(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, April 14, 2013

களத்தில் இறங்குவோம் வாருங்கள்.. வழிவகைகளை சொல்லுங்கள்... போராடுவோம்..



காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதால் வரும் வாழ்வாதாரத்தை பாதிக்ககூடிய சுகாதார கேடுகளை எண்ணத்தில் கொண்டு கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போராட்டங்கள், எதிர்ப்புகள், தெருமுனை கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு...
ஜி.அர்.கே.ரெட்டியின் காந்திதாத்தா நோட்டிற்கு அடிமையாகி போன புண்ணியவான்களை இந்நேரத்தில் வாழ்த்த வார்தையில்லை...

நபி(ஸல்) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் ""மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று ஏற்றப்படும். அவனது மோசடி அளவுக்கு அது உயரமாக ஏற்றப்படும். அறிவீர். பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்று அதில் மோசடி செய்தவனைவிட மிகப் பெரும் மோசடிக்காரன் வேறெவனுமில்லை'' (புகாரி 31 86, முஸ்லிம் 35 79).


நாகூர் மக்களே..

விபரம் தெரிந்து தான் நாம் அமைதியாக இருக்கிறோமா? இல்லை .. ஒன்னும் விளங்காமல் இருக்கிறோமா என்று தெரியவில்லை...

நம் ஊரை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதற்கான அஸ்திவாரம் தான் இந்த நிலக்கரி இறக்குமதி துறைமுகம் என்பது உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா ? விளங்கவில்லையா.....

நமக்கு, நம் பிள்ளைகளுக்கு , நம் பேரப் பிள்ளைகளுக்கு, நம் ஊர் மக்களுக்கு இதை விட ஒரு மாபாதக செயலை யாரும் செய்ய முடியாது... நாமே நம் தலையில் மண் அள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம் மக்களே....

எப்படி பட்ட சிக்கலில் நாம் மாட்டிகொண்டிருக்கிறோம் தெரியுமா..? புரியும்படி சொல்கிறோம் கேளுங்கள்..

வழக்கத்திற்கு மாறாக உங்களுக்கோ ,உங்கள் பிள்ளைகளுக்கோ சளி தொந்தரவு அடிக்கடி வருகிறதா ? அப்படியானால் நீங்கள் நிலக்கரி துகள்களின் நச்சு தன்மைக்கு ஆளாகிவிட்டீர்கள் என்று அர்த்தம். இது தொடக்கம் தான் .. வர வர ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு ஏற்ப 

நாள்பட்ட சளி தொந்தரவு,

தொண்டை வலி , எரிச்சல்,

சுவாசக்கோளாறு # ஆஸ்த்மா ,

நுரையீரலில், கிட்னியில் கல் உருவாவது,

பலதரப்பட்ட தொல் வியாதிகள் # அலர்ஜி,

புற்றுநோய்

என்று வரிசையாக நோய் தொற்றிகொள்வதற்கான வாசலை நாம் திறந்துவிட்டு விட்டோம். (மேற்கண்ட விஷயங்கள் மிகைபடுத்தி சொல்லவில்லை .. அத்தனையும் எதார்த்தமான உண்மை.)

நம் சமூகத்தை நாமே அழித்து கொள்ள ஆயத்தம் ஆகிவிட்டோம். அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். நினைக்கவே பயமாக இருக்கிறது.

ஏற்கனவே நோய் நொடிகளுக்கு பஞ்சமில்லை லட்சம் ,லட்சமாக மருத்தவமனைகளில் செலவு செய்து கொண்டிருப்பது போதாதா ? இதுல தெரிந்தே நோய்களை முன்வந்து பெற்றுகொள்ள ரெடி ஆகிவிட்டோமே என்ன கொடுமை...

ரயில் தண்டவாளங்களில் கொட்டிக்கிடக்கும் மனிதகழிவிற்கு மூக்கை பொத்தும் நாம் .. அதே தண்டவாளங்களில் தற்போது கொட்டிகிடக்கும் நிலக்கரி துகள்களை கண்டுகொள்வதில்லை..ஆபத்தை உணர்வதில்லை..

தண்டவாளங்களின் அருகில் இருக்கும் மண் கூட கருப்பாக மாறிவிட்டது, ரயில்மூலம் எடுத்து செல்லும் நிலக்கரி பத்தாது என்று லாரிகளிலும் எடுத்து சென்றதன் விளைவு காரைக்கால்,திட்டச்சேரி,நாகூர் சாலைகளிலும் நிலக்கரி துகள்கள் படர்ந்துள்ளது...

எவனுக்கோ பிரச்சனை என்று நாம் உண்டு , நம் வேலை உண்டு என்று போய்வந்து இருக்கிறோம்.. ஆனால் பலவிதமான சுற்றுசூழல் பிரச்சனையில் நம் ஊர் மக்கள் அனைவரும் மாட்டிகொண்டு விட்டோம் என்பதே உண்மை.. விளைவு போகப்போக கடுமையாக இருக்க போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லையா ?

நிலக்கரி இறக்குமதியால் சுமார் 6 கி.மீ. சுற்றுவட்டார சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசுபட்டு வருகிறது. ஊர் மக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்றதாக துறைமுகத்தின் செயல்பாடுகள் உள்ளன.

இதை மனதில் கொண்டு தான் ஆரம்பத்தில் இந்த நிலக்கரி இறக்குமதி எதிர்க்கபட்டது .. ஆனால் அதன் வீரியம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது துறைமுகத்திற்கு ஆதரவு கொடுக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள் நம்மவர்கள்.

அறிந்து கொள்வீர்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! உங்கள் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்'' (புகாரி, முஸ்லிம்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஊர் மக்களை விலைபேசி விற்றுவிட்டு என்னங்க நீங்க அவன் பல கோடியை போட்டு ஆரம்பிச்சு இருக்கான் நாம நிறுத்த சொன்னா உடனே நிறுத்திடுவானாஎன்று வியாக்கியானம் பேசும் நல் உள்ளங்கள் கேட்டுகொள்ளுங்கள்...

தடை செய்ய முடியும் இன்ஷாஅல்லாஹ்

காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை ஏன் தடை செய்ய முடியாது... இதே சுற்றுசூழல் பிரச்சனைக்காக சென்னை உயர்நீதிமன்றமே சென்னை துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதை தடை செய்துள்ளது.. அதன் விபரம் வருமாறு:
 
சென்னை துறைமுகத்தில் நிலக்கரி, இரும்பு தாதுக்களை கையாள்வதால் பாரிமுனை பகுதி மாசு அடைவதாகவும், இதற்கு தடை விதிக்க கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நிலக்கரித்தூள்கள் ஐகோர்ட்டு உள்ளிட்ட கட்டிடங்களில் படிந்து மாசு அடைவதாகவும் இதனால் இப்பகுதி பொது மக்கள் சுவாச நோயால் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். சென்னை துறைமுகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் நிலக்கரி கையாளும் போது எற்படும் தூசு மாசுவை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதித்தால் மாநிலத்தில் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மக்களின் நலன் கருதி சென்னை துறைமுகத்தில் நிலக்கரி, இரும்பு தாதுக்களை கையாளுவதற்கு தடை விதித்து அதை எண்ணூர் துறைமுகத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர்.

இந்த தடை உத்தரவை நாம் வாங்க முடியுமா ? -  முடியாதா ?

முடியும் என்றால் நாம் அதற்க்காக என்ன செய்ய வேண்டும்...

சட்டரீதியாக எதிர்கொள்ள என்ன என்ன வழிமுறைகளை கையாள வேண்டும்...அதற்க்கான பொருளாதாரம் எவ்வளவு ?..விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் , எங்களை வழிநடத்துங்கள்...வளரும் தலைமுறை ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிவகை செய்வோம்...

இல்லை அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது என்றால் ஏன் முடியாது... விபரத்தோடு விளக்கமளியுங்கள் ..

அதையும் பார்த்துவிடுவோம்...


( காரைக்கால் துறைமுகத்தில் பல வர்த்தகம் நடக்கிறது , நாம் துறைமுகத்தை மூட சொல்லவில்லை .நிலக்கரி இறக்குமதியை தான் நிறுத்த சொல்கிறோம் என்பதை கவனத்தில் கொள்க)

துறைமுகத்தில் பலவகையான ஏற்றுமதி ,இறக்குமதி செய்வதாக துறைமுக இணையத்தளம் அறிவித்துள்ளது. 


குறிப்பு : இந்த பிரச்சனையில் உண்மையாக நன்மையை நாடி செயல்பட்ட அமைப்புகள் ,தனிநபர்கள் அனைவருக்கும் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி உண்டு... ஆனால் கிடைத்த வரைக்கும் லாபம் என்று ரெட்டி போட்ட ரொட்டி துண்டை கவ்விகொண்டு ஓடிவந்தவர்கள் எவராக இருந்தாலும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் ""மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று ஏற்றப்படும். அவனது மோசடி அளவுக்கு அது உயரமாக ஏற்றப்படும். அறிவீர். பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்று அதில் மோசடி செய்தவனைவிட மிகப் பெரும் மோசடிக்காரன் வேறெவனுமில்லை'' (புகாரி 31 86, முஸ்லிம் 35 79).

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு இறைவன் சொர்க்கத்தைத் தடை செய்து விடுகிறான்...


சொற்ப காசுக்கு ஊர் மக்களின்.. ஏன் உங்கள் குடும்பத்தை கூட நினைத்து பார்க்காமல் விலைபேசி விட்டு வருகிறீர்கள் என்றால் உங்களை என்ன வென்று சொல்வது.. நீங்கள் வாங்கிய காசை பத்திரபடுத்தி வைத்துக்கொள்ளுங்கள் Hospital செலவிற்கு தேவைப்படலாம்.


தயவு செய்து உங்கள் விமர்சனத்தை பதிவு செய்யுங்கள்.

Friday, April 12, 2013

நாம் விரும்பி சாப்பிடும் சீனி நம்மை போனி பண்ண பாக்குதுங்கோ............



உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?


இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ,காபியிலிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.


3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி (அது தான்ங்க சுகர்) , இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ இன்ஷாஅல்லாஹ் வராது.

Sunday, March 31, 2013

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு கமாண்டோ படை பாதுகாப்பு ..!!



நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி கூறினார்.

ஆய்வு கூட்டம்

நாகையை அடுத்த நாகூர் தர்காவில் வருகிற 11–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை கந்தூரி விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் தர்கா அலுவலகத்தில் நடைபெற்றது. நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பிறகு உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:நாகூர் கந்தூரி விழாவின்போது பதற்றத்திற்கு உரிய பகுதிகளாக 6 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொடி ஊர்வலம், சந்தனக்கூடு ஊர்வலங்களில் பங்கேற்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அணிவகுப்பு வாகனங்களுக்கு பல்வேறு அரசு துறைகள் மூலம் வழங்க வேண்டிய சான்றிதழ்கள் ஒற்றைச் சாளர முறையில் நாகூர் தர்கா அலுவலகம் மூலம் வழங்கப்படும்.


கமாண்டோ படை பாதுகாப்பு
விழா நாட்களில் நாகூர் பகுதியில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்படும். ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து பயிற்சி பெற்ற கமாண்டோ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கால்மாட்டுத்தெரு பெண்கள் கடைத்தெரு பகுதியில் ஆண்கள் காரணம் இன்றி செல்வதற்கு தடை விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தர்கா மேனேஜிங் டிரஸ்டி எஸ்.ஏ.சேக்ஹசன்சாகிபு, பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு, டிரஸ்டிகள் சுல்தான்கபீர்சாகிபு, பாக்கர்சாகிபு, தர்கா மேலாளர் திருநாவுக்கரசு, நாகை முஸ்லிம் ஜமாத் தலைவர் ஜெய்னுல்ஆபிதீன், நகர சபை துணைத்தலைவர் சுல்தான்அப்துல்காதர், காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவு மாநில பொறுப்பாளர் நவுசாத், தர்கா ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலீபாசாகிபு, அபுல்காசிம்சாகிபு, இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், ராதாகிருஷ்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் பாரதிதாசன், ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, March 26, 2013

அந்தப் பழைய காலுறை... என்னோடு வரவேண்டும்..!!


அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார்.  தன் மகனை அருகழைத்தார்.
மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான் உங்களனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?"

"என்னவென்று சொல்லுங்கள் தந்தையே!" என்றான் மகன். 

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை"


ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான்.

அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார்.  அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர்.  உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது. அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம் சென்று  தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து "இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும்" என்று கூறினான்,

"முடியாது; முடியவே முடியாது" மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர்.  "இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்" என்று சொல்லிப் பார்த்தான் மகன்.  ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை. "இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை; எனவே, வாய்ப்பில்லை!" என்றார் உறுதியாக.

மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். "நான் சொன்னது, சொன்னது தான்.  வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள்". அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் "ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!"

இக் களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். "தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன்" என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான்மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"என் மகனே! அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை;  நாளை இந்த நிலை உனக்கும் வரலாம்.  இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை  நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும்  உதவும். ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!"

அந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.

'(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.' என்கிறது (திருக்குர்ஆன் 7:8)

'அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும் என்கிற கருத்தை உணர்த்தும் திருக்குறள் உண்டு:


(ஆங்கில மடல் ஒன்றின் தமிழாக்கம்: சகோதரர் இப்னு ஹம்துன்)

Saturday, March 9, 2013

ஊர் மக்களை அசிங்கபடுத்தியது போதும்..!


ஊர் மக்களை தலைகுனிய வைக்கும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது நம் நாகூரில்... நெற்றிக்கண் என்ற இதழ் இதை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது...

நாகூர் மைதீன் பள்ளித்தெருவை சார்ந்த ஜெகபர் சாதிக் சாஹிப் என்ற “முஸ்லீம் மைனர் (இப்படிதான் நெற்றிக்கண் இதழ் ஜெஹபர் சாதிக்கை பற்றி அட்டைபக்கத்தில் ஒட்டுமொத்த முஸ்லீம்களை கேலி செய்வது போல் முஸ்லீம் மைனர் என்று அழைக்கிறது – வாய்ப்பு கிடைச்சா விடுவாங்களா ? )


அந்த நெற்றிக்கண் இதழில் குறிப்பிட்டுள்ள விசயங்களை சுருக்கமாக இங்கே தருகிறோம்.

இவர் மலேசியா – இந்தியாவிற்கு பெருமளவில் ஹவாலா செய்து வந்திருக்கிறார், இதன் பெயரில் மலேசியாவிலும், இந்தியாவிலும் பண மோசடியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஜெகபர் சாதிக் பெயரில் பல வழக்குகள் நாகூர் காவல்நிலையமும், மலேசியா காவல்துறையும் பதிவு செய்துள்ளது. மைதீன் பள்ளி ஜமாஅத்திலும் இது சமந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவரின் தந்தை லத்திப் சாஹிப்பும் லேசுபட்டவர் அல்ல, அவரும் பல பண மோசடியில் ஈடுபட்டவர் என்ற கூடுதல் குற்றச் சாட்டையும் வைக்கிறது  நெற்றிக்கண் இதழ்...

இந்நிலையில் ஜெகபர் சாதிக் தமிழ்நாட்டில் பல பெண்களை காதலிப்பதாக கூறி மயக்கி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அந்த பெண்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து நெட்டில் போட்டு விடுவதாக மிரட்டி அதன் மூலமாகவும் பணம் பரிதிரிக்கிறார் என்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது நெற்றிக்கண்.

இதற்கான ஆதாரமும் தங்களிடம் இருப்பதாக நெற்றிக்கண் கூறி சில புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.


நெற்றிக்கண் பத்திரிகையில் மேற்கண்ட அந்த அசிங்ககேடான விசயத்தை படித்துகொண்டிருக்கும் போது மனது மிகவும் கனத்த தருணம் இந்த இறுதியான மூன்று வரிகள் படிக்கும் போது தான்...


“மோசடி பேர்வழி ஜெகபர் சாதிக் நாகூரில் பல நல்ல குடும்பத்து முஸ்லீம் பெண்களை காமவலை வீசி “ஜல்சா” செய்து ஏமாற்றி இருக்கிறான் சமந்தபட்ட பெண்கள் அந்த கிராதகன் மீது புகார் கொடுக்க தயங்குகிறார்கள்.”

ஒட்டுமொத்த ஊர்மக்களையும் இதற்க்கு மேல் அசிங்கபடுத்தவே முடியாது.

அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் சிறிதும் பெரிதுமாக நடந்தவண்ணம் உள்ளது...இது அம்பலப்படும்போது தான் பலருக்கு தெரியவருகிறது.

இதை தடுக்க முடியாதா ?.. 
அடுத்த தலைமுறை இந்த சீர்கேட்டில் தான் மூழ்கப்போகிறதா ?

இதற்க்கு தீர்வு காண என்ன செய்ய போகிறோம்  என்பதே நம் முன் எழும் கேள்வி ...........

Tuesday, March 5, 2013

நாகூர் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு


நாகூர் வர்த்தக சங்க சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


நாகூர் வர்த்தக சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், நாகூர் முஸ்லிம் சங்கக் கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது.

சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஏ.எச். அபுதல்ஹா தலைமை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வுப்படி,

சங்கத்தின் புதிய தலைவராக வி. முகமது ஹூசைன் மாலீம்,

செயலாளராக எஸ்.எம். நெய்னா மரைக்காயர்,

பொருளாளராக எம். முகமது பாரூக் மரைக்காயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக
எம். கந்தசாமி,
எம். முகமது சித்திக் மரைக்காயர்,
ஜெ. முகமது ரபீக்,
ஏ. முகமது ரபீக் மரைக்காயர் ஆகியோரும்,

துணைச் செயலாளர்களாக
எஸ்.பி. சாகிப் மரைக்காயர்,
எம். முகமது அப்துல்காதர் மரைக்காயர்,
எச். மீரா மெய்தீன்,
எம். முகமது சித்திக் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Thursday, February 28, 2013

நாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு ??

தர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம்.

அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கிறீர்களா..முன் எப்போதும் இல்லாத அளவிற்கு யானை மிகவும் அடம்பிடிப்பதாக சொல்கிறார்கள்.


பாகன் சொல்படி கேற்பதில்லை மிகவும் அசௌகரியமாக இருப்பதாக தெரிகிறது இதனால் யானை பாகன் யானையை அடித்து துன்புறுத்துவதாக குற்றசாட்டும் எழுந்துள்ளது.

மேலும் நாகூர் கிரசென்ட் பெண்கள் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் தர்கா தோட்டத்தில் யானைக்காக ஒய்வு எடுக்க கொட்டாய்  அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தினந்தோறும் யானையை அழைத்து சென்று வருவதற்குள் பாகன் படாதுபாடு படுகிறார் என்கிறார்கள்.

இதனால் பயத்தின் காரணமாக யானையை தூரமாக நின்றே வேடிக்கை பார்க்க விரும்புகிறார்கள் மக்கள்.



சிலர் இந்த கொட்டாய் அமைத்தது யானைக்கு பிடிக்கவில்லை போலும் அது தான் யானை இப்படி நடந்து கொள்கிறது என்று வியாக்கியானம் வேறு கொடுக்கிறார்கள் சிரிக்காமல்..
  
எது எப்படியோ யானைக்கு வயசு ஆயிடுச்சு என்பது தெளிவாக தெரிகிறது ... 
அதற்கு விருந்து தான் கொடுக்கல .. 
அதற்க்கு விடுதலையாவது கொடுங்க பா .. 

தன் இனத்தோடு சுற்றிதிரிந்து  சந்தோசமாக இருக்கட்டும் வயசான காலத்துல... 

நீங்க என்ன சொல்றிங்க ?

புகைப்படம் : Yosuf Ameen

மாடர்ன் சிட்டி மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு..!!


சமீபமாக "பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு"  என்ற பெயரில்  மாடர்ன் சிட்டி மனை விற்பனையாளர்களுக்கு எதிராக குற்றம்சாட்டி நோட்டிஸ் விநியோகிக்க பட்டது அதை நாமும் வெளியிட்டு இருந்தோம் அதே போல் தற்போது அதற்க்கு மறுப்பு தெரிவித்து மாடர்ன் சிட்டி விற்பனையாளர்களும்  ஆதரங்களோடு நோட்டிஸ் வெளியிட்டுள்ளனர். அதையும்  உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். 


Monday, February 25, 2013

மாடர்ன் சிட்டி என்ற பெயரில் மோசடியா ?

நாகூரில் "பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு" என்ற பெயரில் கீழ்காணும் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.



Tuesday, February 12, 2013

காரைக்கால் வினோதினி மரணம் ..!! கொடுமையிலும் கொடுமை

ஒரு மனித வெறியனால் முகத்தில் ஆசிட் வீசப்பட்டு இவ்வளவு நாள் கொடுமைகளை அனுபவித்து வந்த காரைக்கால் சகோதரி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர் ...!! ஆனால் 

இந்த கொடுமையை செய்த அந்த மிருகத்திற்கு என்ன தண்டனை தெரியுமா ? ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டு வார வாரம் சிக்கன் பிரியாணியும்,முட்டையும் கொடுப்பது தான் தண்டனையாம்..??????




இதே நிகழ்வு நம் உடன் பிறந்த சகோதரிக்கு நிகழ்ந்தால் .. நம்முடைய நிலை என்ன ? .. மனிததன்மையே இல்லாமல் இதை செய்தவனுக்கு ஆதரவாக மனித உரிமையை பற்றி பேசி அதிக பட்ச தண்டனையை மறுப்பீர்களா..? 


நடு ரோட்டில் மக்கள் முன்னிலையில் முகத்தில் அவன் மீது ஆசிட் ஊற்றி  தூக்கில் தொங்கவிட்டு இவனுக்கும் ,இவனை போன்று சிந்திக்கும் மனித மிருகங்களுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பீர்களா..?



"ஆசிட் வீச்சில் உயிர் இழந்த வினோதியின் தந்தை ஜெயபால் தனியார் மருத்துவமனையில் கதறி அழுதார். மகளின் இழப்பை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:- 

என் மகள் உயிருடன் திரும்ப வருவாள் என்றுதான் நம்பி இருந்தோம். இப்படி எங்களை அனாதையாக்கி சென்று விட்டாளே. அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகதான் டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் இன்று காலையில் திடீரென இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

அவள் கண் பார்வை இழந்து உயிரோடு இருந்தாள்கூட பரவாயில்லை. அவளை நாங்கள் பார்த்து கொண்டே இருந்திருப்போம். இப்படி எங்களை தனியாக விட்டு அவள் சென்று விட்டாளே... 

சிகிச்சையின்போது அவள் வேதனைப்படுவதை நாங்கள் பார்த்து அழுதோம். அப்போது அவள் என்னிடம், நான்பட்ட கஷ்டத்தை அவனும் (சுரேஷ்) அனுபவிக்கணும் அப்பா... என்று கூறினாள்




இந்திய சட்டம் பாதிக்கப்பட்டவன் நிலையில் இருந்து தண்டனை வழங்குகிறதா ? 

பிறகு எப்படி வினோதினியின் கஷ்டங்களுக்கு நியாயம் கிடைக்கும்  ?

பெற்றோர்களின் மனக்குமுறல் அமைதியுறும் ?


உங்கள் கருத்தை பதியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...