(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, March 31, 2013

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு கமாண்டோ படை பாதுகாப்பு ..!!



நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி கூறினார்.

ஆய்வு கூட்டம்

நாகையை அடுத்த நாகூர் தர்காவில் வருகிற 11–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை கந்தூரி விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் தர்கா அலுவலகத்தில் நடைபெற்றது. நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பிறகு உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:நாகூர் கந்தூரி விழாவின்போது பதற்றத்திற்கு உரிய பகுதிகளாக 6 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொடி ஊர்வலம், சந்தனக்கூடு ஊர்வலங்களில் பங்கேற்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அணிவகுப்பு வாகனங்களுக்கு பல்வேறு அரசு துறைகள் மூலம் வழங்க வேண்டிய சான்றிதழ்கள் ஒற்றைச் சாளர முறையில் நாகூர் தர்கா அலுவலகம் மூலம் வழங்கப்படும்.


கமாண்டோ படை பாதுகாப்பு
விழா நாட்களில் நாகூர் பகுதியில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்படும். ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து பயிற்சி பெற்ற கமாண்டோ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கால்மாட்டுத்தெரு பெண்கள் கடைத்தெரு பகுதியில் ஆண்கள் காரணம் இன்றி செல்வதற்கு தடை விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தர்கா மேனேஜிங் டிரஸ்டி எஸ்.ஏ.சேக்ஹசன்சாகிபு, பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு, டிரஸ்டிகள் சுல்தான்கபீர்சாகிபு, பாக்கர்சாகிபு, தர்கா மேலாளர் திருநாவுக்கரசு, நாகை முஸ்லிம் ஜமாத் தலைவர் ஜெய்னுல்ஆபிதீன், நகர சபை துணைத்தலைவர் சுல்தான்அப்துல்காதர், காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவு மாநில பொறுப்பாளர் நவுசாத், தர்கா ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலீபாசாகிபு, அபுல்காசிம்சாகிபு, இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், ராதாகிருஷ்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் பாரதிதாசன், ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, March 26, 2013

அந்தப் பழைய காலுறை... என்னோடு வரவேண்டும்..!!


அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார்.  தன் மகனை அருகழைத்தார்.
மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான் உங்களனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?"

"என்னவென்று சொல்லுங்கள் தந்தையே!" என்றான் மகன். 

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை"


ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான்.

அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார்.  அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர்.  உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது. அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம் சென்று  தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து "இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும்" என்று கூறினான்,

"முடியாது; முடியவே முடியாது" மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர்.  "இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்" என்று சொல்லிப் பார்த்தான் மகன்.  ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை. "இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை; எனவே, வாய்ப்பில்லை!" என்றார் உறுதியாக.

மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். "நான் சொன்னது, சொன்னது தான்.  வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள்". அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் "ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!"

இக் களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். "தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன்" என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான்மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"என் மகனே! அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை;  நாளை இந்த நிலை உனக்கும் வரலாம்.  இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை  நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும்  உதவும். ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!"

அந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.

'(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.' என்கிறது (திருக்குர்ஆன் 7:8)

'அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும் என்கிற கருத்தை உணர்த்தும் திருக்குறள் உண்டு:


(ஆங்கில மடல் ஒன்றின் தமிழாக்கம்: சகோதரர் இப்னு ஹம்துன்)

Saturday, March 9, 2013

ஊர் மக்களை அசிங்கபடுத்தியது போதும்..!


ஊர் மக்களை தலைகுனிய வைக்கும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது நம் நாகூரில்... நெற்றிக்கண் என்ற இதழ் இதை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது...

நாகூர் மைதீன் பள்ளித்தெருவை சார்ந்த ஜெகபர் சாதிக் சாஹிப் என்ற “முஸ்லீம் மைனர் (இப்படிதான் நெற்றிக்கண் இதழ் ஜெஹபர் சாதிக்கை பற்றி அட்டைபக்கத்தில் ஒட்டுமொத்த முஸ்லீம்களை கேலி செய்வது போல் முஸ்லீம் மைனர் என்று அழைக்கிறது – வாய்ப்பு கிடைச்சா விடுவாங்களா ? )


அந்த நெற்றிக்கண் இதழில் குறிப்பிட்டுள்ள விசயங்களை சுருக்கமாக இங்கே தருகிறோம்.

இவர் மலேசியா – இந்தியாவிற்கு பெருமளவில் ஹவாலா செய்து வந்திருக்கிறார், இதன் பெயரில் மலேசியாவிலும், இந்தியாவிலும் பண மோசடியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஜெகபர் சாதிக் பெயரில் பல வழக்குகள் நாகூர் காவல்நிலையமும், மலேசியா காவல்துறையும் பதிவு செய்துள்ளது. மைதீன் பள்ளி ஜமாஅத்திலும் இது சமந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவரின் தந்தை லத்திப் சாஹிப்பும் லேசுபட்டவர் அல்ல, அவரும் பல பண மோசடியில் ஈடுபட்டவர் என்ற கூடுதல் குற்றச் சாட்டையும் வைக்கிறது  நெற்றிக்கண் இதழ்...

இந்நிலையில் ஜெகபர் சாதிக் தமிழ்நாட்டில் பல பெண்களை காதலிப்பதாக கூறி மயக்கி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அந்த பெண்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து நெட்டில் போட்டு விடுவதாக மிரட்டி அதன் மூலமாகவும் பணம் பரிதிரிக்கிறார் என்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது நெற்றிக்கண்.

இதற்கான ஆதாரமும் தங்களிடம் இருப்பதாக நெற்றிக்கண் கூறி சில புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.


நெற்றிக்கண் பத்திரிகையில் மேற்கண்ட அந்த அசிங்ககேடான விசயத்தை படித்துகொண்டிருக்கும் போது மனது மிகவும் கனத்த தருணம் இந்த இறுதியான மூன்று வரிகள் படிக்கும் போது தான்...


“மோசடி பேர்வழி ஜெகபர் சாதிக் நாகூரில் பல நல்ல குடும்பத்து முஸ்லீம் பெண்களை காமவலை வீசி “ஜல்சா” செய்து ஏமாற்றி இருக்கிறான் சமந்தபட்ட பெண்கள் அந்த கிராதகன் மீது புகார் கொடுக்க தயங்குகிறார்கள்.”

ஒட்டுமொத்த ஊர்மக்களையும் இதற்க்கு மேல் அசிங்கபடுத்தவே முடியாது.

அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் சிறிதும் பெரிதுமாக நடந்தவண்ணம் உள்ளது...இது அம்பலப்படும்போது தான் பலருக்கு தெரியவருகிறது.

இதை தடுக்க முடியாதா ?.. 
அடுத்த தலைமுறை இந்த சீர்கேட்டில் தான் மூழ்கப்போகிறதா ?

இதற்க்கு தீர்வு காண என்ன செய்ய போகிறோம்  என்பதே நம் முன் எழும் கேள்வி ...........

Tuesday, March 5, 2013

நாகூர் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு


நாகூர் வர்த்தக சங்க சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


நாகூர் வர்த்தக சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், நாகூர் முஸ்லிம் சங்கக் கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது.

சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஏ.எச். அபுதல்ஹா தலைமை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வுப்படி,

சங்கத்தின் புதிய தலைவராக வி. முகமது ஹூசைன் மாலீம்,

செயலாளராக எஸ்.எம். நெய்னா மரைக்காயர்,

பொருளாளராக எம். முகமது பாரூக் மரைக்காயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக
எம். கந்தசாமி,
எம். முகமது சித்திக் மரைக்காயர்,
ஜெ. முகமது ரபீக்,
ஏ. முகமது ரபீக் மரைக்காயர் ஆகியோரும்,

துணைச் செயலாளர்களாக
எஸ்.பி. சாகிப் மரைக்காயர்,
எம். முகமது அப்துல்காதர் மரைக்காயர்,
எச். மீரா மெய்தீன்,
எம். முகமது சித்திக் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...