(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, January 30, 2011

இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் - பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?.


பதில்: DR.ZAKIR NAIK

1. முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும்:
முஸ்லிம்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.

மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் - இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.

'அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.' என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் - அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.

2. இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:
'நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.' என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் - ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ - அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.

ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, 'நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் 'நான் ஒரு ஸுன்னி' என்பதாகவோ அல்லது 'நான் ஒரு ஷியா' என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, 'ஷாஃபிஈ' என்றும், 'ஹனஃபிஈ' என்றும் 'ஹம்பலி' என்றும் 'மாலிக்கி' என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'நான் ஒரு தேவ்பந்திஈ' என்றும் 'நான் ஒரு பெரல்விஈ' என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.

3. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:
மேற்கண்டவாறு தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள் - அதாவது அவர்கள் 'ஷாஃபியா' அல்லது 'ஹனஃபியா' அல்லது 'ஹம்பலியா' அல்லது 'மாலிக்கியா?' என்று கேட்டுப் பாருங்கள். இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்புள்ள அல்லாஹ்வின் தூதர்களைப் போன்று ஒரு உண்மையான முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களது பதிலாக இருக்கும்.

அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 54வது வசனம் நபி ஈஸா (அலை) அவர்கள் ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 67வது வசனம் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் ஓர் யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல. அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட ஓர் முஸ்லிம்  என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

4. உங்களை நீ;ங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:
எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் - இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் ஓர் ஷாஃபிஈ என்றோ அல்லது தாங்கள் ஓர் ஹனஃபி என்றோ சொல்லக் கூடாது.
அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

'எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றார்?)

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் - நான் ஒரு முஸ்லிம் - என்று சொல்லுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தபால் மூலமாக இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவ்வாறு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் 64 வது வசனத்தின் கடைசி வரிகளாக அமைந்திருக்கும் 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்கிற வசனத்தை குறிப்பிட்டு தபால்களை அனுப்பி வைப்பார்கள்.

5. இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.
மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்பட இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும். இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ - வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் - எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் 'நீ யார்?' என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு 'நான் ஒரு முஸ்லிம்' என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.

1. ஒரு சிலர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ' எனது சமுதாயம் 73 பிரிவினராக பிரிவர்' (மேற்படி செய்தி அபூதாவூத் என்னும் ஹதீஸ்(செய்தி) புத்தகத்தின் 4579வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது) என்கிற செய்தியை தங்களது பிரிவினை வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி வாதிடுவர்.

மேற்படி செய்தியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - இஸ்லாமிய சமுதாயம் 73 பிரிவாக பிரியும் என்று முன்னறிவிப்பு செய்தார்களேத் தவிர, அவர்கள் அறிவித்த நோக்கம் இஸ்லாமிய சமுதாயம் தங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிய வேண்டும் என்பதற்காக அல்ல. அருள்மறை குர்ஆன் இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என்று இஸ்லாமியர்களுக்கு கட்டளை இடுகின்றது. அருள்மறை குர்ஆன் கட்டளையின்படி - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி யார் இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ - அவர்கள்தான் உண்மையான இஸ்லாமிய வழியில் நடப்பவர்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் - என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அதில் ஓரேயொரு கூட்டத்தைத் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் நரகத்துக்குச் செல்வார்கள். மேற்படி அறிவிப்பை கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்கள் கேட்டனர் சொர்க்கத்துக்கு செல்லும் அந்த கூட்டம் எது?. என்று. அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: அந்த கூட்டம் நானும் எனது அன்புத் தோழர்களும் உள்ளடங்கிய கூட்டம் என்று. ( மேற்படி செய்தி திர்மிதி என்ற செய்திப் புத்தகத்தின் 171வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. )

'அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள். அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள்' என்று அருள்மறை குர்ஆன் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. ஒரு உண்மையான முஸ்லிம் அருள்மறை குர்ஆனையும ; - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும்தான் பின்பற்ற வேண்டும். அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமில்லாத பட்சத்தில் எந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் ஒரு உண்மையான முஸ்லிம் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு மார்க்க அறிஞரின் கருத்து - அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் முரண்படுமாயின் அந்த கருத்துக்கு ஒரு உண்மையான முஸ்லிம் மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்படி மார்க்க அறிஞர் எவ்வளவு கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் சரியே.

இஸ்லாமியர்கள் அனைவரும் அருள்மறை குர்ஆனை - கற்றறிந்து - அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை சரிவர பின்பற்றுவோம் எனில் இறை நாட்டத்தில் நமக்கிடையே இருக்கும் இந்த பிரிவினை என்ற வேறுபாடு நம்மிடமிருந்து மறையும். நமக்குள்ளே பிரிவினையற்ற சிறந்த ஒற்றுமையும் உருவாகும்.

Monday, January 24, 2011

உயிருக்கு போராடும் 2 வயது சிறுமிக்கு உதவிடுங்கள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கீழக்கரை வடக்குத் தெருவை சேர்நத ஏழை ஒருவரின் மகளான மைஷா என்ற சிறுமி பிறந்ததிலிருந்து நோயால் அவதியுற்று வருகிறாள். அவளை 19 நாள் குழந்தையாக இருந்தப் பொழுது மருத்துவரிடம் காட்டியதில், அவளுக்கு ஈரலில் பிரச்னை இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவித்தப்பட்டது.

 அவளுக்கு ஒரு ஆப்ரேஷனும் நடைபெற்றது. ஆனால் அது பலன் அளிக்கவில்லை. மருந்து மாத்திரைகளுடன் காலம் கடந்தும் இச்சிறுமி பள்ளிக்கு போகும் முன் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை (LIVER TRANSPANTATION) செய்தே ஆக வேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டார்கள். மிக அரிதாக நடைபெறும் இந்த ஈரல் மாற்று அறுவை சிகிச்கைக்கு சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்களின் அறிக்கை தெரிவிக்கிறது. இதனால்  இவளது ஏழ்மையான குடும்பம் மிகுந்த கவலையில் இருக்கிறது. எனவே, இவளின் மருத்துவ உதவிக்கு உதவிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்.



TRANSPLANT OF LIVER

Bismillah,
Assalamu Alaikum,

Baby Mysha 2yrs old girl, her DOB is 12th Jan 2009, She was diagnosed to have biliary atresia in her neonatal period and under went kasai procedure when she was 19 days old. The surgery has failed to clear her Jaundice and Doctors adviced to her family, The transplant of Liver should be planned before the school going age.
The cost of Surgery will be the sum of Indian Rs 20,00,000/-(Twenty Lakhs) and more. Medicine cost will come after the surgery 10,000/-per month. Her father is working in U.A,E as a labour, his monthly earning is  10,000/- only. Pls donate cheque Mysha, or cash
Contact :
20/213, NORTH STREET,
KILAKARAI, Ramanathapuram-623517
9994522819
9444214893
9551514185
Email.: sikkankr@gmail.com

Jazakkallah

Monday, January 17, 2011

யாருக்காக இதெல்லாம் செய்கிறீர்கள்??

 
“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!
இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104

Thursday, January 13, 2011

நான் இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்.... ??

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின். 

சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......

முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை. 

இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....

இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.

அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).

பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................


"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது. 

இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை, 

  • என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும். 
  • அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும். 
  • எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும். 

என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.

இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.

என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,

"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது" 

இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.

ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.

"ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்"

அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.

மனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும் இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.

நாட்கள் சென்றன....

இந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு தான், கடைகள் அடைக்கப்பட்டன. தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.

முஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து விட்டேன்.

பள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில் இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில் என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

எனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும் செய்தேன். அவர்களை அப்படியே பின்பற்றினேன்.

எனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.         

"இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய். என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன். உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மனிதர்களிடத்தில் அல்ல"

இதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.

என்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், சாக்சையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.

"Anta Muslim? Limada tusalli? ‘adam wa’dha al yedduka al yameen ala shimal.” (நீங்கள் முஸ்லிமா? நீங்கள் எதற்காக தொழுகின்றீர்கள்? தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க வேண்டும்)

ஆம், அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.

பிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன் நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து "come on" என்று சைகை செய்து என்னை உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் இந்த சிறுவர்களின் அண்ணனாம்.

என்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு புரியவில்லை, என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.

"உங்கள் தாய், தந்தையர் எங்கே?"

நான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து கொண்டேன்.

அப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.

"அமெரிக்கி?" (அமெரிக்கரா?)

"இல்லை, நான் பிரிட்டிஷ்"

"காபி அருந்துகின்றீர்களா?"

இல்லை, நான் ஏற்கனவே அருந்தி விட்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.
                   
"Tawadha" (உளு செய்யலாம் வாருங்கள்)

உளு (Wudu is the Islamic act of washing parts of the body using water) செய்ய சொல்லிக்கொடுத்தார்.

"வாருங்கள் தொழப்போகலாம்"...

மாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.

"கையை உயர்த்துங்கள்" என்று சொல்லியபடியே என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார். "பிறகு இப்படி வையுங்கள்" என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார். பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.

நாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில் நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், "நான் செய்வதை போல செய்யுங்கள்" என்று இரு கைகளையும் உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.

பள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை விட சரியான முறையில் தொழுதேன்.

பள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான் மறுபடியும் கேட்டேன், 

"உங்கள் அம்மா எங்கே?"

அவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை காட்டி கீழே பூமியை காட்டினார்.       

"Baba wa mama fiy mout, yarhamhummullah. Sister make" (மரணம் எங்கள் பெற்றோரை தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி தான் உணவு தயாரித்தார்"

அப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான் ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.

"உங்களுக்கு இஸ்லாம் பிடித்திருக்கின்றதா?" அவர் கேட்டார்.

"ஆம்"

"பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை"

"எனக்கு டைம் தேவை"

அவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.

"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்"

நான் அவருக்கு நன்றி கூறினேன்.

அந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினேன்.

இதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர் பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர். உம்ரா (The Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.

எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான் படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடுத்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்...

"நீங்கள் முஸ்லிமாகவில்லையா?"

என்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா?, அல்லாஹ்விடம் நிபந்தனைகள் விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா (Shahada is the testimony of faith indicating belief in one God, Allah, who has no partners and belief that the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and messenger) சொல்லுங்கள்"

"நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது?, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா?"

"இங்கே பாருங்கள். இறைவன் யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா?. இவ்வளவு ஏன்...நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே!!! நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின் சகோதரர் முஸ்லிமாகவில்லையே"

எனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.

"நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்"

"நீங்கள் அதற்கு முன்னே இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா?"

அவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.

உடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.

என்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.

இஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம். 

இறைவன், நம்பிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக விலகிவிடும்.

அதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு அதிகமாக அருளை கொடுப்பானென்று"


சுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது...நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான் உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில் உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்...

Jerome Boulter,
LTAP Language Teacher,
English Language Centre,
Faculty of Academic Services,
Taibah University,
PO Box 344
Medina 42353,
Kingdom Saudi Arabia
cel. +966 54 3328708
jerboulter@gmail.com

இதனை எழுதும்போது டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் ஒரு உரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது, நீங்களும் பார்த்திருக்கலாம்.

அந்த உரையின் கேள்வி பதில் நேரத்தில் ஒரு சகோதரி,

"குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்?" என்று கேட்க,

அதற்கு டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கூறி விட்டு அந்த சகோதரியை பார்த்து கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வியை,

"சகோதரி, நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன். இஸ்லாத்தை ஏற்கவிடாமல் உங்களை தாமதப்படுத்துவது எது?" என்று கேட்க, அதன் பிறகு நடந்தது உணர்வுப்பூர்வமான நிகழ்வு. அதனை நீங்களே கீழே பார்க்கலாம்.

 


இறைவன் ஒருவருக்கு நேர்வழி காட்ட நினைத்து விட்டால் யார் தடுப்பது?

இறைவா, இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு மனபலத்தை தந்தருள்வாயாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


Please Note:
சகோதரர் ஜெறோம் பௌல்டர் குறித்த இந்த மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. பதிவிற்கு தேவைப்பட்ட தகவல்கள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிற்கு வந்த விதம் குறித்த அவரது கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது இணையதள முகவரியை பயன்படுத்தவும்.    


My Sincere thanks to:
1. Brother Jerome Boulter..
2. Islam Religion Website.
Reference: 
1. Why I became Muslim - http://www.jboulter.com/index_files/Page987.htm

ஜசக்கல்லாஹ் : ஆஷிக் அஹ்மத் அ.
http://ethirkkural.blogspot.com/2010/10/blog-post_18.html

Saturday, January 8, 2011

ஆறு முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிச் சென்ற அவலம்..அதைப் பற்றியும் பேசுவீர்களா?- Aloor Shanavas

ஜசக்கல்லாஹ் : Aloor Shanavas


மளான் முழுவதும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் வழங்கப்பட்ட சஹர் நேர நிகழ்சிகளைப் பற்றி திறனாய்வு செய்து எழுதும் படி ஒரு நண்பர் என்னிடம் கேட்டுக் கொண்டார். திறனாய்வு செய்யும் அளவுக்கு நிகழ்ச்சிகள் ஒன்றும் பிரமாதமாய் இல்லை என்றாலும், அது குறித்து சில விசயங்களை விவாதிக்க வேண்டும் என தோன்றியது.

தொலைக்காட்சியை ஹராம் என்று சொல்லி அதிலிருந்து விலகி நின்ற தமிழ் முஸ்லிம் சமூகம், தொலைக்காட்சியின் வீச்சையும், அது பொது சமூக மத்தியில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும், தாமதமாகவேனும் புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்தி வருவது மகிழ்ச்சிக்குரியதே என்றாலும், ஒளிபரப்பு ஊடகத்தை [visual media ] ஒலிபரப்பு ஊடகமாக [broadcost media ] நம்மவர்கள் கையாண்டு வருவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.



திரையில் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தால் தான் அது காட்சி ஊடகம். ஒரு மணிநேரம் முழுவதும் ஒருவர் முகத்தையே பார்த்துக் கொண்டு அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தால் அது என்ன ஊடகம்?

இங்கே தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் ஒவ்வொரு முஸ்லிம் நிகழ்சிகளிலும் ஒவ்வொருவராக பேசிக் கொண்டே இருக்கிறார்கள், வேறு வழியே இல்லாமல் நாமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

காட்சி ஊடகத்தை காட்சி ஊடகமாகப் பயன்படுத்தக் கூடிய அனுபவமும்,முதிர்ச்சியும்,அறிவு வளர்ச்சியும் இன்றி, தொழில் நுட்பப் புரட்சி மிகுந்த இந்த 2010 -லும் கூட நாம் சிந்தனை வறட்சியிலேயே இருக்கிறோம் என்பதைத்தான் நம்முடைய ஊடகப் பயன்பாடு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

சஹர் நேர நிகழ்ச்சிகளில் எந்தச் சேனலைத் திறந்தாலும் ஒரே பேச்சு மயம் தான். கற்குவியல்களுக்கு இடையே சில சோற்றுப் பருக்கைகளைப் போல ஒரு சில நிகழ்சிகளைப் பார்க்க முடிந்தது.

மார்க்க ரீதியான கேள்வி பதில்களும், குழந்தைகளை ஈர்க்கும் வினாடி வினா போட்டிகளும் சற்று மன நிறைவைத் தந்தன.ஆனால், கடந்த காலங்களில் வித்தியாசமான நிகழ்சிகளை வழங்கி வந்த சிலரும் கூட, காலப் போக்கில் பேச்சு என்கிற பழைய நிலைக்கே திரும்பியிருப்பது நமக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.அவர்களும் வழக்கமான 'பேச்சு' நீரோடையில் கலந்து கரைந்து போவதற்கான காரணம் என்ன என்பதை சற்று ஆராய வேண்டி உள்ளது.

காயல் இளவரசு தொடங்கி வைத்த சஹர்நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, இன்றைக்கு மதிமுகவின் சீமா பஷீர் வரை வளர்ந்திருக்கிறது. அதாவது, காயல் இளவரசு என்னும் தனி நபரில் தொடங்கி, முஸ்லிம் அமைப்புகளிடம் தொடர்ந்து, இன்று மதிமுக என்னும் அரசியல் கட்சி வரை அது விரிவடைந்திருக்கிறது.

முன்பு சஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் ஊடக நிறுவனங்களே இல்லை என்ற நிலை இருந்தது.
இன்று சஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் அமைப்புகளே இல்லை என்ற நிலை இருக்கிறது.
நாளை சஹர் நிகழ்ச்சி நடத்தாத அரசியல் கட்சிகளே இல்லை என்ற நிலை வந்து விடும் என்பதைத்தான் மதிமுகவின் இவ்வருட சஹர் வருகை நமக்கு உணர்த்துகின்றது.

எப்படி இப்தார் நிகழ்ச்சி இன்றைக்கு அரசியல் கேலிக்கூத்துகளின் அடையாளச் சின்னமாக மாறி விட்டதோ, அதைப் போலவே சஹர் நிகழ்சிகளும் மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தனிநபர் சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்படும் நிகழ்சிகளால் சமூகத்திற்கு பெரிய அளவில் பயன் இல்லாவிட்டாலும், சிறிய அளவு கூட தொல்லை இருந்ததில்லை.ஆனால் அமைப்புகள் களத்தில் குதித்த பிறகு சஹர் நேரத்தின் கண்ணியத்திற்கு களங்கம் நேர்ந்து விட்டது. மார்க்க ரீதியான பிரச்சனைகளைக் கிளறி, கருத்து மோதல்களைச் செய்வதற்கான களமாக சஹர் நேரத்தையும், ஊடகத்தையும் மாற்றி விட்டார்கள்.

இறைவனுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்றொரு சண்டை.

காதியானிகள் முஸ்லிமா இல்லையா என்று, ரொம்ப அவசியமான ஒரு விவாதம்.

சமுதாயத்திற்கு யார் உண்மையாக உழைப்பது என்பதை எடுத்துச் சொல்வதில் 'நீயா நானா' போட்டி.

இட ஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தந்தது யார் என்பதில் நீடிக்கும் உரிமைப் போர்.

'அவன் முஸ்லிம் இல்லை, இவன் முஸ்லிம் இல்லை' என்றெல்லாம் சகட்டுமேனிக்கு சான்றிதழ் கொடுக்கும் கொடுமை.

ஜகாத்தையும், நன்கொடைகளையும் எங்களுக்கே அனுப்புங்கள்! அனுப்புங்கள்! என்று கூவிக் கூவி வசூலிக்கும் அவலம்.....

இப்படி நீண்டு கொண்டிருக்கிறது முஸ்லிம் ஊடகத்தின் பரிணாமம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம், மார்க்கம் பேச வேண்டியவர்கள் அரசியல் பேசுகிறார்கள்.
அரசியல் பேச வேண்டியவர்கள் மார்க்கம் பேசுகிறார்கள்.
எதையாவது பேச வேண்டும் என்பதில் இருக்கும் முனைப்பும் வேகமும் எதைப் பேச வேண்டும் என்பதில் இருப்பதில்லை.
பிஜேயின் மார்க்கப் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்று சொல்லி முழு நேர அரசியல் பேச வந்தவர்கள், அரசியலை விட்டு விட்டு மார்க்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களிடம் கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வாய்ப்பு மிகுந்த ஒரு நேரத்தில், வலிமை மிகுந்த ஒரு ஊடகத்தின் மூலம் சமூக மறுமலர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களை எடுத்து வைத்து மக்களை ஈர்ப்பதை விட்டு விட்டு 'ஏய்..! நானும் ரவுடிதான்; நானும் ரவுடி தான்' என்பது போல மார்க்கப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஊடகத்தின் வழியே யாருமே மார்க்கப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதல்ல நமது கருத்து.
அரசியல் எழுச்சியூட்ட வேண்டியவர்கள் ஊடகத்தை அதற்கு முழுமையாகப் பயன்படுத்தட்டும்,
மார்க்க விழிப்புணர்வூட்ட வேண்டியவர்கள் முழுமையாக மார்க்கப் பிரச்சாரம் செய்யட்டும்.


ஒரே வேலையை எல்லோரும் செய்து கொண்டிருப்பதனால் தான் நம்மில் துறை சார்ந்த வல்லுனர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பிஜே மார்க்கப் பிரச்சாரம் செய்வதால் நானும் மார்க்கப் பிரச்சாரம் செய்வேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்தால், அரசியல் விழிப்புணர்வை யார் ஊட்டுவது?

ஒரே வேலையை எல்லோரும் செய்து கொண்டிருப்பதனால் தான் இங்கே சமுதாயத்தின் பிரச்சனைகள் தீர்வின்றித் தொடர்கின்றன.அவரவர் கடமைகளில் இருந்து அவரவர் தவறுவதன் மூலம் சமுதாய மக்களின் பொருளாதாரமும்,
பொன்னான நேரமும் தான் வீணாகிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் நாம் மற்றவர்களிடம் இருந்து நிறைய பாடம் படிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் எல்லா துறைகளிலும் வேர் பரப்பி, கிளை விரித்து, கோலோச்சி இருக்கிற இந்துத்துவ சக்திகள் ஒருபோதும் தங்களின் ஆற்றலை வீணாக்குவதில்லை. ஒரே வேலையை செய்வதற்காக அவர்கள் தங்கள் சமூகத்தின் பொருளாதாரத்தை விரயம் செய்வதில்லை.

அங்கே பாஜகவுக்கு ஒரு வேலை;பஜ்ரங் தளத்துக்கு ஒரு வேலை;விசுவ ஹிந்து பரிசத்துக்கு ஒரு வேலை;துர்கா வாகினிக்கு ஒரு வேலை;அபினவ் பாரத்துக்கு ஒரு வேலை;இந்து முன்னணிக்கு ஒரு வேலை..இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகள்.இவர்களையெல்லாம் கட்டி மேய்க்கிற பெரியண்ணன் வேலை ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை.

இவர்களில் எந்த அமைப்பும் இன்னொரு அமைப்பைத் தாக்குவதில்லை.தொலைக்காட்சியில் Slot எடுத்து சண்டை போடுவதில்லை. பாபர் மசூதியை இடித்தது நீயா நானா என்று ஒருவருக்கொருவர் மல்லுக்கு நிற்பதில்லை. ஒரு அமைப்பின் வேலையில் இன்னொரு அமைப்பு தலையிடுவதில்லை.ஒரு அமைப்பின் வேலையை இன்னொரு அமைப்பு செய்வதுமில்லை.

ஒவ்வொருவருக்கும் தனித் தனி வேலைகள். ஒவ்வொருவருக்கும் தனித் தனிப் பாதைகள்.ஆனால் எல்லோருக்கும் ஒரே இலக்குகள். ஆர்எஸ்எஸ் என்கிற தலைமை அமைப்புக்கு கட்டுப்பட்டவர்களாக,அது போட்டுக் கொடுத்த செயல் திட்டத்தின் படி வழி நடப்பவர்களாக இந்துத்துவ சக்திகள் இயங்கி வருவதை நாம் கண் கூடாக கண்டு வருகிறோம்..



குர்ஆனும், ஹதீசும் இல்லாமல், முறையான வாழ்க்கைத் திட்டம் இல்லாமல், ஒருமுகப்பட்ட நல்ல கோட்பாடு இல்லாமல் அவர்கள் முறையாகவும் தெளிவாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நாம் எல்லாம் இருந்தும் இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

எந்த வித திட்டமிடலும் இல்லாமல், தெளிவான வழிமுறைகளைக் கையாளாமல் அமைப்பு நடத்துவது போலவே இங்கே ஊடகமும் நடத்தப்பட்டு வருகிறது. பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டம், இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் என ஒரே விசயத்தைப் பேசுவதற்கு பல அமைப்புகள் இயங்குவது போல, பல்வேறு அமைப்புகளும் தொலைக்காட்சியில் Slot வாங்கி ஒரே விசயத்தைப் பேசுகின்றன.

கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியின் முன் அமருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு, எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது, எந்தக் கருத்தைக் கேட்பது என்ற குழப்பம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும்,உறங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தை தட்டி எழுப்பவும்,அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசவுமே ஊடகம் பயன்பட வேண்டும்.ஆனால் முஸ்லிம் ஊடகத்தின் மூலம் இன்று சமுதாயத்தில் குழப்பமும் பிரச்சனைகளும் தான் மலிந்து கொண்டிருக்கிறது.

குஜராத் இனப்படுகொலைகளை நிகழ்த்தியது எப்படி என்று, இந்துத்துவ பயங்கரவாதிகளைப் பேச வைத்து பதிவு செய்த தெஹல்காவின் அரும்பணியை நாம் மெச்சிக் கொண்டிருக்கிறோம்.

காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்யும் ஸ்ரீ ராம் சேனாவின் பிரமோத் முத்தலிக்கை, கையும் களவுமாக காட்டிக் கொடுத்த ஊடகத்தின் மேன்மையை நாம் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாடு முழுவதும் நடை பெற்ற ஏழு மிகப்பெரிய குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு உண்டு என்று பகிரங்கமாக அம்பலப் படுத்திய ஹெட்லைன்ஸ் டுடேயின் கேமராவை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், நமது கைகளில் இருக்கும் கேமராக்கள், என்றைக்காவது நம் பிரச்சனைகளைப் படம் பிடித்துக் காட்டியதுண்டா?
சுய பரிசோதனை செய்யும் வகையில் ஒவ்வொரு முஸ்லிம் ஊடக நிறுவனங்களும் தங்களுக்குள் இந்தக் கேள்வியை எழுப்பிப் பாருங்கள்; வெட்கத்தால் தலை குனிவீர்கள்.

மார்க்க ரீதியான கருத்து முரண்பாடுகளையும், மசாயில் பிரச்சனைகளையும் எப்போதும் படம் பிடித்துக் கொண்டு ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் நம் கேமரா, ஏன் அபகரிக்கப்பட்ட வக்பு நிலங்களைப் படம் பிடிக்கவில்லை?

கோடான கோடி ரூபாய் மதிப்புள்ள வக்புச் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்துள்ள அரசியல்வாதிகளையும், தொழில் அதிபர்களையும், நிறுவனங்களையும், தனி நபர்களையும் கையும் களவுமாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் புலனாய்வு வேலையை ஏன் நமது ஊடகம் செய்யவில்லை?

இஸ்லாத்திற்கு வந்த பேராசிரியர் பெரியார் தாசனை போட்டி போட்டுக் கொண்டு படம் பிடிக்கவும், பேட்டி எடுக்கவும் முனைப்பு காட்டுகின்ற நமது ஊடகம், 25 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்திற்கு வந்த அப்துல்லாஹ் அடியாரின் இறுதி நாட்கள் வறுமை நிறைந்ததாக முடிவுக்கு வந்ததைப் பற்றி என்றைக்காவது பேசி இருக்கிறதா?

இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்திற்கு வந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் இப்போது எப்படி இருக்கிறார் என்று எப்போதாவது திரும்பிப் பார்த்திருக்கிறோமா? இப்போதும் மொழிப் போராட்ட தியாகிகளுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் அவரது இன்றைய நிலையை சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கிறோமா?

கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவும் பல்வேறு கிராமங்களில் ஒரு பள்ளிவாசல் கூட கட்ட முடியாமல், இஸ்லாமியக் கருத்தியலை கற்றுக்கொள்ளும் மையம் ஒன்றை நிறுவ முடியாமல், அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி உழல்வதை நமது ஊடகங்கள் ஏன் படம் பிடிக்கவில்லை?

பெரியார் தாசனை வாழ்த்த வந்த திருமாவளவன் எப்போது இஸ்லாத்திற்கு வருவார் என்று துரத்தித் துரத்தி கேள்வி எழுப்பி, அதை ஊடகங்களில் ஒளிபரப்பி, சமுதாய மக்களிடம் எதிர்பார்ப்பை கிளறி விட்டவர்களே...சென்னை கொருக்குப்பேட்டையில் வறுமையின் காரணமாக ஆறு முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிச் சென்ற அவலம் நடந்துள்ளதே..அதைப் பற்றியும் கொஞ்சம் பேசுவீர்களா?

சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டம் பற்றி முஸ்லிம் இதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரப் படுத்தினோம்.
முஸ்லிம்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக வங்கிக் கடன் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்று எழுதினோம்.

ஆனால் நடைமுறையில், தொழில் தொடங்க கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடக்கும் முஸ்லிம் இளைஞர்களை, வங்கி அதிகாரிகள் அலட்சியப் படுத்தி திருப்பி அனுப்புவதையும், வேறு வழியே இல்லாமல் வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்து வாழ்க்கையை ஓட்டும் நமது சமுதாய இளைஞர்களின் அவலங்களையும் என்றைக்காவது நாம் அம்பலப்படுத்தி இருக்கிறோமா? நமது ஊடக நிகழ்ச்சிகளில் இதையெல்லாம் விவாதப் பொருளாக்கி, பாதிக்கப்பட்டவர்களை பேட்டி எடுத்திருக்கிறோமா? சம்மந்தப் பட்ட அதிகாரிகளை அணுகி கேள்வி எழுப்பி இருக்கிறோமா?

பாதிக்கப் பட்ட இளைஞர் தன் பெற்றோருடன் சென்று வங்கி அதிகாரியை நோக்கி கேள்வி எழுப்புவதை விட, பத்து பேராகத் திரண்டு போய் வங்கியை முற்றுகை இடுவதை விட, ஒரு கேமராவை தூக்கிக் கொண்டு ஒரே ஒரு நபர் சென்றால் போதுமே! மறு நொடியே பிரச்சனைக்கு தீர்வு வந்து விடுமே. அதை ஏன் இதுவரை நமது கேமரா செய்யவில்லை?

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதை மாறி, இன்றைக்கு சினிமா துணை நடிகைகளாகவும், விபசாரத்தில் ஈடு படுபவர்களாகவும் ஏராளமான முஸ்லிம் பெண்கள் இருப்பதை ஏன் நமது ஊடக அறிவு கண்டறியவில்லை?

இலங்கையில் இருக்கும் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளைப் படம்பிடித்து, தமிழ்நாட்டில் ஒளிபரப்பத் தெரிந்த நமது கேமராவுக்கு, இலங்கை முஸ்லிம்களின் அகதிமுகாம் வாழ்கையை ஆய்வு செய்யச் சென்ற பேராசிரியர் அ.மார்க்சுடன் பயணித்து அங்குள்ள அவல நிலைகளைப் படம் பிடித்து வந்து ஒளிபரப்ப மனம் வரவில்லையே ஏன்?

தமது இயக்கத்தின் சார்பில் செய்யப்படும் பித்ரா வினியோகத்தையும்,இரத்த தானத்தையும், மருத்துவ முகாம்களையும் மறவாமல் படம் பிடித்து ஆவணப்படுத்தி, அதை சமுதாய மக்களுக்கு காட்சிப் படுத்துவதில் இருக்கும் வேகத்தில் துளியளவாவது , முஸ்லிம் ஆளுமைகளின் சாதனை வாழ்க்கையை ஆவணப்படுத்துவதிலும், முஸ்லிம்கள் குறித்த வரலாற்றுப் படங்களை உருவாக்குவதிலும், இருந்திருக்க வேண்டாமா? அப்படி ஆவணப்படுத்தி இருந்தால், இன்றைய தலைமுறையினர் காயிதே மில்லத்தைப் பார்த்து நாகூர் ஹனிபா என்று சொல்லும் அவலம் நேர்ந்திருக்குமா?

முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறைகளை அம்பலப்படுத்தும் வகையில் அண்மையில் கீற்று இணையதளம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. காவல்துறையின் அடக்குமுறைக்கு இலக்கான முஸ்லிம்கள் பலர் அந்நிகழ்ச்சியில் தோன்றி தங்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர்.கீற்று நடத்திய அந்நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படி புதிய கோணத்தில் நமது பிரச்சனைகளை விவாதப்பொருளாக்கும் வேலையை எப்போதாவது நமது ஊடகங்கள் செய்திருக்கிறதா?

கீற்றுக்கு இருக்கிற அக்கறை ஏன் 'மூன்' டிவிக்கு இல்லை?
ஏன் அது போன்ற ஒரு நிகழ்ச்சியை டி.என்.டி.ஜே மீடியா விஷன் செய்யவில்லை?
எந்நேரமும் பிஜேயுடன் வம்பு வளர்ப்பதையே முழு நேரச் செயல்திட்டமாகக் கொண்டு இயங்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின்,
ஆஷிக் மதீனா மீடியா நெட்வொர்க் ஏன் இது பற்றி சிந்திக்கவில்லை?

இப்படிப் பேசுவதற்கும்,விவாதிப்பதற்கும்,காட்சிப் படுத்துவதற்கும் ஆயிரம் அவலங்கள் குவிந்து கிடக்கின்றன.ஆனால் இவை குறித்தெல்லாம் எந்தச் சிந்தனையும் இன்றி முஸ்லிம் ஊடகம் பொறுப்பற்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

சமுதாயத்திற்குப் பயனுள்ள விசயங்களை காட்சிப் படுத்துவதை விட்டு விட்டு, நான்கு பணக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு,அவர்களைப் பேச வைத்துப் படம் பிடித்து, அதையே ஒரு நிகழ்ச்சியாக்கி ஒளிபரப்பக் கூடிய தரகு வேலைதானே, இன்றைக்கு முஸ்லிம் ஊடக சேவையாக இருக்கிறது?

நபிகளார் வலியுறுத்திய பண்புகள் எவற்றையும் நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்காதவர்கள் எல்லாம்..தொலைக்காட்சியில் தோன்றி 'ரசூலுல்லாஹ் அப்படிச் சொன்னார்கள்,ரசூலுல்லாஹ் இப்படிச் சொன்னார்கள்' என்று சமுதாயத்திற்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்றெல்லாம் பகுத்துப் பார்க்கத் தெரியாமல் எல்லோருக்கும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம்.

மார்க்கம் பேசினால் தான் வசூலாகும் என்ற நிலை தொடர்வதனால் தான், மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் விட்டு விட்டு இங்கே எல்லோரும் மார்க்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவியலைப் பற்றியும்,வரலாற்றைப் பற்றியும்,கலைகளைப் பற்றியும்,இலக்கியத்தைப் பற்றியும்,அரசியலைப் பற்றியும்,பொருளாதாரத்தைப் பற்றியும், பண்பாட்டைப் பற்றியும் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும்,உரையாடுவதற்கும்,நல்ல தீர்வுகளை நோக்கி நகருவதற்கும் யாருமே முன்வருவதில்லை.

அப்படி யாராவது முன்வந்தாலும் அவர்களுக்கு போதிய ஆதரவு கிடைப்பதில்லை.
மார்க்கம் பேசுகிறவர்களுக்கு மட்டுமே பொருளாதாரத்தை வாரி வழங்கும் சமூகப் புரவலர்கள், மற்ற விசயங்களைப் பற்றியும் பேசுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டாமா?

பொதுவான தொலைகாட்சி நிகழ்சிகளுக்கு விளம்பரம் தரக்கூடிய வர்த்தக நிறுவனங்கள்,கண்டபடி எல்லோருக்கும் விளம்பரங்களைக் கொடுப்பதில்லை. எந்த நிகழ்ச்சியை மக்கள் அதிகம் ரசிக்கிறார்கள்,எந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது,எந்த நிகழ்ச்சி அதிகமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் 'டி.ஆர்.பி. ரேட்டிங்' என்னும் தரவரிசைப் பட்டியலைப் பார்த்து, அதில் சிறந்த இடத்தில் இருக்கும் நிகழ்ச்சிகளுக்கே விளம்பரம் தருகிறார்கள்.

ஆனால் முஸ்லிம் ஊடக நிகழ்ச்சிகளை கண்காணிப்பதற்கும்,தரவரிசைப் படுத்துவதற்கும் ஆளுமில்லை;அமைப்புமில்லை.
முஸ்லிம் நிகழ்சிகளுக்கு விளம்பரங்களைத் தரக்கூடிய நிறுவனங்களுக்கு அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.

இங்கே நிகழ்ச்சிக்காக விளம்பரம் கொடுக்கிறார்கள் என்பதை விட, நிகழ்ச்சியை நடத்தும் நபருக்காகவும், அமைப்புக்காகவுமே விளம்பரம் கொடுக்கிறார்கள். அதனால் தான் வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்துகிறவர்களுக்கும்,வெறுமனே உரை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரே விதமான பொருளாதார உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலை மாறவேண்டும்.நல்ல நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் நிலை மலர வேண்டும்.

சங்கபரிவார் அமைப்புகளை கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும்
ஆர்.எஸ்.எஸ். என்கிற ஒரு தலைமை அமைப்பு இருப்பது போல் நமது அமைப்புகளை கண்கானிப்பதற்குத்தான் ஒரு அமைப்பு இல்லை; இந்த ஊடக நிகழ்சிகளை கண்காணிக்கவாவது ஒரு ஊடக மையம் இருக்கக் கூடாதா?

நமது பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் நமது எதிரிகளை கைகாட்டுவதை விட்டுவிட்டு, நாம் எந்தெந்த வகையிலெல்லாம் காரணமாய் இருக்கிறோம் என்கிற சுய பரிசோதனையில் ஈடுபடுவதே இனி நமது முன்னேற்றத்திற்கான ஒரே வழி.

Thursday, January 6, 2011

குழந்தைகளிடம் செல்போன் - தெரிந்து கொள்ள வேண்டியவை.

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து ஹலோசொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.

என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.

என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.

நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.


அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.
அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.

3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள்.  ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை.

மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என  எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும்.


நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது.

வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது.

ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால்  உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள்  மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும்

ஜசக்கல்லாஹ் :சமூகநீதி இதழ்

Monday, January 3, 2011

காரைக்காலில் பழமையான பாலம் சேதம்: போக்குவரத்து நிறுத்தம்




காரைக்கால்: தேசிய நெடுஞ்சாலையில் நாகபட்டினத்தையும் காரைக்காலையும் இணைக்கும் பழமை வாய்ந்த பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் டி. ஆர். பட்டினத்தில் உள்ளது திருமலைராஜனார் பாலம். இந்த பாலம் கடந்த 1853-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டவர்களால் கட்டப்பட்டது

இதன் அடிப்பகுதியில் திடீர் என்று செங்கல் கற்கள் பெயர்ந்து விழுந்தன. இந்த தகவல் அறிந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டனர்.

பாலம் இனி வாகனப் போக்குவரத்திற்கு பயன்படாது என்று அவர்கள் தெரிவித்தனர். , நாகப்பட்டினம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் பனங்காட்டான்குடி வழியாகத் திருப்பிவிடப்பட்டன.

இந்த பாலம் பழுதடைந்து இருப்பதாக நெடுங்காலமாகவே மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts Plugin for WordPress, Blogger...