(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, June 29, 2010

15 வயதிற்க்கு மேற்ப்பட்ட இந்திய குடிமகன்களுக்கு புகைப்பட அடையாள அட்டை

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட அனைவருக்கும், புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.


"கணக்கெடுப்பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம்" என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.சென்னை ராஜாஜி பவனில் கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; "தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 15ம் தேதி வரை, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு,தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெறும். இப்பணியில், 1 லட்சத்து 50 ஆயிரம் களப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.


இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு,இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் போது, வீடு அமைப்பு விவரம் மற்றும் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, 'டிவி,' கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் உள்ளதா என்ற விவரம் சேகரிக்கப்படும்.


தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் விவரங்களில், தனி நபர் பெயர், அவர் படித்த ஊர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரமும் பெறப்படும். அதன்பின் ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.


பதினைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகை பதிவுகளை சேகரிக்கும் பணியும் நடைபெறும். அடுத்த ஆண்டில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். அதோடு, பிரத்யேக அடையாள எண்களும் வழங்கப்படும்.


கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு கணக்கெடுக்க வரும்போது, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்தால், தாசில்தார், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் கொடுத்தால், மற்றொரு நாளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுக்க வருவர். வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.


வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம் பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால்,மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம்.கணக்கெடுப்பில் இலங்கை, பர்மா அகதிகள் இடம் பெறுவர்.


கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம்". இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...