(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, November 9, 2014

நாகூரை சேர்ந்த சகோதரி ஷஃபீரா அனீக்கா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

விமான நுட்பப் பொறியியல் என்று வழங்கப் படும் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரீங் படிப்பில் அண்ணா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார் ஷஃபீரா அனீக்கா என்ற மாணவி. தமிழகத்தின் நாகூரைச் சேர்ந்த அவருக்கு வாழ்த்துகள் கூறி ஒரு சிறு நேர்காணல் செய்தோம்.
ஷஃபீரா அனீக்கா, தமிழக முஸ்லிம் உலகின் கண்ணதாசன் என்று கருதப்படும் மறைந்த கவிஞர் நாகூர் சலீம்தம் பேத்தியாவார் என்பது சிறப்புக் குறிப்பு.


சிங்கையிலிருந்து கணிப்பேசி வழியாக தனது சிறிய தகப்பனார் ஜாஃபர் சாதிக் முன்னிலையில் அவர் கூறிய கருத்துக்களின் தொகுப்பு:

வாழ்த்துகள் சகோதரி ஷஃபீரா!  இந்தப் படிப்பு (ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரீங்) பற்றி சொல்லுங்களேன்

"ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் என்பது புவி எல்லைக்குட்பட்ட பறக்கும் இயந்திரங்கள் குறித்த, அவற்றின் கட்டுமானங்கள் குறித்த படிப்பாகும். பறக்கும் இயந்திரங்களின் வடிவமைப்பு, வேகம் என்பனவற்றில் மேலும் மேலும் முன்னேற்றம் காணத்தக்க வகையில் இக்கல்வி அளிக்கப்படுகிறது. இதில், ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியரிங் என்பது புவி எல்லைக்கு அப்பால் செல்லும் செயற்கைக்கோள்கள், ராக்கெட்கள் பற்றிய அறிவைத் தரும் வேறு ஒரு பிரிவாகும்.

இன்றைக்கு தொழிற்நுட்பம் வளர்ந்துவரும் வேகத்தில், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் முன்னேற்றம் வழிகோலப்படுகிறது. மானுடத்திற்கு இதில் பெரும் தேவையுண்டு!".

உங்களின் இச்சாதனையில் என்ன சிறப்பம்சம்?

"சிறப்பம்சம் என்று கேட்டால், இயந்திரப் பொறியியலின் கீழ் வருகிற 'ஆண்கள் மட்டுமே படிக்கத்தக்கப் படிப்பு' என்று பொதுவாகக் கருதப்படுகிற இந்தப் படிப்பில் நானும் - ஒரு முஸ்லிம் பெண்ணாக - படித்துச் சாதித்திருப்பதுதான். ஏராளமானோர் 'ஆண்கள் மட்டுமே படிக்கத்தக்கப் படிப்பில் நீ ஏன் சேர்ந்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அவ்வளவு ஏன், எங்கள் வகுப்பில் கூட நாங்கள் நால்வர் மட்டுமே பெண்கள். அதிலும் நான் மட்டுமே முஸ்லிம் பெண் - ஹிஜாப் என்னும் இஸ்லாமிய ஆடை அணிந்து படித்துவந்தேன்"

உங்கள் பெற்றோர், உறவினர்கள் எந்த அளவுக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக இருந்தார்கள்?

"மிகப்பெரும் ஊக்கம் அளித்தார்கள். அதிலும் என் தகப்பனார் அவர்கள் இந்தப் படிப்பை எனக்கு அறிமுகப்படுத்தி இதில் எனக்கிருக்கும் ஆர்வத்தைக் கண்டு தொடர்ந்து படிக்க ஊக்கமளித்தார்கள். என் தாயாரும் தகப்பனாரும் அளித்த உறுதுணை மிகவும் போற்றத்தக்கது. அதுபோன்று, என் குடும்பத்தார்கள், உறவினர்கள், குறிப்பாக என் சின்னாப்பா ஜாஃபர்சாதிக் அவர்கள் அளித்த ஊக்கமும் அளப்பரியது."

மகிழ்ச்சி; உங்கள் ஆசிரியர்களின் பங்களிப்பைப் பற்றியும் சொல்லுங்களேன்

"அருமையான ஆசிரியர்கள்; வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமே போதிக்காமல், பலப்பல செய்முறை விளக்கங்களையும், சம்பந்தப்பட்ட படிப்புக்கான தேடல்களையும் அளித்தார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்"

நல்லது, இந்தப் படிப்புக்கான எதிர்காலம், வாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்!

"மிகப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. விமானங்களின் வேகத்தைக் கூட்டுவது, உதாரணமாக, இலண்டனிலிருந்து அமெரிக்க நகரங்களுக்கு விமானத்தில் செல்ல 10 மணி நேரங்கள் பிடிக்கிறது என்றால் அதை 4 மணியாகக் குறைக்கும் அளவுக்கு விமானங்களின் வேகத்தைக் கூட்டுவது பற்றியெல்லாம் ஆராயலாம். மேலும் போர்விமானங்கள் இன்றைக்குத் தேசப் பாதுகாப்பின் தவிர்க்க இயலாத அம்சங்களாகிவிட்டன. அவற்றிலும் ஆராய்ச்சி செய்வதன் மூலமாக தேசப் பங்களிப்பும் செய்யலாம்."

உங்களுடைய அடுத்தக் கட்ட படிப்புகள் பற்றி

"மேல்நிலைப் படிப்பைத் தொடர்வதுடன், அரபு மொழியில் புலமை பெறவும் திட்டமிட்டுள்ளேன். அதன்மூலம் குர்ஆனில் வேற்றுக் கிரக வாசிகள் குறித்து கூறப்படுபவற்றிலும் ஆராய்ச்சி செய்யப் போகிறேன். அதுபற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையும் எழுதி வருகிறேன்"

மகிழ்ச்சி, நீங்கள் எழுதும் அந்தக் கட்டுரையை அனுப்பி வைக்க இயலுமா?

"நிச்சயமாக, எழுதி முடித்ததும் அனுப்பிவைக்கிறேன்"

நல்லது சகோதரி, முஸ்லிம் பெண்கள் கல்வியில் பெரிதும் பின்தங்கி இருப்பது பற்றி உங்கள் கருத்தென்ன? முஸ்லிம் சகோதரிகளுக்கு ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

"ஆம், எந்தச் சூழ்நிலையிலும் கல்வியைக் கைவிட்டு விடக் கூடாது;  பொதுவாக, முஸ்லிம் பெண்கள் படித்து என்ன ஆகப் போகிறது என்ற மனப்பான்மை நிலவுகிறது. மேலும் சவூதி போன்ற அரபுநாடுகளின் கலாச்சாரத்தை இஸ்லாமிய கலாச்சாரமாகப் பார்க்கும் நிலையும் இருக்கிறது. இவை தவறானவை.
சில முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் பெண்கள்  வாகனம் ஓட்டவும் அனுமதி இருப்பதில்லை. ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் நபித்தோழியர் பெண்கள் வாளேந்தி போர்புரிந்துமிருக்கிறார்கள். ஆகவே, அரபுநாடுகளின் கலாச்சாரத்தை இஸ்லாமிய கலாச்சாரமாகப் பார்க்கக்கூடாது; முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறக்க வேண்டும். தங்கள் அடையாளத்தை விட்டுவிடக் கூடாது. கல்விதான் சிறந்த அடையாளம்"

"அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி, வாழ்த்துகள். நீங்கள் மென்மேலும் வாழ்வில் உயரங்களை அடைய பிரார்த்தனைகள்!"

நேர்காணல் : இ.ஹ

நன்றி : இந்நேரம்.காம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...