(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, April 23, 2010

இவரெல்லாம் சிலருக்குத் தெரியமாட்டார்கள் - இவர் முஸ்லிம் என்பதால் !!

"ஓர் உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது"

"As a devout Muslim I could not accept it"


இது, நியூயார்க்கைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரான சகோதரர் முஹம்மது முகுல் அவர்கள், தன் டாக்சியில் ஒருவர் விட்டுச்சென்ற மிகப்பெரிய தொகையைத் திருப்பி கொடுத்தபோது, அதனைப் பாராட்டி ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்தப் பணத்தைத் தொலைத்தவர், பரிசாகக் கொடுக்க முன்வந்தபோது சொன்ன வார்த்தைகள்.

சுமார் நான்கு மாதங்கள் காலம் கடந்த செய்தி என்றாலும் இவருடைய செயல் நமக்கு ஒரு முன்னுதாரணமாய் இருப்பதால் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

அது சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம். சகோதரர் முஹம்மது முகுல் அஸதுஸ் ஸமான் (Muhammed Mukul Asaduz Zaman) அவர்கள் நியூயார்கில் மருத்துவம் பயின்று வருகிறார். பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இவர் பகுதிநேர வேலையாக டாக்சி ஒட்டி வந்தார்.

கிறிஸ்துமசுக்கு முதல்நாள் அவருடைய காரில் பயணம் செய்த இத்தாலியைச் சேர்ந்த பிளிசியா என்பவரும் அவரது குடும்பத்தினரும் சுமார் 21,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை விட்டுச் சென்று விட்டனர்.

தாம் பணத்தைத் தொலைத்து விட்டதை உணர்ந்த பிளிசியா, காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது குடும்பத்தினரோ "இது நியூயார்க், இங்குத் தொலைத்த பணம் நிச்சயமாகக் கிடைக்காது" என்று கூறினார்கள்.

இங்கே தன் காரில் ஒரு பையைக் கண்ட முஹம்மதுக்கு அதிர்ச்சி. பையைத் திறந்தார். அதில் இரண்டு கட்டு யூரோக்கள். ஆனால் அவர் தேடியதோ தொலைத்தவருடைய விலாசம், மொபைல் நம்பர் என்று ஏதாவது ஒன்றை. ஒரு விலாசத்தைக் கண்டெடுத்தார். அந்த விலாசம் அவர் இருக்கும் இடத்திலிருந்து சுமார் அறுபது மைல்கள் தூரம்.

தன் நண்பருடன் அந்த இடத்திற்குச் சென்ற அவர் கண்டது பூட்டிய வீட்டை. அந்த வீட்டின் வெளியே ஒரு காகிதத்தில் தன் மொபைல் நம்பரையும் ஒரு வாசகத்தையும் எழுதி வைத்தார். அது:

"வருத்தப்படாதீர்கள், உங்கள் பணம் பாதுகாப்பாய் இருக்கிறது"

பின்னர் தன் வீட்டிற்குத் திரும்பினார். அவரது கைப்பேசி ஒலித்தது. ஆம் அது பிளிசியா அவர்கள். மறுபடியும் நீண்ட தூரம் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தார். பணம் மற்றும் பொருட்களை ஒப்படைத்தார். அப்போது அந்த குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை அமைதியான முறையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

அந்த மகிழ்ச்சியில் சகோதரர் முஹம்மதுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு பெரும் தொகையை அவர்கள் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்து, சகோதரர் முஹம்மது சொன்ன வார்த்தைகள்,

"ஓர் உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது"

இந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க மட்டும் சுமார் 240 மைல்கள் பயணம் செய்திருக்கிறார் அவர்.


"நான் அந்தப் பணத்தைப் பார்த்தபோது, அதை, கஷ்டப்படும் எனக்கு இறைவன் கொடுத்ததாக நினைக்கவில்லை. ஆம், எனக்கு பணம் தேவைதான். ஆனால் நான் பேராசைக்காரன் அல்ல (Yes, I am needy but not greedy). என் தாய் சொல்லுவார், நீ நேர்மையாய் இரு, கடினமாக உழை, நிச்சயம் முன்னேறுவாய் என்று. அது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது"

எனக் கூறும் இவருடைய செயலில் நிச்சயம் மனிதகுலத்திற்கு ஒரு படிப்பினை இருக்கிறது. என் மார்க்கச் சகோதரன் என்ற பெருமையும் நமக்கு மிஞ்சுகிறது.

ஆனால் இந்தச் செய்தி பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. இதைச் சொன்ன சில ஊடகங்களில் பலவும் இவரது பெயரின் 'முஹம்மது' எனும் முதல் வார்த்தையைத் தவிர்த்தன - AP wire service ஊடகத்தை தவிர. என்ன காரணமோ இறைவனே அறிவான். ஆனால் உண்மையை மறைக்கவும் முடியாது, அது நீண்ட காலத்திற்கு மறைந்திருக்கவும் செய்யாது.

பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் இப்படி செய்வது இது முதல் தடவையல்ல. 2007 ஆம் ஆண்டு சகோதரர் உஸ்மான் என்பவர் சுமார் ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வைரங்களைத் தன் காரில் தொலைத்தவரிடம் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்...

சகோதரர் முஹம்மது போல, சகோதரர் உஸ்மான் போல எந்த ஒரு சூழ்நிலையிலும் இறைஅச்சம் உள்ள நல்லோராக இறைவன் நம்மை வைத்திருப்பானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to:

1. Br.Mahmoud El-Yousseph, Retired USAF veteran.



References:

1. The Muslim cabbie who saved christmas - Iviews, dated 20th January 2010.

2. Bangladeshi cabbie in Newyork returns cash left in Taxi - BBC, dated 13th January 2010.

3. NY cabbie drives 200 miles to return 13,000 euros left in taxi by tourist - The Telegraph, dated 12th January 2010.

நன்றி : satyamarkam.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...