(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, January 31, 2013

விஸ்வரூப அரசியலில் முஸ்லீம்கள் பழிகடாவா ?

விஸ்வரூப பிரச்சனை பல நிலைகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே தமிழக அரசின் முஸ்லீம் ஆதரவு நடவடிக்கைகள் நம்மை பிரமிக்க வைத்தது ,யோசிக்க வைத்தது உண்மை .. 

இந்நிலையில் நேற்று முஸ்லீம்களை விட அவசர அவசரமாக தலைமை நீதிபதியை சந்தித்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்வதை பார்த்தமாத்திரத்தில் வலுவாக புரிந்தது .. இது முஸ்லிம்களுக்கு ஆதரவான நடவடிக்கை அல்ல , கமலுக்கு எதிரான நடவடிக்கை என்பது.. 




கமலுடன் வஞ்சம் தீர்த்து கொள்ள சமயம் பார்த்து இருந்த அரசு தரப்பிற்கு முஸ்லீம்களின் எதிர்க்குரல் வசமாக அமைய.. முஸ்லீம்களின் பெயரை சொல்லி நெருக்கடிக்கு உள்ளாகியது கமல்ஹாசனை... 

இதன் மூலம் கமலுக்கும் வேட்டு வைத்தாகிவிட்டது - முஸ்லீம்களின் நற்பெயரும் கிடைக்கும் என்று கணக்கு போட்டு கலத்தில் இறங்கியது தமிழக அரசு...

ஆனால் இந்த நாடகம் முழுமையாக அம்பலப்பட்டு விட்டது தற்போது.. 

(முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஓவர் ஆக்டிங் கொடுத்தன் மூலம்)

எனினும் இப்பிரச்சனையில் முஸ்லீம்களின்  உணர்வுகளை தன் சுய அரசியலுக்காக தமிழக அரசு பழிகடாவாக ஆக்கிவிட்டது என்ற கருத்தை மறுக்கிறோம்.

காரணம் யாரின் தூண்டுதலில் பெயரிலும் நாம் இந்த படத்தை எதிர்க்கவில்லை   பல காலமாக முஸ்லிம்களை தீவிரவாதத்தொடு தொடர்பு படுத்தி வரும் சினிமா துறையின் மீது இருந்த கோபம் இறுதியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதே உண்மை.

தமிழக அரசு நினைத்ததை முஸ்லிம்களை காரணமாக வைத்து சாதித்து கொண்டது ...

முஸ்லீம்களான நாங்கள் நினைத்ததை தமிழக அரசியலை வைத்து எங்களுடைய எதிர்ப்பை வலுவாக நிறுவி அதில் ஏற்கத்தக்க வகையில் வெற்றியும் பெற்று சாதித்து கொண்டோம்... என்பதே எதார்த்தம்...

அதற்கு தமிழக அரசுக்கு நன்றிகள் பலகோடி...


இதற்கிடையில் படத்தில் உள்ள சர்ச்சையான காட்சியை நீக்குவதாக கமல் கூறியுள்ளார்.. கொடுத்த குடைச்சல் தாங்காமல் இப்போது தான் கமல் இது சமந்தமாக வாய்திறந்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்துள்ளார்.
இப்போது கமலுக்கும் - தமிழக அரசுக்கும் பிரச்சனை உருவெடுத்துள்ளது.


இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சில சர்ச்சை காட்சிகளை மட்டும் நீக்கி படத்தை வெளியிடுவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதா ? என்பது அதிகாரபூர்வமாக தெரியவில்லை.ஜவாஹிருல்லாஹ் அது பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இது ஒரு புறம்மிருக்க பல அமைப்புகள் ஒன்றிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பை உடைக்கும் உள்வேலை படு ஜோராக நடந்து வருகிறது..

தற்போது புதியதலைமுறை ஊடகத்தில் கூட தேசிய லீக் பஷீருக்கும் , ஜவாஹிருல்லாஹ்விற்கும் மூட்டி விட்டு வேடிக்கை பார்த்தார்கள்.


பார்ப்போம் அடுத்து என்ன நடக்கிறது என்பதை ...

Saturday, January 26, 2013

'விஸ்வரூபம்’ திரைக்குப் பின்னால் நடந்த கதை,

கமல் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை!

'துப்பாக்கி’ படம் ரிலீஸ் ஆனபோதே முஸ்லிம்கள் போர்க் கொடி தூக்கினர். அப்போது, 'விஸ்வரூபம்’ படத்திலும் முஸ்லிம்களைத் தவறாக சித்திரித்து இருக்கிறார்கள் என்ற பேச்சும் கூடவே கிளம்பியது. 'முன்கூட்டியே எங்களுக்குத் திரையிட்டுக் காட்டிய பிறகுதான் படத்தை கமல் வெளியிட வேண்டும்’ என குரல் கொடுக்க ஆரம்பித்தன முஸ்லிம் அமைப்புகள். '' 'விஸ்வரூபம்’ முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல. அப்படிச் சந்தேகப்படும் இஸ்லாமியர்கள் படம் பார்த்துவிட்டு, தேவை இல்லாமல் கமலை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதுக்குள் வருந்துவர். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்குப் பிராயச்சித்தமாக அண்டா அண்டாவாக முஸ்லிம்கள் பிரியாணி விருந்து போட வேண்டும். அந்த விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்'' என அறிக்கை விட்டார் கமல்.

ஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை சந்தித்தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான். அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல். ''துப்பாக்கி படக் குழுவினரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள். எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று, கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், '' 'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச் சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல்.





அதன்பிறகு, 'விஸ்வரூபம்’ படம் பற்றி தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றையும் கொடுத்தது முஸ்லிம் கூட்டமைப்பு. அந்தக் கடிதத்தின் அடிப்படையில் முஸ்லிம் கூட்டமைப் பினரை உள்துறைச் செயலாளர் ராஜகோபால் 15 நாட்களுக்கு முன் அழைத்துப் பேசினார். ''படத்தில் இஸ்லாமியர்களைக் கொச்சைபடுத்திக் காட்சிகள் இருந்தால், அதை நீக்க வேண்டும்'' என ராஜகோபாலிடம் கூறினர் முஸ்லிம் பிரதிநிதிகள். ''மதநல்லிணக்கம் எந்த வகையிலும் கெட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தி, அவர்களைக் காயப்படுத்துவதை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது'' என்று சொன்ன ராஜகோபால், ''ரிலீஸுக்கு முன்பே படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளை அரசே செய்து தரும்'' என்று உறுதி அளித்தார். ''கமலே படத்தைக் காட்டுவதாகச் சொல்லி இருக்கிறார். அதனால் தேவைஇல்லை'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினர்.


படம் பார்த்த முஸ்லிம்கள்!

படத்தை இரண்டு நாட்களுக்கு முன், போட்டுக்காட்டுவதாகச் சொன்னார் கமல். ஆனால், 'ஐந்து நாட்களுக்கு முன்பே காட்ட வேண்டும்’ என்றது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியில், நான்கு நாட்களுக்கு முன் என முடிவானது. தேதி குறிக்கப்பட்ட தினத்தில் படத்தைப் பார்க்க முடியவில்லை. 'டி.டி.ஹெச் பிரச்னை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது’ என, முஸ்லிம்களை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் கமல். அப்போதும்கூட, ''இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தின் ஹீரோவே முஸ்லிம்தான். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்'' என்று பீடிகை போட்டு இருக்கிறார் கமல்.

படம் ரிலீஸ் தேதி ஜனவரி 25 என அறிவிக்கப்பட, 21-ம் தேதி படத்தை முஸ்லிம்களுக்குக் காட்ட முடிவு செய்யப்பட்டது. ''தொழுகை பாதிக்கும் என்பதால், காலையில் படத்தைக் காட்ட வேண்டும்'' என்றனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'மாலையில்தான் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. தொழுகைக்கு என் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்து தருகிறேன்'' என்று சொன்னார் கமல். மாலையில், ராஜ்கமல் அலுவலகத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூடினர். அங்கேயே மாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு, படத்தைப் பார்க்க ஆரம்பித்தனர். அலுவலகத்தில் இருந்த ஹோம் தியேட்டரில் 'விஸ்வரூபம்’ திரையிட்டபோது கமலும் அவர்களுடன் அமர்ந்து படத்தை முழுமையாகப் பார்த்தார்.

படத்தின் முதல்பாதி முடிந்து இடைவேளை விட்டபோது, படம் பார்த்த முஸ்லிம்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். 'படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் என்னிடம் 300-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன’ என்று, இடைவேளையின்போது சொன்னார் கமல். தாலிபான்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் தொப்பி, ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர், படத்தில் ஹெலிகாப்டர்களுக்கு அடிக்கப்பட்ட பெயின்ட் பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்கள். இரண்டாம் பாதிப் படத்தைப் பார்த்த முஸ்லிம் கூட்டமைப்பினர் கோபத்தின் உச்சத்துக்குச் சென்றனர். படம் முடிந்ததும் சொல்லிவைத்ததுபோல கமலிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் கிளம்ப ஆரம்பித்தனர். அப்போது, அவர்களின் கருத்தைக் கேட்பதற்காக வாசலில் நின்று இருந்த கமலுக்கு, அவர்கள் எதுவும் பேசாமல் போனதால் முகம் மாறியது. கடைசியாக வந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் முனீரிடம், 'படம் பிடித்திருக்கிறதா? எதுவும் கருத்து சொல்லாமல் போகிறீர்களே?’ என்று கமல் கேட்க, 'எதுவும் சொல்வதற்கு இல்லை.’ என்று முனீர் சொன்னார். 'ஏற்கெனவே நிறைய சங்கடங்களைச் சந்தித்து இருக்கிறேன். இன்னும் சங்கடங்களை உண்டாக்கி விடாதீர்கள்’ என்று கமல் சொல்ல, 'அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவார்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் முனீர். அப்செட்டான நிலையில், 'விஸ்வரூபம்’ பிரிமியர் ஷோவுக்காக அன்றைய இரவே அமெரிக்கா கிளம் பினார் கமல்.




கமிஷனர் அலுவலகத்தில் கொந்தளிப்பு!



இரவு 10 மணிக்கு படம் முடிந்து கிளம்பிய டீம், அப்போதே ஒரு ஓட்டலில் நள்ளிரவு வரை ஆலோசித்தது. 'முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இருந்தால், அதை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட சம்மதிக்கலாம்’ என முன்பு முடிவு செய்து இருந்த முஸ்லிம் கூட்டமைப்பினர், 'மொத்தப் படத்தையும் தடை செய்ய வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தனர். அடுத்த நாள் 22-ம் தேதி, 'படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது’ என்ற கோரிக்கையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்தனர். அவர்களோடு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவும் வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சந்திப்பில், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஜார்ஜிடம் விவரித்தனர். 'தொழுகை நடத்தி விட்டு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகப் படத்தில் அப்பட்டமாக நிறைய இடங்களில் காட்டுகிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆன், தீவிரவாதிகளின் கையேடாகச் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது’ என் றனர். 'பைபிள் படித்துவிட்டு சர்ச் சுக்குள் இருந்து வரும் ஒருவர் குண்டு வைப்பதாக காட்சி இருந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்?’ என்று கிறிஸ்தவரான ஜார்ஜிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். சந்திப்புக்குப் பிறகு, வெளியே வந்த முஸ்லிம் கூட்ட மைப்பினர் படத்தைப்பற்றி முதல் முறையாக மீடியாவிடம் பேசினர். ' 'விஸ்வரூபம்’ வெளியிடப்பட்டால் தேவை இல்லாத பிரச்னைகள் ஏற்படும். மாமன் மச்சானாக வாழ்ந்து வருபவர்களிடையே தேவை இல்லாத சங்கடங்களை உண்டாக்கி, சட்டம்- ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்தப் படத்தை அரசு தடை செய்ய வேண்டும். இல்லையெனில் உயிரைக் கொடுத்தாவது முஸ்லிம்கள் தடை செய் வார்கள்’ எனக் கொந்தளித்தனர்.

படத்துக்கு 15 நாட்கள் தடை!

இந்த விஷயங்களை எல்லாம் அமெரிக்காவில் இருந்தே விசாரித்துக் கொண்டு இருந்தார் கமல். அதற்கு அடுத்த நாள் 23-ம் தேதி உள்துறைச் செய லாளர் ராஜகோபாலை கோட்டையில் சந்தித்தனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'உங்கள் பக்கம்தான் அரசு இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை’ என்ற ராஜகோபால், 'பட ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் வந்து இப்படி முறையிடுகிறீர்களே...’ என்றும் கேட்டு இருக்கிறார். 'கமல் சினி மாவில் நல்ல நடிகர். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிகர் என்பது இப்போதுதான் புரிந்தது. ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் படத்தைக் காட்டி அவர்தான் எங்களை இக்கட்டில் தள்ளிவிட்டார்’ என்று பதில் சொன்னார்கள். 'வழிபாட்டு முறைகள் தீவிரவாதத்தைத் தூண்டுவதுபோல இருக்கிறது’ என்று காட்சிகளையும் ராஜகோபாலிடம் விவரித்தனர். 'கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால், நிச்சயம் அரசு பரிசீலிக்கும்’ என்று வாக்குறுதி கொடுத்தார் ராஜகோபால்.

காலையில் இந்தச் சந்திப்பு நடந்து முடிந்த பிறகு, கொடநாட்டில் இருந்து ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். 'விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ராமா னுஜம், உளவுப்பிரிவு ஐ.ஜி. அம்ரிஷ் பூஜாரி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எனப் பெரிய டீமோடு ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஜெயலலிதா. அதன்பிறகு, படத்துக்குத் தடை என்ற பேச்சுகள் கிளம்ப ஆரம்பித்தன. 'விஸ்வரூபம்’ படத்துக்கு 15 நாட்கள் தடை என்பது இரவில் உறுதியானது.

''படத்தை தடை செய்யாவிட்டால் படம் ரிலீஸ் ஆகும் வெள்ளிக் கிழமை அன்று கமல் வீட்டை முற்றுகையிடுவோம். தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் தடை செய்வோம். சென்சார் போர்டு அலுவலகம் முற்றுகை என அடுத்து போராட்டக் களம் சூடு பிடிக்கும்'' என முஸ்லிம் அமைப்புகள் அறிவித்ததால், சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் என்பதால் தடை விதிக்கப் பட்டது என்கிறார்கள். 'இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்’ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அமெரிக்கத் தூதரக அலுவலகம் தாக்கப்பட்டது. அடுத்தடுத்து முஸ்லிம்கள் நடத் தியப் போராட்டத்தால் தூதரகத்துக்கு விடுமுறை விடும் சூழல் உருவானது. மொத்த முஸ்லிம் அமைப்புகளும் அண்ணா சாலையில் நடத்திய போராட்டம் தலைநகரை கிடுகிடுக்கவைத்தது. இதை யெல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.





முஸ்லிம்களின் மனநிலை என்ன?

''இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி ஒரு படம் வெளியாகவே இல்லை. குர்-ஆன், தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் தொழுகை வழிபாடுகள் தீவிரவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோவை, மதுரை போன்ற நகரங்கள் எல்லாம் சர்வதேசத் தீவிரவாதிகளின் புகலிடங்கள்போல் காட்டப்பட்டுள்ளன. தமி ழகத்தில் மாமா, மச்சான் உறவுமுறை பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்க வல்லது 'விஸ்வரூபம்’ திரைப்படம். 'முற்போக்கு பேசும் வைதீகன் ஆபத்தானவன்’ என்று சொன்ன பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது'' என்கின்றனர் முஸ்லிம் கூட்ட மைப்பினர்.

'விஸ்வரூபம்’ என்ன விஸ்வரூபம் எடுக்கப் போகிறது என்பதைக் காத்திருந்து கவனிப்போம்!



thanks to ஜூனியர் விகடன் 31-1-2013


விஸ்வரூபம் - முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய மற்றொரு தருணம்

இந்த பிரச்னையை ஆழ்ந்து கவனித்ததில் ஒரு விஷயத்தை உணர முடிகின்றது. தங்களை உண்மையான இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரில் இருந்து யாரும் முஸ்லிம்களின் போராட்டத்தை விரும்பவில்லை (வினவு என்னும் பித்தலாட்டகாரர்களின் கட்டுரை தெளிவாகவே இதனை உணர்த்துகின்றது. முஸ்லிம்களுக்காக போராட இவர்களிடம் முஸ்லிம்கள் வருவார்களாம். ஸ்ப்பா). வேறொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், முஸ்லிம்கள் தங்களுக்காக தாங்களே போராடி, முடிவுகளை எட்டுவது பலருக்கும் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கின்றது. 

முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. இந்த சிந்திப்பு ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்து, விவேகமாக நடவடிக்கைகளுக்கு வித்திட்டால் ஒரு மாபெரும் எழுச்சியை முஸ்லிம் சமுதாயம் மிக அருகிலேயே எதிர்நோக்கி இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் நடக்கும் என்பதே எல்லோருடைய பிரார்த்தனையாக இருக்கின்றது.

Wednesday, January 23, 2013

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நாகூரின் புதிய தோற்றம் :-)


நாகூரில் போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

நாகூரில் கடந்த சில நாட்களாக அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது. கடைத்தெருவிற்கு சென்றால் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வீதிகள் இருப்பதை பார்க்க முடிகிறது.


இது போன்ற ஆக்கிரமிப்பு அகற்றம் கடந்த காலங்களில் நடந்தாலும் இம்முறை படு  தீவிரமாகவே நடக்கிறது.கட்சிக் கொடி கம்பங்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் அகற்றிவருகிறது நகராட்சி நிர்வாகம் மேலும் பிறகு  மீண்டும் அதே ஆக்கிரமிப்பு நிகழ்ந்து விடாத வண்ணம் முன் நடவடிக்கைகளும்  எடுக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

(ஆனால் ஒரு தேரு ஒன்னு ரொம்ப வருஷமா மெயின் ரொட்ட ஆக்கிரமிச்சிகிட்டு இருக்கு அதே கண்டுக்கல இன்னும் !!!) 

இந்நிகழ்வு நாகூரில் வியாபாரம் செய்பவர்களுக்கு பலவகையில் சிரமத்தை கொடுத்துள்ளது எனினும் இதில் யாருக்காகவும்  இந்த கட்சி,அந்த கட்சி என்று  பாரபட்சம் பார்க்காமலும் நகராட்சி  நிர்வாகம் செயல்படுவதால் 
யாரும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

எது எப்படியாயினும் கடை தெரு விசாலமாக நெருக்கடி இல்லாமல் இருப்பது சந்தோசம் தான். ஆனால் நகராட்சி நிர்வாகம் சொன்னது போல் இந்நிலை தொடரவேண்டும் என்பதே பொதுமக்களின் என்னோட்டம்.









ஜசாகல்லாஹ் : 

புகைப்படம் : நாகூர் செய்திகள்., Gulam Dhasthageer

Friday, January 11, 2013

குடும்பத்தை சீரழிக்கும் T.V சீரியல்கள்..

உடையும் குடும்ப உறவுகள்:




இன்றைக்கு பெரும்பாலான தொடர்களில் கள்ள உறவுகள், இருதாரம், மாமியார் மருமகள் குழப்பம், பங்காளிச்சண்டை, நாத்தனார், அண்ணி பழிவாங்கும் நடவடிக்கை போன்றவை மிகைப்படுத்தி காட்டப்படுகிறது. இதைப் பார்க்கும் குடும்பங்களில் சந்தேக விதை விழுந்து உறவுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட காரணமாகிறது.



தொலைக்காட்சியே கதி

காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இதைப் பார்க்கும் பெண்கள் குடும்பத்தார்க்கு உணவளிப்பதைக் கூட மறந்துவிடுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களை உபசரிப்பதில்லை, கணவன்களை கவனிக்காமல் வீண் வாக்குவாதம் செய்வது, குழந்தைகளை தேர்வு சமயத்தில் படிக்க விடாமல் தொடர்களைப் பார்ப்பது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த தொடர்கள் பெண்களின் பண்பை பாதிப்படைய வைத்து மனநலத்தை சீர்குலைத்து விடும் சாதனமாக திகழ்கிறது என்பதே நிஜம்.

டிவி தொடர்களில் வருவதை தன் நிழ வாழ்க்கையில் நடக்கிறது என்றும், நான் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பெண்கள் பலர் மனநோய்க்கு ஆளாகின்றனர். அதேபோல் எங்கே தொடர்களில் நடப்பது போன்று நம் வாழ்க்கையிலும் நடந்து விடுமோ? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.




அழியும் கூட்டு குடும்பம்

இன்றைய தொடர்களில் சவால் விடுவது, வில்லத்தனத்தால் வக்ர சிந்தனைகள், அழுகை, போன்ற காட்சிகளால் 99 சதவிகிதம் பெண்களிடையே பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடர்கள் பெரும்பாலும் இருதாரத்தை ஆதரிக்கிறது. தவிர கள்ள உறவுகளுக்கு கடை விரிக்கும் இதுபோன்ற தொடர்களை பின்பற்றுவதால்தான் நிஜ வாழ்க்கையில் சண்டைகளும் இதனால் விவாகரத்து தற்கொலை முயற்சி மற்றும் கொலை முயற்சியிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள்.



அதிகரிக்கும் டிஆர்பி ரேட்டிங்

பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு, அரவணைப்பு, அர்ப்பணிப்பு போன்ற உயர்ந்த குணங்களை பெண்கள் தொலைக்காட்சி தொடர்களால் இழந்து வருகின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இன்றைய தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கவும், வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படுகின்றன என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



மனதை அலைபாய வைக்கும் நடனம்

இன்றைய தொலைக்காட்சி அலைவரிசையில் ரியாலிட்டி ஷோ என்பது பிரபலமாக இருக்கிறது. அரை குறை ஆடை அணிந்த பெண்கள் ஆண்களை கட்டிப் பிடித்து, நடனம் ஆடுவதை, அரைகுறை ஆடை அணிந்த நடுவர்கள் மார்க் போடுகின்றனர். இதனால் தாய்மார்கள் தங்கள் பச்சிளம் பெண் குழந்தைகளின் ஆடை விஷயத்தில் தாராளம் காட்டி இந்த கலாச்சால சீரழிவிற்கு வழிவகுக்கிறார்கள்.



சேனல்களுக்கு சென்சார் வருமா?

இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்களுக்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஓரு தனியார் தொலைக்காட்சியில் நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்க்கவேண்டிய விஷயத்தை ஊரறியப் பேசி கடைசிக கவுன்சலிங் என்ற பெயரில் எதையோ சொல்லி முடிக்கிறார்கள். கள்ளக்காதலும், கள்ளத்தொடர்புகளும் இங்கே பஞ்சாயத்து செய்யப்படுகின்றன.



அதிகரிக்கும் வன்முறை

இன்றைய தொடர்களில் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போதல், கணவன்-மனைவி பிரிந்து வாழ்வது, கள்ளக்காதல், பெற்றோரை அவமதிப்பது, சூழ்ச்சி, சுயநலம், - இவைகளால் பின்னப்பட்ட சீரியல்களை தினமும் ஐம்புலன்களையும் ஒன்றுபடுத்தி கவனக்குறைவின்றி தவறாமல் பார்த்து மகிழும் பிள்ளைகளின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.



இரண்டு லட்சம் வன்முறை காட்சி

18 வயதை அடையும் முன் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வன்முறைக்காட்சிகளைப் பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகள் தங்களின் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கிறார்கள் என்பதை சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாணவ சமுதாயத்திற்கும் குற்றங்களுக்கும் இடையே உள்ள தூரம் குறைய பொறுமை, சகிப்புத் தன்மை, மனிதநேயம் மிக்க இளைஞர்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.



சமூகத்தை பாதிக்கும் தொடர்கள்

வியாபார நோக்கத்திற்காக தொலைக்காட்சி சானலை தொடங்கும் பணக்காரர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் புள்ளிகள் சமூக அக்கறையில்லாமல் எடுக்கப்படும் திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமூகத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணரவேண்டும்.

தணிக்கை தேவை

சின்னத்திரையில் சில நிமிடம் வரும் விளம்பரங்களுக்கே தணிக்கை சானறிதழ் கட்டாயம் பெற வேண்டும் என சட்டம் இருக்கும் போது. அதிகம் பேர் பார்க்கும் தொடர்களுக்கும் நிச்சயம் தணிக்கை தேவை. மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை மட்டுமே காட்டுபவையாக தொலைக்காட்சிகள் மாற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

தரமான நிகழ்ச்சிகள்

தேவை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிக்கும்படியான, தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதை செயல்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய-மாநில அரசுகளின் கையில் உள்ளது. இளைய சமுதாயத்தை, எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பெரும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்பதை தொலைக்காட்சி சானல்களை நடத்துபவர் களும், மத்திய-மாநில அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.


நன்றி: தட்ஸ்தமிழ்.

ரிஸானா நபீக் விவகாரம் நடந்ததும் / நடப்பதும்


சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்.

ஊடகங்களில் தற்போது மிக பரபரப்பாக விவாதிக்கபட்டு வரும் விஷயம் ரிஸானா நபீக் விவகாரம்.

அதுபற்றி நிதானமாக புரிதலுக்கான விஷயங்களை இங்கே பகிந்துகொள்கிறோம்.


முதலில் ரிஸானா நபீக்கை பற்றி தெரியாதவர்களுக்கு சிறு அறிமுகம்:

இலங்கையை சேர்ந்த ரிஸானா நபீக் என்ற சகோதரி ஒரு ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த பெண். தன் குடும்ப வறுமையால் வீட்டு வேலை செய்வதற்காக சவூதிக்கு 2005ஆம் அனுப்பட்டுள்ளார்.
அந்த சகோதரி சவூதி செல்லும் போது உண்மையான வயது 17  ஆனால் போலியாக தயாரித்த ஆவணப்படி அவருக்கு வயது 23.

சவூதி சென்று அங்கு சமையல் , குழந்தைகளை பராமரித்தல் போன்ற வீட்டுவேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் ரிஸானா நபீக்கிடம் கைக்குழந்தையை கொடுத்து விட்டு அனைவரும் வெளியில் சென்றிருக்க, குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருக்கும் போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மௌத் ஆகிவிட்டது (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

எனவே கொலை செய்த குற்றத்திற்காக ரிஸானா நபீக்கிற்கு சவூதி நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. அது தற்போது நிறைவேற்றபட்டுள்ளது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக, அவரின் பெற்றவர்கள், உற்றவர்கள் அனைவருக்கும் உள்ளத்தில் உறுதியை கொடுத்து அவர்களின் கவலைகளைப் நீக்கி சகிப்புதன்மையை அதிகரிக்க செய்வானாக... 

இம்மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஊடகங்களில் எம் இஸ்லாமியச் சகோதரர்களும் ஏனையவர்களும் நிதானமிழந்து தன் ஆத்திரத்தை வார்த்தைகளில் கொட்டிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

இந்த மரணச் செய்தி எல்லோருக்கும் மிகவும் கவலையான செய்திதான். அதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் கவலை, கஷ்டங்கள்  வரும்போதும் அது பற்றிய செய்திகள் வரும்போதும் மிகவும் பொறுமையும், நிதானமும் தேவை.

அதனால் தான் இப்படியான சந்தர்ப்பங்களில் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” (நாம் இறைவன் புறத்தே இருந்து வந்தவர்கள் அவன்பாலே மீள உள்ளவர்கள்) என்று கூறுமாறு நபியவர்கள் கற்றுத்தந்தார்கள்.

இது நிதானத்தையும், மன அமைதியையும் போதிக்கும் வார்த்தைகளாகும் ஆனால் சிலர் சவூதி அரசை மிகவும் காரசாரமாக விமர்சிக்கின்றனர், பலர், முஸ்லிம் சகோதரர்கள் உட்பட, சவூதிச் சட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து இஸ்லாமிய ஷரிஆச் சட்டத்தை விமர்சிக்கின்றனர். சிலர் மன்னிக்க மறுத்த பெற்றோரை வஞ்சிக்கின்றனர்.


ஷரிஆ சட்டம், பாதிக்கப்பட்டவன் தரப்பில் இருந்தே குற்றத்தைப் பார்க்கின்றது.அது பாதிக்கப்பட்டவனுக்கு நீதியையும், குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை மூலம் பார்த்திருப்பவர்களுக்கு படிப்பினையையும், குற்றம் செய்யும் பயத்தினையும் வழங்குகின்றது. 

வாதத் திறமையும், சந்தர்ப்ப சாட்சியங்களும்தான் ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் விடயமாகும். குறிப்பாக மரண தண்டனைத் தீர்ப்பானது கண்மூடித்தனமாக எடுத்த எடுப்பில் எடுக்கப்படும் தீர்மானம் கிடையாது, இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக ரிசானா விடயம் ஏழு ஆண்டுகள் நீண்ட ஒரு வழக்காகும்.உலக நீதியை, மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதி நியாயத்தை நினைவில் கொண்டு நீதி பெற முயற்சிக்குமாறு நீதி வாதிகளுக்கும் (LAWYERS) நீதிவழங்கும் நீதிபதிகளுக்கும் (JUDGES)இஸ்லாம் உத்தரவிடுகின்றது.

ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரிசானா விடயத்தில் சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் அவரைக் குற்றவாளியாகியுள்ளது. அதனால் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1.      ஒரு குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிஸானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்ப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்துள்ளார். அவரின் எண்ணத்தின் அடிப்படையில் அவர் நிச்சயமாக உயர்ந்த சுவர்க்கத்தை அடைவார்.

2.      அவர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வார்.

3.      அறிந்து கொண்டே அவருக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.

4.      மேலும் மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையாகும், அவர் விரும்பினால் மன்னிக்கலாம், மன்னிக்காமலும் விடலாம். அவர் மன்னிக்கவில்லை என்பதற்காக குற்றவாளியோ, பாவியோ கிடையாது. அல்லாஹ் வழங்கிய உரிமையில் தலையிடவும், அவரை வஞ்சிக்கவும் நாம் யார் ?  

5.      18 வயதை அடைந்த ஒருவர்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்பது இஸ்லாமியச் சட்டம் கிடையாது. அது உலகச் சட்டம். பருவ வயதுதான் இஸ்லாத்தின் அளவுகோல், அது ஆளுக்காள் வித்தியாசப்படும். 18 என்று உலக வழக்குப்படி எடுத்துக்கொண்டாலும் கூட, ரிஸானா 18 வயதைத் தாண்டாதவர் என்று எமது நாட்டு நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை சரியான முறைப்படி கடைசிவரை சஊதி நிதிமன்றதைச் சென்றடையவில்லையே,  இது யார் குற்றம் தீர்ப்பு வழங்கிய சஊதி அரசின் குற்றமா. அவர்களின் ஆவணப்படி ரிஸானா18 வயதைத் தாண்டியவர்.
(போலி ஆவணம் மூலம் தான் அவர் சவூதி சென்றுள்ளார்.)

இது இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். எனவே முஸ்லிம்கள் அல்லாஹ்வைப் பயந்து பேச வேண்டும். எந்த ஆதாரங்களும் இல்லாமல், எதார்த்தம் என்னவென்று தெரியாமல், கேள்விப் பட்டவைகளை வைத்துக் கொண்டு சட்டம் பேசக்கூடாது. வார்த்தைகளை அள்ளி வீசக்கூடாது.

அதேபோல் காட்டுச் சட்டங்கள் ஆளும் நாடுகளில் வாழ்த்துகொண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிக்க முற்படக்கூடாது. உலகிலேயே பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, அனாச்சாரங்கள், கீழ்சாதிக் கலாச்சாரங்கள் குறைந்த நாடுகள் அரபு நாடுகளாகும். இதை நாம் கூறவில்லை, அமெரிக்க அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

தண்டனை வழங்கப்பட்ட ஒரு ரிசானாவைப் பற்றி இன்று பலர் பேசுகின்றனர். பரிதாவப்படுகின்றனர். ஆனால் ஆயிரமாயிரம் ரிசானாக்கள் இன்னும் அரபுலகிலும் உள்நாடுகளிலும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். வேதனையும் வெட்கமும் என்னவென்றால் பரிதாவப்படும் பலர் இப்படியான ரிசானாக்களை உருவாக்கியவர்களாகவும், கொலைக்களம் ஏற்றியவர்களாகவும் உள்ளனர்.

நீதியாகவும் நியாயமாகவும் சிந்தித்தால் இந்த ரிசானாவும் இப்படியான ரிசானாக்களும் உருவாக பல காரணங்களும், பல காரணகர்த்தாக்களும் உள்ளனர். இந்தப் பாவத்தில் அனைவரும் பங்காளிகளே.

1.      மஹ்ரம் (தக்க துணை) இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றது ரிஸானாக்களின் குற்றம்.

2.      தக்க துணை இன்றி வறுமைக்குப் பயந்து அல்லாஹுக்குப் பயம் இல்லாமல் தனிமையில் தன் மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தது பெற்றோர்கள் செய்த குற்றம்.

3.      வறுமையில் வாடும் சமூகத்துக்கு கைகொடுக்காமல், அவர்களுக்குச் சேர வேண்டிய ஸகாத் (ஏழை வரிப்) பணத்தைக் கொடுக்காமல் மறுக்கும் பணக்காரக் கொள்ளையர்கள் செய்த குற்றம்.

4.      திருமணமுடிக்க வீடு, பணம் வேண்டும் என்று பெண்களை மாடாய்ப் படுத்தும் வரதட்சனை கேட்கும் மானங்கெட்ட ஆண்கள் செய்த குற்றம்.

5.      பணத்திற்காக பெண்களை வெளிநாட்டுக்கு ஏற்றி கூட்டிக்கொடுக்கும் முகவர்கள் செய்த குற்றம்.

6.      வெளிநாட்டு வருவாய்காக தன் நாட்டுப் பெண்களை வெளிநாட்டுக்கு கூலி வெளைக்கனுப்பிய கூறு கெட்ட அரசுகள் செய்த குற்றம்.

7.      இஸ்லாமிய சட்டத்துக்கு மாற்றமாக அந்நிய பெண்களை தன் நாட்டில், வீட்டில் வெளிக்கமர்த்திய ஸஊதி அரசு செய்த குற்றம்.

பாவிகளும் நாங்களே, அப்பாவிகளும் நாங்களே, பரிதவிக்கச் செய்பவர்களும் நாங்களே, பரிதாவப்படுபவர்களும் நாங்களே. எல்லாம் நாங்களே.

இனியும் இந்தக் கொடுமைகள் நடக்கக்கூடாது என்றால், எந்த ரிஸானாவுக்கும் இப்படி ஒரு நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால் உடன் எடுக்க வேண்டிய நடவடிக்கை இதுதான். 

1.      பணிப்பெண்ணாய் வெளிநாட்டுக்கு பெண்களை அனுப்புவதை அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.

2.      தற்போது தனிமையில் வெளிநாட்டுக்கு சென்று வேலைசெய்யும் பணிப்பெண்கள் அனைவரையும் உடன் திருப்பி அழைக்க வேண்டும்.

3.      வரதட்சனையை  சட்டம் போட்டுத் தடுக்க வேண்டும்.

4.      பணக்காரர்களிடமிருந்து ஸகாத்தைப் பிடுங்கி ஏழைகளிடம் கொடுக்க வேண்டும்.

5.      பெண்கள் சமூகப் பாதுகாப்புக்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் எல்லோரும் மனம் வைத்து முயற்சிக்க வேண்டும், வெற்றிபெற அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும்.


ஜஸாகல்லாஹைரன் :
கட்டுரைவரிகளுக்கு உதவியது
அபூ இமான்
இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி

Thursday, January 10, 2013

காரைக்கால் கடலில் குளித்து மாயமான கல்லூரி மாணவன் உடல் கரை ஒதுங்கியது


நேற்று மாலை காரைக்கால் கடலில் குளித்து மாயமானகாரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவன் சையது முகமது அன்சாரியின் உடல் இன்று பிற்பகல் 1 மணிக்கு கரை ஒதுங்கியது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .

காரைக்கால் சுண்ணாபுக்கார வீதியைச் சேர்ந்தவர் முகமது உஷேன் மகன் சையது முகமது அன்சாரி(21). இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை சுமார் மணிக்குநண்பர்கள் பேருடன் கடலில் குளித்த போதுஅலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

தொடர்ந்துகாரைக்கால் கடலோர காவல் நிலையம்நகர காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இன்று பிற்பகல் வரை கடலில் மாயமான மாணவனை கரையோரத்தில் தேடிவந்தனர். 




இந்நிலையில், பிற்பகல் சுமார் 1 மணிக்கு, மாணவனின் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து அங்குள்ள மீனவர்கள் கூறியதாவது: 

நேற்று மாலை கடல் சீற்றமாகவும், தண்ணீர் உள்வாங்கலாகவும் இருந்ததால், அலையில் சிக்கிய மாணவன் உடல் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டது. அதனால்தான் நேற்று முழுவதும் உடல் கரை ஒதுங்கவில்லை. இன்று பிற்பகல் 12 மணிக்கு பிறகு தண்ணீரின் அளவு கூடியதால் கடலுக்குள் இழுத்துசெல்லப்பட்ட மாணவன் உடல் மீண்டும் அவர் குளித்த இடத்தின் அருகே கரை ஒதுங்கியுள்ளது. பொதுவாக, முகத்துவாரம் கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் கடல் ஆழமாகவும், அலையின் சீற்றம் அதிகமாகவும் இருப்பதால், அலையில் சிக்கும் மாணவர்கள் உடல் கற்களில் மோதி நிலைதடுமாற செய்கிறது. எனவே கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் எக்காரணம் கொண்டும் குளிக்க கூடாது என்றனர்.

மாவட்ட எஸ்.எஸ்.பி ஆன்டோ அல்போன்ஸ் கூறியதாவது: 

சுனாமிக்கு பிறகு காரைக்ககால் கடலின் தன்மை மாறியுள்ளது. முகத்துவாரம் அருகில் இந்த மாற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. மீனவர்களே கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல அஞ்சுகின்றனர். கடற்கரை ஓரம் கடலில் யாரும் குளிக்கவேண்டாம் என விளம்பபர போர்டுகள் வைத்தும், காவலர்கள் கண்காணித்தும், அதையும் மீறி சென்று குளிப்போர் உயிர் இழக்க நேரிடுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் காரைக்கால் கடல் குறித்து எச்சரிக்கை செய்யவேண்டும். காவலர்களும் கடற்கரையோரம் இனி கூடுதலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். பள்ளி, கல்லூரிகள் அளவில் மிக விரைவில் இது குறித்து விழ்ப்புணர்வு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Friday, January 4, 2013

காரைக்கால் சகோதரி வினோதினிக்கு நாமும் உதவலாம்

காதல் என்ற ஒற்றை விசயத்தை வைத்துக்கொண்டு சமூகத்தை தவறான பாதையில் கொண்டுசெல்லும் கேடுகெட்ட சினிமா சமூகத்திற்கு சொல்லிகொடுத்த வக்கிரங்கள் கொஞ்ச நஞ்சமில்ல... 

காரைக்காலை சேர்ந்த வினோதினி. சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் தனது காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது ஆசிட் வீசினார். 

இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலில் பல பகுதிகள் கருகிப்போனது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வினோதினி. நேரடியாக ஆசிட் வீசப்பட்டதால் வினோதினியின் இரு கண்களும் எரிந்து பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள சதையை வெட்டி எடுத்து முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர்.



 கண்ணையும் சதையால் தைத்து மூடி உள்ளனர். வருங்காலத்தில் கண்ணின் அடையாளமாக செயற்கை கண்கள் பெருத்தலாம் என்று கூறப்படுகிறது. வினோதினியின் தந்தை ஜெயபாலன் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். உயர் சிகிச்சை அளிக்கப்படுவதால் மகளின் மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். 

கண்கள் இழந்து, எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் வாழப்போராடிக்கொண்டிருக்கும் இந்த இளம்பெண்ணுக்கு உதவி கரம் நீட்டும்படி பொதுமக்களுக்கு வினோதினியின் உறவினர்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வினோதினிக்கு உதவி செய்ய விரும்புவோர் அவரின் தந்தை வங்கி கணக்கில் தங்கள் உதவியினை அனுப்பி வைக்கலாம்: 

JAYAPALAN a/c number 603899558, 
INDIAN BANK, Kilpauk branch, Chennai, IFCS CODE: IDIB000k037

புதுச்சேரி முதல்வர் நிதி உதவி இதனிடையே புதுவை முதல்வர் ரங்கசாமி அரசு சார்பில் நிதியுதவி அளிக்கவேண்டுமென வினோதினியின் தந்தை ஜெயபாலன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் மூலம் அரசை அணுகினார். 

அவருக்கான மருத்துவ செலவை அரசு ஏற்கவேண்டுமெனவும், ஜெயபாலின் கோரிக்கையை நாஜிம் முதல்வருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்ற முதல்வர் ரங்கசாமி ரூ.2 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இணையதளம் தொடக்கம் வினோதினியைத் தொடர்பு கொண்டு உதவிகளைத் தெரிவிக்க 

விரும்புவோருக்கான தொலைபேசி எண் ரமேஷ், வினோதினியின் தாய்மாமன் - 0-9944161416. வினோதினிக்கு மேலும் உதவி செய்ய விரும்புவோர் http://www.helpvinodhini.com/#!news-in-medias/cs57 இந்த இணையதளத்திற்குச் சென்று தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


Related Posts Plugin for WordPress, Blogger...