(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, October 19, 2015

நீ யார் எங்களுக்குப் பிச்சை போட?

"முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொள்ளலாம்; ஆனால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட்டுவிடவேண்டும்" என ஆர் எஸ் எஸ் பிரச்சாரக் பொறுப்பிலிருந்த - இப்போது ஹரியானா மாநில முதலமைச்சராக இருக்கும் மனோஹர்லால் கட்டார் என்பவர் கூறியுள்ளார்.

இந்துத்துவ பயங்கரவாத சக்திகளால் ஆட்டுவிக்கப்படும் பா. ஜ. கட்சியானது, அறுதிப்பெரும்பான்மையுடன் இந்தியாவின் மத்திய அரசைக் கைப்பற்றியதுமே நடுநிலையாளர்களும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமுதாய மக்களும் எதற்காக அச்சப்பட்டார்களோ அது படிப்படியாக நிறைவேறி வருகின்றது.

ஆம்! இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலைக்குமா என்ற அச்சம்தான் அவர்களிடம் இருந்தது.
2014 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கும் முன்பே," மோடியைப் விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்குப் போகவேண்டியதுதான்; வருங்காலத்தில் அவர்களுக்கு இந்தியாவில் இடம் இருக்காது. பாகிஸ்தானில் மட்டுமே இடம் இருக்கும்" என பீகார் மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான கிரிராஜ் சிங் மிரட்டிய போத ு எவ்வித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. இவர்கள் அதிகாரத்துக்கு வரும் முன்பே இப்படி என்றால், வந்த பின் இன்னும் என்னென்னவெல்லாம் பேசுவார்களோ; செய்வார்களோ என்ற அச்சமும் ஐயப்பாடுமே ஏற்பட்டன.
 பாபா ராம்தேவுடன் மனோஹர் லால் கட்டார்தேர்தல் முடிந்தது. இந்துத்துவ சக்திகளே எதிர்பாராத அறுதிப்பெரும்பான்மையை பா.ஜ.க பெற்றது. தமக்காகப் பேசிய கிரிராஜ் சிங்கை மத்திய அமைச்சரவையில் சேர்த்து அழகு பார்த்தார் மோடி அதனால் அச்சக்திகள் இன்னும் வீரியத்துடம் களமிறங்கி, இந்தியாவின் ஜனநாயகத்துக்கும் கண்ணியத்துக்கும் பெருமைக்கும் அடையாளச்சின்னமாக விளங்கும் நாடாளுமன்றத்திலேயே "பாகிஸ்தானுக்கு ஓடு" எனும் வெறிக்கோஷத்தை முழங்கினர் .

"மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்" என்று கிரிராஜ் சிங் சொன்னது 'வெளியில் பேசிய பேச்சு'. ஆனால் மதிப்பு மிகுந்த ஜனநாயக பீடமான நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் சக உறுப்பினர்களைப் பார்த்து "பாகிஸ்தானுக்கு ஓடு" எனக் கூறியது அவமானகரமானது
பா ஜ. க ஆட்சியைப் பிடித்த உடனே -- 2014 ஜூலை மாதம் 17 ஆம் தேதி -- டெல்லி மகாராஷ்டிர பவனிற்குச் சென்ற சிவசேனாக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மகாராஷ்டிர உணவு வகைகள் வழங்கப்படாததால் அங்கு பணியாளராக இருந்த அர்ஷத் ஸுபைர் என்பவரின் வாயில் வலுக்கட்டாயமாகச் சப்பாத்தியைத் திணித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

முஸ்லிமான அந்தப் பணியாளர் புனித ரமலான் நோன்பிருந்த நிலையில் அவரது வாயில் சப்பாத்தியைத் திணித்த பிரச்சனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்பட்டது. மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிவசேனா உறுப்பினர் ராஜன் விச்சாரேவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் ரமேஷ் பிதூரி என்பவர் அச்சுறுத்தும் வகையில் அவையின் மையப்பகுதிக்கு வந்து உறுப்பினர்களை நோக்கி, " பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்; இது ஹிந்துஸ்தான்" எனக் கத்தினார்.

இப்போது மாட்டைப் பிடித்துத் தொங்குகிறார்கள் .
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாத்ரியில் மாட்டுக்கறி தின்றதாக வதந்தியைப் பரப்பி முஹம்மத் அக்லாக்கை அடித்தே கொன்றனர் இந்துத்துவ பயங்கர வாதிகள்.

இதற்குப் பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்வினையாகப் பன்றிக்கறி உண்ணும் போராட்டம் நடத்தப் போவதாக பா ஜ கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் எனும் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கும் பா ஜ கட்சியின் நாலாந்தரப் பேச்சாளர் ராஜா அறிவித்தார்.

தாராளமாகச் சாப்பிடு. மாடு தமக்குப் புனிதம் என ராஜா வகையறா கூறுகின்றனர் பன்றி அசுத்தம் என முஸ்லிம்கள் கூறுகின்றோம். எங்கள் மறை கூறுகிறது. எனவே ராஜா மட்டுமின்றி, ராமகோபாலன், மோஹன் பகவத், சுப்ரமணியம் சாமி சாக்ஷி மகாராஜ், கட்டார், மோடி ஆகியோரும் பன்றிக்கறி சாப்பிட்டால் முஸ்லிம்களுக்கு எவ்விதக் கவலையுமில்லை. மாட்டைப்போல் பன்றியையும் அவதாரமாகவும் தெய்வமாகவும் கருதும் இந்துகளின் கவலை அது.
பெரும்பான்மையான இந்துக்களால் உண்ணப்படும் மாட்டிறைச்சிக்கு முஸ்லிம்கள் மட்டும் தாக்கப்படுவது இந்துத்துவ பயங்கரவாதத்தால் மட்டுமே என்பதில் ஐயமில்லை.
வி எச் பி யின் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் எனும் அறிவிலி, சவூதியில் பன்றிக்கறி சாப்பிட முடியுமா என மகாப்பெரிய தத்துவத்தை உதிர்த்துள்ளார்.
அட 'அறிவுக்கொழுந்தே'!

பன்றி முஸ்லிம்களுக்கு அசுத்தமான- தடை செய்யப்பட - உணவு. அதனால் சவூதி மட்டுமின்றி உலகில் வாழும் எந்த முஸ்லிமும் பன்றிக்கறி சாப்பிட மாட்டான். முஸ்லிம் நாடுகளில் பன்றி வளர்க்கப்படுவதுமில்லை.வாழ்வதுமில்லை. 

ஐக்கிய அரபு அமீரகம், போன்ற வளைகுடா முஸ்லிம் நாடுகளில் வாழும் ஐரோப்பியர், சீனர், ஃ பிலிப்பைனியர் போன்ற வெளிநாட்டவருக்காகச் சில பேரங்காடிகளில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சி விற்கப்படுகிறது.ஆனால் மாடு அப்படியன்று. உலகில் மத வேறுபாடின்றி எல்லா நாடுகளிலும் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. 

பால் கறந்து குடிக்கப் படுகின்றது.அதன் இறைச்சி உண்ணப்படுகிறது. இந்துக்களில் ஒரு பிரிவினர் மட்டுமே புனிதமாகக் கருதும் மாடு, பெரும்பான்மையான இந்துக்களால் உண்ணப்படுகிறது. ஆனால் மாட்டிறைச்சி என்ற காரணம் சொல்லப்பட்டு முஸ்லிம்கள் மட்டும் தாக்கப்படுவது இந்துத்துவ பயங்கரவாதத்தால் மட்டுமே என்பதில் ஐயமில்லை.
மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது பா ஜ கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மாட்டைக் கொன்றால் 5 ஆண்டு சிறை, மகாராஷ்டிர மாநிலத்தில்... மத்திய பிரதேசத்தில் 7 ஆண்டுகள்,....ஹரியானாவில் 10 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுமாம். . மாட்டை விற்கும் விவசாயி அல்லது வியாபாரி, வாங்குபவர், மாடுகளை ஏற்றிச் செல்லும் வண்டியோட்டி, மாடுகளை அறுப்பவர், சமைப்பவர், சாப்பிடுபவர் உள்ளிட்ட அனைவரும் இச்சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள் ஆவர்.. மாட்டுக்கறி வைத்திருப்பதாகவோ, சாப்பிடுவதாகவோ சந்தேகப்பட்டால் ஒரு கீழ்நிலைக் காவலர் கூட வீடு புகுந்து சோதனை செய்யலாம் என்ன ஒரு அறிவாளித்தனம்.?

கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான சாக்ஷி மகாராஜ் தம் வழக்கமான கொலை வெறிப்பேச்சில், தம் தாயான மாட்டைக் காப்பாற்ற " கொலைக்கும் தயங்க மாட்டோம்" என்று அறிவித்து விட்டார். கூடவே உ.பி. மாநில அமைச்சர் ஆஸம்கான் பாகிஸ்தானி என "அடையாளம் கண்டு" விஷம் கக்கியுள்ளார்.
இந்நிலையில்தான் ஹிமாச்சல் பிரதேசத்தில் நேற்று, மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு சென்ற, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20  வயதேயான அக்தர் எனும் பெயருள்ள ஒரு முஸ்லிம் இளைஞனை இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் மாட்டின் பெயரால் அடித்தே கொன்றுள்ளது. "மாட்டுத் தாய்க்காகக் கொலையும் செய்வோம்"  என்று சாக்ஷி மகாராஜ் சொன்னதை மெய்ப்பித்து அடித்தே கொன்றுள்ளனர் பயங்கரவாதிகள்.

இத்தனை நடந்தும் மோடி வாய்திறவாமல் ரசித்துக் கொண்டுள்ளார்.
ஹரியானா முதலமைச்சர் முஸ்லிம்களுக்குப் பிச்சை போடுகிறார் - "வேண்டுமானால் இந்தியாவில் வாழ்ந்து கொள்" என.. இந்தியாவில் வாழ முடியாவிட்டால் பாகிஸ்தானுக்குத்தானே முஸ்லிம்கள் போக வேண்டும் என்ற எண்ணம்.

நாங்கள் என் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்?
நீ யார் எங்களுக்குப் பிச்சை போட?

இது எங்கள் நாடு; ஆயிரம் ஆண்டுகள் நாங்கள் வாழ்ந்த - வாழும் நாடு. ஆண்ட நாடு!

உங்கள் சதியால் பாகிஸ்தான் பிறந்த போதும் அங்கு போகாமல் இங்கே வாழும் எம் தாய் நாடு இது.

அறுதிப் பெரும்பான்மையும் அதிகார மமதையும் எப்போதும் கூட வாரா. ஐந்தாண்டுகளுக்கொருமுறை தேர்தல் வரும். அப்போது இந்திய மக்கள் பாடம் புகட்டுவார்கள். மாட்டரசியலுக்கு மாற்றரசியலைத்தேடி ஒரு முடிவு எடுப்பார்கள். அப்போது அது உங்களுக்கு மரண அடியாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.


நன்றி - மஹ்மூத் அல் ஹஸன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...