(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, March 18, 2011

மருத்துவ முகாமை புறக்கணிப்போம் !!!

அஸ்ஸலாமு அழைக்கும்....

மார்க் - காரைக்கால் துறைமுகம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ நிறுவனம் இணைந்து -

பொதுமக்களுக்கு இலவச  சிறப்பு பொது மருத்துவ முகாமை நாளை சனிக்கிழமை 19-03-2011 அன்று நாகூர் முஸ்லிம் சங்கத்தில் (குஜ்சாலி மரைக்காயர் தெரு)  நடத்துவதாக அறிவித்துள்ளது..

இதில் கவனிக்க படவேண்டியது என்னவென்றால்...

# சமீபகாலமாக இதே காரைக்கால் துறைமுகத்தால் பல சுற்றுசூழல் பிரச்சனைகளை நம் ஊர் சந்தித்து வருகிறது அதற்க்கு எந்த வித முழுமையான நடவடிக்கைகள் துறைமுகம் எடுத்தப்பாடில்லை இவ்வேளையில் இவர்கள் நமக்காக மருத்துவமுகாம் நடத்துவது தேவை அற்றது.

#  நிலக்கரி துகள்களால் ஏற்படும் பாரதுரமான விளைவுகளை எண்ணி நாம் செய்து வரும் போராட்டங்களை செயலிழக்க செய்யும் உக்கதியாக இது பார்க்கப்படுகிறது.

# இந்த மருத்துவ முகாமை நடத்துவதற்கு நாகூர் முஸ்லிம் சங்கம் எந்த விதத்தில் அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை.

# ஆகவே குழந்தையை கிள்ளிவிட்டு -தொட்டி ஆட்டும் காரைக்கால் துறைமுகம் நடத்தும் இந்த மருத்துவ முகாமை நம் ஊர் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

# மேலும் துறைமுகதினால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு நிரந்தர தீர்வுக்கான நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஊர் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

- நாகூர் மக்கள் நலம்விரும்பிகள். 

Wednesday, March 16, 2011

2011 ஹஜ் பயண விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும்!

"2011 ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படும்" என்று தமிழ் நாடு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
"தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ் 2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை(நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர்,  மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம். அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.


ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில்,
* ஒரு குழு/உறையில் விண்ணப்பங்கள், ரத்த-உறவு முறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையி/குழுவில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.
* விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
* பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்: 31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு பாஸ்போர்ட் இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல  பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும். ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.
ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக விண்ணப்பித்த உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (இவ்வாறு வைக்கப்படும் விண்ணப்ப உறைகளில் புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது). இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்.
மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்குத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும். குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது.
குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட ஹஜ் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்"
என்று தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, March 11, 2011

தேர்தல் பாதுகாப்பு படை வீரர்கள் நாகூர் வருகை...

பால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள் !!



அன்றைய இரவு அஸ்லமுடன் மதீனா வீதிகளில் உலா சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). பகலெல்லாம் அரசாங்க நிர்வாகம், போர் விவகாரங்கள், குடும்ப அலுவல்கள் என்று ஓயாத ஒழியாத வேலைகள்;

இரவிலோ மக்களின் நலன் காக்க ரோந்து; அதன் பின்னர் பின்னிரவுத் தொழுகை என்று அயராது பணியாற்றிக் கொண்டிருந்தவர் உமர். நம்மைப்போல் தொடர்ந்து ஏழு எட்டு மணி நேரத் தூக்கம் என்பதெல்லாம் அவர் ஒருநாள்கூடத் தூங்கியதாய் அறிய முடியவில்லை. சதா காலமும் இறைவனின் நினைப்பையும் அச்சத்தையும் நெஞ்சில் தூக்கித் திரிந்துகொண்டிருந்தார் அவர்.

நள்ளிரவு நெருங்கியிருக்கும். நடந்து வந்து கொண்டிருந்தவருக்கு மிகவும் அசதியாக இருந்தது. ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டார்.

வீட்டின் உள்ளே பேச்சு சப்தம் கேட்டது. “மகளே! சற்று எழுந்து அந்தப் பாலில் தண்ணீர் கலந்து வையேன்”

ஊர் அடங்கியிருந்த நேரம். தாயொருவள் மகளிடம் பேசியது தெளிவாய்க் கேட்டது.

“என்ன, பாலில் தண்ணீர் கலப்பதா? அப்படியானால் கலீஃபாவின் கட்டளை?”

“அது என்ன கட்டளை?”

பாலில் தண்ணீர் கலந்து விற்பதை நம்மூர் பால்காரர்கள் பின்பற்றும் முன்பே இப்பழக்கம் தொன்றுதொட்டு உலகெங்கும் இருந்து வந்திருக்கிறது போலும். உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது பெரும் குற்றம் என்பது இஸ்லாத்தின் நிலை. அதனால் உமருடைய கட்டளைப்படி அவரின் சேவகர் ஒருவர் மதீனா வீதியெங்கும் அறிவிப்புச் செய்திருந்தார், “பாலில் தண்ணீர் கலப்படம் செய்யக் கூடாது என்பது கலீஃபாவின் உத்தரவு”

மகள், தாய்க்கு அந்தக் கட்டளையை நினைவுறுத்தினாள்.

“அது சரி! உமரோ அந்த சேவகனோ காணவியலாத இடத்தில் நம் வீட்டிற்குள் நீ இருக்கிறாய். எழுந்து தண்ணீரைக் கலந்து விடு; யாரும் அறியப்போவதில்லை” என்றாள் அந்தத் தாய்.

“அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்! பொது இடங்களில் அமீருக்குக் கட்டுப்பட்டவளாகவும் தனிமையில் அவரது உத்தரவுகளுக்கு மாறு செய்பவளுமாக நான் என்றுமே நடந்து கொள்ளமாட்டேன்” என்று திட்டவட்டமான பதில் வந்தது.

மக்கள் மத்தியில், பகலில், சட்டத்திற்கும் உத்தரவிற்கும் கட்டுப்பட்டு நடப்பது மக்களுக்கு நிர்பந்தமாகக்கூட ஆகிவிடுகிறது. ஆனால் யாருமற்ற தனிமையில் இருக்கும்போதும் ஒருவர் இறைவனுக்கும் அவனது சட்டத்திற்கும் பயந்து நடந்துகொண்டால் அது ஒழுக்கத்தின் மேன்மையை அல்லவா எட்டிவிடுகிறது? அதுதானே இறையச்சம்!

தாய்க்கும் மகளுக்குமான இந்த உரையாடலைக் கேட்டு அசதியிலிருந்த உமர் அசந்துவிட்டார்.

“அஸ்லம் இந்த வீட்டின் கதவின்மேல் அடையாளமிட்டு இந்த வீடு எங்கிருக்கிறது என்று நினைவில் வைத்துக் கொள்.”

தெருப்பெயர், கதவு எண் போன்ற அடையாளங்கள் இல்லாத காலத்தில் அதுதான் அவர்களுக்கு எளிய முறை. அஸ்லம் அவ்விதமே குறியிட்டுவிட, பின்னர் தொடர்ந்தது அவரது அன்றைய இரா உலா.

மறுநாள் -

அஸ்லமை அழைத்தார் உமர். “நேற்று குறியிட்டுவிட்டு வந்த அந்த வீட்டிற்குச் செல்லுங்கள். இரவில் உரையாடிக் கொண்டிருந்தது யார், யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆண் துணையிருக்கிறதா என்றும் அறிந்து வாருங்கள்”

அவர்கள் இருவரும் தாயும் மகளும் என்பதையும் மகளுக்குத் திருமணமாகவில்லை; தாயார் கணவனை இழந்தவர் என்பதையும் அறிந்துவந்துச் சொன்னார் அஸ்லம். அடுத்து என்ன நடக்க வேண்டும்?

நமக்குப் பழக்கமான ஆட்சிமுறைப்படி அரசாங்க உத்தரவை மீறுவதற்கு ஊக்குவித்த அந்தத் தாய்க்குத் தண்டனையோ அபராதமோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெண்ணிற்கு நற்சான்றிதழ், ஒரு பதக்கம், வேண்டுமானால் சற்றுத் தாராளமாய்க் கொஞ்சம் பணமுடிப்பு என்று அளித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கலீஃபா உமர் தம் மகன்களை அழைத்தார். முந்தைய இரவு நடந்தவற்றையும் அஸ்லம் அறிந்து வந்து சொன்னதையும் கூறிவிட்டு,

“உங்களின் தந்தைக்கு மட்டும் வயது முதிர்ச்சி ஏற்பட்டிருக்காவிடில் அவர் இந்தப் பெண்ணை மணமுடிப்பதில் நீங்கள் எவரும் அவருடன் போட்டியாளராக வரமுடியாது. எனவே உங்களில் யாருக்காவது மணமுடிக்கப் பெண் தேவையா?” என்று கேட்டார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), “எனக்கு மனைவியிருக்கிறார். இப்பொழுது வேறு திருமணத்துக்குத் தேவையற்றவனாய் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.

மற்றொரு மகன் அப்துர் ரஹ்மானும் அதே பதிலையே கூறினார்.

ஆஸிம் மட்டும், “தந்தையே! எனக்கு மனைவியில்லை. எனவே அப்பெண்ணை மணமுடித்து வையுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.

“மிக்க நன்று” என்று அந்தப் பெண்ணுக்குத் தம் மகன் ஆஸிமை மணமுடித்துக் கொடுத்தார் உமர்.

இங்கு சற்று மூச்சை இழுத்துவிட்டு, இலேசாய்ச் தலையையும் சொறிந்து கொண்டு யோசிக்க வேண்டும். இஸ்லாமியப் பேரரசின் கலீஃபா உமர். அவர் தம்முடைய மகன்களுக்கு மன்னர்கள், சக்கரவர்த்திகள், பெருங்குடி மக்கள், செல்வந்தர்கள் போன்றோரிடமிருந்து பெண்களைத் தேடித் தேடி பெற்றுத் தந்திருக்கலாம். அவ்விதம் மணமுடிக்க எவ்வித மறுப்புமின்றிப் பெண்களும் தயாராய் இருந்திருப்பார்கள்.

கடைக்குச் சென்றால் கண்ணைப் பறிக்கும், மனதை மயக்கும் ஒரு பொருளை வாங்கியே தீரவேண்டும் என்று நமக்கெல்லாம் ஓர் உத்வேகம் பிறக்குமே அப்படி, போற்றுதற்குரிய இறையச்சத்துடன் ஒரு பெண் மதீனாவில் உள்ளதை உணர்ந்த அந்தநொடி, அந்தப் பெண் தம் வீட்டிற்கு உரியவர் என்று தீர்மானித்து விட்டார் உமர். அடுத்து என்ன செய்தார்? அஸ்லமை அனுப்பி அந்தப் பெண் பேரழகியா, சீர் செனத்தி தரும் வசதி இருக்கிறதா, பேரீச்சம் தோப்பு, ஒட்டகம் என்று சொத்துபத்து எவ்வளவு என்று பட்டியலிட்டு வரச் சொல்லவில்லை! ‘திருமணத்திற்கு தகுதியான வகையில் இருக்கிறாரா?’ தீர்ந்தது விஷயம்.

ஏன் இப்படி?

இறையச்சம், ஒழுக்கம் போன்ற மாண்புகளில் இணைந்து உருவாகிறதே - அது வாழ்க்கை. உலக மகா வாழ்க்கை! மறுமையின் சிறப்பிற்கு இம்மையில் அடித்தளம் அமைக்கும் வாழ்க்கை. அத்தகு இல்லறம் உலகின் சிறந்த வாரிசுகளை ஈன்றெடுக்கும்; இறைவனின் பாதுகாவல் அவர்களுக்கு என்றென்றும் இருக்கும் என்பது உமரின் நம்பிக்கை.

என்ன ஆயிற்று? பின்னர் நடைபெற இருக்கும் இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்விற்கு அத்திருமணம் முன்னுரை எழுதியது.

அந்தப் பெண்ணுக்கும் ஆஸிமுக்கும் மகளொருவர் பிறந்தார். அந்த மகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவர் வேறு யாருமல்ல. பின்னாளில் நேர்வழி சென்ற கலீஃபாக்கள் வரிசையில் ஐந்தாமவர் என்று இஸ்லாமிய உலகு போற்றுமளவுக்கு ஆட்சி புரிந்த 'இரண்டாவது உமர்', உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)தாம் அவர்.

இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலத்தை வாசிக்கும்போது இத்தகு ஆட்சியும் ஆட்சியாளர்களும் நமக்கும் அமைய வேண்டுமே என்று எழும் ஆசையும் ஆதங்கமும் நியாயமானவையே. தப்பே இல்லை. ஆனால் அதனுடன் மற்றொன்றும் நமக்கு நினைவில் இருத்தல் வேண்டும். அவர்களெல்லாம் நல்லதொரு நாளில் வானில் இருந்து குதித்து பூமிக்கு வந்தவர்களல்லர். நபி (ஸல்) வழி எவ்வழி, அவ்வழி என் வழி என்று உணர்ந்தார்கள்; அதை இழுத்து சுவாசித்து வாழ்ந்தார்கள். அவ்வளவுதான்!

தலைவர்கள் உருவானார்கள்!


சான்றுகள் :
'அமீருல் முஃமினீன் (உமருடைய) சிறப்பு' - இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) பக்கம் 89-90
'உமர் பின் அல்கத்தாப், வாழ்வும் காலமும்' - மூலம்: டாக்டர் அலீ முஹம்மது ஸல்லாபீ (ஆங்கில மொழியாக்கம் : நாஸிருத்தீன் அல்கத்தாப்)

நன்றி: சமரசம் - 01-15 மார்ச் 2011




Thursday, March 3, 2011

ராகுல் காந்தி காலில் எலும்பு முறிவு - நாகூர் தர்காவில் சிறப்பு பூஜை

செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!
இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104

Wednesday, March 2, 2011

ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.

கோவையில் பெரும்பாலான செல்போன் உபயோகிப்பவர்களுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத்தொடங்கியது. "நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச, உங்களுடைய லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக மாற கால் பண்ணுங்க. பல்லவி, சுமா, மாலதி ஆகியோர் உங்கள் போனுக்கு காத்திருக்கிறார்கள்." இப்படி தான் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப்பட்டிருந்தது. 

சில நேரங்களில் இது போன்ற குறுந்தகவல்கள் திருமணமானவர்களின் வீடுகளில் வீண் பிரச்சினைகளைக் கூட உருவாக்கியது. இதனால் ஏராளமானவர்கள் கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர்.

அவரது உத்தரவின் பேரில் கோவை சைபர் செல் போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்.எம்.எஸ். குறித்து தகவலறிய களமிறங்கினர். முதற்கட்ட விசாரணையில் வெளி நாட்டில் இருந்து இந்த செல்போன்களில் பெண்கள் பேசுவது போல இருந்தது. இதனால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆங்கில செய்தி தாளில் "டெலி காலர் தேவை" என்று கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த தனியார் கால் சென்டர் சார்பில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டிருந்தது போலீசாரின் பார்வையில் விழுந்தது.

அதனை ரகசியமாக கண்காணித்த சைபர் செல் போலீசார் அந்தப் பணிக்கான நேர்முக தேர்வுக்குச் சென்று வந்த பெண்கள் மூலம் சில தகவல்களைப் பெற்றனர். இதில் மனம் விட்டு பேசலாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆண்களுடன் பெண்களை ஆபாசமாக பேச வைத்து அவர்களைத் தவறான வழிக்குக் கூட்டி செல்லும் நிறுவனம் அது என்பது தெரிய வந்தது.

உடனடியாக சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி அந்நிறுவனத்திலிருந்து முக்கிய ஆவணங்களைப் பறி முதல் செய்தனர். கணவன்-மனைவி என 2 பேர் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவது தெரிய வந்தது. ஆண்களிடம் செக்சியாக, ஆபாசமாக பேசுவதற்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஒரு நாளைக்குத் தொடர்ந்து 8 மணி நேரம் செல்போனில் ஆண்களுடன் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி வலையில் வீழ்த்தி ஆபாசமாக பேசி ஆண்களின் மனதைக் கெடுத்து உள்ளனர்.

இத்தகைய குறுந்தகவலால் ஏராளமான குடும்பங்களில் பிரச்சினை வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபாச சாட் கால் சென்டரின் உரிமையாளர்களான கணவன்- மனைவியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source : inneram.com
Related Posts Plugin for WordPress, Blogger...