சில நாட்களுக்கு முன்பு புதியதலைமுறை
தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஹிந்து முன்னணி அமைப்பினரால் தாக்கப்பட்டதற்கு பரவலாக
அனைவரும் கண்டனங்களை பதிவு செய்துவருகிறார்கள்.. இது கண்டனத்திற்குரியது என்பதில்
மாற்றுகருத்தில்லை என்றபோதிலும் இதில் நாம் கண்டிக்கவேண்டியது புதிய தலைமுறை போன்ற
ஊடகங்களையும் தான்...
அனைத்து காட்சி
ஊடங்கங்களும் TRP ரேட்டிங்கை இலக்காக
கொண்டுதான் செயல்படுகின்றன. எப்படியாவது தங்களின் ஊடகங்களை முதன்மையாக மக்களுக்கு
காட்சி படுத்தி பெயர் வாங்க வேண்டும் என்ற வெறியில் சர்ச்சைக்குரிய விசயங்களுக்கு போட்டி
போட்டுக்கொண்டு முக்கியத்துவம் கொடுப்பதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தான் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்குத் தாலி
தேவையா? என்ற விவாதத்தை நடத்துவதாக
விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இந்த விளம்பரத்தில் பெண்களுக்கு தாலி என்பது
நாய்க்கு சங்கலி கட்டுவது போல என ஒரு பெண் பேசுவதை PROMOவில்
ஒளிபரப்பியுள்ளார்கள்.. இதை பார்த்து தான் ஹிந்து முன்னணியினர் வழக்கம்போல் நிதானம்
இழந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
ஒருவேளை சகிப்புத்தன்மையுடன் ஜனநாயக முறையில் தங்களின் எதிர்ப்பை அவர்கள்
தெரிவித்திருந்தால் அதை நாம் வரவேற்கவே வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரின்
அவர்கள் எப்படி வேண்டுமானலும் சர்ச்சைக்குரிய விசயங்களை ஊடகங்களில் ஒளிபரப்பலாம்
என்றால் அதை எதிர்த்து குரல் கொடுப்பதற்கும் மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறது
என்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதே போன்ற சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் நடந்தது நமக்கு
நினைவிருக்கலாம்...
விஜய் டிவி நீயா நானாவில் முஸ்லிம்களின் பர்தா குறித்து ஒளிபரப்பப்பட்ட
PROMOவில் பர்தா எங்களை அடிமைபடுத்துகிறது , சுதந்திரத்தை பரிக்கிறது என்று
எதிர்மறையான சர்ச்சையான கருத்தை முன்னிறுத்தி ஒளிபரப்பபட்ட போது பல முஸ்லிம் அமைப்புகள்
ஜனநாயக வழியில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து அந்த நிகழ்ச்சியை தடை
செய்யவேண்டும் என்று குரல்கொடுத்தன.. ஆனால் அந்த நிகழ்வின் போது எந்த ஒரு
தாக்குதலிலும் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை, எந்த கேமராவும் உடைபடவில்லை , எந்த
நிருபரும் தாக்கப்படவில்லை மாறாக இந்திய சட்டத்திற்கு உட்பட்டே தங்கள் எதிர்ப்பை முஸ்லிம்கள்
பதிவு செய்தார்கள் என்பதை கருத்து சுந்ததிரம் பேசுவோர் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பர்தா போடுவதும் , தாலி கட்டுவதும் அவர் அவர் சார்ந்த சமய நம்பிக்கை...
நாட்டில்
எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, மக்களின் நம்பிக்கை சார்ந்த சென்சிடிவ் விஷயங்களை
கிளறிவிட்டு வேடிக்கை பார்ப்பதும் , அதை படம்பிடித்து காசு பார்பதுமாக இன்றைய காட்சி
ஊடகங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துகொள்ள போட்டியிட்டு கொண்டிருப்பது வேதனையான
ஒன்று...
மக்கள் விழித்துகொள்ள வேண்டும்... இது போன்று நம் உணர்வுகளை தூண்டி வேடிக்கைபார்க்கும்
வியாபார உக்தியை புரிந்துகொள்ள வேண்டும்.. எந்த ஒரு விஷயத்திற்கும் உணர்வுகளுக்கு இடமளிக்காமல்
புத்திக்கு இடம்கொடுத்தால் .. நிதானமாக எதையும் நாம் எதிர்கொள்ளலாம் இன்ஷால்லாஹ்.
- NAGORE ABDULLAH.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன