(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, May 19, 2010

கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல்!

காது கேளாதோர் பள்ளியில் முதலிடம் பெற்ற பிளஸ்-2 மாணவி!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மாணவி காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்றார்.
சென்னை திருவல்லிக்கேனியைச் சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முகம்மது அப்துல்லாஹ்-எம்.எஸ். நாகூர் மீரா தம்பதிகளின் மகள் ஃபாத்திமா பானு. பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்குப் பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள்.



மகளின் எதிர்காலம் அவர்களின் கண்முன் வந்து நின்றது. முகம்மது அப்துல்லாஹ் தன்னுடைய குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு, மகளின் குறைபாடு தெரியாமல் அவரைப் படிக்க முடிவு செய்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள 'லிட்டில் பிளவர் கான்வென்ட்' மேநிலைப்பள்ளியில் அவரைச் சேர்ந்தார்.

வாய் பேச முடியாவிட்டாலும், காது கேட்கும் திறனை இழந்து விட்டாலும் மாணவி ஃபாத்திமா பானு தனக்கு எதிரே பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்று இருக்கிறார். இந்த ஆற்றலே அவர் பிளஸ்-2வில் அதிக மார்க் எடுப்பதற்குத் துணை புரிந்தது.

பிளஸ்-2வில் பிசினஸ் மேக்ஸ் பாடப் பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதிய அவர், கடந்த 14.05.2010 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1000-க்கு 953 மார்க் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

தமிழில் 177 மார்க்கும், பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குபதிவியலில் 189, பிசினஸ் மேக்ஸில் 193 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார். இந்த வெற்றி அவரையும் அவரின் பெற்றோர்களையும் மன மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்-2க்கு பிறகு பி.காம் படித்து, சி.ஏ.(ஆடிட்டர்) ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது.

முதலிடம் பெற்ற மாணவியைப் பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி, கட்டிப் பிடித்து "உன் விடாமுயற்சிக்கு பாராட்டுகள்" என்று கூறி வாழ்த்துத் தெரிவித்தார். பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி ஃபாத்திமா பானு இன்னும் ஓராண்டு ஆங்கிலக் கல்வியை அதே பள்ளியில் கற்க வேண்டியுள்ளது. அதன்பிறகு அடுத்த ஆண்டு (2011) அவர் கல்லூரிக்குச் சென்று தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடருவார்.

இது குறித்து பானுவின் தந்தை முகம்மது அப்துல்லாஹ் கூறியதாவது:-
"ஃபாத்திமா எனக்கு மூத்த மகள். பிறந்த சில மாதங்களிலே அவளால் பேசவும் கேட்கவும் முடியாது என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இது எங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மனதில் தோன்றிய காயங்களைத் தாங்கிக்கொண்டு, என் மகளின் எதிர்காலத்திற்காகப் பாடுபட்டு வருகிறோம். ஆண்டவனின் கருணையால் பிளஸ்-2 தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறாள். ஆடிட்டராக வர வேண்டும் என்பது அவளின் விருப்பம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்"

நன்றி : தினத்தந்தி http://www.satyamargam.com/1469

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...