(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, June 27, 2010

தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!

Author: டாக்டர். பெரு. மதியழகன்

குன்றும் குழியும், மேடும்-பள்ளமும், முள்ளும் புதருமாய், பசுமையும் வெறுமை யுமாய் உலகம் இருப்பது போலத் தான் மனித வாழ்க்கையும் இன்பமும் துன்பமும், வெற்றியும் தோல்வியும் நிறைந்தது.


தோல்விகளைத் தொட்டுகூடப் பார்க்காமல் வெற்றிகளை மட்டுமே தட்டிச் சென்றவர்கள் உலகில் ஒருவ ரேனும் உண்டா? பிஞ்சுக் குழந்தைகளாய் தவழ்ந்து, காலூன்றி, தட்டுத் தடுமாறி எழுந்து விழுந்தோமே எவரும் சந்தித்த முதல் தோல்வி அது தானே. அப்படி விழாதவர்கள் யார்? ஆனால் விழுந்தது எழுவதற்காகத்தானே! இதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

வீழ்ந்தது நிரந்தரமல்ல தற்காலிகமானதே, தோல்விகளும் அப்படித்தான் சிறியதோ பெரியதோ, தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் ஏது?

எது தோல்வி?

ஒருவன் இருக்கிற நிலையில் இருந்து எண்ணிய நிலையை அடைவது வெற்றி. ஒரு மாணவன் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தால் வெற்றி. மாறாக பூஜ்ஜியம் வாங்கியிருந்தால் அது தோல்வி. பூஜ்ஜியத்திற்கும் நூறுக்கும் இடையில் உள்ள மதிப்பெண்கள் பெற்றிருந்தால். வெற்றியின் அளவு, சாதனையின் அளவு வேறுபட்டிருக்கிறது என்று சொல்லலாமே தவிர தோல்வி இல்லை.

இந்த ஆண்டு பிற்படுத்தப் பட்ட மாணவன் 300க்கு 292 பெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதைத் தோல்வி என்று சொல்லிவிட முடியுமா? ஆனால், அதே மாணவனுக்கு கால்நடை மருத்துவம், பொறியியல் மற்ற அனைத்தும் கிடைத்துள்ளதே! இது எப்படி தோல்வியாகும்.

எதார்த்த நிலையில் 292க்கு மேல் வாங்கியவர்களோடு ஒப்பிடும்போது, அது தோல்வி என்கிறோம். அடுத்து, 292க்கு கீழே பெற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது வெற்றி. எனவே, தோல்வி என்பதே இல்லை. வகுத்துக்கொண்ட எல்லைகளுக்கு, அது தோல்வி யாக இருக்கலாம். ஆனால் உண்மையில் வெற்றிதானே!

இதேபோலத்தான் வணிகத் திலும், விளையாட்டிலும், மற்ற வற்றிலும் குறித்த புள்ளிகளை எட்டவில்லையானால் அதைத் தோல்வியாகக் கருதாமல், அடைந்த வரையில் அது வெற்றியே. அடைய வேண்டி யதை அடுத்த முயற்சியில் அடை யலாம் என்று எண்ணுவதே அறிவுடமை.

பொதுவாக, நம் தோல்விக்கு துணையாகவும், வெற்றிக்குப் பகையாகவும் இருப்பவை எவையெவை என்று ஆய்வோம்.

1. கல்வியின்மை

கல்வி (Education) என்றால், ஒருவன் தற்போது இருக்கிற நிலையில் இருந்து புதிய அறிவும் (Knowledge) செயலாற்றலும் (Skill) மனோபாவத்தில் (Attitude) மாற்றமும் பெற்றால் அதையே கல்வி என்கிறோம். (Change in the behaviour is education).

கல்விக் கூடம் சென்று கற்பது மட்டும் தான் கல்வி என்பதன்று. ஒருவன் எந்தக் காரியத்தில் அல்லது தொழிலில் அல்லது பதவியில் அல்லது வணிகத்தில் வெற்றி பெற எண்ணுகிறானோ அதில் வெற்றிபெறத்தக்க அளவுக்கு சிறப்பாக அந்தத் துறை தொடர் பான அறிவையும், செயலாற்ற லையும், (Skill and experience) உரிய மனோபாவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

மாறாக, தேர்ந்தெடுத்த துறையில் போதிய அறிவும், ஆற்றலும், மனோபாவமும் இல்லையெனில் எதிர்பார்த்த வெற்றி கிட்டாது.

இதற்குச் சான்றாக ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். நாமக்கல், ஈரோடு பகுதியில் முட்டைக் கோழிப் பண்ணைத் தொழில் ஓகோ என்று வளர்ந்தது. ஏராளமான விவசாயிகள் பண்ணைகளைத் தொடங்கி நடத்தி வந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பண்ணை கள் இருந்தன. இன்றைக்கு சில நூறு பண்ணைகளாக சுருங்கி விட்டன. சிறுசிறு பண்ணைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன.

இவர்கள் பக்கத்தில் உள்ள விவசாயி கோழிப்பண்ணை வைத்ததைப் பார்த்து நாமும் தொடங்கலாம், என்று தொடங்கி யவர்கள். அது தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்து, உரிய பயிற்சிகளைப் பெற்றுச் செய்தவர்கள் அல்ல. விளைவு ஆரம்பத்தில் ஓகோ என்று வளர்ச்சி கண்டார்கள். ஒரு காலகட்டத்தில் நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டு கோழிகள் மடிந்து போனபிறகு மீண்டும் தொடர தெம்பற்றுப்போனார்கள்.

இந்தத் தோல்விக்குக் காரணம் போதிய அறிவும், அனுபவமும், செயல் திறனும் இல்லை என்பதுதான். அதே போல, நம்முடைய திறமையும் நாம் எடுத்துக் கொண்ட செயலும் இணைந்து போக வில்லை என்றாலும் தோல்வி நிச்சயம்.

2. பேராசை

ஒரே எட்டில், உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்கள். இடறி விழுந்து விடுகிறார்கள். உறுதி யாகக் காலூன்றி, படிப்படியாக சிகரத்தை எட்டுவதுதான் சிறப்பு. நினைத்தவுடன் அன்றே, ஒரே முறையில் சாதித்துவிட வேண்டும் என்று பதற்றப்படுகிறவர்களும், உயர்ந்து விட வேண்டும், அதுவும் உடனே கோடிகோடியாக சேர்த்திட வேண்டும் என்று பேராசைப்படுகிறவர்களும், தோல்விகளைச் சந்திக்கிறார்கள்.

ஒரு தொழிலைத் தொடங்கி அதில் வலுவான அடித்தளம் அமைத்து, உறுதி யாக வளர்ந்து, நிலைநிறுத்திக் கொண்டபின் வேறு தொழிலையும் செய்ய முற் படுவதே அறிவுடைமை. மாறாக ஒரே நேரத்தில் ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்; என்று கவனத்தை பல வழிகளில் அலைய விடுவது தோல்வியைத் தரும்.

எனக்குத் தெரிந்த ஓர் இளைஞர் பத்தாண்டுகளுக்கு முன் அவர் கல்லூரி மாணவராக இருந்த போது எமது அலுவலகத் திற்கு வந்து சந்தித்தார். எமது தன்னம்பிக்கை மிக்க சொற்கள் அவருக்கு முன்னேற வேண்டும் என்ற ஊக்கத்தைத் தந்ததாகச் சொன்னார்.

பட்டப்படிப்பு முடித்து வந்து அவரது தந்தை நடத்தி வந்த நகைக்கடைத் தொழிலில் முழுமையாகத் தன்னை ஈடு படுத்திக் கொண்டு கடுமையாக உழைத்தார். ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டார். வீடு, கார் ஏராளமான வீட்டுமனைகள் என வாங்கிப் போட்டார். அவரை சந்தித்த போது சொன்னார், “நீங்கள் அளித்த ஊக்கம்தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம்” என்றார். அவருடைய முயற்சியைப் பாராட்டினேன்.

பிறகு, விரைவாக மிகப் பெரிய அளவு பணம் சேர்க்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. வங்கி நிதி உதவியுடன் பொக்லின் இயந்திரம் ஒன்று வாங்கினார். ஓரிரு மாதங்கள் கர்நாடக மாநிலம் சென்று பணத்தை மூட்டை கட்டி வந்து கொட்டியது கண்டு அவர் தந்தை மகிழ்ந்து போனார். உடனே, மேலும் இரண்டு

பொக்லின்களை வாங்கினார். ஒன்று கர்நாடகத்தில், மற்றொன்று கோவாவில், அடுத்தது குஜராத்தில், என்று வெவ்வேறு இடங்களில் அந்த இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகச் சொன்னார்.

விரைந்து மிகப்பெரிய அளவுக்குப் பணம்சேர்த்து அவர் வாழும் நகரத்திலேயே பெரிய பணக்காரராக ஆகிவிடப் போவ தாகச் சொன்னார். “அவசரப் படாதீர்கள், அகலகால் வைக் காதீர்கள்” என்றேன். “எந்த வழியிலாவது உடனே நிறைய பணம் ஈட்ட வேண்டும்” என்றார். “எந்த வழியிலாவது என்பது சரியில்லை, உழைத்து நேரிய அறவழியில் பொருள் ஈட்டுவது முக்கியம். பணம் சம்பாதிப்பது மட்டுமே உயர்வாகிவிடாது” என்றேன்.

பணபோதையில் உச்சத்தில் அவர் இருந்தார். எதையும் உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அப்போது இல்லை.

மீண்டும் ஓராண்டு கழித்து பார்த்தபோது எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவும். ஒப்பந்தக் காரர்களிடம் பணியாற்றியதில் முப்பத்தைந்து இலட்சம் ரூபாய் வர வேண்டியது வராமல் போய்விட்டதால், வங்கிகளுக்கு உரிய தவணைகளைக் கட்ட முடியவில்லை என்றும், வங்கியர் வந்து வண்டிகளை ஜப்தி செய்து ஏலம் விட்டுவிட்டதாகவும் சொன்னார். வீடு, கார், நிலம் எல்லாம் விற்று கடனடைத்து விட்டதாகவும் சொன்னார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வதென்ன? அவசரமாக, திடீர் என்று செல்வந்தராக வேண்டும் என்ற பேராசை, ஒன்றில் நின்று உறுதியாக காலூன்றிய பிறகு அடுத்தது என்றில்லாமல் அகலக்கால் வைத்தது, இவையே இங்கு தோல்விக்கு உரிய காரணமாக இருக்கின்றன.

3. களமும் – காலமும் கருதாமை

“காலத்தே பயிர் செய்” என்பார்கள். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பர்.

பயிர்செய்யும் முன்பு மண்ணைப் புரட்டிப் போட்டு, உழுது பக்குவப்படுத்தி சிறிது காலம் மண்ணை ஆற விடுவதும் முக்கியம். பிறகு மழை விழுந்ததும் விதைப்பார்கள். பருவம் தவறி விதைத்தால் விளைச்சல் சரியாக இருக்காது.

அதேபோல, எச்செயலையும் உரிய காலத்தில் செய்யவில்லை என்றால் உயரிய விளைவுகள் இருக்காது. மேலும் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும், இடையில் தேவையான கால இடைவெளி கொடுத்து தயார்ப்படுத்திக் கொண்டு கவனத்துடன் செயல்படவில்லை எனில் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

“ஞானம் கருதினும் கைகூடும் காலம் கருதி இருந்தார் செய்யின்” என்றார் திருவள்ளுவர். காலம் கருதி செய்யாததால் மாவீரன் நெப்போலியன் வெற்றிக் களத்தை ரஷ்யாவில் இழந்ததை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

“ஒருவன் பெருவாழ்வு வாழ ஆசைப்படலாம். ஆனால், தான் எழுந்து நின்று, பெருவாழ்வை நோக்கிப் பறக்கும் காலம் வரும் வரையில் தன்னை அதற்காகத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் பிரெஞ்சு எழுத்தாளர் எமிலிஜோலா.

மேலும், ஒரு செயலைக் குறித்து பல நாள்கள் வரை முடிவு செய்யாமல் (Decision making) காலத்தை தாழ்த்திக் கொண்டே செல்வதும், முடிவு எடுத்தே ஆகவேண்டும் என்ற பொழுது அதனை அலட்சியப் படுத்துவதும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதும் நம்மைத் தோல்வி யில் கொண்டு விட்டுவிடும்.


தன்னம்க்கை தளத்திலிருந்து....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...