(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, April 10, 2011

அரசியல் விளையாட்டில் அசிங்கப்பட்டு நிற்கும் இயக்கங்கள்..

ஒரு காலத்தில் தமிழக முஸ்லிம்களுக்கு அவர்களின் உரிமைகளுக்கு பிரச்சனைகளுக்கு குரல்கொடுக்க, முஸ்லிம்களை வழிநடத்த  இயக்கம் வேண்டுமே என்று  எதிர்பார்த்தது முஸ்லிம் சமூகம் .. ஆனால் இன்றோ முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சனையே இயக்கங்களால் தான் என்னும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது..

மார்க்க விஷயங்களுக்கு மோதிக்கொண்ட காலம் சென்று தற்போது அரசியலுக்காக மோதிகொள்கிறார்கள் நம்மவர்கள்.எந்த இயக்கமும் இதற்க்கு விதிவிலக்கு இல்லை என்றே சொல்லலாம்.
நேற்று இரவு (9/02/11) மமக வை சார்ந்த கோவை ஜாகிர் என்ற சகோதரர் நாகை தொகுதி அதிமுக வேட்ப்பாளர் ஜெயபாலுக்கு ஆதரவாக காரசாரமாக பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கும்போது  திமுக வை சேர்ந்த ராஜா சாஹிப் தாக்குதல் நடத்தியதாக மமக வினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் தர்கா அலங்கார வாசல் அருகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




மமக : கோவை ஜாஹிர் மீது திமுக ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்


கோவை ஜாகிர் 50 பேர் கொண்ட கும்பல் இரும்பு தடி,உருட்டுக்கட்டை உடன் வந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக சொல்வது உண்மையா ? என்பது சம்பவத்தை பார்த்தவர்களுக்கு வெட்டவெளிச்சம்..


இது ஒரு புறம் இருக்க TNTJ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹமத்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற போது..

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா, திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.




என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடுங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது.
மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களையும் குழண்ட்தைகளையும் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க, பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.

ஆனால் மாற்றானின் இந்த வேலைகளையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாத மமக மற்றும் எஸ்டிபிஐ ரவுடிகள் அவனை அடி, இவனை அடி என ஒவ்வொருவர் மீதும் செல்போனின் விளக்கைப் பிடித்து காட்ட அவர்கள் காட்டிய ஒவ்வொருவர் மீதும் அதிமுக குண்டர்கள் வெறித்தனமான தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.


மேடையில் உள்ளவன்களையும் அடியுங்கள் என மமகவினருக்கு அதிமுக குண்டர்கள் உத்தரவிட அங்கே திரண்டிருந்த மமக SDPI ரவுடிகள் மேடையை நோக்கி சராமாரியாக கற்களை வீச ஆரம்பிக்க, மேடையின் மீது இருந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்று கூறியுள்ளது இந்த இயக்கம்...

அங்கு நடந்தது அப்படியல்ல இப்படி தான் என்று செய்தி வெளியிட்டுள்ளது SDPI..

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்
" பரம்பர அரசியல்வாதிகள் எல்லாம் நம் இயக்கங்களின் முன் தொற்றுப்போனார்கள்... "
இதுவல்லவா அரசியல்.. இவர்கள் அல்லவா அரசியல்வாதிகள்...!!!

சமுதாய நன்மைக்காக அரசியலில் இறங்குவதாக கூறும் கட்சிகள் ,இயக்கங்கள் இன்று நம்மிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச சகோதரத்துவ பாசத்தையும் அழிப்பதில் குறியாக இருகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சனைக்கு காரணமே இவர்களில் தேவை அற்ற செய்லபாடுகள் தான். திமுகக்கு ஆதரவாக பிரச்சாரம் என்று கூறிக்கொண்டு மமகவை சாடி பேசுகிறார்கள் , அதிமுகக்கு ஆதரவு என்று சொல்லிக்கொண்டுததஜ வை சாடி பேசிகிறார்கள். ஏன் இந்த வேலை ?

சும்மாவே உங்களால் இருக்க முடியாதா ? நாம எல்லாம் எல்லாத்திலையும் ஒழுங்கா ? நம்மட்ட ஆயிரத்து எட்டு ஓட்ட ஒடச்ச இருக்கு அத பாப்போமா அத விட்டுட்டு...

அது என்னங்க TNTJ  யின் கொள்கை   : யாருக்கு ஒட்டுபோடுரின்களோ  இல்லையோ  ஆனால் மமக விற்கு மட்டும் ஒட்டுபோடகூடாது...  
அவர்கள் நிற்கும் மூன்று தொகுதியிலும் தோற்கடிக்க படவேண்டுமாம் !! என்ன கொடும இது... அப்டி என்னங்க  அவர்கள் பாவம் செய்தார்கள் ?
ஏன் அப்படி சொல்றிங்க என்று கேட்டால் ... அவர்கள் முன்னேறினால் சமுதாயத்திற்கு ஆபத்து அவர்களால்  சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்கிறார்கள்...  ஒ அப்ப கருணாநீதி - ஜெயலலித்தாவை விட இவர்கள் உங்களுக்கு மோசமாகிவிட்டார்கள்.  நல்ல கொள்கை..!!!???

ஆமா தெரியாம தான் கேட்கிறோம் இட ஒதுக்கீடு ,இட ஒதுக்கீடு என்று பேசுகிறீர்களே .. யாருக்கு பா அந்த ஒதுக்கீடு .. நம்ம சமூகத்திற்கு தானே ..? நம்ம சமுகத்தில் தானே நீங்கள் எல்லாம் இருக்கீங்க .. எப்படி இடஒதுக்கீடு கிடைச்சாலும் நமக்கு தானே லாபம் அப்பறம் ஏன் இந்த பொறாம, குரோதம் யாருக்காக இதெல்லாம் ?

இப்ப உங்களுக்கு முக்கியம்  இடஒதுக்கீடு அல்ல.. அந்த இடஒதுக்கீடு எந்த இயக்கம் மூலமாக கிடைத்தது என்பது தான் உங்களுக்கு முக்கியம்.

தேர்தலுக்கு தேர்தல் இடம் மாறும் நீங்கள் கோரிக்கையை முன்வைத்து இந்த கோரிக்கையை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு எங்கள் ஆதரவு என்று கூறி அதை ஏற்பவர்களை ஆதரிகிரீர்களா ? அல்லது எந்த கட்சி அதிக சீட்டு தரும் என்று பார்த்து ஆதரிகிரீர்களா ? ... கோரிக்கையை வைத்துத்தான் என்றால் அந்த கோரிக்கையை வைத்து தானே தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மாறாக அந்த கட்சி முஸ்லிம்களுக்கு எதிரி , நாங்கள் ஆதரிக்கும் கட்சி முஸ்லிம்களுக்கு பாதுகாவலன் என்று கூப்பாடு போட்டீர்கள் என்றால் அடுத்த தேர்தலில் உங்கள் நிலையென்ன ? முதலில் நீங்கள் எதிர்த்த கட்சியை அப்போது  முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று வாய்கிழிய சொல்வீர்கள் தானே ...!!!  இப்போது மட்டும் என்ன நடக்கிறது.

கடந்த தேர்தலில் ததஜ அதிமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது மற்றொரு அமைப்பு தமுமுக திமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது .. முஸ்லிம்கள் ஜெயலலிதா விற்கு ஒட்டுபோடலாமா
என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது தமுமுக , மற்றொருபுறம்  கருணாநீதி நம்பவைத்து கலுதருகிறார் அவரை 
நம்பகூடாது முஸ்லிம் சமூகத்திற்கு எது நன்மையோ அதை தான் 
பார்க்கவேண்டும் என்று கூறியது ததஜ.

ஆனால் இந்த தேர்தலில் அப்படியே தலைகீழாக மாறியது அமைப்புகளின் தேர்தல் நிலைப்பாடு..! இப்பவும் பாருங்க ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் குறை 
கூறியவரே இருகிறார்கள். முதலில் கலைஞரை ஆதரித்தவர்கள் இப்போது ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள்.

முன்பு ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் இப்போது கருணாநீதியை ஆதரிக்கிறார்கள்.ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் மொத்த இஸ்லாமிய சமூகமும் ஏதோ உங்கள் பக்கம் தான் இருப்பதுபோல்  ஒவ்வொருவரும் நினைகிறீர்கள். அதை மாற்றிகொள்ளுங்கள் அதற்கான தகுதியை இன்னும் நீங்கள் பெறவில்லை. 

ஆக தமிழக அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு முஸ்லிம் மக்களின் முன்பு அசிங்கப்பட்டு நிற்கிறது நம் சமூக இயக்கங்கள் ,கட்சிகள்.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று உங்கள் ஈமானையும் சகஜமாக இழந்து விடாதீர்கள் இயக்க சகோதர்களே..!

யா அல்லாஹ் ! எங்களை முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக !
எங்களுக்கு சகோதர பாசத்தை அதிகரிப்பாயாக !
வாழ்நாள் முழுவதும் எங்களை ஈமானோடு வாழசெய்வாயாக !

Saturday, April 2, 2011

முஸ்லிம்களின் ஓட்டுக்களை சிதறடிக்கும் அமைப்புக்களும் ,கட்சிகளும்

தமிழக அரசியல்களம் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது மாறுபட்ட சூழலை சந்தித்து வருகிறது . அதுவும் முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமான சூழலில் தான் இருக்கிறது.

திமுக ,அதிமுக என்று பெரும் கூட்டணியில் இரு அணிகள் இருந்தாலும் இந்த இரு அணிகளின் ஓட்டு வங்கியை பிரிக்க பெருவாரியான கட்சிகள், பேரவைகள் களத்தில் தனித்து நிற்கின்றன.

பரிவேந்தனின் இந்திய ஜனநாயக கட்சி ,
தலித்களை குறிவைத்து ஜான்பண்டியனின் 
தமிழக மக்கள் முன்னேற்றகழகம்,
பிள்ளையார் சாதிகளை குறிவைத்து வ.உ.சி பேரவை ,
தலித் சமூகத்தை சார்ந்த முன்னால் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமியின் 
சமூக சமத்துவப்படை,
செட்டியார்களின் ஓட்டுகளை குறிவைத்து 
நம்பி வாணிப செட்டியார் பேரவை,
முதலியார்களின் ஓட்டுகளை குறிவைத்து
,சி சண்முகம்களத்தில் இறங்குகிறார். 
தேவர்களின் ஓட்டுகளை பிரிக்க கார்த்திகின் 
நாடாளும் கட்சி,
தலித் ஓட்டுகளை மேலும் பிரிக்க பூவை ஜெகன் மூர்த்தியின் 
புரட்சி பாரத கட்சி ஆகியவை தனி அணியாக நிற்கின்றன.
தனி தனியாக வேட்பாளர்களை களமிறக்கி இருக்கின்றன.
இந்த சாதி கட்சிகளால் நிச்சயம் சாதி ஓட்டுகள் பிரியும்.
மேலும் மதவெறியர்களின் ஓட்டுக்களை குறிவைத்து 
பா.ஜ.க தலைமையில் ஒரு அணி.

இதுபோக அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து ஆங்காங்கே போட்டி வேட்ப்பாளர்களும்,சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர்.மேலும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் திமுக மேல் அதிருப்தியில்  உள்ள காங்கிரஸ் ஆதரவு தொண்டர்களும் ,காங்கிரஸ் மேல் அதிருப்தியில்  உள்ள திமுக ஆதரவு தொண்டர்களும் இருகின்றனர்.இவர்கள் ஓட்டும் இடம்மாறலாம். 

இது போதாது என்று மதிமுக தேர்தலை புறக்கணித்தாலும் அதன் ஆதரவு மக்களின் ஓட்டும் சிதறும் நிலையில் இருக்கிறது. பத்தாத குறைக்கு அதிமுகவை அவமதிக்கும் விதமாக விஜயகாந்த் நடந்து வருவதால் தேமுதிகவிற்கு அதிமுக தொண்டர்கள் ஓட்டு போடுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 
   
இப்படி ஆங்காங்கே ஓட்டுகள் பிரிவதால் முஸ்லிம்களின் ஓட்டுகளுக்கு குறிப்பாக இந்த தேர்தலில் அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது..

சில வேட்ப்பாளர்கள் சில நூறு ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றிபெறுவார்கள் என்றும்.. இன்னும் பெருபான்மையான வேட்ப்பாளர்கள் அதிகபட்சமாக 5 ஆயிரம் ஓட்டுகளுக்குல்லாகவே தான் வெற்றி பெற முடியும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த வெற்றி ஓட்டுக்கள் தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் முஸ்லிம்களிடம் தான் இருக்கிறது என்பதை முஸ்லிம் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும்...

ஒரு வேலை முஸ்லிம் சமூகத்தின் ஓட்டு ஒரு சேர மொத்தமாக ஒரே நிலைபாட்டில் இருக்குமானால் இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம்கள் பெருபான்மையாக இருக்கும் தொகுதியில் வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கும் ஓட்டு ஆயுதம் முஸ்லிகளின் கையில்...

ஆனால் இதை வீணடிக்கும் முயற்சியில் இஸ்லாமிய கட்சிகள் ,இயக்கங்கள்,அமைப்புகள் முனைப்புடன் செயல்பட்டுவருவது வேதனைக்குரியது..


இஸ்லாமிய கட்சிகளின் மற்றும் அமைப்புகளின் நிலைப்பாடு 
  
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் :

திமுகவின் சிறுபான்மை பிரிவு  என்று சொல்லும் அளவிற்கு கல்லானாலும் கலைஞர் என்று தனது கட்சியை தாரைவார்த்துவிட்டது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்.மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

 
மனிதநேய மக்கள் கட்சி:
அதிமுக ம.ம.க விற்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கி சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்ததால் மமக - அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது.


Social Democratic Party of India(SDPI):
தமிழகத்தில் SDPI போட்டியிடும் 8 தொகுதிகள் போக எஞ்சிய தொகுதிகளில் சேப்பாக்கம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சிக்கும்,அறந்தாங்கி தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சிக்கும்,எஞ்சிய தொகுதியில் தி.மு.க கூட்டணிக்கும் SDPI தனது ஆதரவை பிரித்து அறிவித்துள்ளது SDPI.

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் :
திமுக தனது தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு உயர்த்துவதற்கு வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எந்த ஒன்றையும் அளிப்பதாக தெரிவிக்கவில்லை ஆதலால் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு  என்று அறிவித்துள்ளது.

இந்திய தௌஹீத் ஜமாஅத்:
அதிமுக ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கான பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் புதுபிக்கபட்டது. கருணாநீதி வழங்கிய இடஒதுக்கீட்டிற்கு முக்கிய காரணம் அதிமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் புதுபிக்கபட்டதுதான் ஆதலால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என்று தெரிவித்துள்ளது.

 
இப்படியாக ஆளுக்கு ஒருபுறம் தங்களின் ஓட்டுக்களை சிதறடித்து வருகின்றனர்.இதில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , இந்திய தௌஹீத் ஜமாஅத் இரெண்டும் தேர்தலில் போட்டியிடுபவை கிடையாது ஆதரவு மட்டுமே.மற்ற மூன்று கட்சியும் ( இ.யூ.மு.லீ , ம.ம.க, எஸ்.டி.பீ.ஐ ) தேர்தலில் போட்டியிடுகின்றன..

இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் நிலைப்பாடு தான் சரி என்று வாதிடுகின்றனர்.. அத்தோடு நில்லாமல் ஒருவரை ஒருவர் சாடி வருகிறார்கள்.

கடந்த தேர்தலில் ஒரு அமைப்பு அதிமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது மற்றொரு அமைப்பு திமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது .. முஸ்லிம்கள் ஜெயலலிதா விற்கு ஒட்டுபோடலாமா
என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது ஒரு அமைப்பு, மற்றொருபுறம்  கருணாநீதி நம்பவைத்து கலுதருகிறார் அவரை 
நம்பகூடாது முஸ்லிம் சமூகத்திற்கு எது நன்மையோ அதை தான் 
பார்க்கவேண்டும் என்று கூறியது எதிர் அமைப்பு.

ஆனால் இந்த தேர்தலில் அப்படியே தலைகீழாக மாறியது அமைப்புகளின் தேர்தல் நிலைப்பாடு..! இப்பவும் பாருங்க ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் குறை 
கூறியவரே இருகிறார்கள். முதலில் கலைஞரை ஆதரித்தவர்கள் இப்போது ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள்.
முன்பு ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் இப்போது கருணாநீதியை ஆதரிக்கிறார்கள். சரி ஒரு கோரிக்கையை வச்சு த்தானே ஆதரிகிறாங்க அதுல ஏன் மாறுபடுகின்றார்கள்.?இது நமக்கு எரிச்சலை த்தான் தருகிறது   தேர்தலுக்கு,தேர்தல் இதே நிலைத்தான் நீடிக்கிறது.

கிட்டத்தட்ட பாத்திங்கன்னா எல்லாரும் தேர்தலில் பேசுறது இடஒதுக்கீடு ..அதவச்சு தான் ஆதரவு தெரிவிகிறாங்க , கூட்டணி வைக்கிறாங்க .. ஒரே கோரிக்கையை வச்சு ஆளுக்கு ஒருபக்கம் ஆதரவு தெரிவிகிறாங்கலே அது எப்டின்னு தான் புரியமாட்டேங்குது.
  

ஒவ்வொரு தேர்தலிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று  ஆதரிக்க வேண்டியது. தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஏதாவது ஒரு கட்சி வெற்றி பெரும் உடனே எங்களால் தான் வெற்றி பெற்றது முஸ்லிம் சமூகம் எங்கள் பக்கம் என்று பேட்டி கொடுக்கவேண்டியது.உண்மையில் நம் சமூகத்தின் ஓட்டுதான் வெற்றிக்கு மூலதனம் என்று இந்த குளறுபடியில் உறுதியாக சொல்லமுடியாது.

ஹிந்துக்களில் ஜாதி ஓட்டுக்கள் பிரிவதுபோல் நம் சமூகத்தில் கட்சிகள்,அமைப்புகள் மூலமாக ஓட்டுக்கள் பிரிகின்றன. 

போதுபிரச்சனைக்கு ஒன்று கூடுவோம் என்று இவர்களை ஒன்றிணைக்க பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எல்லாமே இறுதியில் தோல்வியைத்தான் சந்தித்தன.

ஒற்றுமைகாக அனைத்து அமைப்புகளையும் இணைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தும் கூட அதில் யார் முதலில் பேசுவது , எந்த இயக்கத்தின் பெயரில் தலைமை தாங்குவது , யாருடைய கருத்தை ஏற்பது என்று பிரச்சனை வருகிறது என்றால் என்னவென்று சொல்வது.

கடந்த அதிமுக ஆட்சியில் அதிசயமாக பல தலைவர்கள் ஒன்றிணைந்து இடஒதுக்கீடை முன்னிறுத்தி  பல கோரிக்கைகளோடு முதல்வரை சந்தித்தார்கள் ..  அந்த சந்திப்பு  முடிந்தது தான் தாமதம் ஆளுக்கொரு விதமாக பேசிக்கொண்டு ,குற்றசாட்டி கொண்டு பிரிந்துவிட்டார்கள்..

சமீபத்தில் சென்னை பாரிமுனை பள்ளி வளாகத்தை கைபற்ற முனைந்த சமூக விரோதிகளை எதிர்த்து நின்று ஆர்பரித்து அனைத்து அமைப்பும் ஒன்றுகூடி மீட்டது!

ஏன்  எல்லாரும் போனிங்க ? அல்லாஹ்வுடைய பள்ளிவாசலை விட்டுகொடுக்க கூடாது என்று தானே. அதே அல்லாஹ் நம்மை இந்த மார்க்கத்தின் மூலம் சகோதர்களாக ஆக்கினான் அதை நீங்கள் ஏற்றுகொள்ளவில்லையா?

(திருக்குரான் 3:103 )இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

இராக்கில், பாலஸ்தீனத்தில் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டால்
நாம் மனம் கலங்ககுகிறோம் ஏன்?  இந்த பாசத்தை ,சகோதரதுவத்தை கொடுத்தது எது ? நாம் ஏற்றுக்கொண்டு இருக்கும் சத்தியமார்க்கம் அது தான் நம்மை ஒன்றினைகிறது. எங்கோ இருக்கும் பாதிக்கப்படும் சகோதரனுக்காக கவலைப்படும் நாம் .. பக்கத்தில் இருக்கும் ஒரு இஸ்லாமிய சகோதரனுக்கு அவன் வேறு அமைப்பு என்ற காரணத்திற்காக  ஸலாம் கூட சொல்ல மறுக்கிரொமே இது தான் இஸ்லாம் நமக்கு வழிகாட்டியதா சகோதர்களே ?

நீங்கள் எந்த அமைப்பை சார்ந்தவராகவும் இருங்கள் ஆனால் மற்றவர்களை மதியுங்கள். கருத்துவேறுபாடு என்பது மனிதனுக்கு இயல்பானது அதற்காக குரோதத்தை வளர்த்துகொல்வது நல்லதா ?

ஆக ஒன்றிணைந்த சரியான தலைமை இல்லாமல் தமிழக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்பதே எதார்த்த உண்மை

இப்படி பிளவுபட்டு நிற்கும் போதே அரசியல் கட்சிகள் நம்மை தாங்கி பிடிக்கிறது.. ஒன்றுபட்டால் ...? வருங்காலத்தில் அரசியல் கட்சிகள் நம் சமூகத்தின்  பிடியில் இருக்கும் இன்ஷாஅல்லாஹ்...

இஸ்லாமிய இயக்கங்கள்,அமைப்புகள்,ஜமாஅத்கள்,பேரவைகள் அனைத்திற்கு ஒரு வேண்டுகோள் :
நீங்கள் நல்ல நோக்கதிற்காக உங்கள் இயக்கங்களை ,அமைப்புகளை வழிநடத்தி வருகிறீர்கள்.. உங்கள் அமைப்புகள் சார்பாக அனேக நல்ல காரியங்கள் செய்து வருகிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ் அதையெல்லாம் மறுக்க முடியாது அதே சமயம் உங்களிடம் இயக்கவெறி சற்று இருக்கத்தான் செய்கிறது.. இது தலைமை பொறுப்பில் இருக்கும் உங்களிடம் மட்டும் இருந்தால் கூட சகித்துகொள்ளலாம் ஆனால் உங்கள் இயக்கத்தில் இருக்கும் என் சகோதரன் ஒவ்வொருவரின் இடத்தும் அவர்களுக்கு தெரிந்தோ ,தெரியாமலோ இருக்கத்தான் செய்கிறது. இதை களைய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.. 

நீங்களும் உங்கள் இயக்க சகோதர்களும் மற்ற சகோதர இயக்கத்தை அரவணைத்து செல்லவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.   

ஜசகல்லாஹ்.

Friday, April 1, 2011

இந்தியாவை வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றி!

30.03.2011 நடந்த ICCI கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் விளையாடின (கவனிக்கவும்: மோதின அல்ல - விளையாடின). இருநாடுகளின் பிரதமர்களும் முக்கிய அரசியல் தலைவர்களும் கண்டு 'களித்தனர்'. வழக்கம்போலவே, மற்ற எந்த விளையாட்டுகளுக்கும் இல்லாத பரபரப்பும் அரசியல் முக்கியத்துவமும் நேற்றைய அரையிறுதி ஆட்டத்திற்கும் கொடுக்கப்பட்டது.

பெரும்பாலும் பாகிஸ்தானுடனான அணுகுமுறைகளை விமர்சிக்கும் பாஜகவின், மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானியை கிரிக்கெட் பார்க்க அழைத்ததற்குப் "பாஜகவுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை" என NOC (No Objection Certificate) கொடுத்ததிலிருந்து கிரிக்கெட் - அரசியல் வலைப்பின்னலின் வலிமை எந்தளவு விரிவடைந்துள்ளது என்பது புரியவரும்.

சோனியா காந்தி(!), ராகுல் காந்தி(!) ஆகிய காந்தேயரும் குடும்ப சகிதமாக வந்து உட்கார்ந்து கிரிக்கெட்டைக் கண்டுகளித்ததோடு, இந்தியா வெற்றி பெற்றவுடன் சோனியா எழுந்து நின்று மகிழ்ச்சி ததும்ப இரு கைகளையும் உற்சாகத்துடன் தூக்கிக் காட்டியது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இரட்டிப்பு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில், இறுதிப் போட்டியினை மிஞ்சும் வகையில் அதிகப்படியான விளம்பரம் கிடைத்த இப்போட்டியினால் கிரிக்கெட் வியாபாரிகள் இதைவிடப் பலமடங்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

நம்மை இருநூற்றாண்டுகள் அடிமையாக்கிய இங்கிலாந்தின் அணியையும் தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கையின் அணியையும்கூட ஆதரிக்கலாம்.ஆனால் பாகிஸ்தான் அணியை மட்டும் எக்காரணம் கொண்டும் ஆதரித்துவிடக்கூடாது. ஏனெனில் பாகிஸ்தான் அணி என்பது முஸ்லிம்களின் அணி என்றளவு நமது நாட்டில் மட்டும் கிரிக்கெட்டில் மதவெறியும் கலந்தே இருப்பது கவலையளிக்கிறது!

உலகெங்கும் எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டின் பின்னணியில் முதலாளித்துவ அரசியலும் அதையொட்டிய வர்த்தக லாப நோக்கங்களுமே அதிகம் பொதிந்துள்ளன. எதிரெதிராக விளையாடுபவர்கள் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளைச் சார்ந்தவர்கள் என்பதால் தேசபக்தி என்ற பெயரில் மதவெறி அளவுக்கதிகமாக ஊட்டப்படுகிறது.

காதில் விழுந்த கொடுமைகளில் சில ...
  • 250 ரூபாய் டிக்கெட் 25,000 ரூபாய்க்கு பிளாக்கில் விற்கப்பட்டதாம்.
  • டிக்கெட்டுக்குப் போதிய பணம் இல்லாத ஒரு தேசபக்தித் தொண்டர், தனது கிட்னிகளில் ஒன்றை மேட்ச் பார்ப்பதற்காக விலை பேசினாராம்.
  • 30.03.2011 அன்று மருத்துவர்களால் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்ட 15 நோயாளிகள், தொலைக்காட்சியில் மேட்ச் பார்ப்பதற்காகத் தங்கள் அறுவை சிகிச்சையைத் தள்ளி வைக்கும்படிக் கோரிக்கை வைத்து வெற்றி பெற்றனராம்.
  • மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த இரு பாகிஸ்தானியர் தம் நாட்டு அணி தோற்றதைத் தாங்கிக் கொள்ளாமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனராம்.
இதற்குப் பலியாகும் விதத்தில் முஸ்லிம்களில் ஒரு சிலரும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களின்போது பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி வெளிப்படுத்தி தங்களின் முட்டாள்தனத்தை அவ்வப்போது பறைசாற்றுகின்றனர்!

விளையாட்டின்மீதான வெறியில் ஒருசிலர் இவ்வாறு செய்தால் மற்றும் சிலர், பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது முஸ்லிம்கள் மீதான தார்மீகக் கடமை என்பதுபோல் தவறாக விளங்கிக் கொண்டுள்ளனர். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எதிராகச் செயல்படாதவரை அவரவர் தாய்நாட்டிற்கும் அதன் சட்டத்திற்கும் கட்டுப்படவேண்டியதே முஸ்லிம்களின் கடமை. மேலும், பாகிஸ்தானை முஸ்லிம்களின் முன்மாதிரி நாடாகக் கொள்ளுமளவுக்கு அங்கு இஸ்லாமிய விழுமியங்கள் எதுவும் முழுமையாகப் பேணப்படவுமில்லை.

சக பாகிஸ்தானியைக்கூட முஸ்லிம் என்றும் பாராமல் மஸ்ஜித்களிலும் தர்காக்களிலும் வெடிகுண்டு வைத்துக் கொல்லுமளவுக்கு இஸ்லாமிய மாண்புகளுக்கும் சகோதரத்துவத்துக்கும் எதிரான அரசியல்/மார்க்க மேதை(?)களைக் கொண்ட நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் வருமளவு இஸ்லாத்தின் அடிப்படைகளைக்கூட சரியாக விளங்காத முஸ்லிம் நாடாகவே இன்றளவும் பாகிஸ்தான் இருந்து வருகிறது. இந்நிலையில், 'இஸ்லாமிய நாடு' என்ற எண்ணத்தில் தங்கள் ஆதரவை முஸ்லிம்கள் கொடுக்கும் தகுதியில் பாகிஸ்தான் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.

கூடவே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியினைத் தேசபக்தியின் அடையாளமாக, ஆக்கி அந்நாட்டை வீழ்த்தியது போன்ற மாயை இந்திய ஒட்டுமொத்த அரசியல்வியாதிகளாலும் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறதோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

சாதாரணமாக, தனது நாடு போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த நாடுகளின் குடிமக்களிடம் இருப்பது எதிர்பார்க்கத் தக்க இயல்பு. அதேபோல் தனக்குப்பிடித்த விளையாட்டு வீரர் சாதனை படைக்கும்போது மகிழ்சியை வெளிப்படுத்துவதும்கூட மனித உணர்வுகளின் ஓர் அங்கமே! என்றாலும், இந்தியாவில் மட்டும் தேசபக்தியை அளவிடும் கருவியாக கிரிக்கெட் சிலரால் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய-பாகிஸ்தான் போட்டிகளில் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசுவதும் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் மட்டுமே தேசபக்தியின் அடையாளம் எனில், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து போன்ற நாட்டு அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும்போதெல்லாம் பிறநாட்டு அணிகளின் விளையாட்டை இந்தியர்கள் ரசிக்கும்போது தேசபக்தி பெவிலியனில் ஓய்வு எடுக்கும் போலிருக்கிறது!

நியூஸிலாந்தையோ, ஆஸ்திரேலியாவையோ, இலங்கையையோ அவற்றின் ஆட்டத்திறமையின் அடிப்படையில் ஆதரிக்கும் ரசிகர்கள் எவரையும் மேற்சொன்ன நாடுகளுக்குப் போய்விடும்படிச் சொல்லி யாரும் கோஷம் எழுப்புவதில்லை; ஆனால் விளையாட்டில் திறமையின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு ரசிகன் குரல் கொடுத்தாலோ உடனடியாக அவனைப் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தச் சொல்லும் பால்தாக்கரேக்களும் தொக்காடியாக்களும் நம்நாட்டில் நிறைய உண்டு.

வேறெந்த விளையாட்டையும்விட சர்வதேச அளவில் ஊழலும் மேட்ச் ஃபிக்ஸிங் மோசடியும் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில் நிறைந்திருப்பது அவ்வப்போதைய செய்திகளில் வெளிப்பட்டாலும், அவையெல்லாம் பின்தள்ளப்பட்டு (முன் கூட்டிய தீர்மானித்தின்படியான) வெற்றி தோல்விகள் மட்டும் செய்தியாக்கப்பட்டு நாட்டையே ஆட்டிப் படைக்கும் வகையில் கிரிக்கெட் போதை தலைவிரித்தாடுகிறது.

மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய-பாகிஸ்தான் உறவுகள் சிதைந்துள்ள நிலையில், இருநாடுகளின் ராஜதந்திர நட்புறவை வளர்க்கும் கருவியாக கிரிக்கெட் விளையாட்டையும் நமது பிரதமர் மன்மோகன்சிங் பயன்படுத்த முனைந்தது பாராட்டத்தக்கது! என்றாலும், கிரிக்கெட்டை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவதன் பின்னணியில் வணிக நோக்கமே காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

இந்திய நாட்டுப் பாரம்பரிய விளையாட்டான கபடியில் இதே பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தும் விஷயம் எத்தனை கோடி இந்திய மக்களுக்குத் தெரியும் என்பது தெரியவில்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால், கிரிக்கெட்டால் இலாபம் கொய்வது வர்த்தகர்களும் ஹிந்துத்துவாக்களுமே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!

சுனாமி-பூகம்பம் போன்ற சர்வதேசப் பேரிடர்கள், சக நாடுகளின் மக்கள் புரட்சிகள், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற மனித வாழ்வைச் சீர்குலைக்கும் விஷயங்களெல்லாம் புறந்தள்ளப்பட்டு, கிரிக்கெட்டிற்காக பிரதமர் முதல் கீழ்தட்டு குடிமகன்வரை தொலைக்காட்சி, இணையத்தின் முன்பு அமர்ந்து நேரவியம் செய்து இந்திய கிரிக்கெட்அணி வேண்டுமானால் வென்றிருக்கலாம். ஆனால் சர்வதேச முதலாளித்துவ வர்த்தகர்களிடம் இந்தியா தோற்றுப் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.

- அபூஅஸீலா

ஜசகல்லாஹ்  : சத்தியமார்க்கம். காம்
மின்தடை ஏற்பட்டதால் கிரிக்கெட் பைத்தியங்கள் சாலை மறியல்
Related Posts Plugin for WordPress, Blogger...