(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, May 25, 2015

ஆடை களையும் எக்ஸ்- ரே சென்டர்கள் : ஒரு பகீர் ரிப்போர்ட்!


சென்னையில் பிரபலங்கள் வசிக்கும் பகுதியில் இயங்கிவருகிறது பிரபலமான அந்த மருத்துவமனை.  இந்த மருத்துவமனையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த அவமானம்தான் தேசம் தலைகுனிய காரணம்.

தென் கொரியாவைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் ஹாவா( பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெங்களுருவில் படித்தவர். அங்கு தன்னுடன் படித்த நண்பர்களை காண வருடத்திற்கொரு முறை சென்னைக்கு வந்துசெல்வதை வாடிக்கையாக கொண்டவர். அவரும் மருத்துவத் துறை சார்ந்த படிப்பை பயின்றவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

6 மாதத்திற்கு அப்படி சென்னை வந்தவர், தன் நண்பர்களை எல்லாம் சந்தித்திருக்கிறார். சொந்த நாட்டிற்கு புறப்பட்டு செல்வதற்கு ஒருநாள் முன்பு அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. விபரம் தெரியவந்த அவரது நண்பர்கள், பிரபலமான அந்த மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு மாலையில் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லலாம் என்றனர்.

நண்பர்களுக்கு சிரமத்தை தர விரும்பாத ஹாவா அதை மறுத்துவிட்டு, அன்று மாலையே நண்பர்கள் குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்கு தனியே அப்பாயின்மெண்ட் வாங்கிச் சென்றார். மருத்துவரிடம் தன் பிரச்னையை கூறியதையடுத்து, இதயம் சம்பந்தமான சில பரிசோதனைகளை செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார் மருத்துவர். மருத்துவமனையின் இன்னொரு தளத்தில் இயங்கும் பரிசோதனை மையத்தில் மறுதினம் அவருக்கு அப்பாயின்மெண்ட் கிடைத்தது.

மறுநாள், ஹாவா தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பரிசோதனை அறைக்குள் சென்றார். மருத்துவர் பரிந்துரைத்த பரிசோதனை தாளை வாங்கிப் பார்த்த அங்கிருந்த பணியாளர், ஹாவாவை இயல்பான நிலையில் ஒரு எந்திரத்த்தில் படுக்க வைத்து சில சோதனைகள் செய்தார். 10 நிமிடங்கள் கழிந்தபின்னர் அவருடைய மேலுடையை கழட்ட சொன்னார். ஹாவா அதிர்ச்சியடைந்தார். காரணம் பணியாளர் ஒரு ஆண்.
'இதய பரிசோதனைதானே... இதற்கு உடையை களைய வேண்டுமா?' என ஹாவா அந்த பணியாளரிடம் கேட்க, ஆம் என்ற பணியாளர், "உங்களுக்கு எழுதப்பட்ட பரிசோதனைகள் அதிநுட்பமானது. உடையின்றி பல விதங்களில் சோதனை செய்தால்தான் நோயின் தன்மையை நுட்பமாக மருத்துவர் கணிக்க முடியும்” என ஆங்கிலத்தில் அவரிடம் தெரிவிக்க, ஆரம்பத்தில் சங்கடப்பட்ட ஹாவா, பணியாளரின் நம்பிக்கையான பேச்சால், துணிந்து பரிசோதனைக்கு தயாரானார்.

இருப்பினும் தன்னுடன் ஒரு பெண் பணியாளர் இருக்கவேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார். இன்று பெண் பணியாளர் யாரும் டூட்டியில் இல்லை என்ற அந்த பணியாளர், “அதுமட்டுமின்றி குறிப்பிட்ட இந்த பரிசோதனையின்போது வேறு யாரும் இருப்பது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” எனக் கூறியிருக்கிறார். வேறு வழியின்றி நண்பர்கள் பரிந்துரைத்த மருத்துவமனை என்பதால்,  பணியாளர் சொன்னபடி தன் உடையை முற்றாக களைந்து அவர் சொன்ன விதங்களில் பரிசோதனைக்கு உடன்பட்டார்.

சில சமயங்களில் பணியாளர் அவரது மார்பகங்களை தொட்டும் பரிசோதனையை தொடர்ந்தார்.  அரை மணிநேரம் கடந்த நிலையில், பணியாளரின் சில செயல்கள் நெருடலைத்தர, அதற்கு மேல் பரிசோதனையைத் தொடர விருப்பமின்றி அங்கிருந்து வெளியேறினார் ஹாவா.
ஒரு பிரபல மருத்துவமனையில் பரிசோதனைக் கூடத்தில் மருந்துக்கு கூட பெண் பணியாளர்கள் இல்லாததும், பணியாளரின் வித்தயாசமான நடவடிக்கையாலும் குழம்பித் தவித்த ஹாவா, மறுநாள் தன்னை சந்திக்க வந்த நண்பர்களிடம் தனக்கு பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அவர்களிடம் சொல்ல, அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இப்படி ஒரு பரிசோதனை தங்களுக்கு தெரிந்து இல்லை என்ற அவர்கள், ஹாவாவை அழைத்துக்கொண்டு அதே பரிந்துரைக் கடிதத்துடன் வேறு ஒரு மருத்துவமனையின் பரிசோதனை மையத்தினை அணுகி,  ஹாவாவிற்கு பரிந்துரைக்கப்பட்ட சோதனைக்கான முறையை விசாரித்தனர். அவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு ஹாவா அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார். காரணம் அதிகபட்சம் 5 நிமிடங்களே செலவாகும் அந்த பரிசோதனைக்கு,  உடைகளை கழற்ற வேண்டிய அவசியமே இல்லையாம்.

ஹாவாவிற்கு இந்த தகவல் தெரியவந்தபோது அதிர்ச்சியின் விளிம்பிற்கு சென்றார். மேலும் அந்த அறையில் அந்த ஆண் பணியாளரால் தான் பாலியல் தொல்லைக்குள்ளாகியிருப்பதை உணர்ந்து வெட்கமும், ஆத்திரமும் கொண்டார். கூடவே அந்த அரை மணிநேரத்தில் பணியாளரின் செய்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்தது. காரணம் சில சமயங்களில் அறையில் ஒளிப் பரவியதாக அவர் தெரிவித்தார்.

நண்பர்களுடன் உடனடியாக அந்த மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினர் அவரது நண்பர்கள். தனக்கு நேர்ந்த அநியாயத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் எடுத்துரைக்க அதற்கு எந்த அதிர்ச்சி ரியாக் ஷனும் காட்டாத நிர்வாகம், " அந்த பரிசோதனை மையம் கான்ட்ராக்ட் அடிப்படையில் நடக்கிறது. எங்களுக்கும் அந்த மையத்திற்கும் சம்பந்தமில்லை" என சர்வசாதாரணமாக சொன்னது.

சம்பந்தப்பட்ட பணியாளரை அணுகி ஹாவாவின் நண்பர்கள் ஆத்திரப்பட்டபோது அதை மறுத்த அந்த பணியாளர், ஹாவாவுக்கு பரிசோதனை 5 நிமிடங்கள் மட்டுமே நடந்தது என்றும், அவர் சொன்னதுபோல் எதுவும் நடக்கவில்லை என்றும், அவருக்கு மனநோய் எனவும் கூறி அவர்களை அனுப்பிவைத்தார்.

அசிங்கமும் வெட்கமும் பிடுங்கித்தின்ன நண்பர்களிடம் ஹாவா அழுதார். கொஞ்நேரத்தில் மருத்துவமனையில் இருந்து அவருக்கு போன் வந்தது. இந்த விவகாரத்தை இதோடு விட்டுவிடுமாறும், பிரச்னை எழுப்பாமல் “பத்திரமாக” நாடு திரும்புவது நல்லது என மறைமுகமாக மிரட்டியது அந்தக்குரல்.
பிரச்னை எழுப்புவது பாதுகாப்பானதல்ல என்ற நண்பர்களின் அறிவுரையையும் மீறி ஹாவா, ஒரு முடிவுக்கு வந்தார். தனக்கு நேர்ந்த அவலத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல் மறைமுக மிரட்டல் விடுத்த அந்த நிர்வாகத்திற்கு எதிராக போராடுவதென அந்தக் கணத்தில் முடிவெடுத்தார் ஹாவா. உடனடியாக தனது நாட்டு துாதரகத்தின் அனுமதிப் பெற்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. ஹாவாவின் புகார் உறுதியானது. புகாரை திரும்பப் பெறக் கூறி, தனக்கு தெரிந்த அரசியல் நண்பர்கள் மூலம்  ஹாவாவை மிரட்டியது மருத்துவமனை நிர்வாகம். கூடவே அந்த பணியாளர் ஆட்களால் பல்வேறு மிரட்டல்களை சந்தித்தார் ஹாவா.

ஆனாலும் புகாரை திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தார் அவர்.

சில நாட்கள் விசாரணைக்குப்பின் அந்த ஆண் பணியாளர் மீது வழக்கு பதிந்தது காவல்துறை. உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட்டான் அந்த கருப்பு ஆடு. வழக்கு இப்போது விசாரணை நிலையை எட்டியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு குறித்து தனது நாட்டிலிருந்து கேட்டறிந்து கொள்கிறார் ஹாவா. தான் ஆஜராகவேண்டிய வாய்தாவிற்கு சிரமம் கருதாமல் வந்துசெல்கிறார் இன்றும்.

ஹாவாவின் நண்பர்களின் உதவியுடன் அவரிடம் பேசினோம்.  சமூகத்தில் தங்களுக்குள்ள அந்தஸ்தை தவறாக பயன்படுத்துவோர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஒரு சம்பவத்திற்காக அவர்களை மன்னித்தால் அடுத்த பல சம்பவங்களுக்கு அது உத்வேகம் அளித்து விடும். நான் வேறு நாட்டை சேர்ந்தவளானாலும் என் இந்திய சகோதரிகள் எதிர்காலத்தில் என்னைப்போல் பாதிக்கப்படக் கூடாது. அதனால்தான் வழக்கில் உறுதியாக இருக்கிறேன். வழக்கில் அவன் தண்டிக்கப் படுவது அவனைப்போன்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்” என்றார்.

பாராட்டுக்கள் ஹாவா!
எஸ்.கிருபாகரன்   THANKS TO VIKATAN

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...