(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, September 9, 2012

நாகூர் ரயில்வே நிலையத்தின் அவல நிலை..?


நாகூர். ஜூலை 18 . கிட்டத்தட்ட சுமார் இருபது ஆண்டுகளுக்கு பின் ஒரு சிறிய ஆசை, ஏன் நாம் நாகூரிலிருந்து காரைக்காலுக்கு ரயில் மூலம் போகக்கூடாது என்று? இந்த ஆசை எடுத்த எடுப்பில் நிறைவேறியதா என்றால் அதான் இல்லை. அதற்கு என்ன காரணம் மற்றும் நாகூர் ரயில்வே நிலையத்தின் தற்போதைய நிலையைப்பற்றி கண்டறிய ஒரு சுற்று வந்தோம். 


தினந்தோறும் பிற்பகல் பனிரெண்டு மணிக்கு நாகூரிலிருந்து காரைக்காலுக்கு ரயில் உண்டு என்று சொன்னதும் ஆவலாக நாகூர் ரயில்வே நிலையத்தில் காலை 11:40 மணிக்கு ஆஜரானேன். டிக்கெட் கவுண்டருக்கு சென்றதும், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தான் உள்ளது ஒரு டிக்கெட் பதினான்கு ரூபாய், நீங்க இரண்டு டிக்கட்டுக்கு முப்பது ரூபாய் கொடுங்க என்றார் டிக்கெட் விநியோகிப்பவர். உடனே பணத்தை கொடுத்ததும் அந்த ரூமில் இருந்தவர் ஏதோ முனுமுனுக்க, உடனே நான் கொடுத்த முப்பது ரூபாயை திருப்பி கொடுத்து 'சார் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரத்துக்கு முன்பே போய் விட்டது, இனி சாயிந்தரம் ஐந்து மணிக்கு தான் அடுத்த ரயில்' என்றார். என்ன கொடுமை சார் இங்கு போர்டில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் காலை 11 :45 க்கு நாகூருக்கு வருவதாகவும் மீண்டும் காலை 11 :50 க்கு நாகூரிலிருந்து எர்ணாகுளம், காரைக்கால் வழியாக புறப்படுவதாக போட்டிருக்கிறது என்று வினவிய உடன், நம்மைப் பார்த்து ஆத்திரமாக, அது அப்படிதான் இப்ப ரயில் காரைக்காலுக்கு கிடையாது என்று கொஞ்சம் உரத்த குரலில் கூறினார். உடனே நாம் டூட்டி ஸ்டேஷன் மேனேஜரை அணுகி அவரிடம் ரயில் கால அட்டவணையைப் பற்றி கேட்கலாம் என்று முற்பட்டபோது, அந்த அறையில் அமர்ந்திருந்த நீல சட்டை போட்ட ரயில் ஊழியர் (சீனியர் சிட்டிசன்) ஒருவர், வெளியில் நீங்க கேட்ட விபரம் உள்ளது போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஏதோ அவரிடம் கடன் கேட்டு வந்தவன் போல் நம்மை பார்த்தார். பின்பு வெளியில் அந்த அட்டவணையை பார்த்ததும் ஏதும் புரியவில்லை, காரணம் நாகூருக்கு வரும், போகும் ரயில்களின் புறப்படுமிடம், சேருமிடம் இருந்தாலும் ஆனால் வழி தடங்களைப்பற்றிய விபரம் இல்லை. மீண்டும் இந்த விபரத்தை அறிய டூட்டி ஸ்டேஷன் மேனேஜரை அணுகும் போது, அந்த நீல சட்டை ஊழியர் (சீனியர் சிட்டிசன்) ஒரு மாதிரியாக நம்மை பார்த்தார். பின்பு அங்கு அமர்ந்திருந்த மற்றொரு காக்கிச் சட்டை ஊழியர் (இளைஞர்) தாமாக முன்வந்து கீழ்க்கண்ட விபரத்தை நம்மிடம் கூறினார். 

நாகூர் - காரைக்கால் 
09:30 AM (திருச்சி ரயில்) 
10:20 AM (சென்னை ரயில்) 
11:20 AM (எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்/Train No .:16886) 
05:00 PM (வேளாங்கண்ணி ரயில்) 

காரைக்கால் - நாகூர் 
12:15 PM (திருச்சி ரயில்) 
04:10 PM (எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்) 
05:45 PM (தஞ்சாவூர் ரயில்) 
07:30 PM (சென்னை ரயில்) 

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் காலை 11:20 க்கு என்று சொல்கிறீர்கள் ஆனால் டிக்கெட் கவுண்டரில் அதிகாரி காலை 11:45 க்கு (Train No .:16886) என்று கூறுகிறாரே என்று வினவிய போது நான் சொல்வது தான் புது நேரம், அதன்படி தான் இன்றும் இந்த ரயில் புறப்பட்டது என்று கூறினார். ஆனால் இது அனைத்தும் டூட்டி ஸ்டேஷன் மேனேஜர் அறையில் தான் நடந்துக்கொண்டு இருந்தது, ஆனால் இந்த உயர் அதிகாரியோ (இந்தி வாலா) செவிடன் காதில் ஊதிய சங்கு போல் எதையும் கண்டுக்கொள்ளவில்லை, நம்மிடம் என்னவென்று ஆங்கிலத்தில் கூட வினவவில்லை என்பது தான் வருத்தமான விஷயம். 
இதில் என்ன சுவராஸ்யம் என்றால், டிக்கெட் விநியோகிக்கும் அதிகாரிக்கோ ரயில் அட்டவணை, குறிப்பாக ரயில் புறப்படும் நேரம் பற்றி தெரியவில்லை என்பதான் கொடுமை. படித்த நமக்கே இந்த வரவேற்பு என்றால், பாமர மக்களை எப்படி இவர்கள் கையாளுவார்கள் என்பதை நாமே முடிவு செய்துக்கொள்ளவேண்டியது தான். 

பின்பு நாகூர் ரயில்வே நிலையத்தை வலம் வந்தோம், அதில் நமக்கு கண்ணில் தென்பட்டவையைப் பார்ப்போம். ஒழுங்கான குடிநீர், நிலையம் முழுவதும் இல்லை, ஒரே ஒரு கழிவறை இருந்தும் அது காலம் காலமாக பூட்டிவைக்கப்பட்டுள்ளது, இதற்கு பக்கத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு உள்ள கழிவறை கதவின்றி, தண்ணீரின்றி, சுத்தமின்றி இருந்ததை காணமுடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த கழிவறைக்கு எதிர் புறம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் விளம்பரப் பலகையில் ஒரு வாசகம் "திறந்த இடத்தில் மலம் கழிக்க வேண்டாம்!" என்ற வாசகம் வேறு இதன் அர்த்தம் தெரியாமல் தொங்கிக்கொண்டு இருந்தது. மாநில அரசாங்கம் சுத்தத்தைப் பற்றி கூறுகிறது, ஆனால் மத்திய அரசு ரயில்வே நிலையத்தில் சுத்தம், சுகாதாரத்திற்கான அறிகுறியே இல்லை. 
இந்த குறைகளை நிவர்த்தி செய்ய ரயில்வே நிலையத்தில் உள்ள அதிகாரிகளை அணுகினால் ஏதோ நாம் வழித் தெரியாமல் வந்து விட்ட பட்டிக்காட்டான் போன்று பார்ப்பதை உணர முடிந்தது. ஆதலால் இந்த குறைகளை அப்படியே திருச்சி கோட்டம் தெற்கு ரயில்வே மக்கள் குறை தீர்க்கும் அதிகாரி மற்றும் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் திரு. S . அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அவர் எடுக்கும் நடவடிக்கையையும் மற்றும் அதற்குண்டான பதிலையும் இந்த பகுதியில் பிரசுரிப்போம். அதுபோல் நாகூர் ரயில்வே நிலையத்திப் பற்றி பொது மக்கள் விமர்சனத்தையும் அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொதுமக்கள் (பயணிகளின்) கவனத்திற்கு: நாகூர் ரயில்வே நிலையம் 

நாகூர் ரயில்வே நிலையத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அதிகாரியின் விபரத்தோடு உள்ள BSNL தொலைப்பேசி மற்றும் ஈமெயில் முகவரியும் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மக்கள் குறை தீர்க்கும் அதிகாரியின் விபரம் அடங்கிய பலகையில்:
BSNL தொலைபேசி: 2416105 என்றும் ஈமெயில் முகவரி: adrmtpj@sr.railnetgov.in என்றும் உள்ளது. ஆனால் நான் தொடர்பு கொண்ட பிறகு தான் இங்கே குறிக்கப்பட்டுள்ள தொலைப்பேசி என்னும் ஈமெயில் முகவரியும் தவறாக இருப்பதை உணர்ந்துக்கொண்டேன்.

பின்பு தென்னக ரயில்வேயின் வலைத்தளத்தை http://www.sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0%2C7%2C331பார்க்கும் போது கீழ்க்கண்ட சரியான முகவரி எனக்கு கிடைத்தது.


BSNL தொலைபேசி: 2416015 என்றும் ஈமெயில் முகவரி: adrmtpj@sr.railnet.gov.in இருந்தது.

இது தெரிந்து நடந்த தவறா? அல்லது தெரியாமல் செய்த தப்பா?? என்று தென்னக ரயில்வே தான் பதில் சொல்லவேண்டும். 


எதிர்ப்பார்ப்பு: 


:: நாகூர் ரயில்வே நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு சாதகமாக இன்முகத்துடன் செயல்படவேண்டும். காரணம் நாகூருக்கு பல மாநிலத்தவர், பல மதத்தவர் நாகூரை ஒரு சுற்றுலா தளமாக கருதி இங்கு வருகின்றனர். 
:: ரயில் புறப்படும் மற்றும் சேரும் நேரங்கள் (வழித்தடங்களுடன்) தெளிவாக (துல்லியமாக) குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 
:: ரயில் நேரம் பற்றி பயணிகளின் விசாரணைக்காக தனி அதிகாரி இருப்பது நன்று. 
:: ரயில் டிக்கெட் விநியோகிப்பவருக்கு ரயில் நேரம் பற்றி அறிந்திருக்க வேண்டும். 
:: சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, குடிநீர், கழிவறை வசதிகள் மற்றும் பயணிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 

திரு. S . அப்துல் ரஹ்மான் அவர்கள் மூலம் இந்த குறைகளுக்கு ஒரு நல்ல விடிவு காலம் வரும் என்று பொதுமக்களில் ஒருவனாக எதிர்ப்பார்க்கும் 
மு.இ.. முஹம்மது இபுறாஹிம் மரைக்கார்.
நாகூர் ரயில் நிலையத்தில் நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை எல்லோரையும் போல் பார்த்துவிட்டு , மற்றவர்களிடம் சொல்லி புலம்பிவிட்டு செல்லாமல் .. 

தன்  உணர்வுகளை புகாராக பதிவு செய்து , பிரச்சனைகளை  களைவதற்கு முயற்சி செய்துள்ள சகோ.முஹம்மது இபுறாஹிம் மரைக்கார் அவர்களுக்கு நாகூர் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.. 

உங்களது முயற்சியில் இப்பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் .. இல்லையென்றால் இன்ஷால்லாஹ் உங்களது முயற்சியை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்... 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...