ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்க, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்தில்
தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டில், மீண்டும், உள்தாள் ஒட்டி, அடுத்த ஆண்டு வரை நீட்டிக்க, தமிழக அரசு, முடிவு
செய்து உள்ளது.
தமிழகத்தில், அரிசி கார்டு, சர்க்கரை கார்டு, காவலர் கார்டு என, மொத்தம், 1.98 கோடி, ரேஷன் கார்டுகள் உள்ளன.ரேஷன் கடைகளில், குறைந்த
விலையில், உணவு பொருட்களை வாங்கவும், மத்திய, மாநில
அரசுகளின் சலுகைகள் பெறவும், ரேஷன் கார்டு, முக்கிய ஆவணமாக திகழ்கிறது.தமிழகத்தில், உணவு
வழங்கல் துறை சார்பில், கடந்த, 2005ல், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. அவற்றின் செல்லத்தக்க காலம்,
2009ல் நிறைவடைந்தது.அதன்பின், ரேஷன் கார்டில், உள்தாள்
ஒட்டப்பட்டு, அவற்றின் செல்லத்தக்க காலம், ஆண்டுதோறும், நீட்டிக்கப்பட்டு
வருகிறது.அதன்படி, வரும் டிசம்பர் வரை, ரேஷன் கார்டு, செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
'போலி ரேஷன் கார்டுகளால், அரசு செலவு அதிகரிப்பதை தடுக்க, 'ஸ்மார்ட்
கார்டு' வடிவில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்' என,
தமிழக அரசு, 2012ல் அறிவித்தது.ஆனால், அறிவிப்பு வெளியானதோடு சரி, அதற்கான பணிகளில், அரசு,
அக்கறை காட்டாததால், இதுவரை, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை.
மத்திய அரசு, தமிழகத்தில்,
விழி, விரல் ரேகை; புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, ஆதார்
அடையாள அட்டை வழங்கி வருகிறது. மத்திய அரசிடம் இருந்து, மேற்கண்ட
விவரங்களை பெற்று, 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்க, தமிழக
அரசு, முடிவு செய்தது.இதையடுத்து, 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு'; ரேஷன்
கடையில், 'ஸ்மார்ட்' கருவி; சர்வர் மையம் உள்ளிட்ட, ரேஷன் கடையின் ஒருங்கிணைந்த அனைத்து
பணிகளையும், தனியார் நிறுவனம் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.இந்த பணிகளை
செய்யும், தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, தமிழக அரசு,
கடந்த, செப்., 16ம் தேதி, ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டது.இதையடுத்து, அதே
மாதம், 18ம் தேதி, 'டெண்டர்' அறிவிப்பு வெளியாகி, அக்., 20ம் தேதி, 'டெண்டர்' நடத்த முடிவு செய்யப்பட்டது.
'டெண்டர்' தேதியை நீட்டிக்க, தனியார் நிறுவனங்கள், அரசுக்கு, கோரிக்கை விடுத்ததை அடுத்து, இம்மாதம், 12ம் தேதி
வரை, 'டெண்டர்' தேதி நீட்டிக்கப்பட்டது.ஆனால், டிசம்பர்
முடிவடைய, இன்னும், ஒரு மாதம் மட்டுமே எஞ்சி இருப்பதால், 'டெண்டர்'
பணிகளை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால், ஜனவரி
முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,
தற்போது, புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டி, ஓராண்டிற்கு நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
'டூப்ளிகேட் கார்டு'
தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டு வழங்கப்பட்டு, ஒன்பது
ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், பெரும்பாலான கார்டுகள், கிழிந்து, கந்தல்,
கோலமாக உள்ளன.எனவே, அவற்றில், உள்தாள் ஒட்ட வசதி இல்லை என்றால், சென்னையில்,
உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம்; மாவட்டங்களில்,
வட்ட வழங்கல் அலுவலகங்களில், கிழிந்த கார்டை கொடுத்து விட்டு, அதற்கு
பதில், 'டூப்ளிகேட் கார்டு' பெற்று கொள்ளலாம்.
தாமதத்திற்கு காரணம் என்ன?
உணவு மற்றும் கூட்டுறவு துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய
அரசின், ஆதார் அட்டை விவரங்கள் அடிப்படையில், 'ஸ்மார்ட்
கார்டு' வடிவில், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட இருக்கிறது.'டெண்டர்'
விவரங்களை, தமிழக அரசின் தலைமை செயலர் தலைமையிலான மூத்த அதிகாரிகள் குழு தான்,
இறுதி செய்யும்.இந்த பணிகள், ஒரு மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லாததால்,
அடுத்த ஆண்டிற்கும், ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டப்பட்டு, செல்லத்தக்க காலம், அடுத்த டிசம்பர் வரை, நீட்டிக்கப்பட இருக்கிறது.அடுத்த ஆண்டு, ஏப்ரல்
அல்லது ஜூலையில், பழைய கார்டுகள், திரும்ப பெற்று கொண்டு, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில்,
ரேஷன் கார்டு வழங்கப்படும்.இவ்வாறு, அவர்
கூறினார்.