மனித நாகரீக வளர்ச்சியில், உலகளாவிய
சமூகத் தொடர்புகளில் மொழியே முதன்மையான இடம்பெறுகிறது.
ஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரிகிறதோ, அந்தளவிற்கு
அவரின் வெற்றி சமூகத்தில் உறுதிசெய்யப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை, வேற்று
மொழிகளை கற்கும் ஆர்வம் உலக மக்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் அபரிமித
விஞ்ஞான வளர்ச்சியும், உலகளாவிய பொருளாதார தாராளமயமாக்கலும் வேற்றுமொழி பயிலும்
ஆர்வத்தை தூண்டுவதோடு, அதன் அவசியத்தையும் அதிகரிக்கின்றன.
பல மொழிகள் தெரிந்து வைத்திருக்கும் ஒருவர்,
* பலவித கலாச்சாரங்களை எளிதில் அறிந்துகொள்ள முடிவதோடு, புதிய புரிந்துணர்வுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
* மற்ற மக்களின் சட்ட-திட்டங்களை தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.
* கற்றல் திறன் மற்றும் விசால மனப்பான்மையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
* சர்வதேச பயணங்களை சுதந்திரமாகவும், தடையின்றியும்,
மகிழ்ச்சியாகவும் மேற்கொள்ள முடியும்.
* வேறு நாட்டு மக்களுடன் அவர்களின் மொழியிலேயே உரையாடுவதால், அவர்களது
அன்பையும், நன்மதிப்பையும் பெற முடியும்.
* வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் எளிதாக இடம்பிடிக்க முடியும்.
* பல நாட்டு நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளை படித்து பயன்பெற
முடியும்.
இத்தகைய பரந்தளவிலான
பயன்களோடு, அதிக சம்பளம் பெறக்கூடிய பல வேலைவாய்ப்புகளையும் பெறலாம். அவை,
* வெளிநாட்டு
தூதர்கள்
* மொழிபெயர்ப்பாளர்கள்
* சுற்றுலா வழிகாட்டிகள்
* விமான பணிப்பெண்கள்
* ஹோட்டல் வரவேற்பாளர்கள்
* பயண
மேலாளர்கள்
* சர்வதேச நிறுவனங்களில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரிகள்
* மொழி ஆசிரியர்கள்
* விளம்பர பணியாளர்கள்
* சர்வதேச சந்தை பணியாளர்கள் போன்றவை.
பொதுவாக வெளிநாட்டு மொழி என்றாலே ஆங்கிலம் தான் நமக்கு முதலில்
நினைவுக்கு வரும். ஆங்கிலத்தை கற்றுக்கொண்டாலே உலகளவில் அனைத்தையும் சமாளித்து
விடலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அது தவறு. ஏனெனில் உலக மக்கள்
தொகையில் ஆங்கிலம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 25% -க்கும்
குறைவாகவே இருக்கிறது.
சீனா, கொரியா, ஜப்பான்
உள்ளிட்ட பல ஆசிய நாடுகள், பல தென்அமெரிக்க நாடுகள், ஐரோப்பாவின்
பல நாடுகள், ஆப்ரிக்காவின் பல நாடுகள் போன்றவற்றில் ஆங்கிலத்தை வைத்து
சமாளிக்க முடியாது. மேலும் அதுபோன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு,அந்நாட்டு
மொழியறிவை சோதிப்பதற்கான தகுதித்தேர்வில் நீங்கள் தேறியாக வேண்டும். இதன்மூலம்
ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளின்
முக்கியத்துவம் நமக்கு தெரியவருகிறது. அதேசமயம் ஒவ்வொருவரும்
ஆங்கிலத்தையும் ஒரு வெளிநாட்டு மொழியாக தெரிந்துவைத்திருப்பது வாழ்வில்
இன்றியமையாத ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது.
புதிய மொழியைக் கற்றல்: இந்தியாவில் பலரும் குறைந்தபட்சம் 2 அல்லது
3
மொழிகளை பேசுகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருப்பது, இன்னொரு
புதிய மொழியை கற்றுக்கொள்வதை எளிமையாக்கும். புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதில்
அனைவருமே வல்லவர்கள் அல்ல. சிலர் விரைவாகவும், எளிதாகவும்
கற்றுக்கொள்வார்கள். சிலருக்கு தாமதமாகலாம். ஆனால் அனைத்திற்கும் மூலகாரணம்
முயற்சியும், ஆர்வமும்தான்.
ஒரு மொழியின் வார்த்தைகள், வாக்கிய
அமைப்புகள், இலக்கணம் போன்ற அம்சங்களில் எப்போதுமே ஆர்வம் இருக்க வேண்டும்.
மேலும் பிறர் பேசுவதை ஆர்வத்துடன் கவனிப்பது மிகவும் முக்கியம். புதிய
வார்த்தைகளுக்கான அர்த்தங்களை விடாமல் முயற்சிசெய்து தெரிந்துகொள்வது, அம்மொழியிலுள்ள
புத்தகங்களை தொடர்ந்து படிப்பது, அம்மொழி பேசும் நபர்களுடன் ஆர்வமுடன்
அடிக்கடி உரையாடுவது, பொறுமையுடன் கூடிய விடாமுயற்சி போன்றவை ஒரு புதிய மொழியில்
உங்களை வல்லவராக்கும்.
மேலும் ஒரு மொழியை கற்பதில் உங்களின் திறனை சோதிக்க எம்.எல்.ஏ.டி.(நவீன
மொழி திறனாய்வு தேர்வு) போன்ற தேர்வுகள் உள்ளன. நாம் ஏற்கனவே கூறியதுபோல், தங்களின்
தாய்மொழியை மட்டுமே தெரிந்த நபர்களைவிட, நம்மைப் போன்றவர்கள் புதிய மொழியை
விரைவாகவும், எளிமையாகவும் கற்றுக்கொள்ள முடியும். அது நமக்கு ஒரு கூடுதல்
தகுதியே. எனவே இப்போதே முயற்சியை தொடங்குங்கள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன