தகைய சாதாரணப் பிரச்சினைகளைத்தான் பயன்படுத்துகின்றான் என்பது ஆச்சரியமான செய்தியாகும்.

அகீதாவில் ஒன்றுபட்டவர்கள் இத்தகைய சாதாரணக் கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டு நிற்பதும், நீதி-நியாயங்களையும், இஸ்லாமிய வரம்புகளையும் மீறிக் கோபத்தையும், குரோதத்தையும் வெளிப்படுத்துவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பிறை போன்ற அம்சங்களை அடிப்படையாக முன்வைத்து இயக்கங்களைத் துண்டாடுவதையும், ஆலிம்களைப் புறக்கணிப்பதையும் எப்படி நியாயப்படுத்த முடியும்?

அனைத்திலும் குர்ஆன்-ஸுன்னா பேசுவோர் அகீதா ரீதியான முரண்பாடுகளைக் கையாள்வதை விட மிக மோசமான வெறியுணர்வுடன் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களை எப்படிக் கையாள முடியும்? உண்மையில், மார்க்கத்தில் பற்றிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது. தனிநபர் மீதுள்ள பற்றும், பகையும், தனியான அமைப்புகள் மீதுள்ள முத்திப் போன பக்தியும்தான் இத்தகைய பகையை ஏற்படுத்துகின்றன.

எனவே, இஜ்திஹாதுக்குரிய அல்லது சாதாரண நிர்வாக ரீதியான முடிவுகள் எமது சகோதரத்துவத்தையோ, பிரசார அமைப்புகளையோ சிதைக்காத விதத்தில் கையாளப்பட வேண்டும்.

பிறை விடயத்தில் இதன் பின் ஒன்றுபட்ட முடிவு வருவதற்கான வாய்ப்பு அரிதாகவே இருக்கின்றது. இஜ்திஹாதுக்குரிய அம்சம் என்ற வகையில் சுய ஆய்வை இது விடயத்தில் விட்டுக் கொடுப்பது கூடக் குற்றமாகாது. குறிப்பாகப் பிறை விடயத்தில் இஸ்லாமே விரிந்த தாராளப் பார்வையைத்தான் வேண்டி நிற்கின்றது. அப்படி வர முடியாது போனால் கூட பிறையால் பிளவுபட்டுப் பகையுணர்வுடன் செயற்படும் இந்த நிலையையாவது நீக்குவதற்கு நாம் நிச்சயமாகச் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளோம். இதனைக் கருத்திற்கொண்டு களப்பணி புரிவோமாக!

எழுதியவர் :மௌலவி S.H.M. இஸ்மாயில்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...