(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, February 6, 2011

தமிழக தேர்தலும் கழகங்களும் ஜமாத்களும் ஓர் பார்வை!.

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதினால் தேர்தல் வேலைகளும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் வேலைகளும் மும்முரமாக உள்ளன. கட்சிகள் சீட்டிற்காக அணிமாறும் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்துவிட்டன. இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் களத்தின் வேலைகளையும் தொடங்க ஆரம்பித்துவிட்டனர். த.மு.மு.க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அ.தி.மு.க.வுடனும் முஸ்லிம் லீக் தி.மு.க வுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டு திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம்!. அல்லது தங்களின் சின்னத்தில் போட்டியிடலாம்!. இது இக்கட்சிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல!. முழுகட்சியையும் அது திமுக விடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன!.

இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்பது அல்லது பத்து என்று சீட்டுகளை பேரம்பேசி வாங்குவதும், பா.ம.க போன்ற கட்சிகள் எல்லாம் முப்பது சீட்டுக்களை பேரம்பேசி அல்லது டிமான்ட்வைத்து வாங்கும் அளவிற்கு குறுகிய காலங்களில் அசூர வளர்ச்சியடைந்து விட்டார்கள். ஆனால் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இருந்துவரும் முஸ்லிம்லீக் கட்சி, தன் பிறைசின்னத்தின் மறுபக்கமான “தேய்பிறையாகவே” இருந்து வருகின்றது!.

முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு அதிலும் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது. இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.

மேலும் மணிதநேய மக்கள் கட்சி சுமார் பதினேழு தொகுதிகளில் தங்களுக்கு வெற்றிபெறும் அளவிற்கு செல்வாக்கு உள்ளதாக கண்டறிந்து பொதுக்குழுவில் அந்த தொகுதியையும் அறிவித்தனர். இருந்தும் இவர்கள் மூன்று முதல் ஐந்து சீட்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எத்தனை எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் வந்தாலும் இன்னும் ஒன்றிற்கும் இரண்டிற்கும் அல்லது ஏதோவொரு குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றினாலே, “சமுதாய ஓட்டு அத்துனையும் உங்களுக்கே” என்று பேரம் பேசி, சமுதாயத்தினை அடகுவைக்கும் அவலநிலை மாறவேண்டும்!. நம்மின் பலத்தினை நாமே கேவலமாக எடைபோடுவதும் சரியல்ல!.

இந்திய தவ்ஹீது ஜமாத்தும் போட்டியிடப் போவதாக தெரியவில்லை!. ஆனால் ஆதரவை, அல்லது பிரச்சாரத்தினை மட்டும் இவர்கள் செய்வார்கள் என்றே தோன்றுகின்றது. நிச்சயமாக த.த.ஜ அணிக்கு மாற்றமான அணியில் இவர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!. இப்படியே நாம் இக்கரைக்கு அக்கறை என்று முடிவெடுப்பதிலேயே அணைத்து இயக்கங்களும் தங்களை முன்னிலைப் படுத்துகின்றன.

மேலும் மானம் காக்குமா ம.ம.க?. என்று ஒருபுறம் இக்கட்சியை 18 சீட்டுகள் பெறவேண்டும் என்று தூண்டுவதும், பின் சேலத்தில் நடைபெற்ற த.த.ஜ பொதுக்குழுவில் ம.ம.க எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் என்று சீண்டுவதும், மாறுவேடம் போடுவதும் சமுதாய இயக்கமான த.த.ஜ விற்கு அழகல்ல!. ஒன்று இவர்கள் போட்டியிடவேண்டும்!. இல்லையென்றால் களத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அமைதியாக இருந்துவிட்டு செல்லவேண்டும். த.த.ஜ - தமுமுக விற்க்கு இடையே உள்ள ஈகோ மற்றும் பொறாமை காரணமாக சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்வதற்க்கு ஆயிரமாயிரம் காரணம் கூறினாலும், இன்று நமக்கு உள்ள அரசியல் அதிகார தேவைக்கு அது உதவாது!. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கவே செய்யும்.

முஸ்லிம் லீக் நின்றாலும் பிடிக்காது. ம.ம.க நின்றாலும் பிடிக்காது. ஆனால் நாங்களும் நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது எந்தவகையில் நியாயம் என்று சமுதாய நலனை முன்னிலைப் படுத்தும் த.த.ஜ சிந்திக்கவேண்டும். உங்களுக்கிடையே உள்ள ஈகோவை எல்லாம் தேர்தலில் காண்பித்து நம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவத்தினை அடைய விடாமல் தடுப்பதை சிந்திக்கவேண்டும். அல்லது தேர்தலில் நாங்கள் நிற்கமாட்டோம் என்ற நிலைபாட்டில் இருந்து மாறி, தேர்தல் களம் கண்டு, முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் சென்று, நம் சமுதாய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதுதான் ஒரு சிறந்த இயக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும். அரசியல் வேண்டாம் என்றால் தேர்தலில் பிரச்சாரமும் செயக்கூடாது!. எந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளையும் சந்திக்கக்கூடாது!.

மேலும் ஜமாத், இயக்கம் போன்ற அடைமொழிகளுடன் சிறிய சிறிய பத்துக்கும் மேற்பட்ட இன்னபிற இஸ்லாமிய இயக்கங்களும் அவர்கள் மனதிற்கு என்ன தோன்றியதோ, அதையே ஆதாரமாக வைத்து பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தல் வேலைகள் செய்வதும் ஆரோக்கிய மானதல்ல!.

இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்தாலே திமுக. அதிமுக காங்கிரஸ் என்று ஏதாவதொரு பெரிய அரசியல் கட்சியுடன் நாமும் முப்பது அல்லது நாற்பது தொகுதிகள் என்று பேரம்பேசி அதை இஸ்லாமிய இயக்கங்களுக்குள் பகிர்ந்துகொள்ளலாம். இது சாத்தியமா என்றால் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட நம்மால் சாத்தியமே!. இதுபோன்ற ஒரு முடிவை நாம் எட்டாதவரை இன்னும் பத்து தேர்தல்கள் வந்தாலும், இரண்டு மூன்று என்று மட்டுமே முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சட்டமன்றத்தில் காணலாம். மேலும் தேர்தல் முடிந்தபிறகு ஆஹா பார்த்தீர்களா?. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம்!. ஒரு அமைச்சர் கூட இல்லை!. இஸ்லாமியர்களின் நிலையை முன்னேற்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்று போராட்டம் செய்து என்ன பயன்?.

தேசிய அளவிலும் நம்மை வழிநடத்த ஒரு வலிமையான இஸ்லாமிய இயக்கமோ அரசியல் கட்சியோ இல்லை!. அதற்கு முதலில் மாநிலம் தழுவிய அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் முதலில் மாநில அளவில் ஒன்றினைய வேண்டும்!. பின் ஒன்றிணைந்த இக்கட்சிகள் தேசிய அளவில் பாராளுமன்ற தேர்தலில் ஒரணியில் நின்றால் எம்பி தொகுதியையும் நம் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பெறமுடியும். ஆனால் செய்வார்களா?. இதுவே நம் அரசியல் உரிமையை பெற சரியான வழிமுறையாக இருக்க முடியும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!. நம்மை நாமே மாற்றிக்கொள்ளாத வரை நமக்கு எந்த அரசியல் கட்சியும் உரிமையை வழங்க முன்வராது!.

ஒவ்வொரு மாநில கட்சியும் சேர்ந்து கடந்த தேர்தலில் கூட அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் சென்னையில் ஒன்று கூடி ஒரே கூட்டணியில் நிற்பது என்று முடிவெடுத்து கடைசியில் ஆளுக்கொரு திசையில் வழக்கம்போலவே சென்றுவிட்டனர். ஆக அரசியியலில் நமக்கு எதிரிகள் வேறு யாரும் அல்ல! நமக்கு நாமே எதிரிகள்!!.

முஸ்லிம் சமுதாயத்தின் ஜமாத்/லீக்/கழகம்/பேரவை மற்றும் இத்யாதிகள்:

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


2. இந்திய தேசியலீக்


3. தேசியலீக் கட்சி


4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்)


5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்)


6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான்


7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்)


8. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்


9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்


10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்


11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்


12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்


13. மனிதநேய மக்கள் கட்சி


14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்)


15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)


16. ஜனநாயக மக்கள் கட்சி


17. இந்திய தேசிய மக்கள் கட்சி


18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்)


19. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்


20. இந்திய தவ்ஹீது ஜமாத்


21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்


22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்)


23. ஜமாத் இ இஸ்லாமி


24. ஜமாத்துல் உலமா


25. ஷரியத் பாதுகாப்பு பேரவை


26. இஸ்லாமிய இலக்கிய பேரவை


27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா


28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா


29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்)


30. மில்லி கவுன்ஸில்


31. மஜ்லிஸே முஷாவரத்


32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்


33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்


34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்


35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி)


36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்


37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்)


38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு


39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை
(ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)

ஏம்பா, இனி நாம ரெண்டுபெரும்தான் மிச்சம்!. நாமளும் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு “பக்கீர்ஷா பேரவை ஜமாத் கழகம்”  என்று ஆரம்பிச்சா என்ன?.


இயக்கத்திற்கு மட்டும் குறையில்லை!. மற்றும் இங்கு குறிப்பிட மறந்து விட்டது பத்திற்கு மேல் இருக்கும்!. இந்தியா முழுமைக்கும் உள்ள நம் எதிரி இயக்கங்களின் எண்ணிக்கை இதில் பாதி கூட இல்லை!. ஆனால் தமிழ்நாட்டளவில் மட்டும் நாம் கண்ட அமைப்புகளின் என்னிக்கையை கண்டீர்களா?.

இந்திய மக்கள் தொகையைப்போல் எண்ணிக்கையில் அதிகமாகவே உள்ளது நம் இயக்கங்கள்!. ஆனால் ஊட்டச்சத்து இல்லாமல்தான் சவளைப் பிள்ளையாக நாம் இருக்கின்றோம். முதலில் இந்த சமுதாய இயக்கத்திற்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் நிலைதான் தற்போது உள்ளது. எனவே சிந்திப்பார்களா!.
இவர்கள் ஒன்றினைந்து என்கட்டுரையை பொய்ப்பிப்பார்களா?.

நன்றி : முஜீப்.காம்

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்...

வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.
சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.

இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பொறாமைநோய் குறித்துக் கடும் எச்சரிக்கையை நமக்கு அளித்துள்ளார்கள்.
“விறகை நெருப்புத் தின்று விடுவதைப்போலப் பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது, எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்கிற நபிமொழி (நூல்: அபூதாவூத்) பொறாமையின் பொல்லாத் தீங்கை உணர்(ந்)/த்/திடப் போதுமானதாகும்.
மற்றவருக்குக் கிடைத்திருக்கும் கல்வி(அறிவு), செல்வம், மக்கட்பேறு, பதவி, சமூகநிலை, வலிமை, திறமை போன்ற உலகியல் ஆபரணங்களில் ஒருவன் பொறாமை அடையும்போது அவன் அறிந்தோ, அறியாமலோ, அவை, அந்த மற்றவருக்கு, தம் இறைவனாலேயே வழங்கப்பட்டன என்பதை மறந்து, அல்லது மறுத்து விடுவதாகவே பொறாமை அமைகின்றது.

தன்னைவிட மற்றோரை மேன்மையாகக் காணும்போது, இறைவன் தனக்கு நீதி செய்யவில்லை என்பதுபோலக் கருதி, மனிதன் பொறாமைச் சேற்றில் வீழ்கிறான். அதுமட்டுமா? இறைவன் தனக்கு வழங்கியுள்ள நற்பேறுகளையும் பாக்கியங்களையும்கூட, அவன் மறக்கவும் துறக்கவும் தலைப்படுகிறான். “எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை…..” என்கிற மனநிலை.

ஒருமுறை இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடத்தில், “அவர்கள் இறை அருளுக்கு விரோதிகள்” என்று மொழிந்தார்கள். தோழர்கள், “யாரைச் சொல்கிறீர்கள் நபியே?” என்று கேட்க, நபி(ஸல்)அவர்கள், “இறைவன் தனக்கு(ம்) வழங்கியிருக்க, மற்றவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களே, அவர்கள்தாம்” என்று கூறினார்கள் (நூல்: அத்-தப்ரானி).

யாருக்கு எங்கே, எவற்றை, எவ்வளவு, எவ்விதம் வழங்குவது என்பதை இறைவனே தன் தூய அறிவால் தீர்மானிக்கிறான். இந்தப் பேருண்மையை அறியாமல், பொறாமை கொள்பவன், தன் இறைவனை அறியாதவனாகிறான்.
நிறைவடையா மனநிலை மனிதனைப் பொறாமையில் தள்ளுகிறது. பொறாமை பழிபாவத்திற்கும்,  வன்மம், பொல்லாங்கு இறைமறுப்பு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்கிறது. முதல் பாவமாகக் கூறப்படுவதும் பொறாமைதான். ஆதம்(அலை) என்கிற மனிதப் படைப்பைப் பார்த்து  ஷைத்தான் கொண்ட பொறாமை!


இன்று நம்மிடையே தனியாளாயினும், இயக்கங்களாயினும், ஏன் தேசங்களாயினுங்கூட இந்தப் பொறாமைதானே, வம்பு வழக்குகளுக்குக் காரணமாக அமைகிறது! சக மனிதர்கள்/இயக்கங்கள்/அமைப்புகள் செய்த நற்செயல்களை எளிதாகப் புறக்கணிக்கிறோம். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த, தீய செயல்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவமானப்படுத்துகிறோம்.

இறைநம்பிக்கையுள்ள ஒருவன், தன் நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் மன நிறைவுடன், மனந்தளராமல், நிலைகுலையாமல் (தானறியாத, தனக்குக் கிடைக்கவிருக்கும் நலவளங்களுக்காகப்) பாடுபட வேண்டுமேயல்லாது மற்றவர்மீது பொறாமை கொள்ளலாகாது. இறைவன் தனக்கு அளித்தவற்றில், மனநிறைவு அடைபவனாக, ஒரு நம்பிக்கையாளன் இருப்பான். இதையே அறிஞர் இப்னு கைய்யூம் இப்படிக் குறிப்பிடுகிறார்: “(மனநிறைவு) அது நிம்மதியின் வாசலைத் திறக்கிறது. அடியானுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது”.

“மேலும், அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் மேன்மை அளித்துள்ளான் ...” (16:71) என்பது இறைமறை குர்ஆன் காட்டும் உண்மை.
அதுமட்டுமின்றி இறைமறை, வேறொரு வசனத்தில், “... உலகவாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கிறோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு, வேறு சிலரைவிட, உயர்பதவிகளை அளித்தோம்; இவர்களில், சிலர், வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக! ...”(43:32) என்றும் குறிப்பிடுகிறது.

“இவ்வுலக நலவளங்களைக் காட்டிலும் இறையருளே உயர்மதிப்புடையது” என்பதே இதிலிருந்து நாம் உணரவேண்டுவது. ஏனெனில், உயர்வு என்பது உலக ஆபரணங்களில் அல்ல; மாறாக நேர்மையான இறையச்ச உணர்(தக்வா)வில்தான் இருக்கிறது.]
“... உங்களில், இறைவனின் கண்ணியத்துக்கு உரித்தானவர், இறையச்சமுடையவரே ...” என்கிறது இறைமறை (49:13).

மேலும் “... மறுமையோ, இறைவனை அஞ்சி வாழ்பவர்களுக்கு உரித்தானதாகும்” (43:35) என்றும் கூறுகிறது.
இறைநம்பிக்கையாளனின் இருபெரும் வலிமையாக, இறைமீதான அவனது ஆதரவும் அச்சமும் அமைகின்றன.
மற்றவர் அழிந்துபோக எண்ணும் தீய பொறாமைக்குத் தடை சொல்லும் இஸ்லாம், ஒருவருக்கொருவர் நற்செயல்களில் போட்டியிடுவதை நன்கு ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.

தான-தர்மங்களில் தலைசிறந்து விளங்கும் ஒருவரைப் பார்த்து “இறைவா! எனக்கும் நீ செல்வ வளங்களை; ஆரோக்கியத்தை வழங்கினால், இன்னாரைப் போன்றே நானும் தர்மம் செய்வேன்; வாரி வழங்குவேன், நற்காரியங்கள் புரிவேன்” என்று பிரார்த்திக்கத் தடையேதுமில்லை.

இந்த, தீய எண்ணமில்லாத போட்டி மனப்பான்மைக்கு அரபுமொழியில் ‘Ghibtah’ ‘கிப்தாஹ்’ (ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு) என்று சொல்லப்படுகிறது.
சுருங்கக் கூறின்,

    • ஹஸது எனப்படும் (தீய எண்ணப் பொறாமை) நற்செயல்களை அழித்துவிடும்.
    • பொறாமை நயவஞ்சகத்துக்கும் இறைமறுப்புக்கும் வழிகோலுகிறது.
    • இறையை நம்பிடும் மனநிறைவு நிம்மதியும் பாதுகாப்பும் அளிக்கவல்லது.
    • ஏற்றம்-தாழ்வு, இரண்டுமே இறைநியதி.
    • தளராமல் பாடுபடுவது நம்பிக்கையாளரின் பண்பு.
    • உலக வளங்களை வைத்தல்ல, உள்ளத்தூய்மை, இறையச்சத்தைப் பொருத்தே இறைவனிடம் நற்சிறப்பும் கண்ணியமும் கிடைக்கும்
    • மறுமை இறையச்சமுடையவர்களுக்கே உரியது.
    • தீய எண்ணமில்லாத, போட்டி மனப்பான்மை (Ghibtah) தவறன்று.
    • பொறாமைக்காரர்களின் தீமையிலிருந்து, இறைவா! உன்னிடம்பாதுகாவல் தேடுகின்றேன்....என்று பிரார்த்திப்போமாக!
      ஆக்கம்: இப்னு ஹம்துன்

      Sunday, January 30, 2011

      கொமரு காரியத்திற்காக வந்து இருக்கிறாரு உங்களால் ஏன்ற உதவி செய்யுங்கள்...!!!!!

        
      தலைப்பை படித்ததுமே சிலருக்கு புரிந்து இருக்கும் இதன் அர்த்தம்..  பலர் சந்தேகத்துடன்  படிக்க துவங்கி  இருப்பீர்கள்.   அது வேற ஒன்னுமில்ல.. 
      வார வாரம் வெள்ளிகிழமை பள்ளிவாசல்ல ஹஜரத் ஜும்மா உரையை முடித்துவிட்டோ  அல்லது ஜும்மா தொழுகை முடிந்ததுமே மைக்ல சொல்லுவரே ..

      " இவர் திருச்சிக்கு பக்கத்துல உள்ள ஒரு கிராமத்துல இருந்து வந்துருக்காரு ரொம்ப வறுமைல உள்ள குடும்பம் இவருக்கு கல்யாண வயசுல ரெண்டு கொமரு இருக்காங்க ,நம்மட்ட உதவி கேட்டு வந்து இருக்காரு உங்களால் ஏன்ற உதவியை செய்யுங்கள்"  என்பர் கட்டாயம் நாம் எல்லோரும் கேட்டு இருப்போம்.

      அது மட்டுமில்ல உதவி கேட்டு வந்தவர் பள்ளிவாசல் வாயிலில் ஒரு கைல அவங்க ஊரு ஜமாஅத் கடிதத்தை வைத்துகொண்டு  இன்னொரு கை தாங்களாக துண்டை விரித்துகொண்டு கல்யாண பிச்சை எடுப்பாரே..

      உடனே நாம என்ன செய்வோம் ஏதோ பெரிய நல்ல காரியம் பண்றோம் என்ற நினைப்பில் ஒரு பத்து ருபாய் நோட்ட அப்டி ஸ்டைல போட்டுட்டு போவோம். ஆனால் ஒரு பாவத்தை ஊக்குவிக்கத்தான் இந்த பத்து ரூபாய் பயன்படுகிறது என்பதை நாம் யோசிப்பதில்லை..இதில் மறைமுகமாக நாம சொல்லவருவது என்ன
      “பொண்ண பெத்தவன் பிச்ச எடுத்தாவது  கல்யாணம் பண்ணனும்”

      என்ன கொடும தெரியுமா ? இது சொல்வதற்கு லேசான விஷயமாக இருக்கலாம். ஆனால் இது ரொம்ப தப்புங்க.. ரணகொடுமங்க இது..

      இது என்னமோ,யாரோ ஒரு வெளிஊர்காரங்க மட்டும்தான்னு நினைக்காதிங்க தமிழகத்தில் பல ஊர்களில் இது தான் எதார்த்த நிலைமை. நம்ம ஊரும் இதுக்கு விதிவிலக்கு அல்ல.

      திருச்சி , மேல்விஷாரம் , சிதம்பரம் என்று நம்ம ஊருக்கு உதவி கேட்டு எப்படி வருகிறார்களோ அதுபோல தான் நாகூர் ,நாகபட்டினத்திலிருந்து வேலூர்,லால்பேட்டை என்று அங்கு சென்று உதவி கேட்கிறார்கள்.

      நம்ம பாஷையில் சொல்லனும்ன உதவி கேட்கல “ பிச்ச எடுக்கிறாங்க” என்று தான் சொல்லணும். வேற எப்படி சொல்றது “ நம்ம ஊர்ல அப்டி துண்ட தூக்கிட்டு நிக்க முடியுமா ? கேவலப்பட்டு போகணும்ல.. வெளியூர் என்றால் யாருக்கு தெரியும் யாரோ என்று நினச்சு காசு போடுவாங்க இல்லையா ? கவ்ருவம் பார்பவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் கடனாவது வாங்குவார்கள்.

      மவளுக்கு கல்யாணம் முடிக்கணும் ,
      தங்கச்சிக்கு கல்யாணம் முடிக்கணும்,
      அக்காக்கு கல்யாணம் முடிக்கணும் என்று எத்துன பேர் தங்களின் வாழ்கையை வெளிநாட்டில் வீனடிகிறார்கள் தெரியுமா ?

      இதெல்லாம் எதற்கு  “வரதட்சனை – கைக்கூலி – டவ்ரி” இதுக்கு தான்.

      கல்யாணம் வயசு வந்தும் கல்யாணம் முடிக்க முடியாம கண்டவனையும் இழுத்துகிட்டு ஓடும் செய்திகள் அடிக்கடி வருகிறதே இதுக்கெல்லாம் யார் காரணம் எல்லாம் வரதட்சனையை கண்டுகொள்ளாத நம் சமூகம் தான்.

      யாரு இந்த பழக்கத்த ஆரம்பிச்சது என்று வரலாற்றை முன்னோக்கி பார்த்தால்,..மாற்று மதத்திலிருந்து ஒட்டிகொண்ட ஒரு கேடுகெட்ட பழக்கம் என்பது தெரிகிறது ஆனால் தற்போது நிலைமை என்ன வென்றால் சதவீதத்தை வைத்து பார்த்தால் மாற்று மதத்தைவிட நம்மாளுதான் அதிகம் வரதட்சனை வாங்குறான்.அப்டியே உல்டாவா போச்சு..               

      இதுக்கு மிகமுக்கிய காரணம் என்ன தெரியுமா ?
      இதை மார்க்கரீதியாக அங்கிகரிப்பது தான். நம்ம பள்ளிவாச ஹஜரத் இருகாஹள்ள, அவங்க ஒரு துவாவ செஞ்சி கைக்கூலிய அதிகாரபூர்வமா மார்க்கரீதியாக ,வாங்கிகுடுப்பாஹா .. அதுக்கு ஒரு function(கைக்கூலி –கக்கிலி )  வேற வேப்பாஹா, பொண்ண பெத்தவன் எந்த ஊர்ல பிச்ச எடுத்தானோ, யாருட்ட எத அடகுவச்சு கடனுக்கு காசு வாங்குநானோ நமக்கென்ன..அதுக்கு ஊர் சாட்சி வேறு.. எல்லாம் இதுக்கு ஆமீன் வேற சொல்லுவாங்க என்னத்த சொல்றது.


      ஏதாவது ஏன்? இப்டி என்று கேட்டா.. இதுல என்னங்க இருக்கு மாப்பிள துபாய்ல வேல செய்ரான்ல அப்டி தான் என்று வாங்குறத பெருமையா சொல்றது.

      சேரி பொண்ணு வீட்ல ஏங்க வரதட்சனை குடுகுரிங்கனு கேட்டா   “ ஆமாங்க வரதட்சனை இல்லாம யாருங்க மாப்ள கொடுக்குறா என்று பதில் வரும்..இவங்க மேல நாம பரிதாபப்பட்டா... இவங்களுக்கு ஒருபையன் இருந்தான்னு வைங்க இவங்க அதுக்குமேல வாங்குவாங்க மகளுக்கு நாம குடுக்க எவ்ளோ கச்டபட்டோம் என்று யோசிக்க மாட்டாங்க..

      இன்னும் சில பெரிய எடத்து பொண்ணு வீடுன்னு வைங்க அள்ளி கொடுப்பாங்க வீடு ,பைக்குனு ஏங்க இப்டினும் அவங்கல்ட கேட்டா என்ட இருக்கு ஏன் மவளுக்கு கொடுக்குறேன் என்று சொல்லுவாங்க.. அவர்களின் வாதம் நியாயமாக இருக்கலாம் ஆனால் இது இல்லதவங்களையும் மறைமுகமாக பாதிக்கிறது என்பதை உணர்வதில்லை.அவங்க ஊட்ல கொடுதாஹலே நீங்களும் தாங்க என்று நிர்பந்திப்பதற்கு இது காரணமாக அமைகிறது.

      ஆக சமதாயம் இதிலிருந்து மீலாதவரை இதுபோன்று கல்யாண பிச்சைகாரர்கள் வலம்வந்து கொடுத்தான் இருப்பார்கள்.“யாருக்கு தெரியும் நம்மில் யார்யார் வீட்டில் நமது அக்காவிற்கோ ,தங்கைக்கோ கல்யாணத்திற்கு நம்ம வாப்பா யாருட்ட கை ஏந்தினாரோ !!! அல்லாஹ்வே அறிந்தவன்.”

      இன்றை தௌஹீத் கொள்கையின் வளர்ச்சியில் வரதட்சனை வாங்குவது குறைந்து வந்தாலும்,சுன்னத்தை பேணும் ஜமாஅத்தார்களின் காதில் விலமறுப்பது ஏனோ என்று புரியவில்லை..
        
      இளம்தலைமுறை சிந்திக்க வேண்டும்,மார்க்கத்தை பார்த்து மணமகளை தேர்ந்தெடுங்கள் வசதியை ,பணத்தை பார்த்து வேண்டாம்..

      ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

      நாளை உங்களுக்கும் இதே நிலைமை வரலாம் .. நீங்களும் உங்கள் சுய மரியாதையை இழந்து உங்கள் மகளின் திருமணத்திற்கு கையேந்தும் நிலை ஏற்படலாம் அல்லாஹ் காப்பாற்றவேண்டும்.

      நாம் மற்றவர்களை திருத்தும் முன் முதலில் நாம் நம்மை திருத்தி கொள்ளவேண்டும். நன்மையான விஷயங்களை யார் சொன்னாலும் கேட்டு நடக்கலாம் ஆனால் தவறான விஷயங்களை பெற்ற தாய் தந்தை சொன்னாலும்  சரி எதிர்க்கலாம் ,மறுக்கலாம். ஆனால் அது ஏன் தவறு என்று அவர்களுக்கு புரியவைக்க வேண்டும் ,பழங்காலத்தில் இருந்து ஊறிவிட்ட அவர்களின் மனநிலையை உடனே மாற்றிவிடமுடியாது.
      வரதட்சனையை எதிர்பார்த்து திருமணம் முடிப்பவன் ஒரு ஆண் மகனாக இருக்கமுடியாது.அது தன்னை தானே விற்பதற்கு சமம்.

      முன்னெல்லாம் இந்த கல்யாண பிச்சை எடுப்பவர்கள் பள்ளிவாசலுக்கு தான் வருவார்கள் இப்போதெல்லாம் ஓவ்வொரு வீட்டுக்கும் வரஆரபித்து விட்டார்கள்.கொமாரு காரியம் என்று அழுது நம் மனசை கரைப்பார்கள் (இதை சிலர் தொழிலாக செய்கிறார்கள் கையில் ஒரு பத்திரிகையை வைத்துக்கொண்டு) இதன் எதிரொலி தான் என்னவோ நம் ஊரில் ஏழைகளுக்கு நிக்காஹ் செய்து கொடுக்க போவதாக ஒரு அறிவிப்பு.

       குழந்தையை கிள்ளிவிட்டு விட்டு தொட்டி ஆட்டுவது – எப்படி சரியாகாதோ அதுபோல் தான் ஏழுலெப்பையில் நிக்காஹ் நிகழ்ச்சிகளின் ஏற்பாடு...

      ஒரு புறம் வரதட்சனையை ஊக்குவித்துவிட்டு – மறுபுறம் ஏழை எளிய மணமகளுக்கு திருமணம் செய்து வைப்போம் எனபது வேடிக்கையாக இருக்கிறது ( வரதட்சனை வாங்கி திருமண செய்யகூடாது என்று சுன்னத்தை கடைபிடிக்கும் ஜமாஅத் சொல்லி இருந்தால் இந்த கொமருகள் எப்போதே கரை சேர்ந்து இருப்பார்களே) இருப்பினும் நல்லது நடந்தா சரி “அதாவது குழந்தையை கிள்ளிவிட்டு விட்டு சும்மா இருப்பதை விட தொட்டியை ஆட்டிவிடுவது சிறந்தது என்ற அடிப்படையில் இதை சரி காணலாம்.
      ஆனாலும் சில சந்தேகங்கள்....

      1 . உங்கட்ட கல்யாணம் முடிச்சு வைங்கன்னு வந்தா மாப்ள வீட்டுக்கு வரதட்சனையை கொடுத்து முடிச்சு வைப்பீர்களா ? அல்லது இதுக்கு மட்டும் வரதட்சனை கிடையாதா ?

      2. நபி (ஸல்) வழிமுறையை பேணி என்று போட்டுள்ளீர்கள் அதனால் மணமகள் கேட்கும் ,முன்வைக்கும் மஹர் தொகையை பெற்று கொடுப்பீர்களா ?

      “நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)”

      உங்களிடம் நாகூர் வாசியான நாங்கள் எதிர்பார்ப்பது :

      இதை நீங்கள் நல்லநோக்கத்தில் செய்கிறீர்கள் ஆதலால் இந்த நிக்காஹ் நிகழ்ச்சிகளை நல்ல மாற்றங்களுக்கு பயன்படுத்தலாம். நம் ஊருக்கு நல்ல முன் உதாரணமாக இருக்கும்.

      இந்த நிக்காஹ் நிகழ்ச்சிகளின் பொது..
            1.இனி யாரும் வரதட்சனை வாங்கி திருமணம் முடிக்க கூடாது என்று உங்களின்    சுன்னத்ஜமாஅத்  சார்பாக அறிவிக்க வேண்டும்

      2.        மாப்பிள்ளை என்ன உத்தியோகம் செய்தாலும் அதற்கு ஏற்ப பெண்வீட்டாரின் விருப்பத்திற்கு மஹரை மாப்பிள்ளை வீட்டார் தரவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

      3.        வலீமா விருந்து மாப்பிள்ளை வீட்டை சார்ந்தது என்று அறிவிக்க வேண்டும்.

      “நபி (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென நபி(ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது. அனஸ்பின் மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம்”

      4.        நபி (ஸல் ) அவர்களின் வழிமுறையை பேணி முடிந்தவரை எளிமையாக திருமணத்தை முடிக்க வேண்டும். நாலாம் நீர் ,பத்தாம் நீர் என்று நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

      5.        பள்ளிவாசலில் கொமருக்கு உதவி கேட்டு வருபர்களின் விபரங்களை சேகரித்து,சரிபார்த்து உண்மை என்றால் அவர்களுக்கு வரதட்சனை இல்லாமல் ஊரிலே திருமண ஏற்பாடு செய்ய முயற்சி செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யவேண்டும்.

      6.        இந்த கட்டளைக்கு சுன்னத் ஜமாஅத் உள்ள அனைவரும் உட்படவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

      இதெல்லாம் நடக்குற காரியமா ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது..
      இதை அறிவிப்பதில் என்ன கேடு இருக்கிறது என்பதே இங்கே கேள்வி ?

      இது நடக்குதா ? இல்லையா ? என்பது இருக்கட்டும் முதலில் இதை பள்ளி வாசலில் சுன்னத் ஜமாஅத் சார்பாக உங்களால் அறிவிப்பாவது செய்ய முடியுமா...???????????????????

       

      நாகூரில் தமிழ்சங்க முப்பெரும் விழா

      இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் - பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?.


      பதில்: DR.ZAKIR NAIK

      1. முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும்:
      முஸ்லிம்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

      'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.

      மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் - இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.

      'அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.' என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் - அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.

      2. இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:
      'நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.' என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் - ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ - அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.

      ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, 'நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் 'நான் ஒரு ஸுன்னி' என்பதாகவோ அல்லது 'நான் ஒரு ஷியா' என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, 'ஷாஃபிஈ' என்றும், 'ஹனஃபிஈ' என்றும் 'ஹம்பலி' என்றும் 'மாலிக்கி' என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'நான் ஒரு தேவ்பந்திஈ' என்றும் 'நான் ஒரு பெரல்விஈ' என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.

      3. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:
      மேற்கண்டவாறு தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள் - அதாவது அவர்கள் 'ஷாஃபியா' அல்லது 'ஹனஃபியா' அல்லது 'ஹம்பலியா' அல்லது 'மாலிக்கியா?' என்று கேட்டுப் பாருங்கள். இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்புள்ள அல்லாஹ்வின் தூதர்களைப் போன்று ஒரு உண்மையான முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களது பதிலாக இருக்கும்.

      அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 54வது வசனம் நபி ஈஸா (அலை) அவர்கள் ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 67வது வசனம் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் ஓர் யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல. அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட ஓர் முஸ்லிம்  என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

      4. உங்களை நீ;ங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:
      எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் - இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் ஓர் ஷாஃபிஈ என்றோ அல்லது தாங்கள் ஓர் ஹனஃபி என்றோ சொல்லக் கூடாது.
      அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

      'எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றார்?)

      வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் - நான் ஒரு முஸ்லிம் - என்று சொல்லுங்கள் என்பதாகும்.

      அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தபால் மூலமாக இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவ்வாறு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் 64 வது வசனத்தின் கடைசி வரிகளாக அமைந்திருக்கும் 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்கிற வசனத்தை குறிப்பிட்டு தபால்களை அனுப்பி வைப்பார்கள்.

      5. இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.
      மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்பட இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.

      இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும். இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ - வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் - எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் 'நீ யார்?' என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு 'நான் ஒரு முஸ்லிம்' என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.

      1. ஒரு சிலர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ' எனது சமுதாயம் 73 பிரிவினராக பிரிவர்' (மேற்படி செய்தி அபூதாவூத் என்னும் ஹதீஸ்(செய்தி) புத்தகத்தின் 4579வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது) என்கிற செய்தியை தங்களது பிரிவினை வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி வாதிடுவர்.

      மேற்படி செய்தியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - இஸ்லாமிய சமுதாயம் 73 பிரிவாக பிரியும் என்று முன்னறிவிப்பு செய்தார்களேத் தவிர, அவர்கள் அறிவித்த நோக்கம் இஸ்லாமிய சமுதாயம் தங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிய வேண்டும் என்பதற்காக அல்ல. அருள்மறை குர்ஆன் இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என்று இஸ்லாமியர்களுக்கு கட்டளை இடுகின்றது. அருள்மறை குர்ஆன் கட்டளையின்படி - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி யார் இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ - அவர்கள்தான் உண்மையான இஸ்லாமிய வழியில் நடப்பவர்கள்.

      அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் - என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அதில் ஓரேயொரு கூட்டத்தைத் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் நரகத்துக்குச் செல்வார்கள். மேற்படி அறிவிப்பை கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்கள் கேட்டனர் சொர்க்கத்துக்கு செல்லும் அந்த கூட்டம் எது?. என்று. அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: அந்த கூட்டம் நானும் எனது அன்புத் தோழர்களும் உள்ளடங்கிய கூட்டம் என்று. ( மேற்படி செய்தி திர்மிதி என்ற செய்திப் புத்தகத்தின் 171வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. )

      'அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள். அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள்' என்று அருள்மறை குர்ஆன் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. ஒரு உண்மையான முஸ்லிம் அருள்மறை குர்ஆனையும ; - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும்தான் பின்பற்ற வேண்டும். அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமில்லாத பட்சத்தில் எந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் ஒரு உண்மையான முஸ்லிம் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு மார்க்க அறிஞரின் கருத்து - அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் முரண்படுமாயின் அந்த கருத்துக்கு ஒரு உண்மையான முஸ்லிம் மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்படி மார்க்க அறிஞர் எவ்வளவு கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் சரியே.

      இஸ்லாமியர்கள் அனைவரும் அருள்மறை குர்ஆனை - கற்றறிந்து - அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை சரிவர பின்பற்றுவோம் எனில் இறை நாட்டத்தில் நமக்கிடையே இருக்கும் இந்த பிரிவினை என்ற வேறுபாடு நம்மிடமிருந்து மறையும். நமக்குள்ளே பிரிவினையற்ற சிறந்த ஒற்றுமையும் உருவாகும்.

      Related Posts Plugin for WordPress, Blogger...