(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, August 14, 2010

முதலில் போதிக்க வேண்டியது அகிதாவா ? கிலாபத்தா ?

மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது முதலிடம் கொடுக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் பிரச்சினைப்படுகிறார்கள்.

“இஸ்லாமிய அரசாங்கம்”(கிலாபத்) நிறுவுவது சம்பந்தமாகவே முஸ்லிம்களை வழிநடத்த வேண்டும்.
அரசாங்கம் உருவாகினால் தான் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றக் கூடியதாகவும் அதிகாரபூர்வமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியதாகவும் இருக்கும்.
எனவே கிலாபத் அமைப்பது பற்றிய போதனைகளை முதலில் போதிக்கவேண்டும், என்கிறார்கள்.

மார்கக் விவகாரங்கள் பற்றிய முரண்பாடுகளோ அகீதா பற்றிய சீர்குலைவுகளோ ஏனைய விடயங்கள் பற்றிய விளக்கங்களோ பேசி மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுத்தாமல், மக்கள் எந்தெந்த நம்பிக்கைகளில் -கொள்கைகளில்- இருந்து செயற்படுகிறார்களோ அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வேண்டும், என்கிறார்கள்.

அகீதா பற்றியும் ஸுன்னாவுக்கு முரணான விடயங்கள் பற்றியும் பேசி அவைகளை அடையாளம் காட்டி தஃவா செய்தால் சமூகம் பிளவுபட்டு விடும். ஒற்றுமை குழைந்து விடும். ஐக்கியம் கருதி அதனை விமர்சிக்காமல் விலகி நிற்க வேண்டும். அவரவர் விரும்புகின்ற போக்கில் விட்டுவிடவேண்டும், என்பதாக கூறுகிறார்கள்.

மக்கள் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடக் கூடிய பொது விடயங்கiளுக்கு முன்னுரிமை வழங்கி தஃவாவை முன்கொண்டு செல்ல வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அரசாங்கமொன்றை நிருவினால் அதிகாரபூர்வமாக ஒரே கொள்கையின் கீழ் மக்களை வழிநடத்தலாம் என வாதிக்கிறார்கள்.
உண்மையில் இந்த கொள்கையும் அணுகுமுறையும் சரியல்ல.

கேட்பதற்கு இனிமையாகவும் பார்பதற்கு அழகாகவும் இருந்தாலும் அடிப்படைக்கே முரணானதாகும்.

ஒரு முஸ்லிமுடைய இம்மை மறுமையின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது அகீதாவாகும். அல்லாஹ் மனிதர்களை படைத்ததன் அடிப்படை நோக்கம் கலப்படமற்ற தூய எண்ணத்துடனும், கலப்பில்லாத வணக்க வழிமுறைகளுடனும் அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதுதான்.

அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பாமலும், அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய வணக்கத்தில் பலரையும் கூட்டு சேரத்தும் (ஷிர்க் செய்தும்) செயற்படுவதும் அல்லாஹ்வுடைய வல்லமையை சிதைப்பதாகும்.

தனக்கு (ஷிர்க்) இணைவைப்பதை மன்னிக்க முடியாத பாவமாக அல்லாஹ் கூறுகிறான். மக்களிடம் ஷிர்க் நுழைந்த போதுதான் இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.

மனித ஆத்மாக்களை படைத்து “நானல்லவா உங்கள் ரப்பு” என்று அல்லாஹ் கேட்டபோது “ஆம்! நீயே எங்கள் ரப்பு” என்றே ஆன்மாக்கள் பதில் கூறின. உலகிற்கு வந்த பின் அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அசல் வடிவில் வணங்காது வாழந்தபோதுதான் இந்த இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.

இறைநம்பிக்கை ஒழுங்கில்லாமல் ஒரு முஸ்லிம் வாழும் காலம் எல்லாம் அவன் புரிகின்ற அத்தனை அமல்களும் பாழாகிவிடும்;
அதே நிலையில் அவன் மரணித்தாலும் தண்டனைக்குரியவனாக மாறிவிடுவான். எனவே பிரச்சாரப் பணியில் முதலிடம் கொடுக்க வேண்டியது அகீதாவை சீர் படுத்துவதிலும் பின்பற்றுவதிலும்தான்.

அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வர்ணிக்கின்ற பிரகாரமும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணிக்கின்ற பிரகாரமும் தான் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும். அதுவே ஈமானுக்கு பாதுகாப்பாகும்.

அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?
எல்லா பொருட்களிலும் வஸ்துகளிலும் அல்லாஹ் சங்கமிக்கிறான்
அல்லாஹ் ஷைக்கிடத்தில் சூபியிடத்தில் காட்சியளிக்கிறான். அவர்களுடன் பேசுகிறான்.
அமல்கள் இபாதத்கள் செய்தால் அல்லாஹ்வை நெருங்கமுடியாது.
அல்லாஹ்வை நெருங்குவதற்கு ஒரு புரோகிதர் (அவ்லியா) தேவை.
மறுமையின் வெற்றிக்கு அவரது சிபாரிசு தேவை, என்று ஒரு முஸ்லிம் நம்பினால்
அவன், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிய ஈமானுக்கு மாற்றமான நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.

பள்ளிக்குச் சென்று தொழுது அல்லாஹ்விடம் முறையிடுவதை விட கப்றுகளுக்குச் சென்று அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி கஷ்டங்களை முறையிட்டு காணிக்கைகள் செலுத்தி பிள்ளை வரம் கேட்டு கப்றுகளை சுற்றி வந்து மண்டியிடுதல் என்பது இறை நம்பிக்கைக்கு எதிரானது.

தகடு தாயத்துக்கள் எழுதி மேனியிலும் வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் தொங்க விடுவதும் பாதுகாப்பு தேடுவதும் இறை நம்பிக்கைக்கு விரோதமானது.

அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றாமல் முன்மாதிரியாகக் கொள்ளாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களை வழிமுறைகளை சரிவர செயற்படுத்தாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களுக்கு மாற்றமாக சமுதாயத்தின் செயல்பாடுகளுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் ஆதரவு கொடுத்து செயல்படுத்தல் என்பது இறைத் தூதரை நிராகரிப்பதற்கு சமமானதாகும்.

கலிமாவுக்கு மாற்றமாக மக்கள் செயல்பட்டாலும் சமுதாய ஒற்றுமை கருதி பயணிக்க வேண்டும் என்ற கோஷம் குப்ரியத்தில் கொண்டு போய் சேர்க்கும். இஸ்லாமிய அரசாங்கம் இருந்தாலும் இத்தகைய வழிகள் களையப்பட வேண்டும். இஸ்லாமிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் களையெடுக்க பாடுபட வேண்டும்.

இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பும்போது முதலில் அரசாங்கத்தை (கிலாபத்தை) அமைத்து பிறகு அகீதா பற்றிப் பேச அனுப்பவில்லை.
மாறாக அரசாங்க தலைவர்கள், மன்னர்கள் புரிகின்ற ஈமானுக்கெதிரான செயல்பாடுகளையும் சமூக விரோத செயற்பாடுகளையும் கண்டித்து தவ்ஹீதை எடுத்துச் சொல்லி; அந்த போதனை பிரகாரம் மக்களை வழிநடாத்தவே நபிமார்களை அனுப்பி வைத்தான்.”
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் அவனைத்தவிர வேறு கடவுள் இல்லை” என்றே எல்லா இறைத்தூதர்களும் பிரச்சாரம் செய்தார்கள்.அதனூடாக சமூக அவலங்களையும் சீர்கேடுகளையும் கண்டித்துப்பேசினார்கள்.

மூஸா நபி இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்காக போராடிய போதும்
லூத் நபி ஓரினச்சேர்க்கைக்கு எதிராக போராடிய போதும்
ஷூஹைப் நபி அளவை நிலுவை மோசடிக்கு எதிராக போராடியபோதும்
தவ்ஹீத் பிரச்சாரத்தை முன்வைத்தே சமூக முன்னேற்றத்தை நோக்கி பயணமானார்கள்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிரசார பணியினை ஆரம்பித்த போது தவ்ஹீதை முதன்மை படுத்தியே 13 வருடங்கள் பாடுபட்டார்கள்.
எதிரிகள் இப்பிரசார பணியினை தடுக்கும் முகமாக சமரசம் செய்ய முனைந்த போதும் நபிகளார்(ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை.
நபிகளாருடைய பிரசாரப் பணி மதீனாவில் தாக்கம் செலுத்தி மதீனத்து மக்கள் இஸ்லாத்தை தழுவியபின் மதீனாவை தளமாக கொண்டு படிப்படியாக கிலாபத்தை நோக்கி மக்களை நகர்த்தினார்கள்.
மதீனாவில் அருளப்பட்ட வசன அமைப்புக்களும் இதனை நன்கு தெளிவுப்படுத்துகின்றன.
எனவே பிரசாரப் பணியில் நபிகளாரின் இந்த வழிமுறைதான் பின்பற்ற வேண்டும். ஈமானுக்கு எதிராக, தூதுத்துவத்துக்கு எதிராக மக்கள் வாழ்கின்ற போது அகீதாவை பற்றியோ ஸுன்னாவைப் பற்றியோ பேசாமல், கிலாபத்தை பற்றி பேசவேண்டும் கிலாபத் சிந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்பது அல்லாஹ் விதித்த நியதிக்கே முரணானது.

இந்நிலையில் அகீதாவில் பிடிப்பு இல்லாமல் சுன்னாவுக்கு முக்கியமில்லாமல் சடங்கு சம்பிரதாய கொள்கையில் மரணிக்கின்ற மக்களுடைய நிலையோ படுமோசமாகி விடும் என்பதை கிலாபத் பற்றி பேசுபவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.

கிலாபத் ஏற்பட முன் அகீதா பற்றி; பேசப் பயப்படுபவர்கள்
(ஒரு வாதத்திற்காக வழிகெட்ட கூட்டங்கள் பிரிவுகளின் ஆதரவில் கூட்டரசாங்கம் நடத்தினாலும்) கிலாபத் ஏற்பட்ட பின்பும் பேசவே மாட்டார்கள். ஆட்சி கவிழ்ப்பு நடந்து விடுமோ ஸ்தீரமற்ற ஆட்சி உருவாகி விடுமோ தலைமை பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் இருக்குமே தவிர அகீதாவை சீர்படுத்தி ஆதாரபூர்வமான சுன்னாவை அமுல்நடாத்துகின்ற பற்றிய எண்ணம் இருக்காது.

இஸ்லாமிய நாட்டுக்குள்ளே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதாக கூறியவர்களால் கூட அகீதாவின் அத்திவாரத்தில் இஸ்லாமிய ஆட்சியை இன்று வரை ஏற்படுத்தமுடியவில்லை.

இளைஞர்களை ஒன்று கூட்டி கிலாபத் பற்றி பேசி புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர போராடும் இவர்களால் அந்த இளைஞர்களுக்கு ஈமான் பற்றியும் ஆதாரபூர்வமான சுன்னாவின் நிழலின் அமல்கள் பற்றியும் போதிக்க முடியவில்லை.

எப்படி வேண்டுமானாலும் நம்பிக்கை கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் அமல்கள்; செய்யலாம். எமது கிலாபத் பயணத்திற்கு அவைகளை தடைகளாக்கக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாகும்.

புரட்சிகரமான கிலாபத் சிந்தனைகளை வழங்கி ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்க முனைவதைவிட ஈமானிய உணர்வுகளை ஊட்டி பலபேருடைய ஹிதாயத்திற்கு வழிகாட்ட தயார்படுத்தலாம். .

மக்களிடத்தில் அகீதாவுக்கெதிரான கொள்கைளையும் சுன்னாவுக்கெதிரான செயற்பாடுகளையும் பேசுவதற்கு பயப்படும் இவர்கள் ¬குறைந்தபட்சம் தங்களுடைய வாழ்விலாவது அதை விட்டும் ஒதுங்கி வாழ்கிறார்களா என்றால்; அதுவுமில்லை.

தங்களுடைய வீடுகளிலும் ஜமாஅத்திலும்; குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமான விடயங்களை ஒதுக்காமல் செய்துகொள்கிறார்கள். தங்களுடைய வியாபார ஸ்தலங்களிலும அகீதாவுக்கு முரண்பட்டவைகளை விற்பனைசெய்கிறார்கள்.

தவ்ஹீதையும் பேசுவோம் ஷிர்க்கையும் செய்வோம்.
பித்அத்தையும் ஆதரிப்போம் சுன்னாவையும் தொட்டுக்கொள்வோம்.
எதையும் எதிர்க்கவுமாட்டோம். எல்லாவற்றையும் அரவணைக்கவுமாட்டோம்.

என்பதே இவர்களது கொள்கையாகும். ஆனால் ஒரு இறைவிசுவாசியின் கொள்கை அதுவாக இருக்காது.

உலகாயுதமும் மக்கள் செல்வாக்கும் கௌரவமான வாழ்வும்தான் இவர்களது இலக்காக தெரிகிறதே தவிர அதற்குத்தான் கிலாபத் கோஷமே தவிர, பரிசுத்தமான தீனை பின்பற்றுவதோ நிலைநாட்டுவதோ அல்ல.

இஸ்லாத்தின் ஆணிவேரை பிடுங்கி எறியத் துடிக்கும் தீய கொள்கைகள் உடைய வழிகெட்ட கூட்டங்கள் குறிப்பாக ஷீஆவும் ,காதியானியும் முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவல் செய்தமைக்கு தீனை விட்டு கொடுக்கும் இவர்களது தாராளமான கொள்கைகளும் அரசியல் இலாபமே காரணம்.

படித்த மக்களோ பாமர மக்களோ இந்த வழிகேட்டின் அடையாளத்தை கண்டு கொள்ளாமல் அதில் போய் வீழ்ந்தமைக்கும் இந்தஅணுகுமுறையே காரணம்.

ஈரானில் ஏற்பட்ட ஷீஆ புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக சித்தரித்ததனால் இன்று ஷிஆயிஸம் வேகமாக பரவி வருகிறது.

ஸஹாபாக்களை, நபிகளாரின் மனைவிமார்களை தவறாக சித்தரிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில காலங்களில் ஷிஆ-சுன்னி பிரச்சினை இந்த நாட்டிலும் (அவர்களது குடும்பத்திலும்) நடக்கலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

எனவே அகீதாவையும் தூய்மையான சுன்னாவையும் மக்கள் மத்தியில் வைத்து புனரமைக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்கினால் கிலாபத் ஏற்படாவிட்டாலும் ஈமானையாவது பாதுகாத்து ஈமானுடன் மரணிப்பதற்கு வாய்ப்பாக அமையும். வழிகேட்டை அடையாளம் கண்டு அதனை விட்டு தவிர்ந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்;. தீனுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவேபெரிய கிலாபத்தாகும்.எனவே அகீதாவுக்கு முதலிடம் கொடுத்து பிரசாரப்பணியினை செய்வோமாக! … இன்ஷால்லாஹ்

நன்றி : உஸ்தாத் இம்தியாஸ்(islamkalvi.com)

( மூச்சு முட்டும் வரை கிளபாத்தை பேசும் இளம் உள்ளங்கள் " இஸ்லாமிய ஆட்சி வந்தால் எல்லாவற்றுக்கும் முடிவு எட்டும் என்று நிச்சியம இல்லாத வற்றை பற்றி கனவு காண்கிறார்கள் " ஆனால் இவர்கலாலோ அல்லது இந்த கொள்கையை ஆதரிப்பவர்களோ தங்கள் தங்கள் இஸ்லாமிய ஊர்களில் கூட ஒற்றுமையை கொண்டு வர முடியவில்லை என்பது எதார்த்த நிலவரம் - நாம் ஒன்றும் கிலாபத் ஏற்பட கூடாது என்று சொல்லவில்லை , கிலாபத் என்ற கனவில் தற்போதைய எதார்த்த வாழ்வில் ஒரு இஸ்லாமியனாக செய்ய வேண்டிய விடையத்தை கோட்டை விட்டு விட கூடாது என்பதே )

அல்லாஹ்வே அனைத்தையும் நன்கு அறிந்தவன் !!

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்த தலைப்பை பார்க்கும் போது இதை எழூதியவர் அகீதா பற்றியும் முழூமையாக அறியவில்லை கிலாஃபா பற்றியும் முழூமையாக அறியவில்லை என்பதயே காட்டுகிறது இவர் ஆன்மீகத்தையும் அரசியலையும் பிரித்து விட முயற்ச்சிக்கிறார் இப்படி செய்வது நபி வழியல்ல

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரரே... பொத்தாம் பொதுவாக இப்படி சொல்லி கொண்டே போனால் எப்படி...
    தலைப்பை பார்த்தாலே எப்டிங்க புரியும்..
    உள்ளே படித்து பாருங்க பிறகு அதற்கு பதில் சொல்லுங்கள்..

    ஆனமீகத்தையும் , அரசியலையும் பிரிக்கிறோமா ? என்ன சொல்லவரிங்க...
    நாங்க ஆன்மீகமும்,அரசியலும் வேறு வேறு என்று சொன்னோமா ??
    அல்லது அரசியலுக்கு முன்பு ஆன்மிகம் முக்கியம் என்று சொன்னோமா ??
    சொல்லுங்கள்.

    உங்கள் நிலை தான் என்னங்க தயவு செய்து சொல்லுங்க பிரதர்..
    இப்ப நாம என்ன செய்யணும் கிலாபா விற்க்காக ?? அத சொல்லுங்க முதலில்..

    இப்ப கிலாபா விற்கு எதிராக என்ன செய்து கொண்டு இருகிறோம் .

    பதில் தேவை.

    ஜசகல்லாஹ்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...