(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 23, 2015

தாக்கப்பட்ட மசூதிக்கு தனது சேமிப்பை அன்பளிப்பாக தந்த சிறுவன்!

அமெரிக்காவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்ட மசூதிக்கு சிறுவன் ஒருவர், தனது சொந்த சேமிப்புப் பணத்தை நிவாரணத் தொகையாக வழங்கை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஜேக் ஸ்வான்சன். பாரீஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சிலர் சிறுவன் ஜேக் ஸ்வான்சன் வசிக்கும் பகுதியில் வசிக்கும் பகுதியில் உள்ள மசூதியை சூறையாடியுள்ளனர். மேலும் மசூதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் கிழித்து வீசப்பட்டிருந்தது.


இந்த சம்பவத்தை கண்ட இச்சிறுவன் தனக்கு ஐபேட் ஒன்று வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த 20 டாலரை மசூதி நிவாரண செலவுக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.


இந்நிலையில் சிறுவனது செயலைப் பாராட்டி, அமெரிக்க முஸ்லிம்கள் சங்கம் ஸ்வான்சனை கௌரவப்படுத்தும் விதமாக நன்றிக் கடிதத்துடன் ஒரு ஆப்பிள் ஐ-பேட் சேர்த்து வழங்கி உள்ளது.

Friday, November 6, 2015

சகிப்புத் தன்மை - இந்துத்துவ ஸ்டைல்!

சகிப்புத் தன்மை - இந்துத்துவ ஸ்டைல்!
ந்தியாவின் பிரபலமான நடிகர் ஷாருக் கான். இந்தி சினிமா உலகில் "கிங் கான்" என அழைக்கப்படும் பெரிய நடிகர். அவர் தமது 50ஆவது பிறந்த நாள்யொட்டி 'ட்விட்டரி'ல், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கே கருத்து சுதந்திரம் உண்டு.
சகிப்புத்தன்மையற்ற சூழல் நிலவுவதால் நாட்டுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். இதே நிலை தொடருமேயானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவதற்குப் பெரும் தடைக்கற்களாக இந்த விஷயங்கள் இருக்கும்" என்று கூறி இருந்தார்.
ஒரு பொறுப்பான 'இந்திய பிரஜை' என்ற நிலையில், இந்தியா முன்னேறுவதற்குத் தடையாக, கருத்து சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் இல்லாச் சூழல் நிலவுவதாக உண்மையான அக்கறையுடன் சொல்லிவிட்டார்.
அவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் - அதாவது இந்தியாவில் கருத்து சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் இல்லை - என்பதை எழுத்துப் பிசகாமல் மெய்ப்பிக்கும் வகையில் - இந்துத்துவம் எதிர்வினை புரிந்துள்ளது.
வி எச் பி யின் அதிரடி நாலாந்தரப் பேச்சாளரான சாத்வி பிராச்சி, ''ஷாருக் கானின் சகிப்புத்தன்மை குறித்த கருத்திற்காக, அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும்; மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை, ஷாருக் கான் திருப்பியளிக்க வேண்டும்; ஷாருக் கான் பாகிஸ்தானின் ஆதரவாளராகச் செயல்படுகிறார்;. அந்நாட்டின் சித்தாந்தங்களைத் தமது கருத்துகளின் வாயிலாக அவர் இங்கு பிரதிபலிக்கிறார்" என்று புலம்பியிருந்தார்.
ஆளும் பா ஜ க பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா என்பவரும் இதே கருத்தை மொழிந்துள்ளார். ''ஷாருக் கான் இந்தியாவில் வசிக்கிறார். ஆனால் அவரது உயிர் பாகிஸ்தானில் உள்ளது. அவரது திரைப்படங்கள் நம் நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்கின்றன. ஆனால், இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடாக இருப்பதாக அவர் கருதுகிறார். சகிப்புத்தன்மை தொடர்பாக ஷாருக் கான் தெரிவித்த கருத்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் அமைப்புகளும் வெளியிடும் கருத்துகளைப் போன்றே உள்ளன. மொத்தத்தில் ஷாருக்கான் தேச நலனுக்கு எதிரானவர்" என்று குதித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பா ஜ க உறுப்பினராக இருக்கும் இந்துத்துவ தீவிரவாதியான ஆதித்யநாத் என்பவரும் ஷாருக் கான் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டார். "ஷாருக்கானின் மொழிக்கும் ஹபீஸ் சயீதின் மொழிக்கும் அதிக வித்தியாசமில்லை. இவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதை வரவேற்கிறோம்.” என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ஓர் 'இந்திய பிரஜை'க்கு இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லை; சகிப்புத் தன்மை இல்லை என்று சொன்னதை உடனடியாக இந்துத்துவம் நிரூபித்துள்ளது.
ஷாருக் கான் பாகிஸ்தான் பற்றி எதுவும் கூறாத நிலையில் இவர்கள் அவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று சொல்கின்றனர். இந்துத்துவக் கும்பல் மட்டுமே எப்போதும் பாகிஸ்தானைப் பற்றி நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பது ஏன் எனப்புரியவில்லை.
இந்து சமயம் சார்ந்த, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி போன்றவர்களும் ரகுராம் ராஜன் போன்றவர்களும் சகிப்புத் தன்மையின்மை பற்றிப் பேசியபோதும் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களும் விருதுகளைத் திருப்பியனுப்பியபோதும் அவர்களை நாடுகடத்துவது பற்றி இந்துத்துவக் கும்பல் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அவர்களை பாகிஸ்தானுக்குக் கடத்த முடியாது. உலகின் ஒரே இந்து நாடு என்று இவர்கள் சொல்லிக்கொண்டிருந்த நேபாளமும் இப்போது மதச்சார்பற்ற நாடாகி விட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் சகிப்புத் தன்மையின்மை பற்றிப் பேசியுள்ளாரே; அவரை எந்த நாட்டுக்குக் கடத்துவீர்கள்?
முஸ்லிம்களை மட்டும் பாகிஸ்தானுக்கு நாடுகடத்துவதே இவர்களின் நோக்கம். இவர்கள் என்ன பாகிஸ்தானின் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளா ?
இந்தியாவில் கருத்து சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் இல்லை என்பதற்கு நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்புர்கி ஆகியோரின் படுகொலையும் தாத்ரியில் முகமது அக்லாக்கின் படுகொலையும் அண்மைக் காலச் சான்றுகளாக இருக்கின்றன என்று கூறி, அறிவுஜீவிகளும் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களும் தங்களது விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். அப்போது, "விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதா; ஆகுமா; அடுக்குமா" என்று இந்துத்துவச் சார்பாளர்கள் கொதித்தனர். இப்போது பிராச்சி, "ஷாருக் கான் விருதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்" என்கிறார்.
இவர்களுக்கு நிலையான ஒரு கருத்தோ கொள்கையோ கிடையாது. ஒரே கொள்கை இந்தியாவில் இருப்பவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது மட்டுமே :-)
ரகுராம் ராஜன் பொருளாதார மேதை. 2003 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சர்வதேச நிதியத்தில் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பணி புரிந்தவர். 2008ஆம் ஆண்டில் இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசகராக நியமனம் பெற்றார். 2012ஆம் ஆண்டில் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப பதவி உயர்வு பெற்றார். இப்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பணிபுரிகிறார்.
இவர் அண்மையில் டெல்லி ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய போது , ”இந்தியக் கலாசாரம் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். சகிப்புத் தன்மைக்கும் சுதந்திரத்துக்கும் போராட வேண்டியது அவசியமானது. ஏனெனில் சகிப்புத் தன்மைக் குறைவு என்பது பாதுகாப்பு இல்லாமைக்குச் சமமாகும். எனவே எந்தவொரு விஷயத்திலும் திணிப்பு என்பது இருக்கக் கூடாது. மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளித்திடவேண்டும்.” என்று பேசினார்.
இந்துத்துவ ஊதுகுழலான சுப்பிரமணியன் சாமி, "ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கிக்குப் போக வேண்டும். தம் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். தாத்தா மாதிரி பேசக் கூடாது. ரிசர்வ் வங்கி நாசமாக ராஜனே காரணம். பிரதமர் உடனடியாக இவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். என்ன சகிப்புத் தன்மை? தீவிரவாதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியுமா?" என்று ட்விட்டரில் கேட்டுள்ளார்.
சித்தராமையா வழிப்போக்கனோ அல்லது சாதாரண பிரஜையோ அல்லர். ஒரு மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சர்.
அவர், "எனக்குப் பிடிக்கும் என்றால் நான் மாட்டிறைச்சி உண்பேன்." என்று சொன்னதற்காக, கர்நாடக மாநில, சிமோகா மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எஸ்.என். சென்னபசவப்பா , ''சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சிமோகா வந்து மாட்டிறைச்சி சாப்பிடட்டும். இங்கு வந்து பசுவை வெட்டிப் பார்க்கட்டும். அவரது தலையை உடலில் இருந்து எடுத்து நாங்கள் கால்பந்து விளையாடுவோம்'' என்று கொலை மிரட்டல் விடுத்தார்.
ஆளும் பா ஜ க உள்ளிட்ட இந்துத்துவக் கும்பலின் சகிப்புத் தன்மை என்பது இதுதான். இந்த விஷயத்தில் இவர்கள் எவ்வித ஒளிவு மறைவோ நளினமோ இன்றி உடனடியாக எதிர்வினையாற்றித் தங்கள் நிலையைத் தெளிவு படுத்தி விடுவார்கள்..இதுதான் இந்துத்துவ ஸ்டைல்!
பா ஜ க தலைவர்களும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறினாலும் "அது கட்சியின் கருத்தில்லை; அவரது சொந்தக் கருத்து" என்று மழுப்பி விடுவார்கள். ஆனால் சகிப்புத் தன்மை- கருத்து சுதந்திரம் போன்றவற்றில் மட்டும் ஒரே குரலில் கூவுவார்கள்.
சகிப்புத் தன்மை இல்லையெனக் கருத்துச் சொன்னதற்காக தேசதுரோக வழக்குப் போட வேண்டும் என பிராச்சி கூறியுள்ளார். அதன் பிரிவு இ.த.ச 124 ஏ ( I P C 124 A )ஆகும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் நான்காவது பிரிவில் அரசுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பிரிவு 124 A அரசுக்கு எதிரான குற்றம் எது என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது:
"சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை, மக்களுக்கு எதிராகச் செயல் படுகின்ற அரசாங்கம் என்கிற வெறுப்பையும் அல்லது விரோத உணர்ச்சியையும் தூண்டி விடுவதற்காக ஒருவர் தம்முடைய எழுத்தால் அல்லது பேச்சால் அல்லது சைகையால் அல்லது படத்தால் அல்லது வேறு எந்த விதத்திலாவது செயல்பட்டால் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய அபராதமோ அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதமோ அல்லது அபராதம் மட்டுமோ விதிக்கப்படும்."
இது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரால், விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இன்றுவரை அதை வைத்துக் கொண்டு அரசியல் எதிரிகளையும் தமக்குப் பிடிக்காதவர்களையும் மிரட்டுவதற்காக ஆள்வோர் பயன்படுத்துகின்றனர்.
"சாராயக் கடையை மூடு" என்று பாடியதற்காக அண்மையில் பாடகர் கோவன் மீதும் இப்பிரிவு பாய்ச்சப் பட்டு, உயர்நீதி மன்றத்தில் அரசு சார்பில் பல்டியடிக்கப் பட்டது. கோவன் மீது பிரிவு 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், பிரிவு 502/1 அவதூறு செய்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நியாயமாகப் பார்த்தால் பிராச்சி, சாக்ஷி, ஆதித்யநாத் எச் ராஜா போறோர் மீது இப்பிரிவுகள் பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும்.
ஓர் ஆறுதலாக சுப்பிரமணியன் சாமி மீது இப்போது வழக்கு நடக்கிறது.
இந்து - முஸ்லிமிடையே வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதற்காக சுப்பிரமணியன் சாமி மீது டெல்லி, மும்பை, அஸ்ஸாம், மொகாலி மற்றும் திருவனந்தபுரம் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி மனு கொடுத்திருந்தார்.. அதில் தாம் 2007ஆம் ஆண்டு எழுதிய பயங்கரவாதம் தொடர்பான புத்தகத்துக்கு எதிரான வழக்குகளுக்கும் அவர் தடை கோரியிருந்தார்.
சுப்பிரமணியன் சாமி மனு மீது பதிலளிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை ஏற்று உள்துறை அமைச்சகம் , "கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது. இத்தகைய பேச்சுகளுக்குத் தண்டனை வழங்கக் கூடிய ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் மிகவும் சரியானவையே. இந்தியாவின் குடிமக்களிடையே வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை நாம் அனுமதித்தால் மிக மோசமான நாசத்தையே ஏற்படுத்தும். இதனால் கலவரங்கள் ஏற்படும். சமூக அமைதியைப் பாதிக்கும் வகையில் நல்லிணக்கம் மிகவும் சீர்குலைந்து போய்விடும். பல்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையே நமது அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. அமைதியை நிலைநாட்டவும் சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கவும் நமது அரசியல் சாசனம் விதித்துள்ள நியாயமான சில கட்டுப்பாடுகளையும் சட்டப்பிரிவுகளையும் கேள்விக்குள்ளாக முடியாது. வெறுப்புப் பேச்சுகளைப் பேசுவோருக்குச் சட்டப்படி உரிய தண்டனை வழங்க வேண்டும். மேலும் சுப்பிரமணியன் சாமி, 2007ஆம் ஆண்டு பயங்கரவாதம் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் முழுவதுமே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில்தான் அமைந்துள்ளது. இந்த நூலை எழுதிய சுப்பிரமணியன் சாமி சட்டத்தை முழுவதுமாக மீறியுள்ளார். ஆகையால் சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து அவர் மீதான வழக்கில் விசாரணையைத் தொடர்ந்து நடத்த வேண்டும்." என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
தாமதமாக இப்படிச் செய்வதை விடுத்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் கருத்து சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் சமூக நல்லிணக்கமும் நின்று நிலவும். இதை ஆள்வோர் புரிந்து கொள்வார்களா அல்லது இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்
ஏனெனில் முன்பு ஒரு முறை, சேதுசமுத்திர திட்டத்துக்கு முட்டுக் கட்டை போட, இந்துத்துவ சக்திகளும் அ இ அ தி மு கவும் ராமர்பாலம் இருக்கின்றது என்ற பிரச்சனையைக் கிளப்பிய போது, ராமாயணக் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் வரலாற்றுச் சான்று இல்லை என மத்திய அரசு கூறிவிட்டு, இந்துத்துவக் கும்பலின் எதிர்ப்பால் பல்டியடித்ததைப் போல் இப்போதும் பல்டியடிக்க மாட்டார்கள் என்ற உறுதி இல்லை.
நல்லது நடந்தால் நாடு உண்மையிலேயே முன்னேறும்.
இந்நேரம் 
இந்நேரம் .காம் // நன்றி  - நச்சினார்க்கினியன்
Related Posts Plugin for WordPress, Blogger...